Published:Updated:

காமராஜர், 'முதியோர் உதவித்தொகைத் திட்டம்' கொண்டுவர இதுதான் காரணம்! #InternationalDayofOlderPersons #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காமராஜர், 'முதியோர் உதவித்தொகைத் திட்டம்' கொண்டுவர இதுதான் காரணம்! #InternationalDayofOlderPersons #VikatanInfographics
காமராஜர், 'முதியோர் உதவித்தொகைத் திட்டம்' கொண்டுவர இதுதான் காரணம்! #InternationalDayofOlderPersons #VikatanInfographics

'தேவைகள் இருக்கும்போது மட்டுமே நாம் தேவைப்படுவோம், தேடப்படுவோம்...' என்று 82 வயது முதியவர் கூறியது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

உயிர் பெற்றவர்கள்

சுதந்திரமாய் வெளியில்...

உயிர் கொடுத்தவர்கள்

வலியோடு சிறையில்...

- இந்தக் கவிதையைப்போலவேதான் இருக்கிறது இன்றைய முதியோர்களின் வாழ்க்கை. பொதுவாக 60 வயதைக் கடந்தவர்களை மூத்த குடிமக்கள் அல்லது முதியோர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1-ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. அதன்படி, உலகம் முழுவதும் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அவர்களும் அனுபவிக்க வேண்டும். இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை என்று ஐ.நா சபையும் கூறுகிறது. 1990-ம் ஆண்டு முதியோர் நலத்துக்கான தீர்மானத்தை ஐ.நா.சபை நிறைவேற்றியது. ஆனால், அதற்கும் வெகு காலத்துக்கு முன்னரே தமிழ்நாட்டில் முதியோர் நலனைப் பாதுகாக்கும்  நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர், கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கல்லூரிக்குச் செல்லும்போது, ஒரு வயதான தாய் காமராஜரைச் சந்தித்து, ’எங்களைப் போன்ற ஆதரவற்ற முதியோர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். அவர்களின் கண்ணீர் முதல்வரின் மனதில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதன்பின், ’ஒரு வயதான தாய் தன்னைப் பராமரித்துக் கொள்ள, மாதம் எவ்வளவு செலவாகும்’ என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், ’மாதத்துக்கு 20 ரூபாய் தேவைப்படும்’ என்று அறிந்த காமராஜர், அடுத்த நாளே அரசாணை ஒன்றைப் பிறப்பித்தார். அந்த அரசாணையில், ``ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் 20 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்" என்று அறிவித்தார். இந்தத் திட்டம்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே முதன் முதலாக முதியோர்களின் நலனைக் காப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். தற்போது, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மட்டுமின்றி, தமிழக அரசின் சார்பிலும், முதியோர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

'தேவைகள் இருக்கும்போது மட்டுமே நாம் தேவைப்படுவோம், தேடப்படுவோம்...' என்று 82 வயது முதியவர் கூறியது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நம்மை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள், நமக்கு நன்மை தீமையை கற்றுக்கொடுத்தவர்கள், நம்முடைய தேவையை அறிந்தவர்கள் ஆனால், அவர்களின் தேவையை நாம் உதாசினம் செய்யும்போது, அவர்களின் வலியையும், வேதனையும் புரிந்துகொள்வதற்கு ஒருவரும் இருப்பதில்லை. சொத்துப் பிரச்னைக் காரணமாக வயதான தாய் தந்தையைப் பிரித்து வைப்பவர்கள் இன்று ஏராளம். பக்கத்து அறையில் இருந்தும் முகம் கொடுத்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் என்று பலர் இருக்கின்றனர். வெளிநாட்டு மோகத்தோடு இருக்கும் இளைஞர்கள் வேலை கிடைத்ததும், மனைவி மற்றும் குழந்தைகளை மட்டுமே அழைத்துச் செல்கின்றனர். வயதான காரணத்தைக்காட்டி பணத்துக்காகப் பாசத்தை தவிர்த்து விட்டுச் செல்கின்றனர். பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே கொடுத்த பெற்றோரை, அவர்களின் கடைசி காலங்களில் அநாதைகளாக விட்டு விடுகின்றனர்.

பெற்றோரை, முதியோர் இல்லங்களில் விடும் பலர்  'இவர்களின் இறுதிச்சடங்கைக் கூட நீங்களே நடத்துங்கள், அதற்கான பணத்தைக்கூட கொடுத்து விடுகிறோம்' என்று சொல்வதாக வருந்துகிறார், முதியோர் இல்லம் நடத்தும் ஒருவர். ’பல வருடங்கள் தவம் இருந்து பெற்ற என் பிள்ளையை, சாகுமுன் ஒரு முறையாவது பார்க்க முடியுமா’ என்று ஏங்கித் தவிக்கிறது பல பெற்றோர்களின் உள்ளங்கள். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படி, வயதான பெற்றோரை பராமரிக்க வேண்டியது குழந்தைகளின் சட்டபூர்வக் கடமை. அவ்வாறு பராமரிக்கவில்லை என்றால், வயதான பெற்றோர் துணை ஆட்சியாளர் அல்லது கோட்டாட்சித் தலைவரிடம் முறையிடலாம். அவர்கள் விசாரித்து, பெற்றோர்களின் பராமரிப்புக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க ஆணையிட முடியும். அவ்வாறு துணை ஆட்சியாளர் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க ஆணையிடும்போது, வேறு உரிமையியல் நீதிமன்றங்கள் அதில் தலையிட்டு தடை செய்ய முடியாது. அதுமட்டுமின்றி முதியோர் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உதவி தேவை என்றால் 1800-180-1253 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். 

தன் மகனோ, மகளோ தனக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் எதிர்பார்ப்பதில்லை. சிறிது அன்பையே எதிர்பார்த்து காத்துக்கொண்டிக்கின்றனர். முதுமை விசித்திரமான ஆசைகளைக் கொண்டது. அது கவனிக்கப்படாமலும், நிறைவேற்றப்படாமலும் போகும்போது ஏற்படும் துக்கம் பகிர்ந்துகொள்ள முடியாதவை. ஒரு குழந்தையைப்போல் தனது பேச்சை, செயல்களை நம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றுதான் முதியவர்கள் விரும்புகின்றனர்.

பெற்ற பிள்ளை கூட 

கைகொடுக்கவில்லை

கை கொடுத்தது

ஊன்று கோல்...

முதுமையை உணர்ந்து செயல்படுவோம். நாளை நாமும் முதியவர்களாக மாறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு