Published:Updated:

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை


பெருந்தமிழர் விருது

ந.முத்துசாமி

 நாடகக் கலை

தமிழ் நாடக உலகின் நவீன முகம் ந.முத்துசாமி. கலை என்ற சொல்லின் மற்றொரு அர்த்தமான கலைத்தலையும் கலைக்குள் செய்துகாட்டியவர். சமூகத்தின் இறுகிப்போன அமைப்புகளை, அதிகாரங்களை, கருத்துகளை, நம்பிக்கைகளைத் தனது நாடகங்களால் கலைத்துப்போட்டவர். தெருக்கூத்தை மீட்டெடுத்ததில், அதன் மீதான புதிய மதிப்பீட்டை உருவாக்கியதில், இவரே முன்னோடி. இயற்கையை அளவற்று நேசிக்கும் உயிர்நேயக் கலைஞர். உலக அரங்கில் தமிழ் நவீன நாடகங்களுக்கான இடத்தை உருவாக்கியவர்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை எனும் கிராமத்தில் பிறந்த முத்துசாமிக்கு வயது 81. சிறுகதைகளின் வழியே தமிழ் இலக்கியத்துக்குள் அழுத்தமாகக் கால் பதித்து நுழைந்தவர், ‘நடை’ இதழில் ‘காலம் காலமாக’ என்ற நாடகத்தை எழுதி, நாடக வெளியிலும் புதிய அவதாரம் எடுத்தார். 1977-ல் ‘கூத்துப்பட்டறை’ எனும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளியை உருவாக்கி, 40 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கலைஞர்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் ந.முத்துசாமியைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

 பசுபதி, குரு சோமசுந்தரம், கலைராணி, குமரவேல், விமல், விதார்த், ஜார்ஜ்,  வினோதினி வைத்தியநாதன் எனப் பல பிரபல சினிமா ஆளுமைகள் இவரது பட்டறையில் கூர் தீட்டப்பட்டவர்கள்தாம். கூத்துப்பட்டறையில் அடவுச் சத்தம் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒப்பனைக்கு வண்ணம் குழைக்கப்படுகிறது. பட்டறையின் ஒளிகொண்டிருக்கும் நிலையான கலைநெருப்பு ந.முத்துசாமி. தமிழ்க்கலையில் மதிப்புமிக்க அடையாளமான ந.முத்துசாமியை கெளரவிப்பதில் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன்.

சிறந்த நாவல்

மடவளி

கவிப்பித்தன்

நூல் வனம்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

பஞ்சாயத்துத் தேர்தல்கள் கிராம மக்களை எப்படிச் சாதியரீதியாக ஒடுக்குகின்றன, பொருளாதாரரீதியாகப் பிரித்துப்போடுகின்றன, தேர்தல் காலம் முடிந்த பின்னும்கூட சாதிப்பகைமை எப்படி வெறிகொண்டு பழிதீர்க்கத் தேடியலைகிறது என்பனவற்றை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவுசெய்ததில் முக்கியமான நாவலாக உருவாகியிருக்கிறது ‘மடவளி.’ எவ்வித வடிவ, விவரிப்புப் பிரயத்தனங்களும் இன்றி நேரடியான மொழியில் கதையைச் சொன்னதன் வழியே கவனம் ஈர்க்கிறார் கவிப்பித்தன். வடதமிழகத்தின் ஒரு கிராமத்தை மையமாகக்கொண்டே கதை இயங்கினாலும், தமிழகத்தின் எல்லாக் கிராமங்களையும் பிரதிபலித்து நிற்பது நாவலின் சிறப்பு. மூன்று உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்தித்த அனுபவம் கவிப்பித்தனுக்கு எழுத்தில் கைகொடுத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களின் அசல் முகம் காட்டி நிற்கும் எழுத்துக்கண்ணாடி `மடவளி!’


சிறந்த சிறுகதைத் தொகுப்பு


கேசம்

நரன்

சால்ட்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

கவிதைகள், சிறுகதைகள், நாவல் என அடுத்தடுத்த இலக்கிய வடிவங்களில் முன்னகர்ந்து செல்ல முயலும் இளம் படைப்பாளி நரனின்  முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கேசம்.’ தனிமையை, மனித மனதின் தீராத் துயரங்களை, மன அலைச்சல்களை, பெண் உலகின் மௌனங்களை எளிமையான மொழியில், கவித்துவம் பொங்கப் பேசும் தொகுப்பு. நவீன வாழ்வோடு மனிதர்கள் கொள்ளும் உறவு மற்றும் முரண்களைப் பற்றிய கதைகளில் கனவுத்தன்மை பரவிப் பெருகுவதுதான் ‘கேசம்’ தொகுப்பின் தனித்துவம்!

 சிறந்த கவிதைத் தொகுப்பு

அலெக்ஸாண்டரின் காலனி 

யவனிகா ஸ்ரீராம்

மேகா பதிப்பகம்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

‘எங்கே ஓடக்காரன் பாடுகிறானோ / அதன் நதி வீட்டுப் பானைகளில் நடுங்குகிறது.’ இப்படியான மனக் காட்சிகளாக விரியும் கவிதை வரிகளால் நிறைந்தது ‘அலெக்ஸாண்டரின் காலனி.’ ‘பின்காலனியத்துக்கு எதிரான குரல்’ என்று தன் கவிதைகளை அடையாளப்படுத்திக் கொள்ளும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள், மூலதனத்தின் வன்முறைகளைப் பேசுபவை; காட்சிப்படிமங்களின் வழியே நம்மைப் பல்வேறு உணர்வுநிலைகளுக்கு ஆட்படுத்துபவை. பூமிப்பந்தின் மீது விரிக்கப்பட்ட வணிகக் கம்பளமாய் உலகமயமாக்கல், ஆன்மிக வியாபார  மதநிறுவனங்கள், மாண்பற்ற நுகர்வுக் கலாசாரம், பெருகிவிட்ட அதீத தொழில்நுட்பச் சாதனங்களுக்கிடையேயான நெருக்கடி மிக்க அன்றாடம், பாலியல் ஒடுக்குமுறை... என மனித வாழ்வின் அபத்தங்களை, அரசியலுடனும் அழகியலுடனும் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு, இந்த ஆண்டின் முக்கியமான ஆக்கம்!

சிறந்த கட்டுரைத் தொகுப்பு

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

சுகுணா திவாகர்

எதிர் வெளியீடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

அதிகாரத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும்  சிந்திப்பதைத் தவிர நமக்கு வேறு  வழியில்லை என்கிறது சுகுணா திவாகரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. வரலாற்றின், மரபின், அரசியல் பண்பாட்டு நகர்வின் வேர்களைத் தேடிச் சென்று, தற்காலத்தோடு அவை உடன்படும் முரண்படும் புள்ளிகளைத் தர்க்கபூர்வமாக எதிர்கொள்கின்றன கட்டுரைகள். கருத்தியல், சாதி, அரசியல், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள்,  மொழி அமைப்பு, இலக்கியம், பண்பாடு, ஆண்மையச் சிந்தனைகள்  என சகலத்தின் மீதும் கவனம் குவிக்கிறார் கட்டுரையாளர். எதையும் நிறுவிவிடும் முனைப்பு இல்லாமல் வாசகர்கள் உரையாடுவதற்கான வெளிகளை உருவாக்குவதாலும் எல்லா விஷயங்களையும் புதிய கோணங்களில் அணுகுவதன் சாத்தியப்பாடுகளை முன்வைப்பதாலும் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு இது!

சிறந்த சிறுவர் இலக்கியம்

இருட்டு எனக்குப் பிடிக்கும்

ரமேஷ் வைத்யா

நீலவால் குருவி வெளியீடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

இலக்கிய உலகில் இனிய எளிய எழுத்து வடிவம் சிறார் இலக்கியம். கற்பனை உலகிலேயே சதா சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்குக் கதை சொல்ல விரும்பும் ஒருவர், கலைமனதால் சிறுவர்களின் சிறுவராக இருக்க வேண்டும். அப்படியொரு சிறுவர்மனது உள்ள படைப்பாளியாக ரமேஷ் வைத்யாவை அடையாளப்படுத்துகிறது இந்தச்  சிறார் நாவல். எதிர்மறைச் சம்பவத்தில் தொடங்கி, சவாலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக விரியும் கதையில், மிக நுட்பமாக நேர்மறை எண்ணங்களை, உணர்வுகளை இழையாகப் பின்னிய விதத்தில் முத்திரை பதிக்கிறார். நாவலில் இடம்பெறும் சூழலியல், விலங்குகள், பழங்குடிகள் சார்ந்த விஷயங்கள் அரசியல் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கின்றன. `இருட்டு எனக்குப் பிடிக்கும்’ எல்லோருக்கும் பிடிக்கும்! 

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு

தலித் பார்ப்பனன்

ம.மதிவண்ணன்

கருப்புப் பிரதிகள்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

இந்திய தலித் எழுத்துகளின் முன்னோடியான சரண்குமார் லிம்பாலேயின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தமிழாக்கமே ‘தலித் பார்ப்பனன்.’ சாதிய ஒடுக்குமுறை - இந்திய சமூக அமைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் நூற்றாண்டுக்கால நோய்  என்பதை, வாழ்வுண்மைகளை முன்வைத்துச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள கதைகள். லிம்பாலேயின் அலங்காரமற்ற நேரடியான கதை சொல்லலைத் தமிழில் நேர்த்தியாக மொழிப்படுத்தியிருக்கிறார் ம.மதிவண்ணன். ஒடுக்கப்பட்ட மனிதனை மேலும் மேலும் ஒடுக்க, ஒடுக்குதலைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவு நுட்பமாகச் சமூகத்தை அதிகாரம் வடிவமைத்துள்ளது என்பதைத் துல்லியமாக வரைந்துகாட்டுகின்றன கதைகள்!


சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு

தாகங்கொண்ட மீனொன்று

என்.சத்தியமூர்த்தி

லாஸ்ட் ரிசார்ட்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

‘காதலர்கள்/ இறுதியில் எங்கேனும்/ சந்தித்துக்கொள்வதில்லை/ அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக/ இருந்து வருகிறார்கள்/ காலங்காலமாக’ - இது காதல் கவிதையா? ஆம். ஆன்மிகக் கவிதையா? ஆம். அதுதான் ரூமி! கவிஞர் ஜலாலுத்தின் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ‘தாகங்கொண்ட மீனொன்று.’ அழகுணர்ச்சியும் இசைமையும்கொண்ட வரிகளில் முகிழ்க்கும் கவித்துவத்தைத் தமிழில் ரசமாக வார்த்திருக்கிறார் என்.சத்தியமூர்த்தி. வாழ்வையும் காதலையும் இடையறாது மலரச் செய்யும் ஒரு கலை யத்தனமே ரூமியின் கவிதைகள். அதன் எழில்மிகு தமிழ் முகம் இந்த நூல்!   

சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் 

செ.நடேசன்

எதிர் வெளியீடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

‘தேசியம்’ பற்றிய தொடர்ச்சியான ஓர்மையும் உரையாடலும் நிறைந்த தமிழ்ச் சமூகத்திற்கு  இந்த நூல் அவசியமான ஒன்று. காஷ்மீரின் நெடிய வரலாற்றை, காஷ்மீர் தேசியம் சார்ந்து எழுந்த பல்வேறு குரல்களை, தொடர்ச்சியான பயணங்களின் வழியே கண்டறிந்த உண்மைகளைப் பதிவுசெய்திருக்கிறார் நந்திதா ஹக்ஸர். விறுவிறுப்பான ஒரு வரலாற்று நாவலைப்போல நீளும் நூல், இரண்டு மனிதர்களின் கதைகளின் மூலமாக காஷ்மீரின் நூற்றாண்டு வெப்பத்தை வாசகர்களுக்குக் கடத்துகிறது. நந்திதா ஹக்ஸரின் சரளமான எழுத்து நடையை அதன் அடர்த்தியுடன் தமிழுக்குத் தந்திருக்கிறார் செ.நடேசன். இந்த நூல், காஷ்மீர் என்ற அரசியல் நிலத்தைத் தெரிந்துகொள்வதற்கான வழிகாட்டி!

 சிறந்த சிற்றிதழ்

 நிழல்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

சிற்றிதழ் வெளியில் நவீன சினிமாவிற்கான ஒரு தீவிர முகம் ‘நிழல்.’ சினிமாக் கலைரசனையை, அரசியலை, தொழில்நுட்பச் சாத்தியங்களை அலசும் விதமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேல், தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சினிமாப் பயிற்சிப் பட்டறைகளையும் கருத்தரங்குகளையும், திரையிடல்களையும் நடத்திவரும் `நிழல்’ திருநாவுக்கரசு, இந்த இதழையும் ஓர் இயக்கம்போலவே முன்னெடுத்துச் செல்கிறார். களம் கிடைக்காமல் தவிக்கும் ஆக்கபூர்வமான குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய விமர்சனங்கள், சினிமாவின் மூலக்கலையான நாடகங்கள் பற்றிய பார்வைகள், புதிய பாதைகளை உருவாக்கிய அயல் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள், திரைத் தொழில்நுட்பங்களை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான படைப்புகள் என... சினிமாவை விரும்புகிறவர்களுக்கும், திரைத்துறையில் இயங்கும் இன்றைய இளைஞர்களுக்கும் வழிகாட்டும் பாடப்புத்தகமாக விளங்கும் `நிழல்’ கவனம்கொள்ள வேண்டிய சிற்றிதழ்!


சிறந்த வெளியீடு

சித்திரக்கூடம்  

சா.பாலுசாமி  

தடாகம் வெளியீடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

திருப்புடைமருதூர் ஓவியங்கள் 16-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வரலாற்று, கலை பண்பாட்டு ஆவணங்கள். அவற்றை அக்கறையோடு தொகுத்துள்ளது ‘சித்திரக்கூடம்.’ பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அரசமைப்பை, மக்கள் வாழ்வியலை, பண்பாட்டு முறைகளை,  கலையறிவை, கலைவளத்தை அறிந்துகொள்ள உதவும் எளிமையான நூல். நூலாசிரியர் சா.பாலுசாமி என்கிற பாரதிபுத்திரனின் களப்பணி, ஆய்வு அனுபவம், பரந்துபட்ட அணுகுமுறையால் இந்நூல் செழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வண்ண ஓவியங்களும், செறிவூட்டப்பட்ட பெரிய படங்களுமாக நேரில் பார்த்து அறிந்து மகிழும் அனுபவத்தைத் தருகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவும் அறிந்துகொள்ளவும் இன்றைய இளம் தலைமுறைக்கும் பிடித்தமான வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கூடத்தை அழகுணர்ச்சியுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் உருவாக்கி வெளியிட்ட ‘தடாகம்’ பதிப்பகம் பாராட்டுக்குரியது.

சிறந்த டிவி சேனல்

புதிய தலைமுறை

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

சாமானிய மக்களுக்காக 24/7 சளைக்காமல் பேசியது புதிய தலைமுறை தொலைக்காட்சி.  விவசாயப் போராட்டங்களின்போது தொடர்ந்து நேரடியாகக் களநேரலை செய்தது, ஓகி புயலின்போது மாயமான மீனவர்களின் குடும்பங்களோடு இணைந்து கேள்விகளை எழுப்பியது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை உலகுக்கே உரத்து அறிவித்தது என எப்போதும் எளிய மக்களின் பக்கமே நின்று பேசியது புதிய தலைமுறை. அவசியமான பிரச்னைகளை விவாதித்த `நேர்படப்பேசு’, பிரபலங்களைக் கேள்விகளால் துளைத்தெடுத்த `அக்னிப் பரீட்சை’, விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பேசும் `சாமானியரின் குரல்’ என ஒவ்வொரு நிகழ்ச்சியும் அர்த்தமுள்ளதாகவே அணிவகுக்கிறது. மக்களுடன் களத்தில் நின்று, உடனுக்குடன் செய்திகளையும், நிகழ்வுகளின் விளைவுகளையும் தரும்விதத்தில் கவர்கிறது புதிய தலைமுறை!

சிறந்த டிவி நிகழ்ச்சி

பிக் பாஸ்

விஜய் டிவி

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

மனித மனங்கள் இயங்கும் விதங்களை வித்தியாசக்கோணத்தில் வெளிச்சமிட்டுக்காட்டியது பிக் பாஸ் நிகழ்ச்சி. 100 நாள்கள், 19 போட்டியாளர்கள், 30 கேமராக்கள், ஒரு வீடு... என ஒவ்வொரு நாளும் வீட்டிற்குள்ளிருந்த ஹவுஸ்மேட்களின் நடவடிக்கைகளில் தங்களைத் தொலைத்தனர் வெளியிலிருந்த கோடிக்கணக்கான ஹவுஸ்மேட்ஸ். உள்ளே புறக்கணிக்கப்பட்ட ஓவியாவைத் தமிழ்நாடே கொண்டாடித் தீர்த்தது. ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `கொக்கு நெட்டக் கொக்கு’ என ஓவியாவின் ஒன்லைனர்கள் எல்லாம் வைரலாகின. சினேகனின் கட்டிப்புடி வைத்தியமும், நமீதாவின் கழிவறைத் தத்துவமும் பிரேக்கிங் நியூஸ் ஆயின. ஜல்லிக்கட்டு காயத்ரியின் மந்திரங்களும் ஜூலியின் தந்திரங்களும் ஆரவ்வின் மருத்துவ முத்தமும் வையாபுரியின் கதறல் சத்தமும் ஆன்லைனைத் தெறிக்கவிட்டன. இத்தனைக்கும் உச்சமாக, குறும்பும் அரசியலும் பகடியுமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனின் புதிய முகம் அத்தனைத் தமிழரையும் ஈர்த்தது!

சிறந்த நெடுந்தொடர்

தெய்வமகள்

சன் டிவி

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

எல்லோருக்கும் பிடித்த தெய்வமகள், தமிழ்க்குடும்பங்களில் நிலைத்துவிட்ட திருமகள். உலகம் முழுக்கக் கோடிக்கணக்கில் ரசிகர்களைத் தக்கவைத்திருக்கிற தொடர். துணிச்சலான, பொறுமையான, பக்குவமான சத்யாவைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் தமிழ்நாடு பார்க்கிறது. பிரச்னைகளை எதிர்த்துப் போராடுகிற சத்யாவின் கதாபாத்திரம், தமிழ்ப் பெண்களுக்கு எப்போதைக்குமான இன்ஸ்பிரேஷன். ஐந்தாண்டுகளாக ஒரு தொடரைத் தொடர்ந்து பார்க்கவைக்கிற மேஜிக்கை நிகழ்த்துபவர்கள் திரைக்கதையாசிரியர் வே.கி.அமிர்தராஜ், ஒளிப்பதிவாளர் மாட்ஸ் மற்றும் இயக்குநர் எஸ்.குமரன் கூட்டணி. 

கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் கொண்டாட்டம், அதில் முளைக்கும் சிக்கல்கள் எனப் பல யதார்த்தங்களைத் தொட்டுச் செல்வதால், உயர்ந்து நிற்கிறாள் தெய்வமகள்!

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்

மு.குணசேகரன்

நியூஸ் 18 தமிழ்நாடு

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

பரபரப்பு மட்டுமே செய்தியன்று என எப்போதும் வலியுறுத்தும் அக்கறைச் செய்தியாளர். கூச்சல்களும் குழப்பங்களுமாக இல்லாமல், விவாதங்களைப் பார்வையாளருக்கான அரசியல் பாடமாகப் பகுத்தறிந்து தர முனையும் குணசேகரின் `காலத்தின் குரல்’ சமூகத்துக்கு மிகவும் அவசியமான குரல். சசிகலாவின் முதல் பேட்டியில் ஆரம்பித்து மெளனவிரதம் இருந்த விஜயகாந்த்தின் மெளனத்தைக் கலைத்தது வரை குணசேகரனின் பேட்டிகள் டி.ஆர்.பியிலும் ஹிட். விவாதங்களில் தொகுப்பாளருக்குப் பக்கச்சார்புகள் கூடாது என்பது இலக்கணமாகக் கருதப்பட்டாலும், அறத்தின் பக்கம் நிற்பதற்காக அதை அடித்து நொறுக்கவும் தயங்காத குணசேகரன் தமிழ்த்தொலைக்காட்சிகளின் அற்புதன்.

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி

அஞ்சனா

சன் டிவி

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் அஞ்சனாவின் அடையாளம். சின்னச் சின்னக் குழந்தைகளின் திறமைக்கு மேடை தரும் `அசத்தல் சுட்டீஸ்’ ஓர் உதாரணம். சேட்டைக்காரர்களை சேதாரமின்றிச் சமாளிக்கிற பாணியே தனி அழகு. சன் மியூசிக்கில் நேயர்களோடு பேசுவதும் நிகழ்ச்சிகளைக் கலகலப்பாக்குவதும் இவரின் தனித்த அடையாளம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியைக் காதலித்து, சினிமா வாய்ப்புகளை மறுத்தவர். சமூக வலைதளங்களில் தனக்கென மெகா ஃபாலோயர் களுடன், கற்றுக்கொண்டே பயணிக்க விரும்பும் எனர்ஜெட்டிக் அஞ்சனா, இந்த ஆண்டின் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி!

சிறந்த பண்பலை

கோடை எஃப்.எம்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இதமாய் ஒலிக்கும் இனிமைப் பண்பலை. இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் அரசுப் பண்பலை கோடை எஃப்.எம். தென்கிழக்கு ஆசியாவில் கோடை எஃப்.எம் சென்று சேர்வது மூன்று கோடிப் பேரிடம். இதன் நேயர்களில் கணிசமானவர்கள் கூலி வேலைசெய்வோரும், நெசவாளர்களும், விவசாயிகளும்தான். எளிய மக்களும் ரசிக்கிற நிகழ்ச்சிகள், அவர்களுக்கான பயனுள்ள தகவல்கள், சார்புகளற்ற அரசியல் கருத்துகள் விவாதங்கள் என எப்போதும் தனித்து நிற்கிறது கோடை எஃப்.எம். நவீன மாற்றத்தின் பேரால் மற்ற பண்பலைகள் எல்லாம் ஆங்கிலக்கலப்பில் சிக்கிக்கொண்டிருக்க, இன்னமும் தமிழைக் கொண்டாடும் குரல் கோடையினுடையது!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர்

ராஜவேல் நாகராஜன்

ரேடியோ சிட்டி

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

ஒவ்வொரு நாளும் அன்பை வாரி வழங்கும் `லவ் குரு’ ராஜவேல் காதலோடு பெருங்கருணையையும் கற்றுத்தருகிறார். விவசாயக்குடும்பத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியாற்றி, பின் ரேடியோ ஜாக்கியானவர். ஆண்டு முழுக்க நிகழ்ந்த அரசியலையும் விட்டுவைக்காமல், ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை மக்களின் குரலை ஒலிக்கச்செய்தது லவ் குருவின் தனித்துவம். பொதுக்கழிப்பறை சவால் என்கிற விழிப்புஉணர்வு நிகழ்ச்சியின் மூலம் பொதுக்கழிப்பிடப் பிரச்னையில் மக்களைக்கொண்டே அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கவைத்தது, ஓகிப் புயலுக்கு நிவாரணம் திரட்டக் களத்தில் இறங்கியது என ராஜவேல் செய்தது ஏராளம். சக மனிதர்களின் மீதான காதல்தான் மாற்றத்திற்கான முதல் படி என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜவேல்!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி

சிவசங்கரி

ரேடியோ மிர்ச்சி

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை

புன்னகைக்குரலி ஆர்ஜே சிவசங்கரி. ரேடியோ மிர்ச்சி நேயர்களின் ஒற்றை விருப்பமாக நீடிக்கும்  தொகுப்பாளினி. சிவசங்கரியின் `மென்கள் மனதில்’ சென்னைமக்களின் ஃபேவரிட். விதவிதமான ஆண்களிடம், அவர்கள் வாழ்வில் கடந்து வந்த வித்தியாசப்பெண்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் நெகிழ்வான நிகழ்ச்சி. பிரியமும் அன்புமாக தொகுத்து வழங்குகிறார் சிவசங்கரி. பெண்களின் பிரச்னைகளில் தொடங்கி அவர்களுக்கான உரிமைகள் வரை உரையாடும் `லவ் டாக்டர்’  இன்னொரு சிக்ஸர். பண்பலைகளின் எல்லா எல்லைகளையும் கடந்து ஒலிக்கிறது சிவசங்கரியின் குரல்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு