Published:Updated:

``இது நேருவுக்காக உருவாக்கப்பட்ட வாட்ச்!" - கைக்கடிகாரப் பிரியர் சொல்லும் கதை

``இது நேருவுக்காக உருவாக்கப்பட்ட வாட்ச்!" - கைக்கடிகாரப் பிரியர் சொல்லும் கதை
News
``இது நேருவுக்காக உருவாக்கப்பட்ட வாட்ச்!" - கைக்கடிகாரப் பிரியர் சொல்லும் கதை

``இது நேருவுக்காக உருவாக்கப்பட்ட வாட்ச்!" - கைக்கடிகாரப் பிரியர் சொல்லும் கதை

நாணயங்கள் சேகரிப்பு, ஸ்டாம்ப் சேகரிப்பு போல, மதுரையைச் சேர்ந்த துரை விஜய பாண்டியனுக்கு கைக்கடிகாரங்கள் சேகரிப்பதில் அலாதி பிரியம். மதுரை காந்தி மியூசியத்தில் விதவிதமான கைக்கடிகாரங்களை விழிப்புஉணர்வு கண்காட்சிக்கு வைத்திருந்தவரை மடக்கிப் பிடித்தோம்.

``நான் ஒரு பொறியாளர். என் சகோதரர், தந்தையுடன் இணைந்து தொழில் செய்துவருகிறேன். கட்டடக் கலை என் தொழில். பழங்கால பொருள்களைத் தேடிச் சேகரிப்பது ஹாபி. ஸ்டாம்ப், நாணயங்கள், கைக்கடிகாரம் என்பது எனது அதிகபட்ச தேடல். 15 வயதிலிருந்து இந்தத் தேடல் என்னுடன் பயணிக்கிறது. ஸ்டாம்ப், காயின் கலெக்சன் பொறுத்தவரையில் வித்தியாசமானவற்றைத் தேர்ந்தெடுத்து சேகரிப்பேன் முக்கியமாக விலங்கள் பொறித்த நாணயங்கள், ஸ்டாம்ப்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

11-ம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன்முறையாக எனக்கு வாட்ச் மீது மோகம்வந்தது. 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்ததும், வாட்ச் இல்லாமல் பள்ளிக்குச் சென்றால் நன்றாக இருக்காது என அப்பாவிடம் வாட்ச் கேட்டேன். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு கடையில் எனக்கும், தம்பிக்கும் என் தந்தை வாட்ச் வாங்கிக்கொடுத்தார். ஹெச்.எம்.டி சுந்தர், ஹெச்.எம்.டி சஞ்சய். அதை நாங்கள் இருவரும் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். அதற்குப் பின் எனக்கு வாட்ச் மீதான ஆர்வம் அதிகமானது. அப்பா வைத்திருந்த ஆல்பின் வாட்சையும் எனக்குப் பரிசளித்தார். இப்படி வெவ்வேறு நபர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாட்ச்களை சேகரிக்கத் தொடங்கினேன். பாக்கெட் மணி எல்லாம் வாட்ச்களாக மாற ஆரம்பித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வித்தியாசமாகத் தென்படும் வாட்ச்களை ஆர்வத்தோடு சேகரித்தேன். ஒவ்வொரு கைக்கடிகாரமும் ஒரு தகவலைக் கொண்டிருக்கும். அது எனக்கும் மிகவும் பிடித்தது. ஓடாத வாட்ச்களுக்கு உயிர் கொடுத்து ஓட வைத்துச் சேகரித்து வருகிறேன். தற்போது என்னிடம் மொத்தம் 254 வாட்சுகள் உள்ளன. வாட்ச்களில் ஏற்படும் பழுதை என்னால் கணிக்க முடியும். என்னிடம் இருப்பதில் முக்கால் வாசி மிகவும் பழைமையானவை என்பதால் அதற்கு ஸ்பேர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும். கடை வீதிகளுக்குச் சென்று சொல்லிவைத்துவிட்டு வருவேன். அவர்களுக்குக் கிடைத்தவுடன் எனக்கு போன் செய்வார்கள்.

இதைப் பாராமரிக்கவே வாரம்தோறும் 5 மணி நேரம் செலவாகிறது. கட்டடத் துறையில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் இந்த வாட்ச் கலெக்ஷனை விடுவதாக இல்லை. ஒவ்வொரு வாட்ச்சுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு வாட்ச்சை என் சேகரிப்புக்குக் கொண்டுவருவதற்கு முன், அதன் செயல்பாடு, தயாரிப்பு, வசதி பற்றி முழுமையாக விசாரிப்பேன். விழிப்புஉணர்வு கண்காட்சிக்கு வைக்கும்போது இவற்றை எல்லாம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பலரும் எனக்கு போன் செய்து, கல்லூரிகளில், பள்ளிகளில் கைக்கடிகாரத்தைப் பார்வைக்கு வைக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். இதில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தகவல் மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்.

ஹெ.எம்.டி ஜனத்தா என்ற கைக்கடிகாரம் முன்னாள் பிரதமர் நேருவைப் பெருமைப்படுத்த உருவாக்கப்பட்டது. பார்க்க மிக அழகாக இருக்கும் `நிவேடா’ என்ற வாட்ச், ரஷ்ய ராணுவத்தினருக்காக வடிவமைக்கப்பட்டது. இதன் மெக்கானிசம் மிகவும் நுட்பமாக இருக்கும். ஹெச்.எம்.டி கஞ்சன் வி.ஐ.பி-களுக்காக உருவாக்கப்பட்டது. புது மாப்பிள்ளைகளுக்குச் செய்ததுபோல இருக்கும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். சீக்கோ 5 என்ற மாடல் பார்க்க டிவி மாதிரி சதுரமாக இருக்கும். இதை எல்லாரும் `டிவி பெட்டி வாட்ச்’ என்று சொல்வார்கள். கோகினூர் வைரத்தைப் பெருமைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் கோகினூர் வாட்ச். சிட்டிசனில் ஒரு மாடல் உள்ளது. அந்த வாட்ச்சின் உள்ளே மீன் செதில்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஹம்பட் என்ற வாட்ச் நொடி, நிமிடம், மணி நேரம் என்று தனித்தனியாக நேரத்தைப் பிரித்துக்கொடுக்கும் மெக்கானிசத்தின் மூலமாகச் செயல்படும்.

என்னுடைய தேடல் தீராது. மாணவர்களுக்காகத் தொடர்ந்து கைக்கடிகாரங்களைச் சேகரிப்பேன். என் மனைவி, குழந்தைகளும் இதில் ஆர்வமாக உள்ளனர். என் குழந்தைகளும் இந்தத் தேடலைத் தொடர்வார்கள் என நினைக்கிறேன்.’’ என்றார் துரை விஜய பாண்டியன்.