Published:Updated:

`உதவியவர்களையே கொன்ற அந்த ஒரு வில்லன்'... பவளப்பாறைகளின் காதல் கதை கேட்டதுண்டா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`உதவியவர்களையே கொன்ற அந்த ஒரு வில்லன்'... பவளப்பாறைகளின் காதல் கதை கேட்டதுண்டா?
`உதவியவர்களையே கொன்ற அந்த ஒரு வில்லன்'... பவளப்பாறைகளின் காதல் கதை கேட்டதுண்டா?

"ஐ.ஐ.டி போன்ற பெரிய பெரிய இடங்களில் கடல் சார்ந்த கருத்தரங்குகளை நடத்துவது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் அந்தக் கருத்தரங்குகளைக் குழந்தைகளிடம் நடத்துவது. அதுவும் மீனவக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் வாழ்வாதாரமான கடலைப் பற்றிப் போதிய விவரமில்லாமல் வளரக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்."

``ஒரு கதை சொல்லவா?

காதல் கதை... அதுவும் 500 மில்லியன் ஆண்டுகள் பழைமையான காதல் கதை. இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் அந்தக் கதையில் இப்போது வில்லனும் தோன்றிவிட்டான்.

அப்போது மனிதர்கள் தோன்றியிருக்கவே இல்லை. அதனால் கதையின் ஹீரோ மனிதனல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன். இந்தக் கதையில் பவளப்பாறைகள்தான் ஹீரோக்கள். பெயர்தான் பாறைகளே தவிர அவர்கள் உயிருள்ள ஜீவன்கள். என்ன ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நகரத்தான் முடியாது. இவை தாவரங்களைப் போன்றவை. ஆனால் தாவரங்களில்லை. இவற்றில் பல வகைகள் உண்டு. கடினப் பவளப்பாறைகள், மெல்லிய பவளப்பாறைகள், காளான் வடிவப் பவளப்பாறைகள் என்று இன்னும் பற்பல வகைகள். கடினப் பவளங்கள் பாறைகளைப் போலவே உறுதியாக இருக்கும். மெல்லிய பவளங்கள் தாவரங்களைப்போல் நீருக்குள் வளைந்து அசைந்துகொண்டேயிருக்கும். அட இதைச் சொல்ல மறந்துவிட்டேனா! நமது கதையின் ஹீரோக்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்கள். சொல்லப்போனால் வாழும் இடத்தைச் சொர்க்கமாக்குவதே அவர்கள்தான். அவ்வளவு அழகானவர்கள். அந்தச் சொர்க்கம் எங்கிருக்கிறது தெரியுமா! கடலுக்குள். அதுவும் ஆழம் குறைவான கடலோரக் கடலுக்குள். தக்கப் பாதுகாப்புகளோடு நீங்கள்கூட அங்கு சென்று அவர்களைச் சந்திக்கலாம்.

ஹீரோவான பவளப்பாறைகள் பார்க்க அழகாகத் தோற்றமளிப்பது மட்டுமில்லை. அவை தன்னைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்குப் புகலிடம் தருகின்றன. அங்கிருக்கும் மீன்களை வேட்டையாட ஏதேனும் பெரிய மீன்கள் வந்தால் அவை ஒளிந்துகொள்ள இடமளிக்கின்றன. கடல் ஆமைகளுக்கு உணவளிக்கின்றன. இப்படியாகத் தான் வாழும் இடத்தையே சொர்க்கபுரியாக மாற்றும் நமது ஹீரோவுக்குக் காதலியும் உண்டு. அவள்தான் கதையின் ஹீரோயினான கடற்பாசி. அவை பவளப்பாறைகளைப் பிரிவதில்லை. எப்போதும் காதலனை ஒட்டிக்கொண்டே வாழ்பவை. இந்தக் காதலர்கள் வாழும் பகுதியில் கடல்நீர் மிகத் தூய்மையாகவும் கண்ணாடி போலவும் இருக்கும். 60 மீட்டர் ஆழமிருந்தாலும் தரைவரை தெளிவாகத் தெரியும். அப்படியிருப்பதால் அங்கு சூரிய ஒளியும் தெளிவாகக் கிடைக்கும். அந்தச் சூரிய ஒளியில் நிலத் தாவரங்களைப் போலவே ஒளிச்சேர்க்கை செய்து உணவு சமைத்துத் தன் காதலனுக்குக் கொடுத்து அவனையும் வாழவைக்கிறது. இப்படியாகச் சிறப்பாக வாழ்ந்துகொண்டும் வாழவைத்தும் கொண்டுமிருக்கும் காதலர்களைப் பிரிக்கப் புதிய வில்லன்கள் தோன்றிவிட்டார்கள். அந்த வில்லன் யார் தெரியுமா?"

மாணவர்களில் ஆங்காங்கே சிலர் கை தூக்குகிறார்கள். ஒரு சிறுவன் பெரிய பெரிய மீன்களைச் சொல்லுகிறான், ஒருவன் திமிங்கிலத்தைச் சொல்லுகிறான். சிலர் சரியான பதிலைச் சொன்னார்கள். அவர்களுக்குக் கைதட்டல்களைப் பரிசளித்துவிட்டு, ``ஆமா, அந்த வில்லன் மனிதர்கள்தான். கடல் நமக்கு நிறைய உதவிகளைச் செய்யுது. ஆனா நாம என்ன செய்றோம்! நமக்கு உதவுறவங்களையே அழிச்சுட்டு இருக்கோம்" என்று அனைவருக்கும் பதிலைச் சொன்னார் பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளரும் விஞ்ஞானியுமான முனைவர். சத்யநாராயணன். அதற்குக் காரணமான அதீத மீன்பிடித்தல், உலக வெப்பமயமாதலால் வெப்பமடைந்து கொண்டிருக்கும் கடல், பவளங்களைச் சுரண்டுதல் என்று பல காரணங்களையும் சுட்டிக்காட்டினார். பவளப்பாறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மிக எளிமையாக விளக்கினார். இறுதியாகச் சில பவளப்பாறை ஒளிப்படங்களையும், காணொளிகளையும் மாணவர்களின் கண்களுக்கு விருந்தாக்கி கடல்மீதான அவர்களின் ஆர்வத்தை மேன்மேலும் மெருகேற்ற முயன்றார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவரிடம் மாணவர்கள் கேட்ட சந்தேகங்களும், கேள்விகளும் அந்த முயற்சிக்கான பலனைப் பறைசாற்றியது.

கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் சென்னை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடல் மற்றும் அதன் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை வளரும் குழந்தைகளுக்குத் தரவேண்டியது முக்கியம். அவரைப்போலவே கருத்தரங்கில் டால்பின்கள், திமிங்கிலங்கள் குறித்து குமரன் சதாசிவம் பேசினார். கடற்பறவைகள் பற்றிப் பேசிய சுப்பிரமணியமும் குழந்தைகளுக்குத் தகுந்த வகையில் மிக எளிமையாகப் பறவைகளின் படங்களோடு விளக்கினார். பெரிய கொண்டை ஆலா, கேஸ்பியன் ஆலா, பழுப்பு இறக்கை ஆலா, குழாய் மூக்கிகள் போன்ற பறவைகளையும் அவற்றின் தனிச்சிறப்புகளையும் ஒளிப்படங்களோடு விளக்கினார். கையேடுகளைக் கொண்டுவந்து பறவைகளின் பெயர்களையும் சிறப்புகளையும் குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவுக்குக் குழந்தைகளின் ஆர்வமிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. எந்தச் சலனமுமில்லாத குழந்தைப் பருவத்தில், அனைத்தையும் ஆர்வத்தோடும் தேடலோடும் பார்க்கும் அந்தப் பருவத்தில் இயல்பாகவே இயற்கை மீதான ஈர்ப்பும், அதைத் தெரிந்துகொள்ளும் ஆசையுமிருக்கும். அந்த ஆர்வத்தை வளர்த்தெடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்த மாணவர் கூட்டமைப்பு.

``ஐ.ஐ.டி போன்ற பெரிய பெரிய இடங்களில் கடல் சார்ந்த கருத்தரங்குகளை நடத்துவது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் அந்தக் கருத்தரங்குகளைக் குழந்தைகளிடம் நடத்துவது. அதுவும் மீனவக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் வாழ்வாதாரமான கடலைப் பற்றிப் போதிய விவரமில்லாமல் வளரக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியம். பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இந்த மாதிரியான செயற்பாடுகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்த மாதிரியான கருத்தரங்குகளின் முதன்மை நோக்கம். இன்று (4.10.2018) பவளப்பாறைகள், டால்பின்கள், கடற்பறவைகள் போன்றவை குறித்து அறிஞர்களுடன் குழந்தைகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. மதியம் அவர்களுக்குக் கற்றுத் தந்ததை ஓவியங்கள், உரையாடல்கள் போன்றவை மூலமாக அவர்களிடமிருந்து வெளிக்கொணரப் பயிற்சியளிக்கிறோம். அதன்மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் பத்து பேருக்குக் கற்றுத் தரவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அது குழந்தைகளின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். நாளை (5.10.2018) 81 வயதான அனுபவமிக்க மீனவரை வரவழைத்துக் கடலோடான அவரது அனுபவத்தைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளோம். கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் பாதுகாக்கப்படுவது இனி நம் கையிலிருப்பதைவிட வளரும் தலைமுறைகளின் கையில்தானிருக்கிறது" என்றார் கடல் ஆமைகள் பாதுகாப்புக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு