Published:Updated:

கழிவறை இல்லாததால் மூன்றே நாளில் பிரிந்த காதல் மனைவி! மணமகன் எடுத்த விபரீத முடிவு

திருமணம் ஆன முதல் நாளிலேயே, கழிவறை வசதி இல்லாததால் சொந்தவீட்டுக்குச் சென்றிருக்கிறார் மணமகள். மனமுடைந்த மணமகன், தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கழிவறை இல்லாததால் மூன்றே நாளில் பிரிந்த காதல் மனைவி! மணமகன் எடுத்த விபரீத முடிவு
கழிவறை இல்லாததால் மூன்றே நாளில் பிரிந்த காதல் மனைவி! மணமகன் எடுத்த விபரீத முடிவு

வீட்டில் கழிவறை இல்லாததைக் காரணம்காட்டி காதல் மனைவி பிரிந்துசென்றதால் மனமுடைந்த மணமகன், திருமணமான மூன்றாவது நாளிலேயே  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. பி.இ பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிவந்திருக்கிறார்.

இவருடன், சேலம் புதுப்பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபாவும் வேலைபார்த்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகி, பின்னர் காதலித்துள்ளனர். 

இரண்டு குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, செப்டம்பர் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து முதன்முறையாக செல்லதுரையின் வீட்டுக்கு வந்த தீபா, அங்கு கழிவறை இல்லாததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். 'கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது' என்று கூறி, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். 

தீபாவை சமாதானம்செய்ய செல்லதுரை முயன்றும், கழிவறை வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே வர முடியும் என்று தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த செல்லதுரை, தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணமான மூன்றாவது நாளில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.