Published:Updated:

ஒரு படகு... ஒரு மாலுமி... எல்லையில்லா திகிலை எதிர்கொண்ட கடலோடி!

ஒரு படகு... ஒரு மாலுமி... எல்லையில்லா திகிலை எதிர்கொண்ட கடலோடி!
ஒரு படகு... ஒரு மாலுமி... எல்லையில்லா திகிலை எதிர்கொண்ட கடலோடி!

இந்தியக் கடலோடி அபிலேஷ் டோமி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்!

ரு படகு ஒரு கடலோடி... உலகின் அதி பயங்கர கடல்களின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சுமார் 48,000 கிலோ மீட்டர் உலகைச் சுற்றி வர வேண்டும். இதுதான் கோல்டன் குளோப் ரேஸ். இந்தியக் கடற்படை கமாண்டர் அபிலேஷ் டோமி மிகச்சிறந்த கடலோடி. கோட்டயத்தைச் சேர்ந்த இவருக்கு எஸ்.வி.துரியா என்கிற பாய்மரப் படகு செல்லப்பிள்ளை. `தரையில் வாழ்ந்த காலத்தைவிட தண்ணீரில் வாழ்ந்த காலம் அதிகம்' என்று அபிலேஷ் குறித்து கடற்படையில் சொல்வார்கள். கடந்த 2013- ம் ஆண்டு, ஐ.என்.எஸ் மகாதே என்ற பாய் மரப்படகில் 150 நாள்களில் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்தார் அபிலேஷ். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இந்தியரும் இரண்டாவது ஆசியக்காரரும் இவர்தான்.. `கீர்த்தி சக்ரா'விருதையும் பெற்றுள்ளார். `கோல்டன் குளோப் ரேஸில் பங்கேற்ற முதல் இந்தியரும் கூட. கோல்டன் குளோப்  போட்டியைப் பொறுத்தவரை, படகில் நவீன டெக்னாலஜியைப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கிய விதி. ஜி.பி.எஸ். கருவி பயன்படுத்தக் கூடாது. சாதாரண வழிகாட்டும் மேப்புகளை பயன்படுத்தியே கடலில் பயணிக்க வேண்டும். தகவல் தொடர்புக்கு ரேடியோ பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஜூலை 1-ம் தேதி பிரான்ஸில் உள்ள Les Sables-d’Olonne - என்ற இடத்திலிருந்து போட்டி தொடங்கியது. இந்த ஆண்டு 11  பேர் பங்கேற்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பெர்த்திலிருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் துரியா அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. 84 நாள்களில் கிட்டத்தட்ட 20,000 கிலோ மீட்டர் தொலைவு டோமி கடந்திருந்தார். உலகின் மிக அபாயரகமான பகுதி அது. எதிர்பாராமல் புயல் உருவாக, பிரமாண்ட அலைகள் எழ ஆரம்பித்தன. சுமார் 10 மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலையில், துரியா நிலை குலைந்தது. துரியா 10 மீட்டர் நீளமே கொண்ட குட்டிப்படகு. அலை, படகை உருட்டிப் போட்டுவிட்டே அகன்றது. பொதுவாகப் படகு கவிழ்ந்தால், அதில் இருப்பவர்களுக்குக் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். படகு கவிழ்ந்ததில் டோமிக்கு முதுகில் பலத்த அடி. தண்ணீருக்கு மேற்புறம் வந்து படகைப் புரட்டிப் போட்டு ஏறிக்கொண்டார். முதுகு வலி தொடர்ந்து அதிகரிக்க, அவரால் நகர முடியவில்லை. மரண வலியில் துடித்தார்.

எப்படியோ... ரேடியோ வழியாக பிரான்ஸில் இருந்த போட்டி அமைப்பாளர்களுக்குத் தகவல் அளித்தார். துரியா கவிழ்ந்த இடம் உலகின் கடைக்கோடி தென்னிந்திய கடலின் மிகவும் ஆபத்தான பகுதி. பெரும் கப்பல்களே இந்தப் பாதையில் செல்லத் துணிவதில்லை. விமானங்களும் இந்த மார்க்கமாகச் செல்வது அரிது. எப்போது வானிலை மாறும் என்று கணிக்கவே முடியாத பகுதி. சாகசக்காரர்கள் மட்டுமே இங்கே வருவார்கள். சவால் நிறைந்த இந்த மீட்புப் பணியில் 3 நாடுகள் பங்கேற்றன. இந்தியக் கடற்படை, ஆஸ்திரேலியக் கடற்படை, பிரான்ஸ் நாடுகள் மீட்புப் பணியில் இணைந்து செயல்பட்டன. 

சென்னையிலிருந்து புறப்பட்ட நீண்ட தொலைவு பயணிக்கும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான P-8  ரக விமானம் முதன்முதலில் துரியாவைக் கண்டுபிடித்தது. முதலில் விமானத்திலிருந்து துரியாவின் புகைப்படங்கள் எடுத்து அனுப்பப்பட்டன. விமானச் சத்தம் டோமிக்குச் சற்று ஆறுதலை அளித்தது. இரு மீட்புப் பணி திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்று கப்பல் வழியாக மீட்பது. இதே ரேஸில் பங்கேற்று துரியா அருகில் இருந்த அயர்லாந்து நாட்டு வீரரான ஜார்ஜ் மெக்குகினை அங்கே வர வைப்பது என்பது இரண்டாவது திட்டம். துரியா இருந்த இடத்திலிருந்து அயர்லாந்து வீரர் 48 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அயர்லாந்து வீரர் சென்ற படகும் அலையில் சிக்கி பாய் மரம் உடைந்து போனது. அவராலும் விரைந்து டோமியின் உதவிக்கு வர முடியவில்லை. எனினும் ரேடியோ வழியாக டோமியுடன் ஜார்ஜ் தொடர்பில் இருந்தார்.

படகு கவிழ்ந்து 3 நாள்கள் ஆகிவிட்டன. படகில் தண்ணீர் வேறு இல்லாத நிலையில் டோமிக்கு நாக்கு வறண்டது. அதீதத் தாகத்தில் சுற்றிலும் இருந்த உப்புத் தண்ணீரை குடித்தால் கதை முடிந்தது. இந்தியக் கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் ஷத்பூரா, டாப் ஸ்பீடில் துரியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதற்கிடையே, ரீ யூனியன் தீவிலிருந்து புறப்பட்ட பிரெஞ்சு மீன்பிடிக் கப்பல் ஒரிஸிஸ், துரியா இருந்த இடத்தை அடைந்து அவரை மீட்டது. தாகம் தீர தண்ணீர் குடித்த பின்னரே அவரால் பேச முடிந்தது. ஒரிஸிஸ் கப்பல் டோமியை மீட்பதை ஆகாயத்தில் பறந்த வண்ணம் P-8 விமானம் கண்காணித்துக்கொண்டிருந்தது. 

தற்போது பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ஆம்ஸ்டர்டாம் தீவில் டோமி உள்ளார். மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. . மொரிஷியஸ் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு விமானம் வழியாக டோமி கொண்டு வரப்படுகிறார். பொதுவாக இது போன்ற விபத்துகளில் சிக்குபவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், டோமி நல்ல மனோபலத்துடன் இருப்பதாக அவரின் தந்தை கூறியுள்ளார். டோமியை மீட்க உதவிய ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு நாட்டு கடற்படையினருக்குக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

`ஒரிஸிஸ்' என்றால் எகிப்திய மொழியில் `வாழ்க்கை அளிக்கும் கடவுள்' என்று அர்த்தம். 39 வயது டோமி என்ற கடலோடிக்கு இன்னொரு வாழ்க்கை `ஒரிஸிஸ்' வழியாகக் கிடைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு