Published:Updated:

ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண்... இந்தியர்கள் எதைத் தேடினார்கள்?!

ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண்... இந்தியர்கள் எதைத் தேடினார்கள்?!
ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண்... இந்தியர்கள் எதைத் தேடினார்கள்?!

பள்ளிப்படிப்பே இல்லாமல், தொடர முடியாமல்போனவர்களோ, நான்கைந்து பட்டப்படிப்பின் பெயர்களை வீட்டுக்கு முன்பாகப் பலகையில் கட்டித் தொடங்கவிடுபவர்களோ, எந்தவித பாரபட்சமும் இல்லாமல்போன இந்தியர்களின் அக்மார்க் குணத்தை தொழில்நுட்பங்கள் காட்டிக்கொடுத்தபடி இருக்கின்றன.

க்டோபர் 1-ம் தேதி, இந்தியா தனது பெருமைமிகு கிரீடத்தில் மற்றுமொரு வைரத்தைப் பதித்துக்கொண்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத், பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எஃப்-பின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதுதான் அந்தப் பெருமைக்குரிய நிகழ்வு. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு ஐ.எம்.எஃப்-பின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத். இந்தப் பதவியை அலங்கரிக்க இருக்கும் முதல் பெண்ணும் இவர்தான்! 

கொல்கத்தாவில் பிறந்து, 9-வது வயதில் மைசூருக்கு இடம்பெயர்ந்து அங்கு வளர்ந்தவர் கீதா கோபிநாத். டெல்லியிலும் வாஷிங்டனிலும் உயர்படிப்பை முடித்த இவர், தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.

கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆஃப் பாஸ்டன், ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆஃப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துவருகிறார். அமெரிக்கன் எக்னாமிக் ரிவ்யூ, ஹேண்ட்புக் ஆஃப் இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ் போன்ற பொருளாதாரப் பத்திரிகைகளின் இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்துவருபவர்.

இவர் குறித்துப் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டின் லாகார்டே,  ``கீதா கோபிநாத், உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் சந்தேகமே இல்லை. அனுபவமும் சிறந்த தலைமைப் பண்பும்கொண்டவர்” என்றார். 

பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றபோது அளிக்கப்பட்ட அத்தனை வாழ்த்துகளையும் புகழுரைகளையும் வழங்கி முடித்தன வட இந்திய ஊடகங்கள். பெண்கள் முன்னேற்றம், பெண்கள் மன உறுதி, துணிச்சல் எனப் பேசி, கீதா கோபிநாத் கொண்டாடப்பட்ட சில மணி நேரத்துக்குள், இந்தியாவின் இன்னோர் அழுக்கடைந்த அடையாள முகமும் வெளிவந்தது. பிரபல தனியார் வலைதளம் ஒன்றின் கணிப்புப்படி, தலைமைப் பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்ட சில நிமிடத்துக்குள், கூகுள் தேடலில், autocomplete prediction-ஆக மாறியிருக்கிறது கீதா கோபிநாத்தின் சாதி. நிகழ்நேரத்தில் பலரும் தேடும் விஷயங்களை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படும் இந்த பிரெடிக்‌ஷன் முறை, மீண்டும் ஒருமுறை இந்தியாவின் சகிக்க இயலா முகத்தைக் காட்டியபடி இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம், `2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி'களில் தங்கம் உட்பட 3 பதக்கங்களையும் அர்ஜுனா விருதையும் பெற்று நாட்டைப் பெருமைப்படுத்திய ஹிமா தாஸின் பெயரைப் போட்டு முதலில் தேடப்பட்டதும் அவரது சாதிதான். ` `ஹிமா தாஸ் சாதனைகள்’, `ஹிமா தாஸ் பதக்கங்கள்’, `ஹிமா தாஸ் தடகள வீராங்கனை’ போன்ற வார்த்தைகளைவிட அவரது சாதிதான் அதிகமாகத் தேடப்பட்ட விஷயம்' என ட்ரெண்ட் அறிக்கை தெரிவித்திருந்தது. 

பள்ளிப்படிப்பே இல்லாமல், தொடர முடியாமல்போனவர்களோ, நான்கைந்து பட்டப்படிப்பின் பெயர்களை வீட்டுக்கு முன்பாகப் பலகையில் கட்டித் தொடங்கவிடுபவர்களோ, எந்தவித பாரபட்சமும் இல்லாமல்போன இந்தியர்களின் அக்மார்க் குணத்தை தொழில்நுட்பங்கள் காட்டிக்கொடுத்தபடி இருக்கின்றன. 

எந்த ஊருங்க நீங்க - அந்த ஊருல எங்க?
என்ன ஆளுங்க நீங்க?
என்ன குலசாமிங்க உங்களுக்கு?
நம்மாளா நீங்க?

வரிசையில்.... இந்த நூற்றாண்டிலிருந்து, கூகுள் ஆட்டோகம்ப்ளீட் பிரெடிக்‌ஷன் சிறுமைகளும் இடம்பெறுகின்றன.

`சாதியை அறிந்துகொள்ளத் துடிக்கும் இழிவான ஆர்வத்தை, மனிதனை அடையாளங்களுக்குள் சுருக்கிக் கணிக்கும் மனிதவிரோதத்தை எப்போது நிறுத்துவோம்?' என்ற அரற்றலோடு காத்திருக்கிறார்கள் `நாகரிக மனிதர்கள்'.

இன்று தேதி, அக்டோபர் 4, 2018.

அடுத்த கட்டுரைக்கு