Published:Updated:

சரிகமபதநி டைரி 2011

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன்

சரிகமபதநி டைரி 2011

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

ம்பீர நாட்டையை ராகம்-தானம்-பல்லவிக்குத் தேர்வு செய்துகொண்டதற்காகவே இளம் பாடகர் அபிஷேக் ரகுராமுக்கு (பிரம்ம கான சபா) இரண்டு ஸ்பூன் பஞ்சா மிர்தம் கொடுக்கலாம். கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அவர் அமைத்துக்கொண்ட பல்லவி: 'தயை புரிவாய் அருணா சலா... நிதம் உன்னைத் தொழுதேன்’!

அருணாசலேஸ்வரரின் கையில் ஒரு ஐ-போன் இருக்குமேயானால், அவர் ஒரு எஸ்.எம்.எஸ். தட்டிவிட்டு இருப்பார். 'நிதம் என்னை எங்கே தொழுகிறீர்கள்? கார்த்திகை சமயத்தில் மட்டும்தானே என் நினைவு உங்களுக்கு வருகிறது!’ என்று.

பக்குவப்பட்ட பாடகருக்கே உரிய பண்பட்ட குரல் வளம்கொண்டவர் அபிஷேக். முக்காலத்திலும் அநாயாசமாகப் பயணிக்கக் கூடியவர். கம்பீர நாட்டையின் நீள, அகலத் தைத் துல்லியமாக அளந்துவிட்டு, அவர் அளவாகத் தானம் பாடியபோது, நாகஸ்வர ஓசை காற்றில் தவழ்ந்து வர, திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்த உணர்வு. தானத்தின்போது மிருதங்கமும் சேர்ந்துகொண்டு இருந்தால், கம்பீர நாட்டைக்குக் கூடுதல் கம்பீரம் கிடைத்திருக்கும். ஆயிரம் வாலா சர வெடியைக் கொளுத்திப்போட்டது மாதிரி ராகமாலிகை ஸ்வரங்களில் பின்னிப் பெடல் எடுத்துவிட்டார் அபிஷேக்.

சரிகமபதநி டைரி 2011

ஆனால், 147 பந்துகளில் 219 ரன்கள் குவிப்பது மாதிரி, எல்லா நேரத்திலும் ஸ்வரங்களில் இந்த ஸ்பீடு தேவையா? தியாகராஜரின் ஆரபி ராகக் கீர்த்தனையான 'சால கல்லலாடு’வின் முடிவில் பாடிய வேகவேகமான ஸ்வரங்கள், ஈ.சி.ஆரில் தலை தெறிக்க கார் ஓட்டுவதுபோல் இருந்தது!

அன்று பூர்விகல்யாணி மெயின். குரு பி.எஸ்.நாராயணசுவாமி டியூன் போட்டு இருக்கும் நாராயண தீர்த்தரின் பாடல். ராக ஆலாபனையில் வயலின் ஙி.ஹி.கணேஷ் பிரசாத் பல ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில்!

மிருதங்கத்துடன் உமையாள்புரம் சிவராமன் உட்கார்ந்துவிட்டால், மேடை யைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார். முதல்வராக சிவராமன் மாறிவிட, மேடையில் மற்ற கலைஞர்கள் ஓ.பன்னீர்செல்வங்களாகப் பவ்யம் காட்டுவார்கள்!

பிரம்ம கான சபாவில் அகவை எண்பதைக் கடந்துவிட்ட டி.சங்கரனும் (மேதை மாலி யின் சீடர்), அவருடைய பேரன் ஜெயந்த் தும் நிகழ்த்திய புல்லாங்குழல் கச்சேரிக்கு சிவராமன் மிருதங்கம்.

சரிகமபதநி டைரி 2011

தாத்தா தனியாகக் கலப்படம் இல்லாத கல்யாணி வாசித்துவிட்டு பேரனுடன் சேர்ந்து பாடலையும் வாசித்து முடித்தார். ''அடுத்து வாகதீஸ்வரி ராகத்தில் பல்லவி'' என்று அறிவித்தார் பேரன். சிவராமன் இடைமறித்தார். ''பல்லவியை அப்புறம் பார்த்துக்கலாம். கீர்த்தனை வாசி...'' என்றார். அழகான, பிசிறு இல்லாத காம்போதியை ஜெயந்த் குழைத்து முடிக்க, ஆடியன்ஸில் அமர்ந்து இருந்த அந்த நாள் மிருதங்க வித்வான் கல்லிடைக்குறிச்சி கிருஷ்ண மூர்த்தி, மேடை ஏறி வந்து இளைஞருக்கு மோதிரம் அணிவித்தார். மறுபடியும் சிவராமன் மைக்கைக் கையில் எடுத்து, ''கச்சேரி ஆரம்பமாவதற்கு முன்னால் சங்கரன் சார், ஒரு வைர மோதிரத்தை என்னிடம் கொடுத்து, அதைப் பேரனுக்குப் போட்டு ஆசீர்வாதம் பண்ணச் சொன்னார். அவனும் எனக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வைர மோதிரத்தைப் போட்டுண்டான்...'' என்றார். கூடவே, ''சங்கரன் சாதாரணமானவர் இல்லே... அவர் ஒரு மகாத்மா'' என்று சிவராமன் சிலாகிக்க, இன்னொருவர் மேடை ஏறி வந்து ஆளுக்கு ஒரு காந்தி படம் கொடுத்தார்!

சீஸனில், அதுவும் ஆறு மணி சீனியர், சீரியஸ் ஸ்லாட்டில் ஆதித்யா சேனல் மாதிரி காமெடி கலாட்டாவை எல்லாம் அனுமதிக்கக் கூடாது!

னிதா குஹா வடிவமைக்கும் நாட்டிய நாடகங்கள், சில சமயம் பள்ளிக்கூட ஆண்டு விழா மாதிரி அமைவது உண்டு. ஆனால், இந்த சீஸனில் மேடை ஏறி இருக்கும் (கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்), 'பரிஷ்வாங்க பட்டாபிஷேகம் - கிஷ்கிந்தா காண்டமும் ஆரண்ய காண்டமும்’ அனிதா குஹாவுக்கு ஆஹா போடவைக்கிறது (பரிஷ்வாங்கம் = ஆலிங்கனம்)!

சரிகமபதநி டைரி 2011

இந்த நாட்டிய நாடகத்துக்கு நெய்வேலி சந்தானகோபாலன் தமிழில் பாடல்கள் எழுதி, இசை அமைத்துப் பாடியிருக்கிறார். காயத்ரி வெங்கட்ராகவன், நிஷா ராஜகோபாலன் மற்றும் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனைப் பாடவைத்து இருக்கிறார்.

மற்ற நடனக் குழுக்களிடம் இருந்து நபர்களைக் கடன் வாங்கிக்கொண்டு இருக்கிறார் அனிதா. இது அத்தனை பேருடன் சேர்ந்து இரண்டு காண்டங்களையும் செதுக்கி, செப்பனிட்டுக் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக, கிஷ்கிந்தையில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டுக்கொள்ளும் சம்பவத்தில், கீகீதி மல்யுத்தம் மேடையில் கண்டோம்!

- டைரி புரளும்...