Published:Updated:

"பா.ம.க-வால் மன அழுத்தம்... மீண்டது எப்படி?!" - த.வா.க. தி.வேல்முருகன் #LetsRelieveStress

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"பா.ம.க-வால் மன அழுத்தம்...  மீண்டது எப்படி?!" - த.வா.க. தி.வேல்முருகன் #LetsRelieveStress
"பா.ம.க-வால் மன அழுத்தம்... மீண்டது எப்படி?!" - த.வா.க. தி.வேல்முருகன் #LetsRelieveStress

"பா.ம.க-வால் ஏற்பட்ட மன அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டேன்" - மனம் திறக்கும் த.வா.க தலைவர் தி.வேல்முருகன்! #LetsRelieveStress

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.  தமிழக மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முன்நிற்பவர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு  இடம் கொடுத்தவர்களுக்கான போராட்டம் என எப்போதும் களத்தில் நிற்பவர். சுற்றுப்பயணம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் வேல்முருகன், தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதிலிருந்து மீண்டதையும் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

``என்னுடைய ரத்தத்திலும், உயிரிலும் இரண்டறக் கலந்திருந்தது பாட்டாளி மக்கள் கட்சி. அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்தேன். எண்ணற்ற வழக்குகளைச் சந்தித்தேன். துன்பங்களையும், துயரங்களையும் எதிர்கொண்டேன். உறவினர்களைப் பகைத்துக்கொண்டேன். பெரிய தலைவர்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்தேன். பா.ம.க என்பது அனைத்து தரப்பு  மக்களுக்குமான கட்சி என்பதை மக்களிடம் நிலைநிறுத்த நிறையப் பாடுபட்டேன். அப்படிச் செயல்பட்ட என்னைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். அது எனக்கு மிகுந்த மனஅழுத்தத்தைத்  தந்தது. சில மாதங்கள் அந்தப் பாதிப்பு என்னை வதைத்தது. என் மன அழுத்தத்தைப் போக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலை சென்றது. ஒருசில மாதங்களுக்குப் பிறகே, அதிலிருந்து நான் வெளியே வந்தேன். அந்தச் சமயத்தில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர்கள் என்னை வந்து நேரில் சந்தித்து `நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். கவலைப்படாதீர்கள்..' என்று, நம்பிக்கையூட்டினர். அந்த உந்துதலில்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டது. இன்று, தமிழக மக்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் நிறைய வேலை செய்துகொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். இதற்கு, சில அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நண்பர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதால், என்னால் மனஅழுத்தத்திலிருந்து எளிதாக வெளியே வர முடிகிறது.  

வெளியூர் பயணங்களின்போதும், சிக்னலில் காத்திருக்கும்போதும் சிலர் அருகில் வந்து என்னோடு செல்ஃபி எடுத்துக்கொள்வது உண்டு. பொதுக்கூட்டங்களில், சில கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது என்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வாங்குவார்கள். அப்போது, இந்தச் சமூகத்துக்காக நாம் உழைத்த உழைப்பும், இன்னல்களும் வீண்போகவில்லை என்று உணருவேன். இந்தச் சமூகம் நம்மை அங்கீகரித்திருக்கிறது என்று எண்ணிக்கொள்வேன். அது என்னை ஆறுதல்படுத்தும். இவையெல்லாம், என்னை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கின்றன.

மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சி செல்லும்போது, பலர் என்னிடம் வந்து பேசுவார்கள். கைகுலுக்குவார்கள். `எந்தவொரு வட்டத்திலும் சிக்கிக்கொள்ளாமல், தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான உங்களது போராட்டங்களை நாங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பேசுகிற தமிழ் எங்களுக்குப் பிடிக்கும். உங்களது நாவில் தமிழ் சரளமாக விளையாடுகிறது’ என்று எளிய மக்கள் என்னிடம் சொல்லும்போது, இன்னும் வேகமாகவும், போர்க்குணத்தோடும் மக்களின் நலன் சார்ந்து போராட வேண்டும் என்கிற உத்வேகம் எனக்குள் அதிகரித்திருக்கிறது!

ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி பத்தோடு பதினொன்றாக மாறிவிடாமல், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறோம். மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு இரு தொகுதிகள் ஒதுக்கித் தருவதாகக் கூறினார். அதைத் தவிர்த்து, நெய்வேலி தொகுதியில் மட்டும் தனித்துப் போட்டியிட்டு சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். தற்போது, நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையத்தின் கூட்டுறவு சங்கத் தேர்தலில் எனது கட்சியினர் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றியிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் அரசு ஊழியர் சங்கத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளோம். இந்த வெற்றிகள் எல்லாம் என்னுடைய மனஅழுத்தத்தைப் போக்குவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றன. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மக்கள் தரும் அங்கீகாரம்தான் என்னுடைய மனஅழுத்தத்தைப் போக்கும் மாமருந்தாக இருக்கிறது!’’ என்கிறார் வேல்முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு