Published:Updated:

``இந்தக் காட்டை வாடாம பாத்துக்க, நாங்க இருக்கணுமே?!" - காட்டைக் காக்கும் காணி மக்களுடன் ஒருநாள்

``இந்தக் காட்டை வாடாம பாத்துக்க, நாங்க இருக்கணுமே?!" - காட்டைக் காக்கும் காணி மக்களுடன் ஒருநாள்

காடு பற்றியும் அதைப் பாதுகாப்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டுமென்றால் அந்தச் சிந்தனையின் அச்சாணியாகப் பழங்குடிகளின் முக்கியத்துவமே முதலிடம் வகிக்க வேண்டும்.

``இந்தக் காட்டை வாடாம பாத்துக்க, நாங்க இருக்கணுமே?!" - காட்டைக் காக்கும் காணி மக்களுடன் ஒருநாள்

காடு பற்றியும் அதைப் பாதுகாப்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டுமென்றால் அந்தச் சிந்தனையின் அச்சாணியாகப் பழங்குடிகளின் முக்கியத்துவமே முதலிடம் வகிக்க வேண்டும்.

Published:Updated:
``இந்தக் காட்டை வாடாம பாத்துக்க, நாங்க இருக்கணுமே?!" - காட்டைக் காக்கும் காணி மக்களுடன் ஒருநாள்

நள்ளிரவு மூன்று மணி இருக்கும். நடுக்காடு. காரையாற்றின் கரையோரக் காட்டில் கடப்புப் போட்டுக் காவலுக்கு அமர்ந்திருந்தேன். வனத்துக்குள் விலங்குகள் அண்டாமலிருக்கப் போடும் நெருப்பை அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். சுற்றிக் கரடிகளின் உறுமல்கள். அவன் நூறிக் கிழங்கைத் தோண்டியெடுத்துச் சுவைத்துக் கொண்டிருக்கலாமென்று சொன்னார்கள். ஆம், அவர்களுக்கு விலங்குகளும் அவன்/அவள் தான். அங்கு யாருமே ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரில்லை. பக்கத்திலிருந்த மயிலார் காட்டுக்குள் யானையின் ஆவேசப் பிளிறல் கேட்டுக் கொண்டேயிருந்தது. இரவில் யாருக்குமே தூக்கமில்லை. எச்சரிக்கை மற்றும் கடப்பு அணையாமல் காவல் காக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு நீண்ட நேரம்வரை யாருமே தூங்கவில்லை. நள்ளிரவு தாண்டியே தூங்கத் தொடங்கினார்கள். விழித்தே இருந்தவர்கள் அனைவரும் அசந்து தூங்கிவிட்டனர். கடப்புக் காவலுக்காக நான் மட்டும் விழித்திருந்தேன். 

யானையின் பிளிறல் அடங்கியபாடில்லை. நாங்கள் நேற்றிரவு இளைப்பாறத் தங்கல் போட்ட இந்தப் பகுதியில்தான் அவள் தன் குட்டியோடு இரவுக் குளியல்போட ஆற்றங்கரைக்கு வருவாளாம். இப்போது நெருப்புப் போட்டுவிட்டதால் இங்கு வரமுடியாமல் போய்விட்டது. அதுகூட ஆவேசத்துக்குக் காரணமாக இருக்கலாமென்று காணிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வேட்டைத்தடுப்புக் காவலர் இரவு சொன்னார். ஒரு பக்கம் கரடி, ஒரு பக்கம் யானை. போதாதென்று காட்டின் மௌனத்தைக் கிழித்துக் கிளம்பும் காட்டுவண்டின் ரீங்கார ஓசை. பீதிக்குத் தீனி போடும் வகையில் இரவாடிப் பறவைகளின் அலறல்கள் வேறு. வனச்சூழலைச் சமாளிக்க மனோதிடமும் காடறிவும் மிக மிக முக்கியம். இவையில்லையென்றால் விறகொடிந்து விழும் சத்தம்கூட நம்மைக் கொன்றுவிடுமளவுக்குப் பீதியைக் கிளப்பும். இரவு முழுவதும் விழித்திருந்ததால் வயிறு பசிக்கத் தொடங்கிவிட்டது. அந்த நள்ளிரவுச் சமயத்தில் அதுவும் காட்டுக்குள் என்ன கிடைத்துவிடும்? வேறு வழியின்றி நீண்டநேரமாக ஆற்றுநீரை மொண்டு குடித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். ஒன்றரை லிட்டர் தண்ணீர்க் குவளையை மூன்று முறை தீர்த்தும் பசியாறாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை மூன்றரை மணியளவில் பாஸ்கரபாண்டி என்ற மற்றுமொரு காணி குடிமகன் எழுந்தார். என் பசியறிந்தவர் கடப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் வந்துவிடுகிறேனென்று காட்டின் கும்மிருட்டுக்குள் நடந்து மறைந்தார்.

கடப்பில் சுடப்படும் கிழங்கு

அவரும் காணி இனத்தைச் சேர்ந்தவர். பொதிகை மலைத்தொடரின் அனைத்து மலைக் காடுகளுக்குள்ளும் சுற்றித் திரிந்தவர். அவருக்குத் தெரியாத, அவர் பார்க்காத விலங்கும், தாவரங்களும் அங்கில்லை. சென்று பதினைந்து முதல் இருபது நிமிடம் இருக்கும் திரும்பிவந்தார். இறங்கியவர் கை நிறைய கிழங்குகளோடு வந்தார், ``வர்ற வழியில மொளச்சிருந்தத பாத்தே... பசின்னு பரஞ்சீகளே அதான் புடுங்கிட்டு வந்த" என்றவர் பேசிக்கொண்டே அதன் கருங்காவி நிறத் தோலை உரித்து அதனுள் ரோஸ் நிறத்திலிருந்த மற்றுமொரு தோலையும் உரித்தார். மாவுபோல் வெளேரென்றிருந்த அந்தக் கிழங்கை அப்படியே நெருப்பில் போட்டுவிட்டுக் குளிர்காய அமர்ந்துவிட்டார். ஆவலோடு எச்சில் ஊறக் காத்திருந்தவன் ஏமாந்துபோனேன். இப்படி அநியாயமாக நெருப்பில் போடவா எடுத்து வந்தீர்களென்று ஆதங்கத்தோடு கேட்டேன். ``இப்படியே சாப்புட்டா மாவு மாதிரி இருக்கும் சார். நெருப்புல சுட்டுத்தரேன் பொறுங்க" என்றவர் சிறிதுநேரம் கழித்து நெருப்பில் போட்டிருந்த கிழங்கை வெறும் கையிலெடுத்துத் தீக் கறிகளைச் சுத்தம்செய்து, ``சூடாற வெச்சுச் சாப்புடுங்க" என்றபடி அருகில் வைத்தார். அவர் அதைக் கையாண்டதைப் பார்த்துச் சூடு குறைவுதான் போலென்று நம்பி ஊதிச் சாப்பிடலாமென்று கையிலெடுத்தேன். கை எடுத்த வேகத்தில் கிழங்கை உதறியது. உள்ளங்கை கொப்புளித்துப் போயிருந்தது. மனிதனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. எனது அறியாமை உண்டாக்கிய அந்தச் சிரிப்பினூடே அவர் பார்த்த பார்வை ஒன்றுமறியா குழந்தையைப் பார்ப்பதுபோலிருந்தது. அவரது குரல் அந்தக் குழந்தைக்குப் பாடமெடுக்கத் தொடங்கியது.

``எங்கள் கைகள் நெருப்பில் சுட்டுச் சுட்டுச் சாப்பிட்ட கிழங்குகளைப் பிடித்துக் காய்த்து மரத்துவிட்டது. காட்டிலேயே வாழும் எங்கள் உடலமைப்புக்கும் உங்கள் உடலமைப்புக்கும் வித்தியாசமுண்டு. அதைப் புரிந்துகொள்ளாமல் இப்படிச் சுட்டுக்கொண்டீர்களே" என்றபடி முகத்தில் தோன்றிய புன்சிரிப்போடு கையைத் துடைத்துவிட்டார். அவர் கொடுத்தது ஏழிலைக் கிழங்கு. நிலத்தின் வெளிப்பகுதியிலிருக்கும் இலைகள் ஒவ்வொன்றும் ஏழு கிளைகளாகப் பிரிந்திருப்பதால் இந்தப் பெயர். சூடாறவிட்டுச் சாப்பிட்டபோது அதன் ருசிகூட ஏழுமலைகளைக் கடந்து சாப்பிடக்கூடிய தகுதி நிறைந்ததாகத் தானிருந்தது. இந்தக் கிழங்கு மட்டுமல்ல, அந்தக் காட்டின் அனைத்துத் தாவரங்களையும், மரங்களையும், நில அமைப்பையும் அறிந்தவர்கள் இந்தக் காணிக்காரர்கள். சுருக்கமாகக் காணி என்றழைக்கப்படுகிறார்கள்.

தீற்றிக் கிழங்கு, நூறைக் கிழங்கு, கவளைக் கிழங்கு போன்ற மேலும் பலவகைக் கிழங்குகளைக் நடுக்காட்டுக்குள் தங்கும் சமயங்களில் உணவாக்கிக் கொள்கிறார்கள். எது சாப்பிடக்கூடியது எந்தக் கிழங்கு சாப்பிட முடியாதது என்பதை அவர்களன்றி வேறெவராலும் பிரித்தறிய முடியாது. விலங்குகள் சாப்பிடும் அனைத்துக் கிழங்குகளையும் நாம் சாப்பிடமுடியாது. நூறிக் கிழங்குக்கும் நூறைக் கிழங்குக்கும் அவ்வார்த்தைகளின் எழுத்தளவு தான் வித்தியாசம். இரண்டாவதை நாம் சாப்பிடமுடியும். முதலாவதைப் பன்றி நிலத்தைத் தோண்டியெடுத்து மிகவும் விரும்பிச் சாப்பிடும். அதை நாம் சாப்பிடக்கூடாது. உடல் உபாதைகளைத் தந்துவிடும். அந்த வித்தியாசங்களை அறிந்தவர்கள் காணி மக்கள்.

அவர்கள் மொத்த மலையையும் அறிந்தவர்கள், நிலத்தின் மேலும் கீழும் எதெல்லாம் அப்பகுதியில் விளையுமோ அனைத்தையும் தெரிந்தவர்கள். அதனாலேயே மலையரசன் என்று புகழ்பெற்றவர்கள். ஊருக்குள் மழைக் காலத்தில் விளையும் பெரண்டைச் செடியின் குடும்பத்தைச் சேர்ந்தது பரண்டை என்ற தாவர வகை. அதைச் சாப்பிட்டால் விஷம் அதனால் யாரும் தொடக்கூட மாட்டார்கள். அதன் விதைகளைத் தீயில் சுட்டு உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து ஏழு முறை கொதிக்க வைத்து அவித்துப் பிறகு சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் பெருகுமென்பதைக் கண்டுபிடித்தவர்கள். நிலப்பனை, கூந்தல் பனை, ஆலப்பனை, காந்தப் பனை, விதுரக் கமுகுப்பனை என்று அனைத்து வகைப் பனைகளையும் அறிந்தவர்கள். அதில் உச்சியில் மட்டுமே வளரும் காந்தப் பனை மரங்களைப் பொதிகை மலை உச்சியில் பெருமளவில் பரவலாக்கியதில் இவர்களின் பாட்டன்களுக்குப் பெரும் பங்குண்டு. இந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள்கூட சர்வசாதாரணமாகச் சுமார் முப்பது அடி உயர மரத்திலும் ஏறக்கூடியவர்கள். தேனெடுப்பதிலும், காட்டின் தன்மை மாறாமல் தங்களின் தேவைக்கு மட்டுமே விவசாயம் செய்வதுமாக அவர்களின் காடறிவுக்கும் நிலவியல் அறிவுக்குமான அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காட்டு வாழை

காணி மக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் சில மலைப்பகுதிகளில் பரவியிருக்கிறார்கள். இவர்களுக்கு காணி, காணிக்காரன், மலையரசன் என்று பல பெயர்களுண்டு. காணி என்பதற்கு நிலத்தை அறிந்தவர் என்று பொருள். மலையாளமும் தமிழும் கலந்த காணிக்காரர் மொழியைப் பேசுகிறார்கள். திருநெல்வேலி பாபநாசம் பகுதியில் தொடங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தொடங்கிப் பொதிகை மலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இஞ்சிக்குழி என்ற மலை வரையிலும் வசிக்கிறார்கள். மூட்டு வலி ஏற்படாமல் பாதுகாக்கும் முட ஆட்டங்கால் என்ற மூலிகைத் தாவரம் முதல் குழந்தைப்பேற்றுக்கு வழிவகுக்கும் கல்தாமரை இலை, நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும் ஆரோக்கியப் பச்சிலை விதை என்று அவர்களின் வனத் தாவர ஞானம் அளவிடற்கரியது. தங்களுக்கான நிலப்பகுதியில் காட்டு வாழை, காட்டுப் பப்பாளி, ஆரஞ்சு, மலைநெல்லி, தாண்டிக்காய், கடுக்காய், இஞ்சி, மிளகு என்று பலவற்றையும் காட்டின் இயல்பிலேயே வளரவிட்டுப் பயன்படுத்துகிறார்கள். அதிகமாகக் கிழங்கு வகைகளையே உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மக்கள் குட்டையாகவும், சுருட்டை முடியோடும் கருநிறத்தோடுமான உடலமைப்பைக் கொண்டவர்கள். உயரத்தில் குட்டையாக இருப்பதைப் பரிணாம வளர்ச்சியின் அங்கமாகவே பார்ப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் வாழ்வதோ அடர்த்தியான மலைக்காடுகளுக்குள். அங்கு மரங்களின் அடர்த்தி மிக அதிகம். அடர் மரங்களுக்குள் சிரமமின்றிப் பாய்ந்து செல்வதற்கும், மலை உச்சியில் அதிகமாகக் காணப்படும் ஈத்தல் காடுகள் உயரத்தில் குறைவாகவும் படர்ந்தும் காணப்படுவதால் அதற்குள் காயமேற்படாமல் உலவுவதற்கும், யானை போன்ற பேருயிர்கள் மற்றும் புலி, காட்டெருது போன்ற உயரத்தில் வாழக்கூடிய விலங்குகளின் கண்ணில் படாமல் நடமாடவும் இந்தக் குட்டை உடலமைப்பு உதவியாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பொதிகை மலைக்கு ஆராய்ச்சிக்காக வருபவர்களுக்குக் காட்டைப் பற்றியும் அதன் உயிரினங்களைப் பற்றியுமான அறிவையும், தங்கள் காடனுபவத்தையும் தந்து உதவுவதன் மூலம் பெரும் சேவை செய்கிறார்கள். காடு பற்றியும் அதைப் பாதுகாப்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டுமென்றால் அந்தச் சிந்தனையின் அச்சாணியாகப் பழங்குடிகளின் முக்கியத்துவமே முதலிடம் வகிக்க வேண்டுமென்பதற்குக் காணிக்காரர்கள் வாழும் அடையாளங்கள். அவர்களைச் சந்திக்க நேரில் சென்றிருந்தபோது அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன், ``நீங்கள் ஏன் இங்கேயே இருந்து கஷ்டப்படுகிறீர்கள்? ஊருக்குள் இறங்கிவந்து வேறு வேலை செய்யலாமல்லவா!"

அதற்கு அவரளித்த பதில்,

``இவ நம்ம அம்மா. மூத்த பிள்ளை எப்பவும் அம்மா செல்லமாச்சே. அவள வாட்டாம சீராட்டிப் பாத்துக்க நாங்களாவது இருக்கவேண்டாமா!"