Published:Updated:

`திரும்பவும் இன்டர்நெட்டை மாத்திக் காட்றேன்!' - இணையத்தைத் திருத்தும் முயற்சியில் டிம் பெர்னர்ஸ் லீ

தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்குத் தீங்கு செய்வதைக் கண்டு வருந்திய விஞ்ஞானிகள் பலருக்கும், அந்தத் தவற்றைச் சரிசெய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால், தற்போது டிம்முக்கு அது கிடைத்திருக்கிறது.

`திரும்பவும் இன்டர்நெட்டை மாத்திக் காட்றேன்!' - இணையத்தைத் திருத்தும் முயற்சியில் டிம் பெர்னர்ஸ் லீ
`திரும்பவும் இன்டர்நெட்டை மாத்திக் காட்றேன்!' - இணையத்தைத் திருத்தும் முயற்சியில் டிம் பெர்னர்ஸ் லீ

துவரைக்கும் அவர் வெறும் டிம் பெர்னர்ஸ் லீதான். 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவரோ அல்லது மனிதக்குலத்தின் மகத்தான ஒரு முன்னேற்றத்துக்கு வித்திட்ட மனிதரெல்லாம் இல்லை. ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஓர் ஆலோசகர் மட்டுமே. அவரின் பணி அணுசக்தி விஞ்ஞானிகள் தங்கள் தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவது மட்டுமே. இந்தப் பணியை அமெரிக்கா ஐரோப்பியர்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டிருந்தது. அதேபோல ஒன்றை விஞ்ஞானிகளுக்காக உருவாக்குவதுதான் அப்போது டிம்மின் வேலை. ஒருநாள் அதைச் செய்துமுடித்துவிட்டார். இப்போது, ஒருவரின் கணினியிலிருந்து இன்னொருவரின் கணினிக்குத் தகவல்களை அனுப்ப விஞ்ஞானிகளால் முடிந்தது. இதற்குப் பின்னர்தான் டிம்முக்கு இன்னொரு யோசனை வந்தது. இந்த நெட்வொர்க் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் தகவல்களை அனுப்பமுடியும். இதை ஏன் விஞ்ஞானிகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து மக்களும் பயன்படுத்தலாம்தானே, உடனே முடிவெடுக்கிறார். இந்த நெட்வொர்க்கை உலகம் முழுவதும் பயன்படுத்துவதற்கான கோடிங்கை ஓப்பன் சோர்ஸாக விடுகிறார். யார் வேண்டுமேனாலும் இதைப் பயன்படுத்தலாம்; எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம்; இப்படி டிம் முதலில் விட்ட World Wide Web-தான் இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இன்டர்நெட்டின் அடிப்படை. இதனை எல்லா மக்களும் பயன்படுத்தலாம் என அவர் எடுத்த முடிவுதான் அவரை உலகம் முழுவதும் கொண்டாடக் காரணம். 

அதன்பின் இணையத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. இணையம் சார்ந்து எத்தனையோ வசதிகள், சேவைகள் வந்துவிட்டன. இந்நேரம் டிம் என்ன செய்திருக்க வேண்டும். இதுவரைக்கும் சம்பாதித்த பணத்தை எதிலேனும் முதலீடு செய்துவிட்டு எங்கேனும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கவேண்டும்; அல்லது சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை மட்டும் செவ்வனே நடத்திக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், மீண்டும் இன்டர்நெட் முழுவதையும் மாற்றப்போகிறேன் என வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார் டிம். 1980-களில் எப்படி முதன்முதலில் இணையத்தை உருவாக்கியபோது ஓடிஓடி உழைத்தாரோ, அதேபோல இணையத்தை மீண்டும் பெருநிறுவனங்களிடமிருந்து பிரித்து மக்களிடமே கொண்டுசெல்வேன் என நாடு நாடாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இன்றைக்கு இன்டர்நெட்டை ஆண்டுகொண்டிருக்கும் கூகுள், ஃபேஸ்புக், அமேசான் எல்லாமே இணையத்துக்கு எதிரிகள் என்கிறார். யாருக்காக இந்த யுத்தம்?

டிம் கண்ட கனவு இதுவல்ல!

வியட்நாம் போரில் 30 லட்சம் மக்கள் பலியாக ஒரு தாவரவியலாளர் காரணம் என்றால் நம்பமுடிகிறதா. அமெரிக்க - வியட்நாம் போரில் தாவரவியலாளருக்கு என்ன வேலை, ஆர்தர் கால்ஸ்டன்தான் அவர். சோயா செடிகளை விரைவில் பூக்கச்செய்வதற்காக TIBA எண்ணும் வேதியியல் மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் கால்ஸ்டன். இதைச் செடிகளின் மேல் சிறிதளவு தூவுவதன் மூலம் விரைவில் செடிகளைப் பூக்கச்செய்யலாம்; அதுவே அதிகமாகத் தூவிவிட்டால் செடிகள் விரைவில் முதிர்ந்து உதிர்ந்துவிடும். இதில் இரண்டாவது அம்சத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டது அமெரிக்க ராணுவம். வியட்நாம் போரின்போது அந்த தேசத்தின் வயல்களில் இந்த வேதிப்பொருளை விமானத்திலிருந்து தூவியது. அந்நாட்டு வயல்கள் நாசமாகின. பயிர்களும் வீணாய்ப்போயின. ஆனால், விளைவு இத்தோடு நிற்கவில்லை. அந்த மருந்து தூவப்பட்ட வயல்களில் பணிபுரிந்த மக்கள், அதைச் சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் கடுமையான உடல்பாதிப்புகளுக்கு உள்ளாக்கினர். பலர் உயிரிழந்தனர். வியட்நாம் சொன்ன கணக்குப்படி மட்டும் 30 லட்சம் மக்கள் மாண்டுள்ளனர். இப்போது இந்த 30 லட்சம் பேர் மரணத்துக்கு யார் காரணம், இந்த வேதிப்பொருளை உருவாக்கிய கால்ஸ்டனா இல்லை, அதை எடுத்துப்போய் வியட்நாமில் தூவிய அமெரிக்க ராணுவமா, இந்தக் கேள்வி உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது கால்ஸ்டன் வெறுத்துப்போய் ஒரு விஷயம் சொன்னார்.

``எந்தக் கண்டுபிடிப்புமே அதன் விஞ்ஞானிகள் சொல்வதுபோல நன்மை மட்டுமே செய்யாது; அது சமநிலையானது; தீயவர்கள் கையில் கிடைத்தால் தீமையும் நடக்கும். இதற்காக அறிவியலை நாம் குறைசொல்ல முடியாது"

தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மனிதக்குலத்துக்குத் தீங்கு செய்வதைக் கண்டு வருந்திய விஞ்ஞானிகளில் கால்ஸ்டனும் ஒருவர். அப்படி வருந்திய விஞ்ஞானிகள் பலருக்கும் அந்தத் தவற்றைச் சரிசெய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால், தற்போது டிம்முக்கு அது கிடைத்திருக்கிறது

டிம் எதற்காக வருந்தவேண்டும்... இணையத்தால் தற்போது என்ன பிரச்னை என்கிறீர்களா? 90-களில் முதன்முதலில் இணையம் வந்தபோது அதுகுறித்து டிம் கண்டகனவு இது உலக மக்களின் நன்மைக்கு மட்டுமே பயன்படும் என நினைத்தார். ஆனால், அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எண்ணத்தைச் சிதைத்தன. முதலில் அரசாங்கங்கள் மக்களை உளவு பார்ப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தின. பின்னர் பெருநிறுவனங்கள் தங்களின் வணிகலாபத்துக்காக வாடிக்கையாளர்களின் பிரைவசியை அடகுவைத்தன. பின்னர் அந்த நிறுவனங்கள் மூலமாகவே இணையத்தை வசப்படுத்துவது அனைவருக்கும் கைவந்த கலையானது. இன்று போலிச் செய்திகளைப் பரப்புவது, மக்களை உளவுபார்ப்பது, மக்களின் தரவைச் சேகரிப்பது என எல்லாத்துக்குமே அச்சாரமாக இருக்கிறது இணையம். இதற்கெல்லாம் காரணம், இணையத்தின் செயல்பாடுகள் முழுவதையும் சில நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகப்படியான மக்களின் டேட்டாவை இவர்கள் கையில் வைத்திருப்பதால் இவர்களின் கையே ஓங்கி இருக்கிறது. எல்லோரும் இணையத்தில் சமம் என்ற கோட்பாட்டையே இது சிதைக்கிறது. இன்று உலகில் 400 கோடி பேர் இணையத்தில் இணைந்திருக்கின்றனர். இது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குச் சமம். மீதிப்பேரும் வருங்காலத்தில் இணையவிருக்கின்றனர். இன்னும் இந்த இணையத்தை நாம் நிறுவனங்களின் கையிலேயே விட்டுவைப்பது சரியா என்கிறார் டிம். இதற்காக அவர் முன்வைக்கும் மாற்று Decentralized Web. அதாவது, நிறுவனங்கள் சார்ந்து இல்லாமல், முழுக்க முழுக்க மக்களை மையமாக வைத்த ஒரு வலைக்கட்டமைப்பு.

இந்த Decentralized Web குறித்த விவாதங்கள் நேற்றோ இன்றோ எழுந்ததல்ல; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குச் சிறிய அளவில் செயல்வடிவம் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். உதாரணம், Decentralized யூடியூப்பான peertube. ஆனால், இணையம் முழுமைக்கும் யாரும் செயல்படுத்தியதில்லை. அதைத் தற்போது மாற்றியிருக்கிறார் டிம். முழு Decentralized Web- ஐ உருவாக்குவதற்காக Solid எனும் பிளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார். தற்போது இயக்கத்தில் இருக்கும் Web மூலமாகவேதான் இதுவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முழுக்க முழுக்க Decentralized ஆக இயங்கும். இந்த solid என்பது ஒரு பிளாட்ஃபார்ம். இதை அடிப்படையாக வைத்து ஆப்ஸ், இணையதளம், வாய்ஸ் அசிஸ்டன்ட் என எதைவேண்டுமானாலும் உருவாக்கலாம். தற்போது கூகுள், அமேசானின் கிளவுடில் நம் தகவல்கள் பதிவாவது போல, இனி Solid-ன் சர்வர்களில் நம் டேட்டா பதிவாகும். ஆனால், அவற்றை ஆப்களில் பயன்படுத்தும்போது எந்த டேட்டாவை எந்த ஆப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த இணையதளங்கள் எல்லாம் நம் டேட்டாவைப் பயன்படுத்தலாம் போன்ற அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்த முடியும். 

நம்முடைய Solid கிளவுடில் இருக்கும் எல்லா டேட்டாவும் நம்மால் முழுதாகக் கட்டுப்படுத்தமுடியும். எனவே, எந்த நிறுவனங்களுக்கும் நாம் நம்முடைய புதிதாகத் தரவேண்டியதில்லை. இந்த கிளவுடிலிருந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி மட்டும் தந்தால் போதும். நம் டேட்டா எதுவும் நிறுவனங்களிடம் இருக்காது; அனைத்தும் நம் கிளவுடில் மட்டும்தான். இப்போது எப்படி நிறுவனங்களின் கிளவுடில் இருப்பதை, ஆப்ஸ் மூலம் நாம் பயன்படுத்துகிறோமோ அதேபோல நம் கிளவுடில் இருக்கும் டேட்டாவை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான அனுமதியை மட்டும் நாம் தரவேண்டும்.

உதாரணமாக ஃபேஸ்புக் இந்த Decentralized Web-ல் இயங்குகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கவேண்டுமேன்றால் ஃபேஸ்புக் உங்களிடம் படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச்சொல்லாது. மாறாக, ஏற்கெனவே உங்களின் தகவல்கள் அடங்கியிருக்கும் கிளவுடிற்கு அனுமதி கேட்கும். இதேபோல இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அமேசான் அக்கவுன்ட் என எது தொடங்கினாலும் இந்த கிளவுடோடு அவற்றை இணைத்துவிட்டால் போதும். Decentralized Web இப்படித்தான் இயங்கும். இதில் நாம்தான் நம் டேட்டாவுக்கு உரிமையாளர்; தற்போது கூகுள் முதல் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை அனைத்துமே Centralized Web-ல்தான் இயங்குகின்றன. இவையனைத்தும் Decentralized Web-ற்கு எப்படி மாறும், இதற்காகத்தான் உலகம் முழுவதும் பேசிவருகிறார் டிம். 

புதிய டெவலப்பர்கள், புதிய நிறுவனங்கள், புதிய வசதிகள் என அனைத்துமே புதிதாக இந்த Solid-க்கு தேவை. இதில் முதல் அடியாக Inrupt என்னும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் டிம். Solid-க்குத் தேவையான உதவிகளை அளிப்பதுதான் இந்நிறுவனத்தின் பணி. இதேபோல இன்னும் எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக வேண்டும்; இணையம் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பவேண்டும் என்பதுதான் இவரின் கனவு. ஆனால், 1991-ல் டிம் செய்ததுபோல, மிக எளிதாக இந்தப் புதிய இணையத்தை உருவாக்கிட முடியாது. காரணம், அப்போது இவர் உருவாக்கிய இணையத்தைத் தடுக்க யாருமே இல்லை. ஆனால், இன்று இதை எதிர்க்கும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களின் வருமானத்தில் நேரடியாகவே கைவைக்கும் இந்த முடிவை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? இத்தனை தடைகளையும் தாண்டிதான் டிம்மின் கனவு நனவாக வேண்டும்.