Published:Updated:

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்
பிரீமியம் ஸ்டோரி
News
யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

வியக்க வைக்கும் வித்யா விஸ்வேந்த்ரா...ஒப்பனையாழ் ஸ்ரீதேவி

திருமணம் என்பது பரவசமளிக்கும் பண்பாட்டு நிகழ்வு. வாழும் மண்ணின் கலாசாரத்தையும் பிறந்த இனத்தின் அடையாளத்தையும் புகுந்த வீட்டின் பாரம்பர்யத்தையும் உயிரோட்டமாகப் பிரதிபலிப்பது. உலகளவில் வெவ்வேறு நாடுகளுக்குப் பறந்து தனது தனித்துவமிக்க பிரைடல் மேக்கப் டெக்னிக்குகளால் மணப்பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கிறார் வித்யா விஸ்வேந்த்ரா. பரந்த நெற்றியில் பிரமாண்ட நெற்றிச்சுட்டி, பாரம்பர்யம் பகிரும் நகைகள் என்று தொடரும் அலங்காரத்தில் சில மணப்பெண்களின் கழுத்தில் மாங்கல்யத்தையே ஓர் ஆபரணமாக அணியவைத்து அசத்தியுள்ளார்.

கொஞ்சம் சிம்பிள், நிறைய அழகு... இந்த பாணி வித்யாவுக்கே உரியது. சேலை கட்டும் ஸ்டைல், மனம்கவரும் ஹேர் ஸ்டைல், மேக்கப் முறைகள் ஆகியவற்றைச் செய்துகாட்டுவதில்  யூடியூப்பிலும்  பிரபலம் இவர். ஈழத் தமிழ்ப் பெண்ணான வித்யா, இப்போது லண்டனில் வசிக்கிறார்.

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

பிரைடல் லுக் பற்றிய மாஸ்டர் கிளாஸ் வழியாக  மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களுக்கு  உலகம் முழுக்கப் பயிற்சி அளிக்கிறார். மணப்பெண் மேக்கப் குறித்து யுனிவர்சல் லெவலில் கிளாஸ் எடுக்கும் ஒரே தமிழ்ப் பெண்ணும் இவரே. லண்டன், சென்னை, ஜூரிச் ஆகிய இடங்களில் பிரைடல் லுக் பயிற்சி வகுப்புகள் எடுக்கவுள்ளார். கோலாலம்பூர், டொரான்டோ ஆகிய இடங்களில் அடுத்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தும் திட்டத்தோடு உழைக்கிறார். லண்டனில் உள்ள பாபி பிரவுன் நிறுவனத்தின் சார்பில் ஏசியன் பிரைடல் மாஸ்டர் கிளாஸ் நடத்துகிறார்.

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

தமிழ்த் திரையுலகிலும்  மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வித்யா பணியாற்றியுள்ளார். நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, தொகுப்பாளர் டி.டி, நட்சத்திர ஜோடிகளான சினேகா  - பிரசன்னா மற்றும் எமி ஜாக்சனுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துள்ளார். 

மாடலிங் செய்வதும் வித்யாவின் விருப்பம். யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன் காலேஜ் ஆப் ஃபேஷனில் கற்றுள்ள வித்யா, கனடாவிலுள்ள டொரான்டோவில் பிங்க் ஆர்கிட் ஸ்டுடியோவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் முடித்துள்ளார். முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும்  வித்யா  தனது ஒன்பதாண்டு கால அனுபவத்தில் விஜய் டி.வி அவார்ட்ஸ், பி.பி.சி தமிழ் டி.வி-யில் நந்தா ராஜேஷ் ஷோ போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார். இவ்வளவு நீளமான புரொஃபைல் கொண்ட வித்யா, ‘அவள் மணமக’ளுக்காக அழகாகப் பேசுகிறார்.

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

“சிறுவயதிலிருந்தே அழகுக்கலைத் துறையில் பணியாற்றுவதே என் விருப்பமாக இருந்தது. ஆனால், என் பெற்றோர் என் விருப்பத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கலையோ, திறமையோ என் எதிர்கால வாழ்க்கைக்கு உதவாது என்றே நம்பினர். எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் போல கணிதம் அல்லது அறிவியல் படிப்பதுதான் முக்கியம் என்றனர். அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பளித்து பி.எஸ்ஸி., பயாலஜி மற்றும் சைக்காலஜி முடித்தேன். அவர்களுக்குப் பிடித்ததைப் படித்து முடித்துவிட்டு, என் விருப்பத்துக்கு அனுமதி கேட்டேன். அதன் பின்பே லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷனில் ‘ஹேர் அண்டு மேக்கப்’ டிப்ளோமா முடித்தேன். பின்பு காஸ்மெட்டிக் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள்தாம் இனி சொந்தமாக பிசினஸ் தொடங்கலாம் என்கிற நம்பிக்கையைத் தந்தன. நானே களத்தில் இறங்கினேன். இன்று வெற்றிகரமான சர்வதேச தமிழ் பிரைடல் ஹேர் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வளர்ந்து நிற்கிறேன்” என்கிறார் பெருமிதத்துடன் வித்யா.

எப்போதிருந்து வித்யாவின் கேரியர் கிராப் வேகமெடுத்தது?

“கடந்த நான்காண்டுகளாக என்னைப் பலருக்கும் தெரிந்துள்ளது. கோலிவுட் நட்சத்திரங்களான சிம்பு, சினேகா, பிரசன்னா, நயன்தாரா, பாரதிராஜா சார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோருடன் வொர்க் பண்ணியதும் நான் பிரபலமாகக் காரணம். என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களை அளித்த காலகட்டம் அது.

சமீபத்தில் நான் யூடியூப்பில் இணைந்துள்ளேன். என்னுடைய சேனலை எப்படிப் பிரபலப்படுத்துவது என்று எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தேன். சேலை கட்டுவதைச் சொல்லித்தரும் என் வீடியோக்கள் யூடியூப்பில் நாற்பது லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. அதன்பின் யூடியூப்பில் மக்களுக்கு ஹேர், மேக்கப் மற்றும் ஸ்டைலிங் பற்றிக் கற்றுத் தருகிறேன்.

இன்று பிரைடல் மேக்கப்பில் மாஸ்டர் கிளாஸ் எடுக்கிறேன். இதில் பிரைடல் லுக்கை உருவாக்க `ஒன் டே டெமோ’ செய்துகாட்டுகிறேன். லண்டன் கான்வென்ட் கார்டனில் உள்ள பாபி பிரவுன் பிளாக் ஷிப் ஸ்டோரிலிருந்து என்னை மாஸ்டர் கிளாஸ் எடுக்க அழைத்ததை எனது பெருமைக்குரிய தருணமாகக் கருதுகிறேன்.

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

பிரபலமாக வேண்டும் என்று ஒருபோதும் நான் திட்டமிட்டதில்லை. எனது துறையில் நான் அடையும் வெற்றியால் என் குடும்பத்தைப் பெருமை அடையச்  செய்ய வேண்டும்... அவ்வளவுதான். சில தமிழ்க் குடும்பங்கள் அழகுக்கலைப் படிப்பைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உரியதாக  அங்கீகரிப்பதில்லை. அவர்கள் எண்ணத்தை எனது வெற்றி மாற்றும் என்று நம்புகிறேன். தங்களுக்குப் பிடித்த துறையில் உலகளவில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நானும் உதாரணமாக  இருக்க விரும்புகிறேன்.

யுனிவர்சல் பிரைடல் மேக்கப்

ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக - எம்மக்கள் ஆதரவற்று வாழும் நிலை என்னை மிகவும் பாதித்துள்ளது. எனது குடும்பமும் எங்களைப் போன்றவர் களும் வீட்டைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டு உலகம் முழுக்க சிதறிக் கிடக்கிறோம். அப்படி அகதிகளாக இருக்கும் என் மக்களுக்கு என்னால் முடிந்தவரை உதவுகிறேன்.

ஓய்வு கிடைக்கும்போது மாடலிங், ஃபேஷன் குறித்து என் வலைப்பூவில் எழுதுகிறேன். உலகளவிலான அழகுக் கலை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக சொந்தமாக பயிற்சி மையம் அமைப்பதே என் இலக்கு” என்கிறார் இந்த அழகுக்கலை ஆர்வலர்.

நிச்சயம் இலக்கை வெல்வீர்கள் வித்யா!