Published:Updated:

காமம் மூக்கு... காதல் மூக்குத்தி!

காமம் மூக்கு... காதல் மூக்குத்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காமம் மூக்கு... காதல் மூக்குத்தி!

சென்னை முழுவதும் போஸ்ட்டர்கள், யூ டியூபில் டிரெய்லர் வெளியீடு எனத் தன்னுடைய ஆறாவது நாவலான 'எக்ஸைல்’ வெளியீட்டு விழாவை அமர்க்களப்படுத்தினார் எழுத்தாளர் சாருநிவேதிதா. காமராஜர் அரங்கில் சென்ற வாரம் நடந்த இந்த நாவல் வெளியீட்டு விழாவில் வாலி, இந்திரா பார்த்தசாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவைச் சாருநிவேதிதாவே தொகுத்து வழங்கி நாவலை வெளியிட்டது, ஓரிரு பிரதிகளை ஏலம்விட்டது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள்!

##~##
'' 'நாவல் வெளீயிட்டு விழாவுக்கு வாலியை ஏன் கூப்பிட்டீங்க?’னு ஏகப்பட்ட பேர் கேட்டாங்க. என் வாழ்க்கையில் இதுவரை யாருமே பெருசா என்னைப் பாராட்டியது கிடையாது. வாலி ஒருத்தர் மட்டும்தான் ஆனந்த விகடனில் தன் 'நினைவு நாடாக்கள்’ தொடரில் என்னை மனம்விட்டு பாராட்டி எழுதினார். அவர் எல்லா விஷயங்களிலும் உள்ள நல்லதை மட்டுமே எடுத்துப்பார். அடுத்தவன்கிட்ட உள்ள கெட்டதை மட்டுமே பார்த்துட்டு இருந்த எனக்கு வாலியின் பாராட்டு, திருப்புமுனையா அமைஞ்சுது. அதே மாதிரி என் முதல் நாவலான 'ஜீரோ டிகிரி’யைத் தடை பண்ணணும்னு பலபேர் சொன்னப்ப, இந்திரா பார்த்தசாரதி மட்டும்தான் எனக்கு ஆதரவாக் குரல் கொடுத்தார்'' என்றார் சாரு.

''சாருவோட ஆறு மாசமாத்தான் பழக்கம். நிறையப் பேர் அவரைப் பற்றி விமர்சனம் பண்றாங்க. எவன் விமர்சனத்துக்கு ஆளாகிறானோ அவன்தான் அறிவாளி. 'நினைவு நாடாக்கள்’ தொடரில் அவரைப் பத்தி எழுதினப்ப, ஏகப்பட்ட பேர் திட்டிக் கடிதம் எழுதினாங்க. அவங்களால் உண்மையைப் பொறுத்துக்க முடியலை. தமிழ்நாடு இவரை சரியாப் புரிஞ்சுக்கலை என்கிற என் கவலையைத்தான்  எழுதினேன். இந்தப் புத்தகத்தில் உண்மையிலேயே உண்மையை ராவா எழுதியிருக்கார். இதுக்குத் தனி தைரியம் வேணும். எழுத்தாளன் எதையும் மறைக்காம எழுதணும். அதுதான் தர்மம். காதல், காமம் இல்லாத மனிதனே உலகத்துல கிடையாது. இதை என் நண்பர் வலம்புரிஜான், 'காமம் மூக்கு... காதல் மூக்குத்தி’ என்றார். 'எக்ஸைல்’ படிக்கிறப்ப சென்சார் பண்ணாத படத்தைப் பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. இந்த உலகம் இவரை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறதைத் தவிர்க்கத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்'' என்றார் வாலி.

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது, ''ஒருவர் சாருவை ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால், நிச்சயம் புறக்கணிக்க முடியாது. சாருவைப் பிடிக்காதவர்கள் கூட அவர் என்ன சொல்ல வர்றார்னு அவருடைய வலைதளத்தைப் பார்த்தபடி இருப்பார்கள்'' என்றார். இறுதியில் தன் இணையதளத்தில் கேட்கப்பட்ட வாசகர்களின் கேள்விகளுக்கு சாரு பதில் அளித்தார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படம்: பா.காயத்ரி அகல்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு