Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர், நடிகர் மணிவண்ணன்படம் : கே.ராஜசேகரன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர், நடிகர் மணிவண்ணன்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

ன் அப்பா ஆர்.எஸ்.மணியம் கோவை மாவட்டம், சூலூர் தி.மு.க. கிளைக் கழகச் செயலாளரா இருந்தார். வீட்டுக்கு திராவிட நாடு, குடியரசு, முரசொலினு எல்லா அரசியல் பத்திரிகைகளும் வரும். அஞ்சாப்பு படிச்சுட்டு இருந்த என்கிட்ட வீட்டுக்கு வரும் கட்சிக்காரங்க எல்லாம் முரசொலி படிக்கச் சொல்வாங்க. அரசியல்னா என்னன்னே தெரியாத வயசுல வேண்டா வெறுப்பா அதைப் படிச்சுக் காட்டுவேன். ஆனா, அப்பவே ஒரு புத்தகம் வாசிக்க ஆசை ஆசையா நண்பன் சாமிநாதன் வீட்டுக்கு ஓடுவேன் - அது ஆனந்த விகடன்!

அட்டையில் துவங்கி புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைய தமாஷ் இருக்கும். ஒவ்வொரு புத்தகத்திலும் நாட்டு நடப்பைப் பத்தி நச்சுனு ஒரே சித்திரத்தில் சொல்லி இருப்பாங்க. ஆனா, ஒவ்வொரு வாரமும் அந்தப் புத்தகத்தைப் படிக்க நான் படுற பாடு இருக்கே... அந்த வீட்டுப் பெண்கள் என்னை 'தேங்காய் எண்ணெய் வாங்கிட்டு வா, உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வா’னு உருட்டி விளையாடாத குறையா வறுத்தெடுப்பாங்க!  

பத்தாம் வகுப்பு சமயத்துலயே கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாகிட்டேன். அப்போ விகடனில்

நானும் விகடனும்!

வரும் படங்களைக் காப்பி அடித்து கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் படமாக வரைந்து தட்டியில் ஓட்டி வீதியில் வைப்பேன். சூலூர் நூலகத் தில் என் மாமா நடராஜன்தான் நூலகர். அதனால் நூலகத்தில் சாவகாசமா உட்கார்ந்து விகடனை வாசிப்பேன்.

அப்போ மணியனின், 'உன்னை ஒன்று கேட்பேன்’ தொடர் விகடனில் ரொம்பப் பிரபலம். கண்ணதாசனின் பாடல் வரிகளுடன் அந்தத் தொடர் தொடங்கும். இப்போ டி.வி. சீரியல் பார்த்துட்டு, பெண்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கிற மாதிரி, அப்போ அந்தத் தொடரைப் படிச்சுட்டு எங்க வீட்டுப் பெண்கள், 'பாவம் சித்தி, பர்வதம்... அவ புருஷன் நாதானந்தா சந்நியாசி ஆகப்போறானாம்’னு உச்சுக்கொட்டுவாங்க. அதே போல, பி.வி.ஆரின் 'ஆடாத ஊஞ்சல்’ தொடருக் கும் பெண்கள் மத்தியில் பலத்த விவாதம் நடக்கும்.

சமீபத்தில், 'என் விகடனில் வரும் 'என் ஊர்’ பகுதிக்காக உங்கள் ஊரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’னு விகடன்ல இருந்து கேட்டாங்க. விகடன் அந்தக் காலத்துலயே பிரபலங்களை வைத்து, 'எங்கள் ஊர்’ பகுதியை வெளியிட்டது. நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகிய பிரபலங்கள் அந்தப் பகுதியில் தங்களது ஊரின் பெருமைகளை எழுதியது இப்பவும் பசுமையா நினைவில் இருக்கு. இப்போ அதே சாயல்ல என் ஊரைப்பத்தி பேசச் சொல்றாங்க. தமிழகத்தின் கடைக்கோடிக் கிராமமும் விகடனின் ஒளி வெள்ளத்தில் இருந்து தப்ப முடியாது என்பது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வந்திருக்கிறது!

சினிமா விமர்சனத்தில் அப்போதே புதுமையைப் புகுத்தியது விகடன். எம்.ஜி.ஆரின் 'ஒளி விளக்கு’ படத்துக்கு குடும்பத் தலைவி, அரசு அதிகாரி, கல்லூரி மாணவர், பள்ளி ஆசிரியைனு பல தரப்பினரைக் குழுவாகப் படத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கருத்துக் களைக் கேட்டு மக்கள் விமர்சனமாக வெளியிட்டது.  

1975-76ல் பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டேன். நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவரது 'நிழல்கள்’ படத்துக்கு நான்தான் கதை, வசனம். சினிமாவில் என் முதல் பங்களிப்புக்குக் கிடைத்த விகடனின் விமர்சனத்தை இப்போ வரை என்னால் மறக்க முடியாது. அந்த அளவுக்குக் கடுமையான விமர்சனம்!

ஆனால், நான் இயக்கிய முதல் படமான 'கோபுரங்கள் சாய்வதில்லை’ விகடனின் 'குட் புக்’கில் இடம் பெற்றது. அதே போல் 'நூறாவது நாள்’ படத்துக்கும், 'இயக்குநர் மணிவண்ணன், படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்திக்கொண்டுஇருக்கிறார்’னு எழுதியிருந்தது விகடன். அதே போல என் 'இனி ஒரு சுதந்திரம்’ படத்துக்கும் பலமான பாராட்டுதல்கள். 'போதும்டா... விகடனே சொல்லிருச்சு. சினிமாவுல சாதிக்க நெனைச்சு மெட்ராஸ் வந்தோம். சாதிச்சிட்டோம்’னு கண்ணீர்விட்டு அழுத தருணம் அது!

விகடனின் பொன் விழா சமயம் சிறந்த திரைக்கதை, வசனத்துக்கு வாசகர்களிடம் போட்டி நடத்தியது. அதற்கு மகேந்திரன், கே.பி., பாரதிராஜா ஆகியோர்தான் நடுவர்கள். ஆயிரக்கணக்கில் குவிந்த திரைக்கதை, வசனங்களில் எதுவுமே சரி இல்லைனு நடுவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. 'ஆயிரக்கணக் கான கதை, வசனங்களில் ஒன்றுகூடச் சரி

இல்லைனு எப்படி ஒரு தீர்ப்பு இருக்க முடியும்? வந்ததில் சிறந்தது என ஒன்றைத் தேர்ந்து எடுப்பதுதானே சரி’ என்று விகடன் ஆசிரியருடன் வாதிட்டேன். ஆனாலும், நடுவர்களின் முடிவே இறுதியானதுனு என்னைச் சமாதானப்படுத்திட்டாங்க!

90-களில் விகடனின் நிருபர்களில் பலர் எனக்கு நண்பர்கள். அடிக்கடி அவர்களைப் பார்க்க விகடன் அலுவலகம் வர்றப்போ, லே-அவுட் செய்வது உள்ளிட்ட விகடனின் உருவாக்கத்தையும் பார்த்திருக்கேன். விகடனில் அன்றும் இன்றும் மதன் கார்ட்டூன்கள்தான் என் பிரியம். விகடன் பெரிய புத்தகமாக மாறிய பிறகு 'பழைய ஃபீல் இல்லை’ என்பதுபோல என் நண்பர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால், எனக்கு இந்தப் பெரிய வடிவம்தான் பிடித்திருக்கிறது. முன்பு சினிமா, அரசியல் எல்லாம் தனித்தனியாகத் தெரியும். ஆனால், இப்போது அப்படி இல்லாமல் அனைத்துப் பக்கங்களும் ஒரே சீரான அலங்காரத்துடன் மிளிர்கிறது.

சினிமாவில் பரபரப்பாக இருந்தால் மட்டும்தான் விகடன் கண்டுகொள்ளும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால், அதுவும் உண்மை இல்லை. உரியவர்களுக்கு உரிய மரியாதையை எந்தச் சமயத்திலும் செய்யத் தயங்கியது இல்லை விகடன். மிகச் சமீபத்தில் என் மகள் ஜோதியின் திருமண நிகழ்வை ரஜினிகாந்த் ஆசீர்வதிக்கும் செய்திகளுடன் கவர் ஸ்டோரியாக வெளியிட்டது.  'அப்பா, தந்தை வீட்டுச் சீதனம்போல விகடன் எனக்குச் சீதனம் கொடுத்திருக்கு’னு என் மகள் கண் கலங்கிச் சொன்னப்போ, 'இதுக்கு மேல என்ன வேண்டும்’ இந்தத் தகப்பனுக்கு!

நானும் விகடனும்!

ஒரு விஷயத்தை மறக்கவே கூடாது... ஈழத் துயரங்களை விகடனைப் போல உருக்கமாகப் பதிவுசெய்த பத்திரிகை வேறு எதுவுமே கிடையாது. பல சமயங்களில் ஈழம் தொடர்பான விகடன் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நமக்காகவும் ஒரு பத்திரிகை இருக்கிறது... உலக நாடுகள் பலவும் நம்மைப் புறக்கணித்தாலும் உலகம் முழுவதுக்கும் தமிழனுக்காகப் பரிந்து பேச விகடன் இருக்கிறதுனு நினைச்சுக்குவேன்.

இப்போ உடல் நலம் இல்லாமல்... நடக்கவே ரொம்பச் சிரமப்படுறேன். ஆனா, என் நேரங்களை உபயோகமானதாக ஆக்குகிறது விகடன். இன்றைக்கு காமுத்துரை உள்ளிட்ட பலரின் சிறுகதைகளை வெகுவாக ரசிக்கிறேன். சி.மகேந்திரன் எழுதிய 'வீழ்வேன் என்று நினைத்தாயோ’ படித்தபோது, தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பன்மடங்கு பெருகியது. தமிழ் மக்களின் அப்படி ஒரு நம்பிக்கைதான் விகடன்!''