Published:Updated:

அறம் படிக்க விரும்பு!

அறம் படிக்க விரும்பு!

அறம் படிக்க விரும்பு!

அறம் படிக்க விரும்பு!

Published:Updated:

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு 'அறம்’!  இதன் வெளியீட்டு விழா வுக்கு, ஈரோட்டில் குவிந்துவிட்டார்கள் எழுத் தாளர்கள் நாஞ்சில் நாடன், பவா செல்லத்துரை, இயக்குநர் மிஷ்கின், தமிழகப் பசுமை இயக்கம் - டாக்டர் ஜீவானந்தம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் -வி.பி.குணசேகரன் உள்ளிட்ட பிரபலங்கள். 'அறம்’ நூலைப் பற்றிய இந்தப் பிரபலங்களின் பளிச் விமர்சனங்கள் இங்கே...

அறம் படிக்க விரும்பு!

நாஞ்சில் நாடன்:

##~##
'' 'மத்துரு தயிரு’ சிறுகதையில், தமிழ் மொழியின் மூன்று வட்டாரச் சொற்களைக் கவனமாகவும் சிறப்பாகவும் கையாண்டு இருக்கிறார் ஜெயமோகன். 'அறம்’ என்கிற சொல்லும் கவனமாகக் கையாளப்பட வேண்டியதுதான். திகார் சிறையில் ஆ.ராசா இருப்பதால், அவரை அறநெறி இல்லாதவர் என்றும்...

ப.சிதம்பரம் வெளியே இருப்பதால் அவரை அறநெறி உள்ளவர் என்றும் சொல்லிவிட முடியாது. தெளிவான சிந்தனையோடு இந்த நூலை எழுதி இருக்கிறார் ஜெயமோகன்!''

பவா செல்லத்துரை:

'' 'சோற்றுக் கணக்கு’ கதை படித்தேன். சோமாலியா நாட்டில் உணவு இல்லாமல் வயிறு ஒட்டிப்போய் ஒரு குழந்தை சாகக்கிடக்கிறது. அந்தக் குழந்தை இறந்தவுடன் அதைத் தூக்கிச்செல்ல பிணந்தின்னிக் கழுகு ஒன்று காத்துக்கிடப்பதைப்போல், ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம், உலகப் புகழ் பெற்றது. அந்தப் புகைப்படத்துக்குச் சற்றும் வீரியம் குறையாதது 'சோற்றுக்கணக்கு’!''

இயக்குநர் மிஷ்கின்:  ''என் பாட்டிக்கு அடுத்து எனக்கு அதிகம் கதை சொன்னவர் பவா செல்லத்துரை. அவர் இந்த நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முழுவதும் படித்து முடித்தபோது என் கண்கள் குளமாகிவிட்டன. ஒரு படைப்பாளியின் வலியை முழுமையாகப் பிரதிபலித்துள்ளது 'அறம்’!

ஓர் எழுத்தாளர், தன் மகள் திருமணத்துக்காகப் பணம் இல்லாமல் அல்லாடுகிறார். அப்போது ஒரு பதிப்பாளர், 100 கதைகள் எழுதிக்கொடுத்தால் பணம் தருவதாகச் சொல்கிறார். இவரும் கஷ்டப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு இடையே கதைகளை எழுதிக் கொடுக்கிறார். ஆனால், சொன்னபடி அவர்கள்

அறம் படிக்க விரும்பு!

பணம் தரவில்லை. வெறுத்துப்போன எழுத்தாளர், பதிப்பக உரிமையாளரின் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி நியாயம் கேட்கிறார். கணவனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போராடி, அந்த எழுத்தாளருக்குப் பணம் வாங்கிக்கொடுக்கிறார் அந்தப் பெண்மணி. இதுதான் 'அறம்’ சிறுகதை. காலத்துக்கும் மறக்க முடியாத கதை!''

டாக்டர் ஜீவானந்தம்:

'' 'யானை டாக்டர்’ சிறுகதை, என்னைப் பூரிப்படையவைத்தது. பணத் திமிர் எடுத்தவர்கள், விடுமுறை நாட்களில் காடுகளுக்குள் சென்று, மது அருந்திவிட்டு கண்

ணாடிப் புட்டிகளை அங்கேயே உடைத்து எறிந்துவிடுகின்றனர். அந்தக் கண்ணாடித் துண்டுகள் யானையின் கால்களைக் குத்திக் காயப்படுத்துகின்றன. வலியால் துடிக்கும் யானைகளுக்கு, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியம் பார்க்கிறார். காட்டு விலங்குகளுக்காகவே வாழ்ந்த அந்த உயர்ந்த மனிதரின் வாழ்க்கையை, சிறுகதையாகப் பதிவுசெய்து இருப்பது சிறப்பு. இதைப் படித்துச் சிலர் திருந்தினா லும், யானைகளின் இனமே நம்மை வாழ்த்தும்!''

இத்தனை பாராட்டு உரைகளுக்குப் பிறகு கண்களில் ஈரப் பளபளப்புடன் பேச வந்தார் ஜெயமோகன்.

''என் 25 வயதில் என்னுள்

குடியேறி, என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்த லட்சியவாத நோக்கம் ஒன்று உள்ளது. அது என் தேட லுக்கு அடிப்படை. ஒரு கட்டத்தில் அந்த லட்சியவாதம், இந்த நடு வயதில் யதார்த்த போதத்தின் முன்பாக மங்கிவிட்டதா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ஒரு வாசகி என்னிடம் அதைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசிய நாள் முதல் அது எனக்குள் வளர்ந்தது.

என் பண்பாட்டின் ஆழத்தில் இருந்து நம் பேராச்சியான கண்ணகி எழுந்துவந்து என் ஐயத்துக்குப் பதில் சொன்னாள். அந்தப் பதில்தான் 'அறம்’ கதை. அந்தக் கதையை எழுதிவிட்டு ஒரு டீ குடித்ததும் 'சோற்றுக் கணக்கு’ எழுதினேன். 40 நாட்களில் 400 பக்கங்கள் கதைகள் ஆகின. என் வாழ்க்கையின் உச்சகட்ட நாட்கள் அவை... இன்னும் நெடுந்தூரம் பயணிக்கும் ஆற்றல் தந்த நாட்களும்கூட!''

  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பகுதியில் உள்ள மாதஹள்ளி மலைக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை அறவே நிறுத்திவிட்டனர்!

- கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்