Published:Updated:

'சட்டை பாக்கெட்ல மொபைல் வச்சா..!"- சாமி ஸ்கொயர் சொல்வது உண்மையா?

'சட்டை பாக்கெட்ல மொபைல் வச்சா..!"- சாமி ஸ்கொயர் சொல்வது உண்மையா?
'சட்டை பாக்கெட்ல மொபைல் வச்சா..!"- சாமி ஸ்கொயர் சொல்வது உண்மையா?

'சட்டை பாக்கெட்ல மொபைல் வச்சா..!"- சாமி ஸ்கொயர் சொல்வது உண்மையா?

"மொபைல மேல் பாக்கெட்ல வைக்காதீங்க இதயத்துக்கு நல்லதில்ல" இது சாமி ஸ்கொயர் படத்தில் ஒரு வில்லனைப் பார்த்து விக்ரம் சொல்லும் ஒரு டயலாக். விக்ரம் எதற்காக அப்படிச் சொன்னார் என்பதும், வில்லனைப் பழி வாங்குவதற்கு அந்த மொபைல் எப்படி உதவியது என்பதும் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். விக்ரம் சொல்லியதைப் போல மொபைலை மேல் பாக்கெட்டில் வைப்பதால் உண்மையிலேயே ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?

சொல்லப்போனால் இந்தக் கேள்வி மக்களிடையே எழுந்து பல காலம் ஆகிறது. கடந்த 10, 15 வருடங்களுக்கு முன்னால்தான் மொபைல் போன்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆண்ட்ராய்டு மொபைல்கள் எல்லாம் வருவதற்கு முன்னால் இருந்த போன்கள் அனைத்துமே கைக்குள் அடங்குமாறுதான் இருந்தது. எனவே போனை மேல் பாக்கெட்டில்தான் பலரும் வைத்திருப்பார்கள், உடனடியாக எடுக்க முடிந்ததால் அந்த இடம் வசதியாகவும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் மொபைல் போனால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய சந்தேகம் மக்களிடையே எழுந்தது. அதை வியாபாரமாக மாற்றத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அது போன்ற சமயத்தில்தான் மொபைல் ரேடியேஷனைக் குறைக்கும் ஸ்டிக்கர்கள் விற்பனைக்கு வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். ஸ்டிக்கர்களை போனின் பின்னால் ஒட்டிக்கொண்டால் ரேடியேஷனைக் குறைக்க முடியும் என்று விளம்பரம் செய்து கல்லா கட்டினார்கள் . அது உண்மைதான் என்று நம்பிய சிலர் வாங்கிப் பயன்படுத்தவும் செய்தார்கள்.

மொபைல் போனைப் பயன்படுத்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல வருடங்களாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மொபைலில் இருந்து மின்காந்த அலைகள் வெளியாவது உண்மைதான். ஆனால் அவை அயனியாக்கும் தன்மையில்லாத கதிர்வீச்சு (Non-ionizing radiation) என்பதால் மனிதர்களுக்குப் பாதிப்பு இருக்காது என்பது பலர் ஏற்றுக் கொண்ட கருத்தாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இதற்கு மாற்றுக் கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் மருத்துவக் கல்லூரி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. சராசரியாக 19 வயதில் இருப்பவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஒரு நாளில் 64 நிமிடங்கள் முதல் அதிக பட்சமாக 6 மணி நேரம் வரை மொபைலைப் பயன்படுத்தினார்கள். மொபைலில் பேசும் போது அவர்களின் இதயச் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதில் போனை காதில் வைத்துப் பேசும் போது இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது.

இப்படி அதிக காலம் பயன்படுத்துவது இதயத் துடிப்பில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது அவர்களின் ஆய்வு. மொபைல் செயல்பாட்டில் இருக்கும்போது அதிலிருந்து அதிகமான அளவில் மின்காந்த அலைகள் வெளியிடப்படும். அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இயர்போன்களைப் பயன்படுத்தலாம் எனவும் அந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். உடலில் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தியிருந்தால் அது பாதிக்கப்படலாம் என்பதற்காக மொபைலை மேல் பாக்கெட்டில் வைப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். அது தவிர வெறுமனே மொபைலை மேல் பாக்கெட்டில் வைப்பதால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் கிடையாது. இதயத்தைத் தவிர வேறு பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதற்கும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கான விடையையும் இன்னும் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நமக்கு எதுக்கு பாஸ் வம்பு முடிஞ்சவரைக்கும் போனைத் தள்ளி வைக்குறதுதான் எல்லா விதத்துலையும் நல்லது. சரி படத்தில் விக்ரம் வில்லனைப் பார்த்து அவ்வளவு அக்கறையா அட்வைஸ் பண்ண அதுக்கு வில்லன் என்ன பதில் சொல்வாரு தெரியுமா "நாங்க இதயத்தை வெளிய தூக்கிப்போட்டுட்டுதாண்டா அரசியலுக்கே வந்துருக்கோம்"

அடுத்த கட்டுரைக்கு