Published:Updated:

``ஒரு 10 வருடமாவது என் மகனுடன் இருந்துவிட்டுச் சாகிறேனே!” - அற்புதம் அம்மாள்

``ஒரு 10 வருடமாவது என் மகனுடன் இருந்துவிட்டுச் சாகிறேனே!” - அற்புதம் அம்மாள்
``ஒரு 10 வருடமாவது என் மகனுடன் இருந்துவிட்டுச் சாகிறேனே!” - அற்புதம் அம்மாள்

``அறிவு அண்ணே நிச்சயம் வெளிய வந்துரும்...!” ``அறிவு தம்பி நிச்சயம் விடுதலையாகிடுவாரு...!” ``அறிவு கண்டிப்பா வெளிய வந்துருவாப்ல...!”..

7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம், அதற்குத் தமிழக அரசே பரிந்துரை செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான அமர்வு கூறியிருப்பதை... அடுத்து அவர்கள் விடுதலை குறித்தும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் மிகுந்த எதிர்பார்ப்புகள் தமிழ்ச்சூழலில் நிலவிவருகின்றன. விடுதலைத் தொடர்பான 7 தனித்தனி தீர்மான கோப்புகளை தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளது. `தனித்தனியாகவே தெளிவான கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்களை அனுப்பியிருக்கிறோம் அம்மா. இந்தமுறை விடுதலைக் கிடைத்துவிடும் மனவுறுதியாக இருங்கள்!” என்று அற்புதம் அம்மாளுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார்கள் அரசு தரப்பினர். அம்மாவுக்கு இந்த நம்பிக்கைச் சொற்கள் ஒன்றும் புதிது இல்லை. 28 வருடங்களாக தான் நியாயம் கேட்டு ஏறி இறங்கிய படிகளிலும் தட்டிய கதவுகளிலும் இதனை நிறையவே கேட்டுவிட்டார். காலங்கள் கடந்துவிட்டாலும் நம்பிக்கை வார்த்தை சொன்னவர்களின் சொற்கள் அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறது.

``அறிவு அண்ணே நிச்சயம் வெளிய வந்துரும்...!”

``அறிவுத் தம்பி நிச்சயம் விடுதலையாகிடுவாரு...!”

``அறிவு கண்டிப்பா வெளிய வந்துருவாப்ல...!”.

ஆனால் அதே காலம் அற்புதம் அம்மாவை உடல் அளவிலும் மனதளவிலும் நிறையவே தின்று தீர்த்திருக்கிறது. 11 ஜூன் 1991ல் தனது மகன் ராஜீவ் கொலைக்குற்ற வழக்கு விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டபோது அவரை மீட்டுக்கொண்டுவருவதற்காகப் பயணம் தொடங்கியவருக்கு மயிர்கள் கறுத்திருந்தன, குரலில் சோகம் இருந்தாலும் எவ்வித தளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. 28 ஆண்டுகள் கடந்திருக்கும் போராட்டத்தில் தற்போது 71 வயது நிரம்பியிருப்பவருக்கு மயிர்கள் வெளுத்திருக்கின்றன, குரலும், அலைந்து திரிந்த உடலும் நிறையவே தளர்ந்திருக்கிறது. ஆனால், `என் மகனை விடுதலை செய்யுங்கள்’ என்கிற அந்த வார்த்தைகளில் மட்டும் இத்தனை ஆண்டுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.  

கழுத்து எலும்பு தேய்ந்திருப்பதால் மருத்துவர் அறிவுரைப்படி கழுத்துப்பட்டை ஒன்றைப் போட்டுக்கொண்டு தனது மகனுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். ``கழுத்துப்பட்டை போடலைன்னா எலும்பு இன்னும் தேயும். தோள்பட்டை செயல் இழந்துபோயிடும்னு மருத்துவர் சொல்லியிருக்காங்க. ஆனா பட்டையக் கழுத்துல மாட்டிக்கிட்டுப் பேசமுடியல. குரல் வலிக்குது” என்று மெல்ல தனது குரல்வளைப் பகுதியைத் தொட்டுக்கொள்கிறார். தனது மகனுக்காகப் பேசும் நேரங்களில் எல்லாம் அதைக் கழட்டிவைத்துவிடுகிறார். எல்லா நேரங்களிலும் தனது மகனுக்காகத்தான் பேசுகிறார். ஆளுநருக்கு தீர்மான கோப்புகள் அனுப்பப்பட்டுவிட்டாலும் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்டிருக்கிறார் என்பது போன்ற வதந்திகளாலும். ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தின் போது இறந்த நபர்களின் குடும்பத்தினர்கள் தற்போது விடுதலைக்கு எதிராகப் பேசுவதாகவும் வந்த செய்திகளை அடுத்து சற்றே கலக்கம் அடைந்திருக்கிறார். 

``அறிவுடைய 19 வயசு வரைக்கும்தான்மா அவன் என்கூட இருந்தான். ஒரு அம்மாவா அவனை தொட்டுத்தூக்கி சீராட்டி வளர்த்தது எல்லாம் அந்த 19 வருஷம்தான். அதற்கப்புறம் அவனுக்கு இந்தச் சிறை வாழ்க்கைதான். சிறை கம்பிக்குப் பின்னாடி நம்மாள தொட்டுப்பார்க்கமுடியாத தூரத்தில் நம்முடைய குழந்தையைப் பார்ப்பது எல்லாம் கொடுமைம்மா. அவன் விடுதலையாகணும் எங்ககூட வாழணும் என்பதற்காக 28 வருடங்கள் போராடிட்டேன். எனக்கு இப்போது 71 வயது. அதிகபட்சம் இன்னும் 10 வருடம் நான் உயிரோட இருக்கலாம். ஒரு 10 வருடகாலமாவது என் மகனுடன் இருந்துவிட்டுச் சாக எனக்கு ஆசை இருக்காதா?. 19 வயதில் அறிவை விசாரணைக்கு என்றுதான் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். ஆனால் விசாரணை எதுவுமே முறையான வகையில் நடக்கவில்லை. கொலைக்குற்றவாளி என்றார்கள். உண்மைக்குற்றவாளி கிடைக்கவில்லை என்பதற்காக எனது மகன் மீது பழிபோடப்பட்டது. ஆனால் கொலைக்கான காரணம் குறித்து வழக்கு போட்டதே எனது மகன்தான். அரசு தரப்புக்கூட அதைச் செய்யவில்லை. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், கிருஷ்ணய்யர் உட்பட அனைவருமே அறிவின் விடுதலைக்குக் குரல்கொடுத்தார்கள். அவர்கள் அனைவருமே இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறிவந்தார்கள். வழக்கில் இருக்கும் தவறுகளும் நியாயமற்ற தன்மையும் சுட்டிக்காட்டப்பட்டு விடுதலைக்கான குரல் எழுப்பப்படும்போதெல்லாம் எதிர்ப்பவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். கொலைச்சம்பவத்தின் போது இறந்த நபர்களின் உறவினர்களை இந்த எதிர்ப்பாளர்கள் தூண்டிவிட்டுப் பேசவைப்பதாக உறவினர்களின் தரப்பே எங்களிடம் கூறுகிறார்கள். தாங்கள் சொல்லாதை எல்லாம் ஊடகத்தின் வழியாக இந்த எதிர்ப்பாளர்கள் வெளியிடுவதாக அந்த உறவினர்கள் சொல்கிறார்கள். ராஜீவ் கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக 14 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் அந்த எதிர்ப்பாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலை சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவள் நான்தான் என் பெயர் அந்தப் பட்டியலில் ஏன் இல்லைமா?. என் மகன் விடுதலை ஆகவேண்டும். அவன் வாழவேண்டும் என்று நான் கதறும்போதெல்லாம் இந்த எதிர்ப்பாளர்கள் குரல்கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஒரு மனிதன் வாழக் கூடாது என்று நினைப்பது எவ்வளவு குரூரமான சிந்தனை. இதுநாள் வரை நாங்கள் அறிவுக்காக சட்டரீதியாகவே போராடியிருக்கிறோம். ஆளுநரும் சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றுதான் கூறியிருக்கிறார்’ 71 வயது நம்பிக்கை மனுஷி. பிள்ளைகளைப் பிரியும் துயரங்களைத் தாயுள்ளங்களால் மட்டுமே உணரமுடியும். 


அவள் அற்புதம். அற்புதங்களின் எண்ணங்கள் ஈடேறட்டுமே!. 

அடுத்த கட்டுரைக்கு