Published:Updated:

பேரன்பின் திருவிழா!

பேரன்பின் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பேரன்பின் திருவிழா!

தமிழ்ப்பிரபா, ப.சூரியராஜ், சக்தி தமிழ்ச்செல்வன் படங்கள்: விகடன் டீம்

பேரன்பின் திருவிழா!

தமிழ்ப்பிரபா, ப.சூரியராஜ், சக்தி தமிழ்ச்செல்வன் படங்கள்: விகடன் டீம்

Published:Updated:
பேரன்பின் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பேரன்பின் திருவிழா!

மிழகத்தின் மரியாதைக்குரிய மனிதர்கள் ஒன்று திரண்ட அற்புதத் தருணம். மகத்தான மனிதர்களுக்கு மகுடம் சூட்டும் விகடன் மேடை. கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு எனப் பல்துறைச் சாதனையாளர்களையும், நம்பிக்கை இளைஞர்களையும், தமிழருக்குப்  பெருமைசேர்த்த  ஆசான்களையும் கௌரவித்தது ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி. அதிலிருந்து சிலதுளிகள்...

பேரன்பின் திருவிழா!

* வாசலிலேயே தொடங்கிவிட்டது அன்பின் பெருவிழா. நம் பாரம்பர்யக் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், புலிவேஷம் எனத் தமிழர்களின் ஆதிக்கலைகளோடு அனைவருக்கும் வழங்கப்பட்டது அமர்க்களமான சிவப்புக்கம்பள  வரவேற்பு.

எத்தனையோ அரசியல் மேடைகளைத் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. விகடன் நம்பிக்கை விருதுகள் மேடையைப்போல ஒன்றை இதுவரை கண்டிருக்காது. திராவிட அரசியலில் தொடங்கி, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், கம்யூனிஸம், மார்க்ஸியம், தமிழ்தேசியம், இந்துத்துவம், ஆத்திகம், நாத்திகம், சாதிய எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, அண்ணாயிசம், அம்மாயிசம்  என அரசியல் மனிதர்கள் அத்தனை பேருக்கும் விகடன் மேடையில் இடமிருந்தது. வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்த மனிதர்களும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

காரணம், இது சார்புகளற்ற விகடன் மேடை.

பேரன்பின் திருவிழா!

தமிழர் சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்கும் மாமல்லபுரம் கோயிலின் வனப்பும், ஒருபக்கம் விகடன் தாத்தாவின் கற்சிலையும், இன்னொரு பக்கம் திருவள்ளுவரின் நற்சிலையும் வீற்றிருக்க, இருபுறமும் ஜல்லிக்கட்டைப் போற்றும் வகையில் சீறி எழும் காளைமாடுகளின் உருவங்கள் சாதாரண மேடையை சரித்திர மேடையாகவே மாற்றியது.

11 இலக்கிய விருதுகள், 8 ஊடக விருதுகள், 20 டாப்டென் நம்பிக்கை மனிதர்கள், இளைஞர்கள் என மொத்தம் 39 விருதுகளை வழங்கும் மாபெரும் நிகழ்ச்சியை நான்குபேர் தொகுத்து வழங்கினர். அமைதியே வடிவாக நடிகர் ஆரியும், ஆர்ப்பாட்ட அதிரடியாக வி.ஜே நட்சத்திராவும், இலக்கிய விருதுகளைத் தொகுத்து வழங்க, மற்ற விருதுகளை எல்லாம் சிறப்பாக, சிலிர்ப்பாக பண்பலைத் தொகுப்பாளர்  ராஜவேல் நாகராஜனும், நடிகை வினோதினியும் தொகுத்து வழங்கினர்.

இலக்கிய விருதின் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது பெருந்தமிழர் விருது விழா. நாடகக் கலையைப் பயிற்றுவித்து, பல திறமையான கலைஞர்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கு விருது வழங்கப்பட்டது. மேடையில் அவரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற திரைப்பிரபலங்கள் கலைராணி, குமரவேல்,  விதார்த், வினோதினி மற்றும் கருணாபிரசாத் போன்றவர்களும், நாடகக் கலைஞர்களும் தங்கள் குருவுக்கு விருதினை வழங்கி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். தன் மனைவியுடன் மேடையிலிருந்த ந.முத்துசாமி கூத்துப் பட்டறையின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் குறித்தும், கூத்துப்பட்டறையின் வளர்ச்சி குறித்தும் பேசினார். அரங்கத்தில் இருந்த அனைவருமே எழுந்து நின்று அந்தப் பெரும் கலைஞனுக்கு மரியாதை செய்தது நிகழ்வின் சிலிர்ப்புத்தருணம்.

பேரன்பின் திருவிழா!
பேரன்பின் திருவிழா!

நீட்டிற்கு எதிராகத் தனிமனுஷியாக நின்று போராடிய `மருத்துவர் அனிதா’ பற்றிய காணொளியே அரங்கத்தின் ஆயிரம் கண்களையும் இதயத்தையும் ஈரமாக்கியது. ஒட்டுமொத்த அரங்கமும் உறைந்துபோய் பேரமைதியில் தவித்தது. தி.மு.கவின் செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், அனிதாவின் குடும்பத்தினரிடம் விருதினை வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்டு பேசிய அனிதாவின் சகோதரர், `` `நீட்’தான் அனிதாவைக் கொன்னுச்சு. ஆனால், அந்த நீட் இன்னும் இருக்கு. அனிதா அவங்களுக்காக மட்டும் போராடலை. அவங்க போராட்டம் எல்லோருக்குமானது. சாதியைத் தாண்டி மக்களை ஒருங்கிணைச்சதுதான் அவங்க அடைஞ்ச மிகப்பெரிய வெற்றி. `நீட்’ வந்ததில் இருந்து எத்தனையோ பேர் அதை எதிர்த்துப் போராடி வர்றாங்க. ப்ரின்ஸ்.கஜேந்திரபாபு சாரெல்லாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புக் குரலைக் கொடுத்துட்டு வர்றார். ஆனால், மக்கள் அவங்களைக் கண்டுக்கவேயில்லை. அனிதா இறப்பிற்குப் பிறகுதான், நீட்டுக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் வெடிச்சிருக்கு. இந்தப் போராட்டம் முன்னாடியே நடந்திருந்தால் இந்த இழப்பு நிகழ்ந்திருக்காது’’  எனக் கனலாகப் பேசிய வார்த்தைகள், அரங்கத்தின் அமைதியைக் கலைத்துப்போட்டது. மிகுந்த மனவேதனையை வெளிப்படுத்தும் முகத்தோடு நின்றார் ஸ்டாலின். `அனிதாவின் கனவு நிச்சயம் நிறைவேறும். இதை தி.மு.கவின் சார்பாக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் சார்பாக இதைச் சொல்லிக்கொள்கிறேன்’ என்றார் செயல்தலைவர்.

யவனிகா ஸ்ரீராமுக்குச் சிறந்த கவிதைத்தொகுப்புக்கான விருதினை வழங்க மேடையேறினார் தமிழச்சி தங்கபாண்டியன். ``வெளிநாடுகளில் அங்கிருக்கிற எழுத்தாளர்களுக்கு இதுபோன்ற கௌரவங்கள் செய்யப்படும். அதை நம் ஊரில் சாத்தியப்படுத்திய விகடனுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்!” என்று விகடனுக்கு மகுடம் சூட்டினார்.

பேரன்பின் திருவிழா!
பேரன்பின் திருவிழா!

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பிற்கான விருதினை `தலித் பார்ப்பனன்’ நூலிற்காக ம.மதிவண்ணன் பெற்றுக்கொண்டார். ஷோபாசக்தியும் சு.தமிழ்செல்வியும் அவ்விருதினை வழங்கி கௌரவித்தனர். அப்போது ஷோபாசக்தியிடம், “ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அதுதான் எங்களுக்குத் தெரிய இல்லை. அதுபற்றிதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஒன்றுமட்டும் நிச்சயம், இனி ஆயுதங்களைத் தொடமாட்டோம். சிறுபான்மையினருக்கான ஒன்றுபட்ட அரசியல் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

திருமுருகன் காந்திக்கு விருது வழங்க களப்பணியாளர் அரங்க.குணசேகரனோடு மேடையேறினார் அற்புதம் அம்மாள். திருமுருகன் காந்தியைத் தன் மகனைப்போல ஆரத்தழுவிக்கொண்டார். ‘‘இவரும் எம்புள்ளை மாதிரிதான்’’ என்றபோது அத்தனை நெகிழ்ச்சி. நிகழ்வின் நாயகன் நிச்சயமாக திருமுருகன் காந்திதான். அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் கைத்தட்டல் ஒலியில் காதுகிழிந்தது. ``தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டீர்களா?’’ என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கே மக்கள் மத்தியிலிருந்து அத்தனை அதிர்வு.  “தேர்தலுக்கு அப்பாற்பட்டு இயங்கிய அரசியல் தலைவர்கள்தாம் காலத்தால் நினைவுகூரப்படுகிறார்கள். பெரியாரைப் போல, பிரபாகரனைப் போல அதிகாரத்துக்கு எதிராக மக்களோடு மக்களாக நிற்பதுதான் எங்கள் அரசியல் பாதை. அதில் எப்போதும் எந்த மாற்றமுமில்லை” என்றார்.

பேரன்பின் திருவிழா!

உற்சாகம் பொங்க விருதுபெற வந்திருந்தார் அதிதி பாலன். விருதினைப்பெற தன் பெற்றோரையும் மேடைக்கு அழைக்க, அதிதியைவிடவும் பெற்றோர்கள் அத்தனை நெகிழ்ச்சியோடு மேடைக்கு ஓடிவந்தனர்.  ``எங்க குடும்பமே இப்போ ரொம்ப எமோஷனலா இருக்கோம். வெளில காட்டிக்கல அவ்ளோதான். அதுவும் கமல்சார் முன்னாடியெல்லாம் விருது வாங்குறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கீங்க. இதுவரை நான் இரண்டு விருது வாங்கியிருக்கேன், இரண்டுமே விகடன் கொடுத்தது. இது மிகப்பெரிய பெருமை’’ என சிலிர்த்துப்பேசினார் நம்பிக்கை மனுஷி அதிதி.

கௌசல்யாவுக்கு விருதினை வழங்க மேடையேறினார் பா.ரஞ்சித். ‘எப்போ நேரடி அரசியலுக்கு வரப்போறீங்க’ என்று தொகுப்பாளர் கேட்டதும் கொஞ்சமும் தாமதிக்காமல் தனக்கே உரிய ஸ்டைலில் ‘‘இப்ப பண்ணிட்டிருக்கிறதே நேரடி அரசியல்தான்!’’ என்று பதில்சொல்ல அரங்கம் முழுக்கக் கைத்தட்டல்கள். `‘சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான என் போராட்டம் தொடரும். ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும்’’ என்று வலியுறுத்தினார் கெளசல்யா.

“கடந்த பத்தாண்டுகளில் விகடன் என்னை மூன்று முறை அங்கீகரித்திருக்கிறது. அதே சமயம் நான் நிறைய சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்விருதை விழுப்புண்ணுக்குக் கிடைத்த மயிலிறகு வருடலாகத்தான் வாங்கிக் கொள்கிறேன்’’ என்று கவித்துவத்தோடு சொன்னார் டாப் டென் மனிதர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

பேரன்பின் திருவிழா!

நம்பிக்கை இளைஞர் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கான விருதைப் பெற அவரின் தந்தை சுந்தரும் சகோதரியும் மேடை ஏறினார்கள். விருதைப்பெற்று மைக்கில் பேச ஆரம்பித்ததுமே கண்ணீர் முட்டத்தொடங்கிவிட்டது வாஷிங்டன் சுந்தரின் அப்பாவுக்கு. தன்னுடைய போராட்டங்களையும், தன் மகனை கிரிக்கெட் வீரனாக மாற்றுவதற்காக எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்துகொண்டார் சுந்தர்.

ஒலிம்பிக் முயற்சிக்காக ஐரோப்பாவில் பயிற்சியில் இருக்கும் பவானிதேவிக்குப் பதிலாக அவரின் அம்மா விருதைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு விருது வழங்கியவர் தமிழக அமைச்சர் பா. ஜெயக்குமார். அவரிடம் ``உங்களைக் கிண்டல் செய்துவரும் மீம்ஸ்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ எனக் கேட்டதும், “அந்த மீம்ஸ் எல்லாம் என் குடும்பத்தினரோடு பார்த்து ரசிப்பேன். பேரன், பேத்திகள்கிட்ட எல்லாம் தாத்தாவை எப்படி மீம்ஸ் போட்டிருக்காங்க பாருங்கன்னு காட்டுவேன். இளைஞர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் ஆரோக்கியமான மீம்ஸ் போடுங்க!” என்றார். தன் பேச்சில் எம்.ஜி.ஆர் பாடல்களைக் குறிப்பிட்டு அதை ஜாலியாக அவரே பாடி கெத்து காட்டினார் அமைச்சர்.

ஓவியர்  மருது, எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு டாப் 10 மனிதர் விருதை வழங்கினார். ``கீழடி ஆராய்ச்சியில் உண்மையுடன் செயல்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது தூக்கியடிக்கப்பட்டு அசாமில் ஏதோவொரு மூலையிலுள்ள மியூசியத்தில் காப்பாளராக இருக்கிறார். நம் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை அழித்தொழிக்கப் பார்க்கிறார்கள்” என்று ஆவேசமும் ஆதங்கமுமாகப் பேசினார் வெங்கடேசன்.

சிறந்த நாவலுக்கான விருதினை வழங்கியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ``உலகெங்கும் பல நாவல்கள் படமாக்கப்படுகின்றன. ஹாலிவுட்டில் நாம் பார்த்து ரசிக்கிற பல வெற்றிப்படங்கள் நல்ல நாவல்களை அடிப்படையாகக் கொண்டவையே. தமிழில்கூட திரைப்படமாக எடுக்கக்கூடிய நல்ல நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைத் திரைப்படங்களாக எடுக்கும்போது அவை நிச்சயம் உலகத் தரமான திரைப்படங்களாக அமையும். நாவல்களைப் படமாக்க இயக்குநர்கள் முன்வர வேண்டும்’’ என்கிற கோரிக்கையை முன்வைத்தார் எஸ்.ராமகிருஷ்ணன். அவரிடமிருந்து ‘மடவளி’ நாவலுக்காக விருதுபெற்றார் எழுத்தாளர் கவிப்பித்தன்.  “எனக்கும், என் மக்களுக்கும், எங்கள் வட்டார மொழிக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதைப் பார்க்கிறேன். வேருக்கு இட்ட அடியுரம் போன்றது இந்த விருது” என்று நெகிழ்ச்சியோடு நன்றி சொன்னார்.

பேரன்பின் திருவிழா!

‘கேசம்’ நூலுக்காகச் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதினைத் தன் மகள் சூசனோடு மேடையேறிப் பெற்றார் நரன். ``14 ஆண்டுகளாக வாசித்தும், எழுதியும் வரும் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கே விகடன் விருது கிடைத்திருப்பது பெருமிதமாக இருக்கிறது’’ என்றார்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான விருதை ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்காக  செ.நடேசன்  பெற்றார். செயற்பாட்டாளர் அ.மார்க்சும், தோழர்.தியாகுவும் விருதினை வழங்கினர். தன் பேரன்களுடன் மேடையேறி விருதினைப் பெற்ற செ.நடேசன் தன் புத்தகங்கள் இரண்டை தனக்கு விருது வழங்கியவர்களுக்குப் பரிசாக அளித்து ‘சர்ப்ரைஸ்’ கொடுத்தார்.

சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருதினை, ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரும், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியாவும், ‘சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை’ கட்டுரைத் தொகுப்புக்காக சுகுணா திவாகருக்கு வழங்கினார்கள். சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான விருதினை `இருட்டு எனக்குப் பிடிக்கும்’ நூலுக்காக எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, கவிஞர் மனுஷ்யபுத்ரனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கான விருதினை கவிஞர் சல்மாவும், எழுத்தாளர் தமயந்தியும் வழங்கினர். “தாகங் கொண்ட மீனொன்று” என்ற ரூமியின் கவிதைகள் மொழிபெயர்ப்புக்காக என்.சத்தியமூர்த்தி விருதினைப் பெற்றார்.

சிறந்த சிற்றிதழுக்கான விருதினை ‘ நிழல்’ சிற்றிதழின் ஆசிரியர் ‘நிழல்’ திருநாவுக்கரசு, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மற்றும் எழுத்தாளர் சுபகுணராஜன் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டார். 25 ஆண்டுக்காலமாக திரைப்படத்துக்கான தொழில்நுட்பத்தை கிராமப்புற மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியான பணியாக இருப்பதாகச் சொன்னார் திருநாவுக்கரசு. இயக்குநர் ஜனநாதனிடம் “மலையாள சினிமா உலகில் நேரடி அரசியல் பேசப்படுகிறது. அந்த நிலை தமிழ் சினிமாவுக்கு எப்போது வரும்?” எனக் கேட்டார் தொகுப்பாளர் ஆரி. “நேரடி அரசியல் பேசும் படங்கள் நிச்சயம் வரும். அடுத்த தலைமுறை நிச்சயம் அதைக் கையிலெடுப்பார்கள். எழுத்தாளர்கள் எப்படி சினிமாவுக்குள் வரவேண்டும் என்கிறார்களோ, அதேபோல், தீவிர அரசியல்வாதிகளும் சினிமாவுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார் ஜனநாதன்.

பேரன்பின் திருவிழா!

சிறந்த வெளியீடுக்கான விருதினை எழுத்தாளர் சி.மோகன் மற்றும் எழுத்தாளர் இந்திரன் வழங்கினர். `சித்திரக்கூடம்’ என்ற திருப்புடைமருதூர் ஓவியங்கள் அடங்கிய தொகுப்புக்காக தடாகம் பதிப்பகத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தடாகம் பதிப்பகத்தின் அமுதரசனும், ஓவியங்களைத் தொகுத்த சா.பாலுசாமியும் விருதினைப் பெற்றனர். “பண்டைய தமிழ்ச் சமூகத்தின் தொன்மம், வாழ்வியல், பண்பாட்டு முறைகளை அறிந்துகொள்ள ஓவியங்கள் ஆவணமாக உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள நாம் முற்பட வேண்டும்” என்றார் சா.பாலுசாமி.

ஒரு ரூபாய்கூடக் கட்டணமாகப் பெறாமல், எண்ணற்ற பேரை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திவரும் வட்டாட்சியர் மாரிமுத்துவுக்கு, சிறந்த மனிதருக்கான விருதினைக் கொடுத்து கௌரவித்தார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர். “இது எனக்குக் கனவு போலிருக்கிறது. புதிதாய்ப் பிறந்ததைப் போலிருக்கிறது” என்ற மாரிமுத்துவின் குரல் நெகிழ்ச்சியில் உடைந்துபோயிருந்தது.

விருதைப்பெற அறப்போர் இயக்கத்தைச்சேர்ந்த இளைஞர்கள் ஒரு பெரும்படையைப்போல மேடையேறினர். அவர்களுக்கான விருதினை நீதிபதி பரந்தாமன் வழங்கினார்.

சிறந்த தொகுப்பாளர் நியூஸ்18 குணசேகரனிடம் “ரொம்ப பரபரப்பான ஷோவைக்கூட கோபமே படாம கன்ட்ரோலா பண்றீங்க. உங்களையும் மீறி நீங்க கோபப்பட்டது அனிதாவின் மரணத்தின் போதுதான்’’ என்று தொகுப்பாளர் சொன்னதும் உடைந்துபோனார் குணசேகரன். ``நாம் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நம் கண் முன் நடந்த மரணம். இன்று வரை அனிதாவின் மரணத்துக்கான நீதி கிடைக்காமல் இருப்பது மிகவும் மோசமான சமூகச் சூழலையே காட்டுகிறது’’ என்றார் குணசேகரன். 

தனது டிரேட் மார்க் புன்னகையுடன் விருதினைப் பெற்றார் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளினி அஞ்சனா. அவருக்கு விருதினை வழங்கினார் தன்ஷிகா. இருவரிடமும் `#MeToo’ பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர். ``ஹாலிவுட்டில் நடந்ததைப்போல்  இங்கும் சினிமா, தொலைக்காட்சி துறைகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வர முடியுமா?’’ என்ற கேள்வியை இருவர் முன்பாகவும் வைத்தார். ``இங்கே கஷ்டம்தான். மக்களுக்கே சினிமா, தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களின் மேலே தவறான புரிதல் இருக்கு. முதலில் அது மாறணும். உள்ளே நடக்கும் அவலங்களை வெளியே சொன்னாலும், அதை மக்கள் எப்படி எடுத்துக்குவாங்கங்கிறது ரொம்ப முக்கியம். அதுதான் தயங்கவும் வைக்குது.” என்று உண்மையை உரக்கச்சொன்னார் அஞ்சனா, அதை ஆமோதித்து பேசிய தன்ஷிகாவும் ``பெண்கள் தற்காப்பு கலைகள் கத்துக்கணும். அவர்களுக்கான குறுகிய வட்டத்திலிருந்து முதலில் வெளியே வரணும்’’ என்பதை வலியுறுத்தினார்.

பேரன்பின் திருவிழா!
பேரன்பின் திருவிழா!

*   தன் இருகைகளையும் கூப்பி, ``என் இனிய தமிழ் மக்களே” என்ற தனது வழக்கமான ஸ்டைலில் பாரதிராஜா பேச, அரங்கம் எப்போதும்போலவே தடதடத்தது. அவர் நடிகர் விதார்த்திற்கு விருது கொடுத்தார். “என் பையன்தான் விதார்த். நான் பெங்கால் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். அதில் நடிக்கும் நடிகர்கள், நடிப்பதே தெரியாத அளவிற்கு நடிப்பார்கள். அந்த மாதிரி ஒரு கலைஞன் விதார்த்’’ எனக் கூற, அரங்கம் கைதட்டியதில், விதார்த் நெகிழ்ந்துபோனார்.  ``நான்  எப்ப விகடன் விருது வாங்குவேன்னு எங்க அப்பா ரொம்ப நாளா காத்துக்கிட்டே இருந்தாங்க.  இன்னைக்கு அது நிறைவேறியிருக்கு.  சம்பளமே வாங்காம நான் நடிச்சிட்டிருந்த காலகட்டத்துல என்ன நம்பி வந்து எனக்குப் பக்கபலமாக இருந்த என் மனைவிக்கு ரொம்ப நன்றி’’ என விதார்த் கூற, அவர் மனைவி நெகிழ்ந்துபோனார்.

பாடலாசிரியர் விவேக்கிற்கு இயக்குநர் தங்கர்பச்சானும், இயக்குநர் ராஜுமுருகனும் விருதினை வழங்கினர். விருது வழங்க வந்த தங்கர் பச்சானை ``அழகி போல உங்களுக்குப்  பள்ளிப்பருவக் காதல் உள்ளதா?’’ எனத் தொகுப்பாளர்கள் கேட்டனர். எல்லோருக்கும் இளம்பருவக் காதல் இருக்கும். எனக்கும் அந்த மாதிரியான நினைவெல்லாம் இருக்கு’’ என ப்ளாஷ்பேக்கை அழகாக ஓப்பன் செய்தார். ராஜுமுருகனிடம் ``சென்ற வருடத்தில் நீங்கள் பார்த்த சிறந்த ஜோக்கர் யார்’’ என்று கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் ``தமிழர்கள்தான்’’ எனக் கூற, மக்கள் கூட்டத்தில் விசில் பறந்தது.

அதிகாரத்தை எதிர்த்து நிற்க சாமானியர்கள் பயன்படுத்தும் ஒரு கருவிதான் நையாண்டி என்பதை மீண்டும் இணைய உலகில் நிரூபித்திருக்கும் நம்பிக்கை இளைஞர்கள், `நக்கலைட்ஸ்’. இதுவரை முகம்தெரியாத எத்தனையோ பேரை மகிழ்வித்துக் கொண்டிருந்த `நக்கலைட்ஸ்’ குழுவினரின் முகத்தில், மகிழ்ச்சியை அள்ளிவீசினார் அவர்கள் கைகளில் வீற்றிருந்த பொன்னிற விகடன் தாத்தா. விருதுபெற்றவர்கள் குழுவாக இணைந்து சமகால அரசியலை பகடி பண்ணுகிற ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தி வந்தவர்களின் வயிறுகளை நிறையவே குலுங்கவைத்தனர்!

பேரன்பின் திருவிழா!

வளர்மதிக்கான வீடியோ போடப்பட்டதும் அரங்கிலிருந்தவர்கள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இயக்குநர் கோபி நயினாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியும் நம்பிக்கை  மனுஷிக்கு விருது வழங்கினார்கள். சாதாரணமாகவே மேடையேறி விருதினை வாங்கிய வளர்மதி, மைக் பிடித்துப் பேச ஆரம்பித்த பிறகுதான் பொறி பறந்தது. ``ஜாதி எவ்வளவு கொடுமையானது என்பதை கௌசல்யாவின் இடத்திலிருந்து பார்த்தால்தான் புரியும், கல்வி மறுக்கப்படுவதைப் பற்றி அனிதாவின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். மூச்சுவிடுவது எவ்வளவு சிரமம் என்பதை உ.பியில் இறந்துபோன குழந்தைகளின் பார்வையிலிருந்துதான் பார்க்க வேண்டும். மரணம் என்றால் என்ன என்பதை மீனவக் குடும்பங்களின் பார்வையிலிருந்துதான் பார்க்கவேண்டும். பணம்தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாறப் போராட வேண்டும்’’ என்று முழங்கினார் வளர்மதி.

`மஞ்சள்’ நாடகக்குழுவை மேடைக்கு வரலாம் என்று அறிவித்ததுமே பறையோசை மண்டபத்தை அதிரச் செய்தது.  நாடக்குழுவினர் தங்களின் இசை வாத்தியங்கள் முழங்க ரகளையாக மேடையேறினர். `மஞ்சள்’ நாடகத்தை எழுதிய ஜெயராணி, நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்தது முதல் தற்போது விருதுக்காக மேடையேறியது வரை தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.  நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீஜித்தின் அம்மா, நீலம் அமைப்பின் தோழர்கள், ஜெய்பீம் அமைப்பின் தோழர்கள் எனப் பலரும் மேடையை அலங்கரித்தனர். இவர்களுக்கான விருதை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், எழுத்தாளர் இமையமும் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஒட்டுமொத்த அணியும் ஒன்றிணைந்து “சாதியை ஒழிப்போம். கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவுகட்டுவோம்” என்று சொல்லிப் பறையடித்து எல்லோரையும் கவர்ந்தது.

*   குட்டி விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் டீமுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  விகடனின் நம்பிக்கை விருதினை வழங்கினார். தமிழிசையிடம் `மீம்ஸ்’ பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``நானும் மீம்ஸ்களை ரசிப்பேன். ஆனால், உருவகேலி செய்யும் மீம்கள்மீது எனக்குத் துளியும் உடன்பாடில்லை. அதை உருவாக்குவதற்கு முன் சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் பணத்தைச் சுருட்டினால்கூடத் தவறில்லை. ஆனால், சுருட்டை முடி வைத்திருந்தால் தவறா?’’ என்று கலகலப்பாக, கருத்தாகப் பேசினார். “ஒரு தமிழச்சியாக, தமிழகத்தைத் தமிழர்தான் ஆளவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா’’ எனக் கேட்டதற்கு ``தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்கிற மரபும் நம்மிடம் உண்டு. அதை மறந்துவிடாதீர்கள்’’ என்று தாமரை இலை தண்ணீர்போலப் பேசினார்.

இசைஞன் சாம்.சி.எஸ். தனது சொந்த ஊர்க்காரரான, தன் ஊருக்கே பெருமை சேர்த்தவரான இயக்குநர் பாரதிராஜாவி டமிருந்து விருது பெறுவதை நினைத்து நெகிழ்ந்துபோனார். ``இளையராஜா சார்தான் என் இன்ஸ்பிரேஷன். அவர் செய்ததைப் போல லைவ் ஆர்க்கெஸ்ட் ரேஷன்தான் என் படங்கள்ல பண்ணிட்டி ருக்கேன்’’ என சாம்.சி.எஸ் சொன்னார். பாரதிராஜாவிடம் `‘பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து... இந்த காம்பினேஷனை நாங்க மறுபடியும் எப்போ பார்க்க முடியும் சார்?’’ எனத்  தொகுப்பாளர் கேட்க, அதற்கு பாரதிராஜா சொன்ன நச் பதில் வேற லெவல்!

``தமிழ்நாட்டிலேயே 3 கோடி நேயர்களைக் கொண்ட ஒரே பண்பலை எங்களுடையதுதான்’’ என்று கோடை எஃப்எம்மின் இயக்குநர் சொல்ல எல்லோருக்குமே அவ்வளவு ஆச்சர்யம்.

மருத்துவர் கு.சிவராமனும், நடிகை ரோஹினியும் இயற்கைவிவசாயி வம்பாளம்மாவிற்கு விருதினை வழங்கினர்.  அந்தத்தருணத்தில் ரோஹினி பேசும்போது , “பெண்களிடமிருந்து விவசாயத்தைப் பறித்த பிறகுதான் விவசாயம் அழிந்துபோனது. அவர்களிடம் மீண்டும் விவசாயம் வரும்போது அது தழைக்கும்’’ என்ற நம்மாழ்வாரின் கூற்றை எடுத்துச்சொன்னார்.

பேரன்பின் திருவிழா!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினிக்கான விருதினைப் பெற்றுக்கொண்டவர் ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே சிவசங்கரி. ‘`ரேடியோல பேசறவங்க வாய்ஸ் மட்டும்தான் முன்னாடியெல்லாம் தெரியும். இந்த மாதிரி விருதுகளால் எங்களோட முகமும் தெரிஞ்சுருது. மகிழ்ச்சி’’ எனத் தன் நிகழ்ச்சிகளைப்போலவே மேடையையும் கலகலப்பாக்கினார்.

சிறந்த பண்பலைத் தொகுப்பாளருக்கான விருதினை விழா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரேடியோ சிட்டியின் ‘லவ் குரு’ ராஜவேல் நாகராஜன் பெற்றுக் கொண்டார். விருதினைப் பெற்றுக்கொள்ள தன் அம்மாவையும் மேடைக்கு அழைத்தார். ``தன்னோட மகன்களை மகள்களை சென்னைக்கு அனுப்பிட்டு என்னைக்காச்சும் அவன் சாதிப்பான்ற நம்பிக்கையோடு காத்திருக்குற எல்லா அம்மாக்களுக்கும் அவங்க பசங்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியோடு இந்த மகிழ்ச்சித் தொகுப்பாளன் சொன்னது எமோஷனை எகிறவைத்த தருணம்.

சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான விருதினைப் பெற்றது ‘தெய்வ மகள்’ டீம். ``உங்க கேரக்டர் நெகட்டிவ் தாக்கத்தை எதுவும் ஏற்படுத்துச்சா?’’ என ‘ சின்னத்திரை நீலாம்பரி’யான அண்ணியார் காயத்ரிடம் கேட்டார் தொகுப்பாளர். ‘`அப்படி இல்லைங்க... நேர்ல வில்லியெல்லாம் இல்ல. இந்த சீரியல் நடிக்க ஆரம்பிச்ச அப்புறம் தமிழ் நல்லா பேச கத்துக்கிட்டேன்’’ என்றார் அண்ணியார். ``தினமும் ஒரு திருப்பத்துடன் சீரியலை இயக்குகிறீர்களே?’’  என்ற கேள்விக்கு ``எல்லாம் டீம் வொர்க்தான்’’ எனப் புன்னகைத்தார் இயக்குநர் குமரன்.

மீனவர் சுப்பிரமணியத்துக்குச் சிறந்த மனிதருக்கான விருதைக் கொடுத்தார் போராளி சுப.உதயகுமார். அவரிடம் `இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தபின்பும் மீனவப் படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அது பற்றி என்ன நினைக் கிறீர்கள்’ எனத் தொகுப்பாளர் வினோதினி கேட்டதற்கு `இங்கே மீனவன் மரணத்தின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருந்தால் முதல்வர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வருகிறார். பிரதமர் மூன்று வாரங்களுக்குப் பிறகு வருகிறார். மத்திய ஆய்வுக்குழு நான்கு வாரம் கழித்து வருகிறது. இதுதான் எங்கள் நிலைமை’ எனச் சலிப்போடு சிரிக்க, கைத்தட்டலால் ஆமோதித்தது அரங்கம்.

பேரன்பின் திருவிழா!

கமல்ஹாசனுக்கு விருது வழங்குவதற்காக எழுத்தாளர் ஜெயமோகன் மேடையேறினார். விருது கொடுத்த ஜெயமோகனிடம் ``கமல்ஹாசன் நடித்த படத்திலயே உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?’’ என்று கேட்கப்பட்டது. “தசாவதாரம் படத்தில் அவர் ஏற்று நடித்த பல்ராம் நாய்டு கதாபாத்திரம்தான் இதுவரை அவர் நடித்ததிலேயே என்னைக் கவர்ந்தது. பல்ராம் கதாபாத்திரத்தில் மட்டும்தான் பின்புறத்தில் இருந்து பார்த்தாலும் பல்ராம் நாய்டுவாகவே தெரிந்தார். அவருடைய உடல்மொழி, உச்சரிப்பு என்று எல்லாம் தெலுங்கர்களுடன் ஒத்துப்போகும்” என்று ஜெயமோகன் சொல்லிக்கொண்டே போக, வேறு யாரைப் பற்றியோ பேசுவதைப்போல கமல் ஆர்வத்தோடு கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார்.

ஜெயமோகன் இறங்கியதும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் மேடையிலேறி கமலுடன் இணைந்துகொண்டார். இருவரும் மேடையிலிருந்த போடியத்தில் நின்றுகொண்டனர். ஞானசம்பந்தம் `விருமாண்டி’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு கமலுடன் கேள்வி-பதில் தொடங்குகிறார் எனத் தெரிந்ததும் எதிர்பார்ப்பு எகிறியது.

“அந்த டைம்ல எல்லோரும் ரசிகர்மன்றம் ஆரம்பிச்ச காலத்துல நீங்க மட்டும் எதற்காக நற்பணி மன்றம் தொடங்கினீங்க? உடல்தானம் செய்றது இப்போ பரவலா ஆய்டுச்சு. ஆனா, நீங்க பல வருடங்களுக்கு முன்னாடியே அதைச் செய்யக் காரணம் என்ன? சினிமாவின் அடுத்த நிலை என்ன? தொழில்நுட்ப ரீதியாக சினிமாவின் அடுத்தகட்டம் என்ன?’’ என்று கு.ஞானசம்பந்தன் கேள்விகளை அடுக்க... எல்லாக் கேள்விகளுக்கும் கமல்ஹாசன் சிரித்தமுகமும் கைகளில் விகடன் விருதுமாக பதில் சொன்னார். எல்லாமே ஹாஸ்யமும் பக்குவமும் நிறைந்த கமல் பாணி பதில்கள்!

அந்த நிகழ்வின் இறுதியில் கு.ஞானசம்பந்தம் கட்டாயப்படுத்த, கமல் தான் டைரியில் எழுதிக் கொண்டுவந்த  நீள்கவிதை ஒன்றை வாசித்த மொமன்ட் நிகழ்வின் சபாஷ் சரவெடி.

பேரன்பின் திருவிழா!