Published:Updated:

``சபரிமலையில் பெண்களை அனுமதிக்கச் சம்மதமில்லைதான் ஆனால்..!” - திருவிதாங்கூர் தேவசம் போர்டு

``சபரிமலையில் பெண்களை அனுமதிக்கச் சம்மதமில்லைதான் ஆனால்..!” - திருவிதாங்கூர் தேவசம் போர்டு
``சபரிமலையில் பெண்களை அனுமதிக்கச் சம்மதமில்லைதான் ஆனால்..!” - திருவிதாங்கூர் தேவசம் போர்டு

பரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 11 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அண்மையில் வழங்கியது. 

வரலாற்று முக்கியத்துவம் ஏன்? 

1990ல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையரின் குடும்பத்தினர் அனைவரும் சபரிமலைக் கோயிலுக்குள் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று நாளிதழ்களில் வெளியானது. அதில் ஆணையரின் மகளும் இடம்பெற்றிருந்தார். நாளிதழ் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து மகேந்திரன் என்பவர் சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஐயப்பா சேவா சங்கம் என்னும் அமைப்பு அவருக்குப் பின்னணியில் இருந்தது. இதையடுத்து 1991ல் கேரள உயர்நீதிமன்றம் ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரள வரலாற்றில் அதுவரையில் ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்களா என்பது குறித்த தொடர் சர்ச்சைகளும் விவாதங்களும் எழத் தொடங்கின. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தனி ஆலோசகராக இருந்த டி,கே.ஏ.நாயர் ஐயப்பன் கோயிலில் தனது அன்னையின் மடியில் அமர்ந்து தான் கடவுளை வழிபட்டதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலேயே பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட வரலாறும் இருக்கிறது என்கிற கருத்தை முன்வைத்தார். ஆனால், ஆர்வலர்கள் வேறு சிலர் அவரது கருத்தை மறுத்தனர். 1810ல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் இருந்த சமயத்தில் ஐயப்பன் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதற்கு ஆதாரமாக முன்வைத்தனர். அதையடுத்து 2006 இந்திய இளைய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் கடவுளை வணங்கும் உரிமையை ஒருவரின் பாலின அடையாள அடிப்படையில் மறுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான இத்தனை வருட விசாரணையின் அடிப்படையில்தான் தற்போது உச்சநீதிமன்றம் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு தொடர்ந்து மகேந்திரன் தற்போது சிட்பண்ட் நிறுவன அதிபராக இருக்கிறார். அவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துள்ளார். 

தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் அமர்வு இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் மரபு சார்ந்த வழிபாட்டுமுறையாக இருந்தாலும் மத உரிமைகளும் நம்பிக்கைகளும் பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் நிலையில் அப்படியான முறைகளை ஒதுக்குவது பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும். வழிபாட்டுத் தலங்களில் பாலின வேற்றுமையை வரவேற்கமுடியாது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்.” என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஐவரில் ஒருவரான நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் ``சிலசமயங்களில் மதநம்பிக்கைகள் பகுத்தறிவற்றதாக இருந்தாலும் அது மரபார்ந்த நம்பிக்கை என்னும் அடிப்படையில் நீதிமன்றங்கள் அதில் தலையிடாமல் இருக்கலாம்” என்று மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். 

இனி என்ன நடக்கும்? 

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்துமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைமை நிர்வாகி பத்மகுமார் அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். 

இதன் அடிப்படையில் வரும் 17ந்தேதி முதல் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

தேவசம் போர்டு கருத்து என்ன? 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேவசம்போர்டு தலைமை நிர்வாகி பத்மகுமார், ``முதல்வரிடம் பேசியதன் அடிப்படையில் வரும் 17 அக்’18 முதல் பெண்கள் ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பெண்களுக்கான  சிறப்பு நுழைவு அல்லது சிறப்பு தரிசனங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் மற்ற எந்த பக்தர்களையும் போலக் கோயிலுக்குள் நுழைந்து வழிபடலாம். கோயிலுக்குள் வருபவர்களில் யாரும் ஆண் பெண் என்கிற பாகுபாடு கிடையாது அனைவருமே எங்களுக்கு ஐயப்பன்கள்தான். இந்த விவகாரத்தில் வேறு சில ஐயப்ப பக்தர்களும் ஏன், திருவிதாங்கூர் சமஸ்தானமுமே கூட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துள்ளது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்க்கருத்து இருந்தாலும் அதை மதிக்க வேண்டியது எங்கள் கடமை அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.