Published:Updated:

ராணுவத்தில் போர்புரிய `சிட்டி'க்கள் தேவை! விளம்பரம் விரைவில்.... #InternetOfBattlefieldThings

ராணுவத்தில் போர்புரிய `சிட்டி'க்கள் தேவை! விளம்பரம் விரைவில்.... #InternetOfBattlefieldThings

மனிதர்களோடு சேர்ந்து வெகுவிரைவில் ரோபோக்களும் போர்க்களத்துக்கு வரவிருக்கின்றன.

Published:Updated:

ராணுவத்தில் போர்புரிய `சிட்டி'க்கள் தேவை! விளம்பரம் விரைவில்.... #InternetOfBattlefieldThings

மனிதர்களோடு சேர்ந்து வெகுவிரைவில் ரோபோக்களும் போர்க்களத்துக்கு வரவிருக்கின்றன.

ராணுவத்தில் போர்புரிய `சிட்டி'க்கள் தேவை! விளம்பரம் விரைவில்.... #InternetOfBattlefieldThings

துவரைக்கும் வீடியோ கேம்களில் மட்டுமே நாம் பார்த்த ஹைடெக் சண்டைகள் விரைவில் நிஜப் போர்க்களத்திலும் நடக்கவிருக்கின்றன. இதுவரைக்கும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகளோடு மட்டுமே எதிரிகளைத் துவம்சம் செய்த தரைப்படை வீரர்கள், இனி ரோபோக்கள், ட்ரோன்கள், சென்சார்கள், எக்ஸோஸ்கெலிட்டன்கள் என சகலமும் ஹைடெக் கேட்ஜெட்களோடுதான் களமிறங்கப் போகின்றனர். இதற்கெல்லாம் உதவப்போவது இரண்டு தொழில்நுட்பங்கள். ஒன்று, Internet of Intelligent Things. மற்றொன்று, Internet of Battlefield/Battel things - IoBT. கேட்ஜெட்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்கும் இன்டர்நெட் ஆப் திங்ஸின் அடுத்தடுத்த வெர்ஷன்கள்தான் இவையிரண்டும். இன்னும் சில ஆண்டுகளில் போர்க்களத்துக்கு வரப்போகும் `சிட்டி' ரோபோக்களுக்குப் பிள்ளையார் சுழி போடுபவையும் இவைதாம்.

தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சிக்கு ஓர் உதாரணம், இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட்வசதி. இதனால் நமக்குக் கிடைத்த மிக முக்கிய மற்றும் மறுக்கமுடியாத பயன்பாடுகளில் முக்கியமானது மெஷின் லேர்னிங் (Machine Learning) மற்றும் இணைக்கப்பட்ட கருவிகள் எனப்படும் நெட்வொர்க்கில் இணைந்த டிவைஸ்களைக் கொண்ட Internet of Things. எந்தவொரு கேட்ஜெட்டும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அவை நம்மைவிட்டு அவ்வளவு எளிதில் நீங்குவதில்லை. நம் கையைவிட்டு எப்போதும் மொபைல் போன்கள் நீங்காமல் இருக்கவும் இதுதான் காரணம். நமக்குத் தேவையான அத்தனையையும் அது செய்கிறது, காலத்திற்கேற்ப அப்டேட் ஆகிறது, நம் பணிகள் அத்தனையையும் சுலபமாக்குகிறது; இத்தனையையும் ஒரு மொபைல் செய்தால் பின்னர் நாம் ஏன் அவற்றைத் தூக்கி எறியப்போகிறோம். இதே லாஜிக் ராணுவ இயந்திரங்களுக்கும் பொருந்தும். தற்போது அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் இன்னும் பழைய காலத்திலேயேதான் இருக்கின்றன. வரும்காலங்களில் சந்திக்கவிருக்கும் அதிபயங்கரமான போர்களில் இவைமட்டும் போதுமா. இங்கேதான் நவீனக் கணினி தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது. இதுவரைக்கும் மனிதனின் கட்டளைகளை ஏற்று `தேமேவென' சுட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகள், இனி முதல்முறையாக தானே இலக்கை முடிவு செய்யும். அடர்ந்த காடுகளில் ஒளிந்திருக்கும் எதிரியை ஸ்னைப்பரின் கண் கண்டுபிடிக்கும் முன்பே, ஸ்னைப்பரின் துப்பாக்கியில் இருக்கும் சென்சார்கள் கண்டறிந்து சொல்லிவிடும். சுடலாமா வேணாமா. இதற்கு மட்டும் வீரர்களின் விரல்கள் ட்ரிக்கரில் பதில் சொன்னால் போதும். இது வெறும் உதாரணம்தான். இன்னும் எத்தனையோ கருவிகள் இப்படி ஸ்மார்ட்டாக உருவாகப்போகின்றன. இவையெல்லாம் நடக்க வெறும் 20 ஆண்டுகளே போதும் என்கின்றனர் நிபுணர்கள். 

அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் கோட் இதைப்பற்றிக் கூறுகையில், ``இன்டர்நெட் ஆப் இன்டலிஜென்ட் திங்ஸ் (Internet of Intelligent Things) என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் மெஷின் லேர்னிங்கின் வளர்ச்சியை முன்னிறுத்தி புதிய ரோபோக்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் இந்த வகை ரோபோக்கள், போர்க்களத்தில் பறந்து தாக்க, நடந்துசெல்ல, ஊர்ந்து செல்ல அல்லது மற்ற ஆயுதங்களை இயக்க உதவும் திறனோடு உருவாக்கப்படும். ரோபோக்களை தயாரிக்கும் போது பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். சில ரோபோக்கள் சிறியதாகவும், சில ரோபோக்கள் பெரியதாகவும் உருவாக்கப்படும். சிறிய பூச்சி போல இருக்கும் ரோபோக்களை சென்சார் (Sensor) போல பயன்படுத்தலாம். உருவ அளவில் பெரியதாகத் தயாரிக்கப்படும் ரோபோக்களை பயண வாகனங்களாக, பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் `சைபர்-ரோபோட்'-கள் (Cyber-Robots) தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவை கணினிகள் மற்றும் அதன் நெட்வொர்க் இருக்கும் இடங்களில் தொடர்புகொண்டு தனக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மையானவையா என்று சரிபார்க்கும். இதனால் எதிரிகளின் தீம்பொருள் (Malware) மூலம் வரும் தாக்குதல்களைத் தடுக்கமுடியும்." என்கிறார். ஆக, இன்னும் சில ஆண்டுகளுக்குள்ளாகவே உலக ராணுவங்களிலிருந்து சிட்டி ரோபோக்களுக்கான அறிவிப்புகள் வரலாம்; ராணுவத்தில் வீரர்களோடு இணைந்து இயங்க தனியார் நிறுவனங்கள் ரோபோக்களுக்கான ஆர்டர்களை எடுக்கலாம். 

போர்க்களத்தில் இராணுவ வீரர்கள் சிறப்பாகச் செயல்பட உதவும் வகையில் உருவாக்கப்படும் கருவிகள்தான் இன்டர்நெட் ஆப் பேட்டில்ஃபீல்ட் திங்ஸ் (ஐ.ஓ.பி.டி) (Internet of Battlefield/Battel things - IoBT). இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சாதாரண ஆயுதங்களோடு சேர்த்து, வீரர்களின் உடலுடன் இணைந்து செயல்படும் புதுவகை ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும். வெறும் அசைவுகள் மூலமாகவே இவற்றை இயக்கவோ, பிற வீரர்களின் கருவிகளோடு தொடர்புகொள்ளவோ முடியும். ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போர்க்கருவிகளை வெகுதொலைவில் இருந்தே இயக்கமுடியும். இதன் அடுத்தகட்டம்தான் ரோபோக்களுடன் இணைந்து களத்தில் சண்டையிடுவது. வீரர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே, தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ரோபோக்களை கட்டுப்படுத்தவோ, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கவோ முடியும். ஒரே ரோபோவுடன், பல வீரர்களும் இணைந்து களத்தில் செயலாற்றமுடியும்.

``இராணுவத்தை ரோபோக்கள் கொண்டு செயல்படுத்துவது எளிதான காரியம் இல்லை. நாட்டின் போர்விதிகளைப் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அதனால், மனிதர்கள்தான் இந்த ரோபோக்களை இயக்கவும், அவற்றுக்குக் கட்டளையிடவும், அவை எடுக்கும் முடிவுகளைச் சரிபார்த்து அங்கீகரிக்க வேண்டும்; அதற்கேற்றபடியே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும்" என்கிறார் கோட்.

மிகவும் சவாலான, இந்த ரோபோக்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய வரவான நியூரல் நெட்வொர்க்ஸ் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட நவீனக் கருவிகள் அதிகளவில் வருவதன் மூலம் ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பது ராணுவங்கள் சொல்லும் கணக்கு. இந்தக் கணக்கு தாக்குதல் நடத்தும் நாட்டுக்குச் சரி; தாக்குதலுக்குள்ளாகும் நாட்டுக்கும் பொருந்துமா என்பதில்தான் மனிதனின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.