Published:Updated:

மெக்காவில் சைத்தானுக்குக் கல்லெறியும் நடைமுறை எப்படி வந்தது?!

மெக்காவில் சைத்தானுக்குக் கல்லெறியும் நடைமுறை எப்படி வந்தது?!
மெக்காவில் சைத்தானுக்குக் கல்லெறியும் நடைமுறை எப்படி வந்தது?!

லகின் ஆதி இறையில்லம், சவுதி அரேபியாவின் `மெக்கா' நகரில் உள்ள கஃபா என்று திருக்குர்ஆன் தெரிவிக்கிறது. அதுதான் இந்தப் பூமியின் ஆதிகாலப் பள்ளிவாசல். நிழற்படங்களில் கண்டிருப்பீர்கள். ஒரு கறுப்புக் கட்டடம். அதன் மீது அழகிய திரை ஒன்று தொங்கும். அதைச் சுற்றிப் பெருந்திரளான மக்கள் கூடி வலம் வருவார்கள். தொழுகையும் நடக்கும். 

இது வருடம் முழுதும் உண்டுதான் என்றாலும், `ஹஜ் யாத்திரை'யின் போது கூட்டம் பல லட்சங்களின் மடங்குகளாகப் பெருகிவிடும். ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் என்று பலரும் வருவார்கள். பொருளாதார வசதியும் உடல் சக்தியும் உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையானது இந்த ஹஜ் எனும் வழிபாடு. 

மக்காவுக்கு ஏன் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் போகிறார்கள் என்று முஸ்லிமல்லாத நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தால், `சைத்தானுக்குக் கல்லெறியப் போகிறார்கள்’ என்பதுண்டு. இது எப்படி அவர்களுக்குத் தெரியும்? `ஹஜ் யாத்திரையில் நேற்று சைத்தானுக்குக் கல்லெறியப்பட்டது’ என்று வருடா வருடம் செய்தித்தாள் சொல்கிறதே.  

சில வருடங்கள் முன்பு, இப்படிக் கல்லெறியத் திரண்ட கூட்டத்தின் நெரிசலில் சிக்கி பலர் இறந்த செய்தியும் கேள்விப்பட்டிருப்போம். 
உண்மையில் இந்த வழிபாடு சொல்லும் செய்தி என்ன, அங்கு உண்மையில் சைத்தானுக்குக் கல்லெறியப்படுகிறதா, நபிகள் பெருமகனார் இவ்விஷயத்தில் காட்டியுள்ள வழிமுறை என்ன? 

ஒரு வரலாற்றுக் குறிப்பிலிருந்து தொடங்க விரும்புகிறேன். கி.மு. 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹீம் (ஆப்ரகாம்) அவர்களுக்கு ஒரு கனவு வந்தது. அவரின் கையில் ஒரு கத்தி. அவரின் எதிரில் அவருடைய தவப்புதல்வர் இஸ்மாயில் (இஸ்மவேல்) கழுத்தை நீட்டியபடி `அறுங்கள் தந்தையே’ என்ற பணிவோடு படுத்திருந்தார். 

இந்த பயங்கரமான காட்சி எந்தத் தந்தையின் தூக்கத்தையும் கலைத்துப் போடும்தானே, இப்ராஹீமுக்கும் அதுவே நடந்தது. அவரோ அந்த மகனைச் சுமார் எண்பது வயதுக்குப் பின்பே பெற்றவர். அதுவரை அவருக்குக் குழந்தை இல்லை. தவமாய்த் தவம் கிடந்து, அதாவது, தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்குப் பின்பு பிறந்தார் இஸ்மாயீல். இந்த மகனைத் தாமே அறுப்பதா? 

மனம் கனமான அத்தருணத்தின் ரணத்தை அவரைத் தவிர யாரும் உணர முடியாது. ஆனால், எல்லாத் தந்தையைப் போன்றவர் அல்ல இப்ராஹீம். அவர் ஒரு நபி. 

ஏக இறைவன் அல்லாஹ்விடமிருந்து நேரடியாகச் செய்தியைப் பெறுபவர். அவனால் வழிகாட்டப்படுபவர். அவரின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் விழித்தே இருக்கும். என்றும் விழித்திருப்பவருக்கு ஒரு கனவு வந்தால், அது நமக்கு வருகின்ற கனவு போல் அல்ல. அது ஓர் இறைச்செய்தி; இறைக்கட்டளை. வெறும் ஒரு `தீய கனவு' என்று கண்களைக் கசக்கிவிட்டுத் திரும்பிப் படுக்க முடியாது. 
கட்டளைக்குப் பின்பு அடுத்த கட்டம் கடமையாற்றுவதே இறைத்தூதரின் இயல்பு. நெஞ்சைக் குத்தி ஈரக்குலையை அறுத்தெறிவதை விட நெருக்கடியான நிலைமைதான். என்றாலும், இப்ராஹீம் தம் இரட்சகனின் கட்டளைப்படி நடக்க முடிவெடுத்தார். இஸ்மாயிலிடம் போனார். செய்தி சொன்னார். 

`அன்புத் தந்தையே, அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்யுங்கள். நான் பொறுமை காப்பேன்.’ ஒப்பற்ற மகனும் ஒத்துழைக்க முன்வந்தார். ஒரே மகனையும் இறைவனிடம் ஒப்புக்கொடுக்க இப்ராஹீம் துணிந்தார். 

கூர்தீட்டிய கத்தியை ஏந்திக்கொண்டு அவர் நடந்துசென்ற அந்தத் தருணத்தில் ஓர் இடத்தில் சைத்தான் மனித வடிவில் வந்து `இப்ராஹீம், என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? நினைத்துப் பார், எவ்வளவு காலம் குழந்தை இன்றிக் கிடந்தாய்? ஒரே மகனையுமா கொல்லப் போகிறாய்?’ என்று சஞ்சலத்தை உண்டுபண்ணப் பேச்சுக்கொடுத்தான். இப்ராஹீம் உஷாரானார். 

`அடேய் சைத்தானே, ஓடுடா.. ஓடிவிடு...' என்று முழக்கமிட்டபடி கீழே குனிந்து 7 கற்களைப் பொறுக்கி அவன் மீது எறிந்தார். அவன் அரண்டு ஓடினான். 

இப்ராஹீம் மனத்திடத்துடன் நடந்தார். கொஞ்சநேரம்தான். மறுபடியும் இன்னோர் இடத்தில் சைத்தான் வந்தான். பழையபடி அவரிடம் குழப்பத்தை உண்டாக்கத் தூபம் போட்டான். இப்போதும் கல்லெறிந்தார் இப்ராஹீம் எனும் வைராக்கியமிக்க இறைத்தூதர். அடுத்து  தொடர்ந்து நடந்தார். கொஞ்ச நேரம்தான். திரும்பவும் சைத்தான் வந்தான். இந்தத் தடவையாவது இப்ராஹீம் தடுமாறுவார் என்று எதிர்பார்த்தான். ஆனால், எதிர்ப்பு பழையபடி கல்லால் வெளிப்பட்டது. 3 தடவையும் தோல்விதான். 

இந்த அர்ப்பணம்தான் இப்ராஹீமை இறைவனின் தோழர் (கலீலுல்லாஹ்) எனும் அதிஉயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்தியது. சோதனையில் வென்றார் அவர். எனவே, தம் மகனை அறுக்க அவர் நெருங்கிய அதே நேரத்தில் அடுத்த கட்டளை `அறுக்காதீர்' எனும் தடையாக வந்தது. அல்லாஹ் அவரின் தியாகத்தை மெச்சி, அதற்குப் பதில் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடும்படி கட்டளை இட்டான். 

அன்புப் பரிசாக இன்னொரு மகனும் பிறக்கப் போகிறார் என்ற நல்ல செய்தி சொன்னான். அப்படிப் பிறந்தவர்தான் இஸ்ஹாக் (ஈசாக்). 
விஷயத்துக்கு வருவோம். 3 இடங்களில் சைத்தானைத் துரத்திக் கல்லெறிந்தார் அல்லவா இப்ராஹீம். அந்த இடங்களில் அதேபோல் இந்த வரலாற்றை நினைவுகூர்ந்து கல்லெறிகின்ற நிகழ்வுதான் ஹஜ்ஜில் நடப்பது. மக்காவுக்குக் கிழக்கே `மினா' என்றொரு பகுதி. இங்குதான் அந்தச் சம்பவம் நடந்தது. இப்ராஹீம் போல அல்லாஹ்வின் கட்டளை எதுவாக இருந்தாலும், அதற்குக் கீழ்ப்படிகின்ற மனமும் வைராக்கியமும் அர்ப்பணமும் நமக்கும் வேண்டும் என்பதே இதன் செய்தி. 

ஹஜ்ஜின் கிரியைகளில் இந்தக் கல்லெறிதலை ஒரு முக்கியமானதாக நபிகள் பெருமகனார் வழிகாட்டியதற்கு அந்த 3 இடங்களில் சைத்தான் இருக்கிறான் என்பதல்ல. அங்கொன்றும் சைத்தான் சங்கிலியால் கட்டிப்போடப்படவும் இல்லை. 3 இடங்களிலும் மிகப் பெரிய தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைச் சுற்றி பிரமாண்டமான கிண்ணம் (Basin) போன்ற பரப்பளவு கொண்ட பகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த எல்லைப் பகுதிக்குள் கல் எறிய வேண்டும். அவ்வளவுதான். 

இந்தப் பகுதியைத்தான் அரபுவில் `ஜமராத்' என்பார்கள். இதை அடையாளம் காட்டத்தான் தூண்கள் உள்ளன. எறியப்படும் கற்கள் தூண்களில் படவேண்டும் என்பது நிபந்தனை இல்லை. அந்தப் பகுதிக்குள் அவை விழ வேண்டும். அது போதும். கல்லெறிதலுக்கு `ரமீ' என்பார்கள். `ரமில் ஜமராத்' என்றால் அந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் கல்லெறிதல் எனப் பொருள். 

முஸ்லிம்களில் பலருக்கே இது குறித்த கல்வி இல்லாமையால் சைத்தானுக்குக் கல்லெறிவதாக நினைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக, உணர்ச்சிவயப்படுகிறவர்கள் உண்டு. முண்டியடிப்பவர்கள் உண்டு. தவறு. இது ஒரு வழிபாடு. இதன் அடிப்படை நோக்கம், அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அவனிடம் பணிவதுதான். எனவேதான், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனும் முழக்கத்துடன் கல்லெறியப்படுகிறது. 

நபி இப்ராஹீம் போல் நாமும் அர்ப்பணம் நிறைந்த இறைநேசர்களாக மாற வேண்டும். சைத்தான் நம்மை நெருங்கிக் குழப்பத்தைப் போட்டால் அவனைத் துரத்தியடித்து இறைக் கட்டளைப்படி இயங்க வேண்டும். கல்லெறிகின்ற இடத்தில் அவன் இல்லை. ஆனால், எந்த இடத்திலும் அவன் நம்மிடம் வருவான். நம்மை வழிகெடுக்க முயல்வான். எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுதான் படிப்பினை. 
எறியப்படும் கற்களை மிகச் சிறிதாகத் தேர்வு செய்யும்படி நபிகள் கட்டளை இட்டுள்ளார்கள். சுண்டல் அளவுக்கு அல்லது பேரீச்சங் கொட்டை அளவுக்கே கற்கள் இருக்க வேண்டும். பெரிய கற்களை எடுத்து வரம்பு மீறக் கூடாது எனும் எச்சரிக்கை அவர்கள் வாழும்

காலத்திலே இதே ஹஜ்ஜின் சமயத்தில் அவர்கள் செய்ததுதான்.

 `வரம்புமீறி நடப்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகங்கள் தங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிய காரணத்தால்தான் அழிந்துபோனார்கள்'. (ஆதார நூல்: இப்னுமாஜா 2455) 

தம் தோழர் இப்னு அப்பாஸ் அவர்களிடம் தமக்காகக் கற்களைப் பொறுக்கித் தருமாறு கூறிய சமயத்தில்தான் இதை அவர்கள் கூறினார்கள். உண்மையில், எல்லாக் கட்டங்களிலும் வரம்புமீறாமல் இஸ்லாமை நபிவழி அடிப்படையில் சரியாகப் புரிந்து பின்பற்ற வேண்டும் என்பதும் இந்த வழிபாட்டிலிருந்து நாம் பெறுகின்ற படிப்பினை.