Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

மாசி மாசக் குளிருல பொலபொலன்னு நனையுது பூமி; இன்னும் விடியல. தோட்டத்துக் கிணத்துமேட்டுல கம்பளி பொத்தி ஒக்காந்திருக்காரு கருத்தமாயி. விளஞ்ச கருது வளஞ்சு நிக்குது. சோளத்தட்டைக்குக் காவலுக்கு வந்தவரு, காக்கா குருவி கத்தறதுக்கு முன்ன எந்திரிச்சுட்டாரு.

 கூலிக்காரன் முதலாளிக்குக் கடன் கழிக்கிற மாதிரி, கொஞ்சம் கொஞ்சமாக் கரையுது இருட்டு. வெளுக்கப் பாக்குது கெழக்கு. கலியாணம் ஆகி வந்த ராசகுமாரிய லேசுலேசா முக்காடு விலக்கிப் பாக்கிற ராசா மாதிரி, பனிமூட்டத்தை வெலக்கி பூமிய எட்டிஎட்டிப் பாக்குது வெயிலு.

கம்பளி பொத்துனா ஏன் கதகதன்னு இருக்கு?

கம்பளிக்குள்ள சூடு இருக்குமோ? இல்லையே!

கம்பளிய வெளிய தொட்டுப் பாத்தாரு;

அது ஐஸ்கட்டியாத்தான் இருக்கு; புரிஞ்சுபோச்சு.

வேற ஒண்ணும் பண்ணல கம்பளி. திரேகத்திலயிருக்கிற சூட்டை வெளிய விடாம வச்சிருக்கு; வெளிய அடிக்கிற பனிய உள்ளவிடாம வச்சிருக்கு.

யாத்தே... கம்பளி கதை சொல்லுதே!

மூன்றாம் உலகப் போர்

''ஏலே மனுசப்பயலே... நாஞ் செய்யற வேலையத்தாண்டா நீயும் செய்யணும். கூட்டுக்குள்ள இருக்கிற உசுரை வெளிய விட்டுராத; வெளிய இருக்கிற எமனை உள்ள விட்டுராத. கையில இருக்கிற சொத்தை வெளிய விட்டுராத; கடன்காரன உள்ள விட்டுராத. பொண்டாட்டிய வெளிய விட்டுராத; வப்பாட்டிய உள்ள விட்டுராத.''

கம்பளிகிட்டப் பாடம் படிக்கணும் போலயிருக்கே பல ஆளுக.

சொள்ளையனும் ரோசாமணியும் சோளத்தட்டைக்குள்ள புல்லு அறுக்கிறாக பசுமாட்டுக்கு.

சோளத்துக்குள்ள ஊடுவெள்ளாமையாப் போட்ட மொச்சை, இருங்கச் சோளத் தட்டையை இறுக்கிப் புடிச்சுக் கொடி கொடியாப் படந்திருக்கு.

முத்துமுத்தாச் சொட்டுது பனித்துளிக மொச்சை எலையில.

'மொச்சைக்குத் தடுமன்கிடுமன் புடிச் சிருச்சா... மூக்கு வழி ஒழுகுது..?’

அவராச் சொல்லி அவராச் சிரிச்சுக் கிட்டாரு கருத்தமாயி.

உத்துப் பாத்தாரு.

வெள்ளை மொச ஒண்ணு மேயுது வரப்புல. யாத்தே என்ன அழகுடா சாமி இது! வெளிச்சம் உருண்டையாகி உள் காட்டுல வந்து விளையாடுதா? வந்து சும்மா சடுகுடு ஆடுது ஒரு துண்டு மேகம் என் தோட்டத்துல. நறுச் நறுச்சுன்னு கடிக்குது அருகம்புல்ல. வரப்புப் பனித்துளிய நக்கி நக்கி நனைக்குது நாக்க. பச்சை மொச்சை இச்சை மொசலுக்கு. சோளத்தட்டையில கால் போட்டு, விளைஞ்ச மொச்சையாப் பாத்து எக்கி எக்கிக் கடிக்குது. சிலீர் சலீர்னு தாவுது செல்ல விளையாட்டுக் காமிச்சு.

''இஸ்டத்துக்கு மேஞ்சுக்க. ஒன்னிய 'ச்சீ போ’ன்னு வெரட்டுனா, எஞ்செருப்ப எடுத்துக்க'' - கண்காட்சியா இருக்கு மொச மேயிறது கருத்தமாயிக்கு.

பக்கத்து வீட்டுக்காரன் - பக்கத்துத் தோட்டக்காரன் உளியன். அவன் ஒரு கெட்ட சாதி நாயி வச்சிருக்கான். அது எங்கிட்டுருந்து தான் மோப்பம் புடிச்சதோ இந்த மொசக்குட்டிய. நாலு கால் போட்டுப் புயல் வார மாதிரி வருது; இந்தா வந்துருச்சு... தப்பிக்க வழியில்ல மொசலுக்கு. தவ்விப் புடிக்கப்போகுது குரவளைய. அங்கிட்டும் இங்கிட்டும் பாத்தாரு கருத்தமாயி. காவக்கம்பு கெடந்துச்சு கம்பளிக்குக் கீழ. ஒக்காந்துக்கிட்டே தலைக்கு மேல ரெண்டு சுத்துச் சுத்தி வீசுனாரு கம்பை. 'விர்ர்ரு விர்ர்ரு’ன்னு காத்தைக் கிழிச்சுப் போகுது கம்பு. கம்பு வர்ற சத்தம் கேட்டு ஒதுங்கிருச்சு நாயி. கம்புல அடிபட்டுச் செத்தேபோச்சு மொச.

சொள்ளையனும் ரோசாமணியும் சத்தம் கேட்டு ஓடியாந்து கல்லெடுத்து எறியவும், 'நான் இல்ல... நான் இல்ல’ன்னு ஓடியேபோச்சு நாயி.

கம்பளிய ஒதறிப் போட்டுக்கிட்டு ஓடி வந்தாரு கருத்தமாயி. பின்னங்காலப் புடிச்சு செத்த உசுரைத் தூக்கிப் பாத்தாரு.

''ச்சே... சந்தோஷம் செத்துப் போச்சேப்பா...''

ஆள் செத்த மாதிரி கவலைப்பட்டுட்டாரு.

''இப்படித்தானப்பா! ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிப்போகுது... நல்லதுதான் செய்றோம்; கெட்டதுல போயி முடிஞ்சிருது.''

என்னமோ ஏதோன்னு ஓடி வந்தாக சொள்ளையனும் ரோசாமணியும்.

''யம்மா ரோசாமணி... இந்தா! இந்த மொசலக் குழம்பு வச்சுக் கொடு குழந்தைகளுக்கு'' புருசனும் பொண்டாட்டியும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டாக.

''பிள்ளை செத்ததுலேயிருந்து கவுச்சி பொழங்கறதில்லேனு சத்தியம் பண்ணிட் டோம் நாங்க. வேணாம் மாமா... வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க.''

''சரிதான்... எறிஞ்ச கம்பு எந்தலையிலயே விழுந்திருச்சா? இன்னைக்கு எங்க வீட்டுல மொசக்கறின்னு எழுதியிருக்கான் ஈசன்... மாத்த முடியுமா?''

துண்டை ஒதறித் தோள்ல போட்டு நடக்கிற மாதிரி, செத்த மொசலத் தோள்ல போட்டு நாலு பேரு பாக்க நடந்துட்டாரு வீட்டுக்கு.

வீட்டுக்கு வந்து பாத்தா, சிட்டம்மா கட்டில்ல கெடக்கா காய்ச்சலா. நெத்தியில பத்துப்போட்டுப் போர்வையப் பொத்தி, அதுக்கு மேல சீல ஒண்ணையும் சேத்துப் பொத்தி அனத்திக்கிட்டே கெடக்கா.

''போச்சுடா... ஏ மொசலே! பொம்பள கையில குழம்புவைக்க யோகம் இல்ல ஒனக்கு. எங் கையிலதான் குழம்பாகணும்னு எழுதியிருக்கு ஒந் தலையில. வச்சுப் பாத்துடறேன்.

மூன்றாம் உலகப் போர்

நாயறியாத எலும்பா?

நானறியாத குழம்பா?''

மாடு கட்டுற கொட்டத்து விட்டத்துல ரெண்டு சரடு கட்டுனாரு.

பின்னங்காலுகள்ல கத்தியில ரெண்டு குத்துக் குத்தி நரம்பெடுத்து அதுல சரடு கோர்த்துக் கட்டித் தொங்கவிட்டாரு மொசல.

'இனி தலைகீழாத் தவங்கெடந்தாலும் மாண்ட உசுரு மீண்டு வந்துருமா?’ ஆரம்பிச்சிருச்சு மொசலோட கருத்தமாயி பேச்சுவார்த்தை.

பின்னங்காலுகள்ல கத்தி செலுத்தி அடிவகுறு வரைக்கும் ஒரு கீறுக் கீறுனாரு. இப்பக் கத்தியக் கீழ போட்டுட்டு ரெண்டு கையிலயும் உரிச்சாரு தோல. கனிஞ்ச மலப் பழத்துல கழன்டுவர்ற மாதிரி வருதய்யா தோலு வழவழன்னு. பித்தான் இல்லாத சட்டையப் பெரிய மனுசங்க தலைகீழாக் கழத்துவாங்க பாருங்க... அப்படி உருவி வாராரு தோல.

''ஒன்னிய மாதிரி மனுசப்பயலும் சட்டை போட்டுக்கிட்டே பொறந்துட்டான்னு வச்சுக்க... பாதிச் சண்டை தீந்துபோகும் ஊரு நாட்டுல.''

இது ஒண்ணுக்கும் ஆகாதுன்னு உருவுன தோலை எறிஞ்சாரு ஒரு ஓரமா.

வெள்ளவெளேர்ங்கற கறியில செந்தூர நிறத்துல செக்கச் செவேர்னு திட்டுத் திட்டாத் தேங்கி ஒழுகுது ரத்தம்.

''இரு மொசக்குட்டி... இந்தா வந்துர்றேன்.''

உள்ள போனவரு பழைய வேட்டியில ஒரு ஓரம் கிழிச்சு ஓடியாந்தாரு - கையில ஒரு தேங்காயெண்ணெய்க் கிண்ணம் வேற. வெள்ளைத் துணியில ஒத்தி ஒத்தி எடுத்தாரு ஒழுகுன ரத்தத்த. சிவப்பாகிப் போன வெள்ளைத் துணிய முக்குனாரு தேங்காஎண்ணெய்க் கிண்ணத்துல. மொச ரத்தத்துல ஊறவச்சு எண்ணெயத் தேச்சாச் செம்பட்டை முடி கறுப்பாயிருமாம்; கறுத்த முடி நரைக்காதாம். நிசமோ பொய்யோ... அப்பன் பாட்டன் காலத்துலயிருந்து நம்பிக்கைதான்.

''மனுசப்பய சாகிற வரைக்கும் யாராச் சும் ஒருத்தன் தலையில ஏறி உக்காந்திருக் கான். நீ செத்த பிறகில்ல எங்க தலையில ஏறி ஒக்கார்ற. மனுசனா மொசலான்னு பாத்தா நீதான் பெரியாளு மொசக் குட்டி.''

ஆசன வாய்க்குப் பக்கத்துல அடி வகுத்துல இருந்து பொறப்பட்டு, நெஞ்சு வழியா ஒரு நெடும் பயணம் போயிக் கழுத்துல நிக்குது கத்தி. ரெண்டு கையும் அட்டத்துலவச்சு ஒரு பிதுக்குப் பிதுக்கவும் கொழுக்குன்னு துண்டா வந்து விழுந்து தொங்குது கொடலு. குடல சூரிக்கத்தியில அறுத்துவச்சுட்டு, வெட்டுக் கத்திய வச்சு வாழைத்தார அறுக்கிற மாதிரி வாங்கிட் டாரு தலய. இப்பக் கைவைத்தியம் ஆரம் பிக்கிறாரு கழுத்து இல்லாத மொசக் குட்டிக்கு.

மஞ்சப்பொடி - உப்பு - நல்லெண்ணெய் மூணையும் வச்சுக் கசகசன்னு தடவுனாரு மொசக்கறி மேல. மினுமினு மினுன்னு மின்னுது உரிச்ச கறி.

''ஏழையாப் பெறந்தவனும் நீயும் ஒண்ணுதான் மொசக்குட்டி. ரெண்டு பேருக்கும் செத்த பிறகுதான சிங்காரம்.''

உப்புத் தடவுன கறியக் கொஞ்ச நேரம் ஒணறவிட்டாகணும். தண்ணி தண்ணியா வடிஞ்சு தன் பதத்துக்கு வரும் கழுதை. இப்ப ஊஞ்சலாடிக்கிட்டே ஒழுகுது தண்ணி.

''மொசக் கறியில முக்காவாசி தண்ணி தானா? தண்ணியக் கழிச்சுட்டா... லோகமு மில்ல; தேகமுமில்ல போலிருக்கே.''

முணுமுணுத்துக்கிட்டே நிமிந்து பாத்தவரு கண்ணுல பட்டீர்னு படுது பழுப்புச் செவப்புல ஈரல். தண்ணி வடியிற வரைக்கும் வாய் சும்மா இருக்குமா? அய்யரு சொல்ற வரைக்கும் அமாவாசை நிக்குமாக்கும்? ஈரல மட்டும் துண்டா அறுத்தெடுத்து அது மேல உச்சுனாப்புல உப்புத் தடவி, கொம்பு சீவுன குச்சியில குத்தி வாட்டிட்டாரு வைக்கோல் நெருப்புல. அது உருகி ஒரு சொட்டு நெருப்புல விழுந்ததும் உள்ளங்கையில்வச்சு ஊதி ஊதித் தின்னுட்டாரு.

''மொசக்குட்டி தின்ட மொச்சக்காயும் சேந்து மணக்குதப்பா.''

வடியட்டும் தண்ணி; அதுக்குள்ள அம்மி வேலை பாத்துரலாம்.

மஞ்சத்துண்டு - மொளகா - மிளகு - சீரகம் - வெங்காயம் ஐம்பூதங்களையும் அம்மியில வச்சு அரைச்சாரு நச்சு நச்சுன்னு. தேங்காயத் துண்டா அரைச்சு, அதைத் தனியா எடுத்துவச்சுக்கிட்டாரு.

இப்ப... தண்ணி வடிஞ்ச மொசலை அவுத்து வெட்டுக்கத்தியில வெட்டிச் சிறு கறியாச் சேக்குறாரு.

''ஏ மொச... தேகம் பஞ்சு மாதிரி வச்சிருக்கிற; எலும்பு இரும்பு மாதிரி வச்சிருக்கிற. இந்த மனுசப் பய உடம்பை லேசா வச்சுக்கிட்டு மனசத்தான் கெட்டியா வச்சுக்கிட்டிருக்கான்.''

அரைச்சுவச்ச பண்டங்களக் கறியில கலந்து, குழந்தைப் பிள்ளைக்கு வகுத்த அமுக்கிவிடற மாதிரி வலிக்காமப் பிசையிறாரு.

மஞ்சட்டி எடுத்தாரு. அளவாத் தண்ணி வச்சு ஆசை ஆசையாக் கறி அள்ளிப் போட்டு அடுப்புக் கூட்டிட்டாரு. ரெண்டாங்கொதி கொதிக்க, வீட்டையே தூக்கி வெளிய போயி வைக்குது மொசக்கறி வாசன.

வாசன ஏறி மூக்குல முட்டவும் பெரண்டு படுத்த சிட்டம்மா ''ஏ மொச..! உப்புப் பாக்காம எறக்கிவச்சா ஓடிப் போயிருவேன்னு சொல்லு''ன்னு சொல்லிட்டு, அங்கிட்டுத் திரும் பிப் படுத்துக்கிட்டா சீலையையும் போர்வை யையும் இன்னொரு இழு இழுத்து.

கரண்டியில மோந்து ஒரு சொட்டு உள்ளங்கையிலவிட்டு உப்புப் பாத்து இறக்கிவச்சாரு; சும்மா செஞ்சாந்து நெறத்துல கூடி வந்துருக்கு குழம்பு.

திடீர்னு ஒரு ஞாபகம் நெத்திப் பொட்டுல வெட்டுது.

கறி திங்க ஆளில்லையே வீட்டுல. சிட்டம்மா பாவம் சீக்காக்கெடக்கா. படிக்கிற எடத்துல நாளைக்கு வெவசாயத்தப் பத்திப் பேச ஒலகமே கூடுதுன்னு ஓடிப் போயிட்டான் சின்னப்பாண்டி. இந்த மொசக்கறிய நானாத் திங்கணுமாக்கும்? இனிமே இதத் தின்னு என் திரேகத்துல கறிவச்சு மீனாச்சியம்மன் கோயில் மொட்டக் கோபுரத்தப் போயி முட்டுக் கொடுத்துத் தாங்கப்போறனாக்கும்? பேரன் பேத்திக ரெண்டும் திங்கட்டும் பாவம்.

கறிச் சட்டிக்குள்ள அகப்பையவிட்டு ஒரு கலயத்துல மூணு கரண்டி மோந்து போட்டாரு. சீக்குக்காரி சிட்டம்மாவுக்கு இருக்கட்டும்னு சொல்லிக் கறிக் கலயத்தத் தூக்கி ஒரு உறியில வச்சாரு.

கறிச் சட்டியக் கையில தூக்கி முத்துமணி கட்டுன புது வீட்டுக்குள்ள முதல்முறையா எட்டுவைக்கிறாரு கருத்தமாயி.

''யம்மா லச்சுமி... நுழையாத வீட்டுக்கு அழையாத விருந்தாளியா வந்திருக்கான் மாமன்னு உள்ள போயி ஒளியாத தாயி. இந்தா இதுல மொசக்கறிக் குழம்பு வச்சி ருக்கேன். தாத்தன் வந்து கொடுத்தேன்னு திங்கச் சொல்லு என் தங்கங்கள.''

உள்ளயிருந்து ஒரு சொல்லும் வல்ல.

திண்ணையில மஞ்சட்டிய வச்சிட்டுத் திரும்பிப் பாக்காம நடந்துட்டாரு.

''பளிங்கு மாதிரிதான் கட்டியிருக்கான் பாவிப்பய வீட்டை.''

மத்தியானம் வரைக்கும் ஒரு சத்தமும் இல்ல; அதுக்குப் பெறகு காருகளும் வண்டிகளும் சர்ரு புர்ருன்னு வர்றதும் போறதுமாயிருக்கு. கோட்டு சூட்டுப் போட்டவனுக - நெஞ்சுல பட்டை கட்டுன பயலுக நடமாட்டம் தெரியுது. என்னமோ வாய் வெடிச்ச வார்த்தை பேசறதும் கேக்குது. கார் கதவ அடிக்கிற சத்தம், வந்தவன் கோபத்துல போறான்னு சுள்ளுன்னு சொல்லுது. பொதுவா சொல்லு பொய் சொல்லும்; சத்தம் பொய் சொல்றதில்ல.

கோவம் வந்தா ஆளுகள அடிக்கத் தெம்பில்லாத பயலுக, கைச்செலவு போட்டு காரு வாங்கிக் கதவத்தான அடிக்கிறாங்க?

என்னமோ நடக்குது கூத்து.

பாப்போம்.

''யோவ் பெரிய மனுசா! வெளிய வாய்யா. ஒண்ணு இந்த ஊருல நீ இருக்கணும்; இல்ல நான் இருக்கணும் வா வெளிய.''

சிட்டம்மாளுக்குச் சுக்குத் தண்ணி வச்சுக்கிட்டிருந்த கருத்தமாயி, முத்துமணி சத்தம் கேட்டு விசுக்குன்னு வெளிய வந்தாரு.

''ஏய் என்னாப்பா வெளிய நின்னு கத்துறவன்... வீட்டுக்குள்ள வா...''

''நான் ஒண்ணும் உன் வீட்டுக்கு விருந்தாளியா வரல. வெட்டு ஒண்ணு - துண்டு ரெண்டுன்னு கேக்க வந்திருக்கேன். நெலத்தக் கொடுப்பியா? கொடுக்க

மாட்டியா?''

''யாருக்கு?''

''மில்லுக்காரனுக்கு. இந்தா இந்தான்னு இது வரைக்கும் தொண்ணூறு ஏக்கருக்கு முன்பணம் வாங்கிக் கொடுத்திருக்கேன். இன்னொரு பத்து ஏக்கர் வாங்கிட்டா, அம்பது கோடி லோன் கிடைக்கும்மில்லுக் காரனுக்கு. ஒரு கோடி கமிஷன் கெடைக்கும் எனக்கு. கெடைக்க விடமாட்ட போல இருக்கு நீயி...''

''நான் என்ன பண்றேன்?''

''தலமாட்டுல இருக்கு நம்ம நெலம். அந்தத் தொண்ணூறு ஏக்கருக்கு வழியும் அதுதான்; வாசலும் அதுதான். பெரியப்பன் எழுதிக் கொடுத்துட்டுச் செத்துப்போச்சு. பெத்த அப்பன் தர மாட்டேங்கற. வந்து என்கூட மல்லுக்கட்டிட்டுப் போறான் மில்லுக்காரன். கேட்ட காசு வாங்கித் தாரேன்; சொல்லு! எப்ப விக்கப்போற?''

''ஏலே அய்யா... வித்தாச் செத்துருவன்டா உங்கப்பன்.''

''விக்கலேன்னா நான் செத்திருவேன்.''

''அப்பன் ஆத்தாள விக்க முடியுமாடா? நெலமும் அதாண்டா.''

''இந்தா பாரு! வேதாந்தம் பேசி வெட்டியாச் செத்துப்போகாத. நெலத்த வித்து பேங்குல போடு. வட்டிக் காசுல வாழ்க்கை நடத்து. ஓடி ஓடிச் சாகாத; ஒக்காந்து தின்னு.''

''ஏண்டா மகனே இந்தப் பேச்சுப் பேசற? பெறக்கும்போதே இருதயம் இல்லாமப் பெறந்துட்டியாடா?''

''நீ புடிச்ச மொச மட்டும் ஈரல் இல்லா மப் பெறக்கும்போது - நான் மட்டும் இருதயம் இல்லாமப் பெறந்திருக்க மாட்டனா? இந்தா இத நீயே வச்சுக்க என் மஞ்சட்டி மகாராசா!''

வாசல்ல மடார்னு போட்டு ஒடைச்சான் மண் சட்டிய.

திசையெல்லாம் தெறிச்சு விழுகுதுக கறித் துண்டுகளும் மண் சட்டி ஓடுகளும்.

ஓடியாந்து கொத்த வந்துச்சு கோழி. கொத்த வந்த கோழி மேல விர்ருன்னு பாஞ்சு விரட்டிருச்சு பூனை.

பூனை மேல சர்ருபுர்ருன்னு பாஞ்சு ஒரு உறுமு உறுமிட்டு, வாசல்ல கிடந்த எல்லாக் கறியிலயும் வாய்வச்சு வாய்வச்சுத் திங்குது மொசல விரட்டிப் போயி அடிபெத்து ஓடிப்போன உளியன் வீட்டு நாயி.

ந்தக் கூத்து இங்கு இவ்வாறிருக்க -

அட்லாண்டாவில் இருந்து ஃபிராங்ஃபர்ட் - ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து சென்னை - சென்னையில் இருந்து மதுரை என்ற வான்வழியே மதுரையம்பதியில் தரை இறங்குகிறாள் எமிலி.

காத்திருக்கிறான் சின்னப்பாண்டி கையில் மதுரை மல்லி மாலையோடு.

- மூளும்