Published:Updated:

செஸ் ஒலிம்பியாட்டில் கொலம்பிய வீராங்கனைக்கு ப்ரொபோஸ் செய்த இந்திய வீரர்!

செஸ் ஒலிம்பியாட்டில் கொலம்பிய வீராங்கனைக்கு ப்ரொபோஸ் செய்த இந்திய வீரர்!
செஸ் ஒலிம்பியாட்டில் கொலம்பிய வீராங்கனைக்கு ப்ரொபோஸ் செய்த இந்திய வீரர்!

ஜார்ஜியாவில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின்போது, இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், சக வீரர்கள் முன்னிலையில் கொலம்பிய வீராங்கனை ஏஞ்சலோ ஃப்ராங்கோவுக்கு ப்ரொபோஸ் செய்தார். 

உலகம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில், இந்தியா சார்பில் பல்வேறு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில், நிக்லேஷ் ஜெயினும் ஒருவர். அந்தத் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு  முன்னதாக அவர், சக வீரரான கொலம்பியாவின் ஏஞ்சலோ ஃப்ராங்கோவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். கொலம்பியா அணி, தனது இரண்டாவது சுற்றில் சீனாவை எதிர்க்கொள்ள இருந்தது. அந்தப் போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பு, நிக்லேஷ் ப்ரொபோஸ் செய்யவே, அதை வெட்கத்துடன் ஏஞ்சலோ ஏற்றுக்கொண்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்திருந்தனர். செஸ் வீரரான நிக்லேஷ், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் 1460 புள்ளிகளை அவர் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து செஸ் டாட் காம் இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ள நிக்லேஷ், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற செஸ் தொடரின்போது ஏஞ்சலோ அருகே அமர்ந்து ஒரு போட்டியில் விளையாடியதாகத் தெரிவித்துள்ளார். அவரை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்காதபோதும், கடினமான எதிரணி வீரரைத் தாம் வீழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,``பார்சிலோனா தொடருக்குப் பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகினோம். இருவரும் ஆங்கிலம் பேச சிரமப்பட்டதால், ஆரம்பத்தில் மொழிப் பிரச்னை இருந்தது. அப்போது, மொழிபெயர்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் செயலிகள்மூலம் எங்கள் கருத்துகளைப் பறிமாறிக்கொண்டோம். செஸ் விளையாட்டு எங்கள் இருவரிடையேயான நட்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றது.
செஸ் வீரர்களின் கோயில் என்று அழைக்கப்படும் ஒலிம்பியாட் தொடரில் அவரிடம் எனது காதலைத் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்தேன். இதுகுறித்து ஏஞ்சலோவின் சகோதரியிடம் முன்னரே கூறிவிட்டேன். அவரும் என்னுடன் சேர்ந்து ஏஞ்சலோவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவுசெய்தார். இதையடுத்து, அவரிடம் எனது காதலைத் தெரிவித்து சம்மதமும் பெற்றுவிட்டேன்’’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.