Published:Updated:

கழிவுநீர் சாக்கடைக்குள் துப்புரவுப் பணியாளர்... அதிகாரிகளை வறுத்தெடுத்த மதுரை மக்கள்!

``ஏன் சார்.. தனியா இதுக்குன்னு மெஷின்கள் இல்லையா? ஆள உள்ள இறக்கியிருக்கீங்க! இன்னும் அப்படியேதான் இருக்கணுமா அவங்க?"

கழிவுநீர் சாக்கடைக்குள் துப்புரவுப் பணியாளர்... அதிகாரிகளை வறுத்தெடுத்த மதுரை மக்கள்!
கழிவுநீர் சாக்கடைக்குள் துப்புரவுப் பணியாளர்... அதிகாரிகளை வறுத்தெடுத்த மதுரை மக்கள்!

``நீங்கள் என்றேனும் உங்கள் வீட்டுக் கழிவறைகளில் உள்ள அடைப்புகளை நீங்களே கை விட்டு அள்ளியிருக்கிறீர்களா அல்லது அது போன்ற வேலைகளுக்கு உங்களை யாரேனும் கட்டாயப்படுத்தி திணித்திருக்கிறார்களா?"

இந்தக் கேள்வியே சிலருக்கு முகம் சுளிக்கக்கூட வைக்கலாம். ஆனால், இந்த `ஹை-டெக்' நூற்றாண்டிலும், எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சிகளிடையேயும், அரசாங்க சட்ட திட்டங்கள் இருந்தும், மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் நாம்.

``அதான் நீதிமன்றம், துப்புரவுப் பணியாளர்களைக் கழிவுநீர் சாக்கடைக்குள்ளேயும், மலக்குழிகளுக்குள்ளேயும் இறங்கி வேலை செய்ய விடுவது சட்டப்படி குற்றம்'ன்னு சொல்லுதே?", ``இப்போதான் இதுபோன்ற வேலைகளுக்கெல்லாம் மெஷின் வந்தாச்சே? இன்னுமா இதுமாதிரியெல்லாம் நடக்குது?" - இப்படிச் சந்தேகமான பார்வையுடன் உங்களுக்குள் கேள்விகள் கிளம்பியிருந்தால், நிச்சயம் கீழே உள்ள சம்பவம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் சில தினங்களாகப் பெய்து வரும் பரவலான கனமழையால் ஆங்காங்கே உள்ள சாக்கடைகளிலும், கழிவுநீர் வாறுகாலிலும் அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஓடிய வண்ணம் இருந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர், திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் உள்ள கழிவுநீர் வாறுகாலில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளரை எந்த விதப் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி 5 அடிக்கும் மேல் ஆழமுள்ள அந்தக் கழிவுநீர் குழிக்குள் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றனர் இரண்டு அரசு அதிகாரிகள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சம்பவ இடத்திலேயே அந்த அதிகாரிகளிடம், ``ஏன் சார்.. தனியா இதுக்குன்னு மெஷின்கள் இல்லையா? ஆள உள்ள இறக்கியிருக்கீங்க! இன்னும் அப்படியேதான் இருக்கணுமா அவங்க?" என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இவையனைத்தும் நடந்தது, அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் வீட்டு வாசலில்!

அந்தப் பகுதி 95வது வார்டுக்கு நியமிக்கப்பட்டிருந்த உதவி பொறியாளர் (AE), முருகனைத் தொடர்புகொண்டு பேசிய போது, ``இது பாதாளச் சாக்கடையில்லை. கழிவுநீர் போகும் வாறுகால்தான். இதுகுறித்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். இது சுகாதாரத்துறையின் கீழ் வரும். அங்குப் பேசிக்கொள்ளுங்கள்" என்று முடித்துக்கொண்டார். அப்பகுதி சுகாதாரத்துறை அரசு அதிகாரி மனோகரனிடம் இதுகுறித்து கேட்டோம். ``அங்குக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டிருந்தது. வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்துவிடும் அபாயம் இருந்தது. அதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். மேலும், இந்த ஏரியாவில் பாதாளச் சாக்கடையே இல்லை. நான் என்னுடைய 2000 ரூபாயை செலவு செய்து இதைச் சரி செய்துள்ளேன். இந்தப் பகுதிக்கு நன்மைதான் செய்திருக்கிறேன்." என்றார். 

``இப்பகுதியில் பாதாளச் சாக்கடை இல்லையென்றாலும், இந்தக் கால்வாயில்தானே அப்பகுதியின் அனைத்துக் கழிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது? ஒரு மாநகராட்சி ஊழியரை எந்த விதப் பாதுகாப்பும் இல்லாமல் இவ்வளவு அவசரமாக இதில் இறக்கி வேலை செய்யச் சொன்னது யார்? சாக்கடைக்குள் இறங்குவது அவருக்கு நன்மையா?" என்று நாம் கேட்ட கேள்விக்குக் கடைசி வரைக்கும் அவரிடம் பதில் இல்லை.

மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகரிடம் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கச் சென்றபோது, ``அது பாதாளச் சாக்கடையில்லை. இருந்தாலும் அது எம்மாதிரியான கழிவுநீர் சாக்கடையாக இருந்தாலும், துப்புரவுப் பணியாளர்களை இறக்கி வேலை வாங்குவது சட்டத்துக்குப் புறம்பானதுதான். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, உண்மை நிலவரத்தையறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு சம்பவ இடத்திலிருந்த அரசாங்க அதிகாரிகள் மட்டுமேதான் காரணமா என்றால், `நிச்சயம் இல்லை' என்பதுதான் பதில்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தமிழக அரசு தவறியதால், கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. `உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் தமிழகத்துக்கு இனி ஒரு பைசா கூட நிதி வழங்க முடியாது' என அப்போதே மத்திய அரசு கூறிவிட்டது.

தமிழக அரசிடம் எத்தனையோ முறை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் கள்ள மௌனம் சாதித்து வருவது ஏன்? இந்த நிதித்தொகை தமிழகத்துக்குக் கிடைக்காமல், ஏற்பட்டு வரும் கடும் நிதிப் பற்றாக்குறையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. அதற்கு, இந்த நிகழ்வு ஓர் அத்தாட்சி. உள்ளாட்சிகளுக்கான நிதி தமிழகத்துக்கு முறையாகக் கிடைக்காததின் ஓர் எதிரொலியாகத்தான், துப்புரவுப் பணிகளுக்கென தகுந்த பாதுகாப்புச் சாதனங்களும், அவர்களுக்கான நிதியும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. 

தமிழக அரசின் மெத்தனத்தால் நசுக்கப்படுவது அன்றாட வாழ்வினைக் கஷ்டப்பட்டு நடத்தி வரும் இதுபோன்ற எளிய மக்கள் மட்டுமே!