Published:Updated:

``அந்தக் கருத்தை நான் சொல்லலை...ய்யா!''- பேராசிரியர் சாலமன் பாப்பையா மறுப்பு #VikatanBreaks

``அந்தக் கருத்தை நான் சொல்லலை...ய்யா!''- பேராசிரியர் சாலமன் பாப்பையா மறுப்பு #VikatanBreaks
``அந்தக் கருத்தை நான் சொல்லலை...ய்யா!''- பேராசிரியர் சாலமன் பாப்பையா மறுப்பு #VikatanBreaks

மண உறவை மீறிய பாலுறவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் விதித்த தீர்ப்பை எதிர்த்து பட்டிமன்ற நடுவர் பேரா. சாலமன் பாப்பையாவின் பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அது தன்னுடையது அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 497ஆவது குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவானது, முறைமீறிய உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு மட்டும் தண்டனையை வழங்கியது செல்லாது என அச்சட்டத்தைக் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. அத்துடன், மண உறவுக்கு வெளியில், ஆணோ பெண்ணோ பாலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. 

அந்தத் தீர்ப்புரைக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்புமாகப் பல்வேறு கருத்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேரா. சாலமன் பாப்பையா, இத்தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்து முகநூலில் கருத்தைப் பகிர்ந்திருப்பதாகவும் அக்கருத்தை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பகிர்ந்தபடி உள்ளனர். இது அவருடைய கருத்தே அல்ல என்றும் அவரையறிந்த பேராசிரியர் தரப்பில் கூறப்பட்டாலும், பாப்பையாவின் கருத்தாக அது பகிரப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேரா.சாலமன் பாப்பையாவிடம் கேட்டோம். 

“எனக்கு முகநூலில் எந்தக் கணக்கும் இல்லை; இருந்தாத்தானே ஐயா அதைப் பயன்படுத்துறதப் பத்திப் பேச..! ரெண்டு நாளா வெளியில போய்ட்டு இன்னைக்குதான் வீட்டுக்கு வந்தேன்; வீட்டுல சொன்னாங்க. அது நம்முடைய துறை இல்லைதானே; நாம எப்படி கருத்து சொல்ல முடியும்?. நண்பர்களும் சொன்னாங்க... ’அது உங்களோட நடையே இல்லை’னு... காவல்துறையில விளக்கம் கொடுத்து, முறையீடும் செய்திருக்கேன். அந்த முகநூல் பக்கமும் என்னுடையது இல்லை; அந்தக் கருத்தும் நான் சொன்னது இல்லை!” என அழுத்தமாக நம்மிடம் சொன்னார் பேரா. சாலமன் பாப்பையா.