Published:Updated:

வயது 105... வாழ்வது காட்டுக்குள்... வியக்கவைக்கும் காணி பழங்குடி பாட்டி!

மூத்தவரும் ஆணிவேருமான காளியம்மாள் பாட்டியும் தனது உற்ற துணையான மணி என்ற வேட்டை நாயோடு அவர்களுக்கு அருகில்தான் வசித்துவருகிறார். அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அத்தனை வயதிருக்குமென்பது தெரியவில்லை. முறையான வயதைக் கணக்கிட முடியவில்லையென்றாலும், 100 வயதைத் தாண்டிவிட்ட இவர் மனித சமூகத்தின் ஆரோக்கியத்தில் வனம் வகிக்கும் முக்கியப் பங்குக்கான வாழும் சாட்சி.

வயது 105... வாழ்வது காட்டுக்குள்... வியக்கவைக்கும் காணி பழங்குடி பாட்டி!
வயது 105... வாழ்வது காட்டுக்குள்... வியக்கவைக்கும் காணி பழங்குடி பாட்டி!

யானைகளும், புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு. மிரளும் காட்டெருதுகள் மேம்போக்காக உரசிச் சென்றாலே வயிறு கிழிந்து குடல் வெளியாகிவிடும். கடந்த ஆண்டு வேல்ராஜ் என்ற வேட்டைத் தடுப்புக் காவலருக்கு அப்படி வெளியாகியும் உள்ளது. நடக்கப் பாதைகூட இல்லாத அளவுக்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்களுக்கு நடுவே கிளைகள் கிழித்துக் காயமாகாமல் நடக்கவே முடிவதில்லை. சூரியன் அஸ்தமித்துவிட்டால் அங்கு இருள் செய்யும் ஆட்சியில் மனிதக் கண்களுக்கு அருகில் நிற்பது யானையே ஆனாலும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் பல நூறாண்டுகளாக வாழ்ந்தார்களென்றால் நம்பலாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்களென்று சொன்னால் நம்பமுடியுமா?

இது ஏதோ ஹாலிவுட் படத்தின் திரைக்கதையில்லை. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளா வரை பரவியிருக்கும் பொதிகை மலைத்தொடரில் வாழும் காணிப் பழங்குடிகளின் நிஜ வாழ்க்கை. குழந்தைகளின் கல்விக்காகப் பல்வேறு காணி குடும்பங்கள் ஓரளவுக்குக் கீழிறங்கி வந்தாலும் மலைப் பகுதியில்தான் வாழ்கிறார்களென்றாலும் இவ்வளவு அடர்ந்த காடுகளுக்குள் அவர்கள் தற்போது வாழ்வதில்லை. ஐந்தே ஐந்து குடும்பங்களைத் தவிர. ஆழமாகச் சென்று பார்த்தால் அவர்கள் ஐந்து குடும்பங்கள் இல்லை, ஒரே குடும்பென்பது புரியும். காணி வாழ்க்கைமுறையைப் பொறுத்த வரையிலும் குழந்தைகள் பருவமெய்தியதும் அவர்களுக்கென்று தனிக்குடில் அமைத்துத் தங்கத் தொடங்கிவிட வேண்டும். அங்குதான் அவர்களின் ராத்தூக்கம். தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்திசெய்ய முயலவேண்டும். ஒரே குடிலில் எப்போதும் வாழக்கூடாது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். அது அவர்களின் வழக்கம். இப்படியாக ஒரே குடும்பம் ஐந்து குடும்பங்களாக அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆம், அனைவரும் ஒரு தாய் வழியில் பிறந்தவர்கள். அந்தத் தாயின் வயது தற்போது சுமார் 105 இருக்கலாம்.

முதலில் இப்படிக் காட்டுக்குள் சில பழங்குடியினக் குடும்பங்கள் வாழ்கிறார்களென்று கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்கத்தான் சென்றிருந்தோம். அங்குச் சென்ற பிறகே அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களென்று தெரிந்தது. அவர்களில் மூத்தவரும் ஆணிவேருமான காளியம்மாள் பாட்டியும் தனது உற்ற துணையான மணி என்ற வேட்டை நாயோடு அவர்களுக்கு அருகில்தான் வசித்துவருகிறார். அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அத்தனை வயதிருக்குமென்பது தெரியவில்லை. ஏன் அவருடைய குடும்பத்தினருக்கே அது தெரிந்திருக்கவில்லை. அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது வயதுகுறித்துக் கேட்டோம், "வயசெல்லாம் கணக்கு வெச்சுக்குறதில்ல" என்று சிரமப்பட்டுப் பதிலளித்தார். வயது அவரது குரலை மழுங்கடித்துவிட்டது. இருப்பினும் முடிந்தளவில் பேசிக்கொண்டிருந்தவர் சொல்ல வருவது எங்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக மிகப் பொறுமையாகவே வார்த்தைகளை உதிர்த்தார்.

செம்புஞ்சி எஸ்டேட். செம்புஞ்சி என்ற பெயரிலேயே தற்போது அழைக்கப்படும் மலைப்பகுதி. கலிபார் புல்மொட்டை என்ற மலைக்கு அருகிலிருக்கிறது. செம்புஞ்சி என்ற மரங்கள் அதிகம் வளரும் பகுதி. 1917-ல் அந்த மரங்களைப் பயிரிடுவதற்காகவும் அங்கு ஏலக்காய் எஸ்டேட் உருவாக்கவும் ஆங்கிலேயே அரசாங்கத்தின் வனத்துறை முடிவுசெய்தது. தற்போது கேரள எல்லையில் அமைந்திருக்கும் பொதியடிபதி என்ற பகுதியில் நூற்றுக்கணக்கில் வாழ்ந்துகொண்டிருந்த காணி என்ற பழங்குடியின மக்களின் குடியிருப்பிலிருந்து பத்து குடும்பங்களை அழைத்துவந்து இஞ்சிக்குழியில் குடியமர்த்தினார்கள். செம்புஞ்சி மரங்களைப் பயிரிடுவதற்காக. அப்படி அழைத்துவரப்பட்ட குடும்பங்களில் ஒன்று காளியம்மாளின் குடும்பம். அப்போது அவருக்குச் சுமார் ஐந்து முதல் எட்டு வயதுவரை இருந்திருக்கலாம் என்று தோராயமாகச் சொல்கிறார். துல்லியமாக நினைவில்லை. ஆனால், அவருக்கு இங்குக் குடிபெயர்ந்து வந்ததன் நினைவும், செம்புஞ்சி தோட்டங்களைப் பெற்றோர்கள் பயிரிட்டுக் கொண்டிருக்க, அப்பகுதியில் ஓடித் திரிந்ததும், பிற்காலத்தில் அதே பயிரிடுதலைத் தான் செய்ததும் அவருக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதைக்கேட்ட உடன்வந்த வனக் காப்பாளர் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

அவரது முகத்தில் தெரிந்த ஆச்சர்ய ரேகைகளைக் கண்ட நான் வினவியபோது, "செங்குஞ்சி தோட்டத்துக்கு 100 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அந்தத் தோட்டத்தின் நூறாண்டு ஒப்பந்தம் சென்ற ஆண்டு அதாவது 2017-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. மீண்டும் யாரும் வனத்துக்குள் இது மாதிரி சொல்லிக்கொண்டு வந்துவிடக் கூடாதென்று அங்கிருந்த ஏலக்காய் தோட்டங்களை நாங்கள் சென்று அழித்துவிட்டோம். செங்குஞ்சி மரங்களை மட்டும் நூற்றாண்டு அடையாளமாக விட்டுவிட்டோம். பாட்டி அதைத்தான் குழந்தையாக இருக்கும்போது பயிரிட்டதென்று கூறுகிறார்!" என்று சொன்னார். ஒருவேளை பாட்டி வேறேதாவது சொல்லப்போய் எங்களுக்குத் தவறாகப் புரிந்திருக்கலாமென்று நினைத்து மீண்டும் அழுத்தமாகக் கேட்டோம். மார்த்தாண்டங்காணி என்பது தந்தையின் பெயரென்றும், அவரோடுதான் இங்கு வந்ததாகவும், பயிரிடுவதற்காக ஆரம்பத்தில் அழைத்துவந்த குடும்பத்தில் தன் குடும்பமும் ஒன்று என்பதையும், அந்த நினைவுகள் நன்றாகவே நினைவிருப்பதாகவும் அவர் மிகத்தெளிவாகச் சொன்னார்.

"பாட்டி அந்தத் தோட்டம் போட்டு 100 வருஷமாயிருச்சே" என்று கேட்டபோது அவராலேயே அதை நம்பமுடியவில்லை. "உங்களுக்கு 100 வயசாயிருச்சா பாட்டி" என்ற என் கேள்விக்கு வெகுளித்தனமாகச் சிரிக்கிறார். அங்கு வாழ்ந்த மற்ற குடும்பங்கள் மலையிலிருந்து கீழிறங்கிவிட்ட நிலையில் பாட்டியின் குடும்பம் மட்டும் இன்னமும் காட்டுக்குளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனது மூன்று பிள்ளைகளான சங்கரபாண்டி, வன்ராஜ், தேவி போன்றோரின் வாரிசு வழியிலான மீதிக் குடும்பங்களோடு தற்போது வாழ்ந்துவருகிறார். மற்ற அனைவரும் ஊருக்குள் சென்றுவிட்டனர். தங்கள் பாட்டன் வாழ்ந்த நிலத்தை விட்டுப்போக அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பலரும் பல வழிகளில் முயன்றுள்ளார்கள். ஆனால், அந்த ஐந்து குடும்பங்களும் அசைந்து கொடுப்பதாக இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம், அங்கேயே தங்கள் பழைய பாரம்பர்ய வாழ்க்கைமுறைகளை மீட்டெடுக்க வேண்டும். தங்களுக்கான விவசாயத்தைத் தானே செய்துகொள்கிறார்கள். அதில் மிச்சமாவதை காரையாற்றில் நிறுத்தி வைத்திருக்கும் ஓடங்களில் கொண்டுவந்து அதன் மறுகரையிலிருக்கும் காணி மக்களின் சிற்றூருக்குள் விற்று அரிசி போன்ற பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். கடைசியாக அவர் காந்தப்பாறை எஸ்டேட்டில் வேலை பார்த்துள்ளார். இரண்டு வருடங்களுக்குமுன் வரையிலுமே மலையிலிருந்து ஊருக்குள் இறங்கி ஏறிக் கொண்டிருந்தவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே ஓய்விலிருக்கிறார். அதுவும் தனக்கான உணவைத் தானே சமைத்துக்கொண்டு. முறையான வயதைக் கணக்கிட முடியவில்லையென்றாலும், 100 வயதைத் தாண்டிவிட்ட இவர் மனித சமூகத்தின் ஆரோக்கியத்தில் வனம் வகிக்கும் முக்கியப் பங்குக்கான வாழும் சாட்சி.

விலங்குகள் புகுந்துவிடாத வகையில் தங்கள் குடியிருப்புகளைச் சுற்றி பிரம்பு வேலிகளை அமைத்து அதில் வைத்திருக்கும் ஏணிகள் மூலமாகவே உள்ளும் புறமும் சென்றுவருகிறார்கள். தினமும் மலை ஏறி இறங்கும் சில காணி மக்கள் மட்டுமே அவர்கள் அடிக்கடி பார்க்கும் மனித முகங்கள். அதுபோக வனப் பாதுகாப்புக்காக ரோந்து செல்லும் வனக் காப்பாளர்களும், வேட்டைத்தடுப்புக் காவலர்களும் அவர்களின் குடியிருப்பிலிருந்து சில கிலோமீட்டர் தூர நடைப்பயணத்தில் வேட்டைத்தடுப்பு முகாம் அமைத்திருக்கிறார்கள். அங்குச் செல்பவர்கள் இவர்களைச் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். இதுபோக வேறு மனித வாடையே இல்லாமல் வாழும் அந்த மக்கள் விரும்புவதும் அதைத்தான். அவர்களுக்குக் காட்டை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பது தெரியும். அப்படிப் பார்த்தும் கொள்கிறார்கள். புதிதாக யாரும் அதைக் காப்பாற்ற வேண்டாம், வந்து அழிக்காமலிருந்தாலே போதுமானது. வனத்தாய்க்கு அவர்கள் காட்டிய கரிசனத்துக்குக் கிடைத்த பரிசு, இந்தத் தாய்க்குக் கிடைத்த நீடித்த ஆரோக்கியமான ஆயுள்.

அதுவே காடு. நாம் காட்டுவதைத் திருப்பிக் காட்டும். அக்கறையாயினும், அழிவாயினும்...!