Published:Updated:

`பர்ஸ், செல்போனுக்குத் தடா... பாத்ரூம் போக பெர்மிஷன்!’ - ஊழியர்களுக்கு யமஹா செக்

``கம்பெனிக்குள்ளே பர்ஸ், செல்ஃபோன் கிடையாது; பாத்ரூம் போறதுக்கு லீவ் எடுக்கறதுக்கு பர்மிஷன் வாங்கணும்; நகை, வாட்ச் எல்லாம் போடவே கூடாது'' - இது யமஹா ஊழியரின் கதை!

`பர்ஸ், செல்போனுக்குத் தடா... பாத்ரூம் போக பெர்மிஷன்!’ - ஊழியர்களுக்கு யமஹா செக்
`பர்ஸ், செல்போனுக்குத் தடா... பாத்ரூம் போக பெர்மிஷன்!’ - ஊழியர்களுக்கு யமஹா செக்

ல்லிக்கட்டுப் போராட்டம்.... நேற்று யமஹாவின் தொழிற்சாலை அமைந்திருக்கும் ஒரகடத்தில் உள்ள வல்லம் வடகலுக்குச் சென்றிருந்தபோது, முன்னே சொன்ன விஷயம்தான் நினைவுக்கு வந்தது. ஆம், தொடர்ச்சியாகத் தம் தேவைகளுக்காக அஹிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கும், 6-வது நாளில் காவல்துறையால் ஒருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அது மெரினாவில் (7-வது நாள்) நடந்ததைப் போல வன்முறையாக மாறாமல், உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றியது ஆறுதல். இவர்களுக்கு அருகே இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திலும் ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இவர்களுக்காக, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸார் 24 நேரமும் காவலில் இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலைகளுக்குள் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பின்னணி!

வல்லம் வடகலில் அமைந்திருக்கும் ஜப்பானிய நிறுவனமான யமஹாவின் தொழிற்சாலை, 150 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டமைக்கப்பட்டது. இதைத் தவிர இந்த நிறுவனத்துக்கு சூரஜ்பூர், பரிதாபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலை இருந்தாலும், இதுதான் யமஹாவின் பெரிய தொழிற்சாலை. இங்கே இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் சல்யுட்டோ சீரிஸ் பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 4,000 பேர் பணிபுரியும் இந்தத் தொழிற்சாலை, வருடத்துக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தினால் உற்பத்தி, தற்போது 40% அளவிலேயே இருக்கிறது.

முதலில் 300 ஊழியர்களுடன் செப்டம்பர் 21 அன்று தொடங்கிய உள்ளிருப்புப் போராட்டம், நாளடைவில் 800 பேரை எட்டி, மனிதச் சங்கிலியாகவும் மாறியது. இவர்கள் தொழிற்சாலைக்கு வெளியேதான் உண்டு, உறங்கி வருகின்றனர். இவர்களை சவுந்தரராசன், கண்ணன், முத்துக்குமார், வேல்முருகன் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். போராட்டத்தில் இருப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், ரெனோ - நிஸான் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிற்சங்கத்தினர், உணவுப்பொருள்களை வழங்கி உதவிகள் செய்து வருகிறார்கள்.  

போராட்டக் களம் எப்படி இருக்கிறது?

நாங்கள் யமஹா நிறுவனத்துக்குச் சென்றபோது, அந்நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலையிலிருந்து 200 மீட்டர் தூரம் தள்ளி, பந்தல் அமைத்து அமர்ந்திருந்தனர். சாலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்ததால், அவ்வப்போது நெரிசல் ஏற்படாத விதத்தில், அவர்களில் ஒரு பிரிவினர் வாகனங்களை ஒதுக்கிக்கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர், ஊழியர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கிக்கொண்டிருந்தார்கள். மேலும், அந்த நேரத்தில்தான் ரெனோ - நிஸான் நிறுவன ஊழியர்கள், இந்தப் போராட்டத்துக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, 25 ஆயிரம் ரூபாயை வழங்கிவிட்டுச் சென்றார்கள். இப்படித் தங்கள் அளவில் கண்ணியமாக இருக்கும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, நிர்வாகம் இறங்கி வராதது ஏன்? இதைப் பற்றி இந்தியா மோட்டார் யமஹா தொழிற்சங்க நிர்வாகிகளுள் ஒருவரான வேல்முருகனிடம் கேட்டேன். அவர் சற்றுத் தயங்கியபடியே நம்மை எதிர்கொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து...

7-வது நாளாகத் தொடர்ந்து போராட்டம்.... என்ன காரணம்?

சென்னையில் யமஹாவின் தொழிற்சாலை வந்து 5 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரைக்கும் ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம், அவர்களுக்கான மரியாதை பற்றி நிர்வாகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எனவே, தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் ஆரம்பிக்க முடிவுசெய்தோம். இந்த நேரத்தில் திடீரெனத் தொழிற்சங்க நிர்வாகிகளை (7 பேர்) அழைத்த நிறுவனம், அவர்களில் இருவரை (பிரகாஷ், ராஜமணிகண்டன்) Illegal Terminate முறையில் பணிநீக்கம் செய்துவிட்டது. இதைக் கண்டித்து, கடந்த 21-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினோம். நிர்வாகம் எங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததால், தொடர்ந்து 7-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உள்ளிருப்புப் போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதற்கு நிறுவனம் முயற்சி செய்தது என்றாலும், ஊழியர்களின் ஒற்றுமையால் அது தடைபட்டுவிட்டது. அரசு தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக நிறுவன நிர்வாகிகளைப் பேச அழைத்தாலும், அதற்கு யாரும் செல்வதில்லை. கேட்டால் `நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடமிருந்து அதற்கான உத்தரவு எங்களுக்கு வரவில்லை' என அவர்கள் நழுவிக் கொண்டே இருக்கிறார்கள்.

உள்ளிருப்புப் போராட்டம், திடீரெனச் சாலைக்கு எப்படி வந்தது?

6 நாள்களாக அறவழியிலேயே அமைதியாகவே போராடிக்கொண்டிருந்தோம். ஆனால் `தொழிற்சாலைக்கு உள்ளேயும், தொழிற்சாலையிலிருந்து 200 மீட்டர் வரையும் எந்த விதமான போராட்டத்தையும் நடத்தக் கூடாது' என உயர்நிதிமன்றம் அறிவித்தது. இதன் எதிரொலியாக, இதுதொடர்பான அறிக்கையுடன் எங்களிடம் வந்த காஞ்சிபுரம் எஸ்.பி, எங்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார். எங்களைத் தொழிற்சாலையிலிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் செல்வதற்காக 5 பஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், 400 போலீஸ் சகிதம் அவர்கள் வந்தார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தொழிற்சாலையில் இருக்கும் கன்வேயர் பெல்ட் மற்றும் செல்போன் டவர் மீது 20 ஊழியர்கள் ஏறி போராட்டம் நடத்தினர். `நிர்வாகம் மற்றும் அரசு தவிர, காவல்துறையும் எங்களுக்கு நியாயம் வழங்கவில்லை; எனவே அதை அடையும் வரை, எங்களின் ஆயுதம் ஏந்தாப் போராட்டத்தைத் தொடர விடுங்கள்' என நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்கள் எங்களை கைது செய்யாமல் விட்டுவிட்டனர். பின்னர் இதுதொடர்பாக எங்களின் தொழிற்சங்கத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், தாசில்தார், காவல்துறை ஆகியோருடன் சமரசம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அதற்கு மதிப்பளித்து, நாங்கள் தொழிற்சாலையிலிருந்து 200 மீட்டர் வெளியே நின்று போராடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் போராட்டத்தால், தொழிற்சாலையில் உற்பத்தி எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது?

இன்று தொழிற்சாலை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. கடந்த 6 நாள்களை எடுத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1,200 - 2,200 வாகனங்கள் தயாரிக்கப்படும் என்றால், வெறும் 200 - 400 வாகனங்கள் மட்டுமே உற்பத்தியாயின. அதில் பாதிக்கும் மேல் சின்னச் சின்ன பிரச்னைகளைக் கொண்டுள்ளன. எனவே, அவற்றை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்களுக்கும் வேலையில்லை; ஆனால் 7-வது நாளில் தொழிற்சாலைக்குள்ளே இதுவரை பணிபுரிந்த ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், நிறுவனத்தின் எதிர்ப்பையும் மிரட்டலையும் மீறி எங்களின் தொடர் போராட்டத்தில் பங்கெடுக்க வந்துவிட்டார்கள்.  

போராட்டம் நடைபெறும் நாள்களுக்கான ஊதியம் பற்றி, நிறுவனம் ஏதாவது சொல்லியிருக்கிறதா?

`ஒருநாள் சட்டவிரோதமான வேலைநிறுத்தம் செய்தால், 8 நாள்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும்' என்பது ஊதியப் பட்டுவாடா சட்டம் சொல்வது; ஆனால், ஒருநாள் வேலைநிறுத்தத்துக்காக, 10 நாள் ஊதியத்தைப் பிடித்திருப்பதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. எனவே, 7 நாள்களாக நாங்கள் போராடிக் கொண்டிருப்பதை வைத்துப் பார்த்தால், எங்களின் சம்பளம் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. எங்களில் பலர் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்திருப்பதால், மாதச் சம்பளம் என்பது மிகவும் அவசியமானது. அதைத் தாண்டியே, நாங்கள் தொழிற்சங்கத்துக்காகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட இருவருக்காகவும் அஹிம்சை வழியில் எங்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். 

பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த இருவர் என்ன தவறு செய்தார்கள்?

எவ்வித முன்னறிவிப்பும் இன்றியே அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கேட்டால், ஆள்குறைப்பு என அசட்டையாகப் பதில் சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் அதற்கான ஆவணத்தை வாங்கவில்லை என்பதுடன், அதில் கையொப்பமும் இடவில்லை. மேலும், அவர்களின் அடையாள அட்டை, ஊழியர்க்கான லாக்கர் ஆகியவை அவர்கள் வசமே உள்ளன. அவர்கள் தந்தை இல்லாத ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவருவதற்காகவே பணி நீக்கம் செய்துவிட்டார்கள். தொழிற்சங்கம் ஆரம்பிக்க முனைந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டு. 2012-ல் மாருதி சுஸூகி தொழிற்சாலையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டம், கலவரமாக மாறியதைப் போன்ற சூழலை, இங்கே கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன.

இவ்வளவு ஆன பின்னும், நிறுவனத்தின் மனித வளத்துறையின் பதில்தான் என்ன?

இவ்வளவு பிரச்னைக்கும் காரணமே அவர்கள்தாம். ஆம், தொழிற்சாலையில் வேலை செய்யும்போது பாத்ரூம் போவதற்கும் சாப்பிடப் போவதற்கும் அனுமதி கிடையாது. அவ்வப்போது பாத்ரூம் மற்றும் வேலையிடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். லீவு எடுத்துவிட்டு அடுத்தநாள் வந்தால், பெற்றோருடன் தொழிற்சாலைக்கு வந்து கையெழுத்து போட வேண்டும்; `அப்பா - அம்மாவுக்கு உடம்பு சரியில்லை - ஊருக்குப் போகவேண்டும் என்றால், அவர்களை ஆம்புலன்ஸில் இங்கே வரச்சொல்லு' என அடக்குமுறையைக் காட்டுகிறார்கள். கம்பெனிக்குள்ளே பர்ஸ், செல்ஃபோன் கொண்டுவர அனுமதி கிடையாது; நகை, வாட்ச் எல்லாம் போடவே கூடாது. அது நிச்சயதார்த்த மோதிரம், தாலி, கோயிலில் கட்டிய தாயத்து என எதுவாக இருந்தாலும்! 

எங்களின் ஊதியமும், ஊதிய உயர்வும் எங்களைக் கலந்துரைத்து முடிவெடுக்கப்படுவதில்லை. ஏ-கிரேடு ஊழியர் என்றால் 500 ரூபாய்; பி-கிரேடு ஊழியர் என்றால் 400 ரூபாய்; சி-கிரேடு ஊழியர் என்றால் 300 ரூபாய்; ஒப்பந்த ஊழியர் என்றால் 60 முதல் 70 ரூபாய் மட்டுமே வருடத்துக்கான ஊதிய உயர்வாக வழங்கப்படுகிறது. இதை எல்லாம் சரிசெய்யவே, நாங்கள் தொழிற்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தொழிற்சங்கத்தைத் தொடங்க விரும்புகிறோம். இதில் உறுதியாக இருப்பதால், எங்கள் வீடுகளுக்கு அடியாள்களை அனுப்பி மிரட்டியிருக்கிறார்கள். அதற்காக வழக்குப்பதிவு செய்திருக்கிறோம் என்றாலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

ஒருவேளை சங்கம் தொடங்க அனுமதி கிடைத்துவிட்டால், உங்கள் நோக்கம் என்னவாக இருக்கும்?

`நிர்வாகத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவர், ஊழியர்கள் எல்லாம் எனது ஷூ மேல் இருக்கும் தூசி போல என்கிறார். அதைத் தட்டிக்கேட்ட ஒருவரை அவர் அடிக்கிறார். இதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது?' எனவே எந்த நிலை ஊழியரும் தொழிற்சாலையில் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; `ஒவ்வொரு அனுபவம் வாய்ந்த நிரந்தர ஊழியருக்கும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்' என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இங்கே பலருக்கும் 8 வருடம் பல்வேறு ஆட்டொமொபைல் தொழிற்சாலைகளில் (ஃபோர்டு, ராயல் என்ஃபீல்டு, ரெனோ - நிஸான், டெய்ம்லர்) வேலைபார்த்த அனுபவம் இருக்கிறது என்றாலும், அதற்கேற்ற ஊதியமும் ஊதிய உயர்வும் இல்லை. 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே தருகிறார்கள்.

இதைக் கேட்டால் நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்து தண்டிக்கிறது. தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களுக்குக் கூட, வருடத்தில் 6 நாள்கள் பராமரிப்புக்காக அதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், எங்களை தினமும் ஓய்வில்லாமல் 8 மணிநேரம் வேலை பார்க்கச் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை - வருடத்துக்கு 48 நாள்கள் விடுமுறை இருக்கிறது. என்றாலும், விடுப்பு எடுத்தால் பெரிய பிரச்னையாக்கி விடுகிறார்கள். நான் வேலையிலிருந்து செல்லும்போது, அந்த லீவ் நாள்களை வைத்து என்ன செய்ய? தவிர ஒவ்வொரு வருடமும் லீவ் நாள்களைச் சேர்த்துக் கொண்டு செல்வதில் என்ன பயன்? ஏனெனில் அதற்குச் சமமான தொகையும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. 

ஊழியர்களின் நிலைப்பாடு என்ன?

இறுதியாக ஊழியர்கள் சார்பில் சொல்லப்படுவது இதுதான். `CITU ஆதரவுடன்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நாளாக நாளாக போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்ளும் நிர்வாகம், போராட்டம் செய்ததற்காக அவர்களை போலீஸ் கொண்டு விரட்டச் செய்வது பிடிக்கவில்லை. நிர்வாகம் எங்களுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே? நாங்கள் எங்கள் தரப்புப் பிரச்னைகளை விளக்கிச் சொல்லியிருப்போமே? இத்தனை நாள்கள் ஆனபிறகும், ஒருமுறை கூட என்னவென்று வந்து பார்க்காத நிர்வாகத்தை நாங்கள் அங்கீகரிக்க விரும்புவதில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை, அந்த இருவர் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படும்வரை, நாங்கள் பின்வாங்கப் போவதில்லை' என்றார்கள் கூட்டாக. அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் எங்களுக்குத் தங்களின் உணவு மற்றும் தண்ணீரை மகிழ்ச்சியுடன் வழங்க முன்வந்தார்கள்; இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்களுக்கான தீர்வு, விரைவில் கிடைக்கும் என நம்புவோம்! 

இந்தப் போராட்டம் தொடர்பாக, யமஹா நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆலைக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.