Published:Updated:

`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா?’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ்

அஸ்வினி.சி
`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா?’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ்
`தனுஸ்ரீயிடம் நானா படேகர் தவறாக நடந்துகொண்டாரா?’ - 2008-ல் நடந்ததை விளக்கும் இயக்குநர் ராகேஷ்

நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் பாலிவுட் வட்டாரத்தில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.


 

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அடுக்கிய பாலியல் புகார்களால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்புக் கிளம்பியது. அதேபோன்று தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் பிரபலங்கள் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார்.  தனுஸ்ரீ தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்தார். தனுஸ்ரீயால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நானா படேகரும் ஒருவர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நானா படேகர், பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர்.  

தனுஸ்ரீ, நானா குறித்து பேசுகையில்... `2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நடனம் ஆட கற்றுக் கொடுப்பதுபோல் தகாத இடங்களில் கை வைத்தார். நடன இயக்குநரிடம் சொல்லி என்னோடு நெருக்கமாக இருக்கும்படியான ஸ்டெப்ஸ் வைக்கச் சொன்னார். ஆனால், அதற்கு மறுத்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என அனைவரிடமும் முறையிட்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் நானாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஒருகட்டத்தில் நான் வலுக்கட்டாயமாக அடியாட்களால் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்’ என்றார்.
தனுஸ்ரீயின் குற்றச்சாட்டை நானா படேகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் இயக்குநர் ராகேஷ் சரங், நடன இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருமே நானாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்று என்ன நடந்தது என்று இயக்குநர் ராகேஷ் விவரித்தவை பின்வருமாறு...

``ஹார்ன் ஓகே ப்ளீஸ்'  படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக தனுஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். `அந்தப் பாடல் ஹீரோயின் மட்டும் ஆடும் பாடல். ஆனால், நானா வலுக்கட்டாயமாக அந்தப் பாடலின் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்தார்’ என்று தனுஸ்ரீ கூறுகிறார். இது முற்றிலும் தவறு. அந்தப் பாடலின் ரிஹர்சலின்போதே அதில் ஆண் குரலும் வருவதை தனுஸ்ரீ எப்படிக் கேட்காமல்போனார் என்று புரியவில்லை. கதைப்படி நானாவும் அந்தப் பாடலில் நடனம் ஆட வேண்டும். அன்றைய நாள் படப்பிடிப்பு செட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் எப்படி நானா பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும்? தனுஸ்ரீ நானா குறித்து தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அதன் பிறகு, அவருக்குப் பதில் Nathni Utaro பாடலுக்கு ராக்கி சாவந்த் நடனமாடினார்’ என்றார்.

நானாவுக்கு ஆதரவாக இயக்குநர் கருத்து தெரிவித்த நிலையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் விவரித்துள்ளார்.


 

 “நான் ஜேனிக்கா. 2008-ல் `ஆஜ் தாக்’ நிருபராகப் பணியாற்றினேன். பிரச்னை நடந்ததாகக் கூறும் அன்று நானும் `ஹார்ன் ஓகே ப்ளீஸ்'   படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். அந்தப் படம் குறித்த முன்னோட்டத்தைப் பற்றி ரிப்போர்ட் செய்ய அங்கு நான் சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது தனுஸ்ரீ தன் அறையில் அழுதபடி அமர்ந்திருந்தார். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தனுஸ்ரீ படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், மீண்டும் தனுஸ்ரீ கோவமாகத் தன் கேரவனுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். வெளியே வர மறுத்துவிட்டார். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அவரிடம் நான் பேச முற்பட்டேன். என்ன ஆயிற்று என்று கேட்டேன். அதற்கு தனுஸ்ரீ, `கடந்த மூன்று நாள்களாக இந்தப் பாடலுக்கு நான் நடனப் பயிற்சி செய்துவந்தேன். ஆனால், நடன இயக்குநர் இன்று திடீரென்று அனைத்து நடன அசைவுகளையும் மாற்றுகிறார். நானா என்னிடம் நெருக்கமாக இருப்பது போன்ற அசைவுகளை வைக்கிறார். முன்னறிவிப்பின்றி இவ்வாறு செய்வது முறையானதாக இல்லை. நானாவின் உத்தரவின் பேரில்தான் அந்த நடன அசைவுகளைப் பாடலுக்குள் புகுத்துகிறார்கள். பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்த நடன அசைவுகளைத் திடீரென மாற்றுவதற்குக் காரணம் என்ன’ என்று குமுறினார். 

அதன் பிறகு, தனுஸ்ரீயின் பெற்றோர் படப்பிடிப்பு செட்டுக்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், எங்கிருந்தோ வந்த அடியாட்கள் தனுஸ்ரீயின் காரை அடித்து நொறுக்கினர். நானா குறித்து தவறாகப் பேசக் கூடாது என்று மிரட்டல்தொனியில் சொன்னார்கள். இதுதான் அன்றைய தினம் நடந்தது. தனுஸ்ரீ கூறுவது அத்தனையும் உண்மைதான். அதற்கு நான் சாட்சி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 

படப்பிடிப்பு தளத்தில் இருந்த இருவர் வெவ்வேறு மாதிரி வாக்குமூலம் அளித்துள்ளது பாலிவுட் வட்டாரத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.