Published:Updated:

'இது சூனா மானா கோட்டை!'

'இது சூனா மானா கோட்டை!'

'இது சூனா மானா கோட்டை!'

'இது சூனா மானா கோட்டை!'

Published:Updated:
'இது சூனா மானா கோட்டை!'

புலமைப்பித்தன். தமிழக அரசின் சட்ட மேலவை துணைத் தலைவர் மற்றும் அரசவைக் கவிஞராக இருந்தவர். கலைமாமணி விருதும் நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடல் ஆசிரியர் விருதும்பெற்ற வர். தீவிர தமிழ் ஈழ ஆதரவாளர். தனது ஊரான பள்ளப்பாளையம் குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

''பள்ளப்பாளையத்தை 'சூனா மானா கோட்டை’னு சொல்வாங்க. அதாவது, சுய மரியாதைக் கோட்டை! அந்த அளவுக்குப் பெரியார் இயக்கத்தவர்கள் நிறைந்த ஊர். என் அப்பா பொரிகடலை வியாபாரம் செய்தார். அம்மா பஞ்சாலைத் தொழிலாளி. எங்க ஊரின் ஏரி கொள்ளை அழகு. நீர் நிறைந்து தண்ணீர் வழியும்போது, அதில் தட்டைக் கற்களைப் பறக்கடிக்கவிடுவது என் குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு.    

எங்க ஊரின் அமைப்பே கொஞ்சம் விசித்திரமா னது. மேற்குப் பகுதி பசுமை... வடக்கில் வறட்சி. மேற்கில் 10 அடி தோண்டினாலே தண்ணீர் தெறிக்கும். வடக்கில் தோண்டினால் போர்வெல் இயந்திரத்துக்கே போர் அடிக்கும். வீட்டைச் சுற்றி கரும்புத் தோட்டம். கரும்புகள் முற்றினால் என்னைப் போன்ற பசங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆங்காங்கே வெல்லப் பாகு காய்ச்சுவார்கள். கையை நீட்டினால் இளஞ் சூட்டில் கரண்டியால் கொஞ்சம் தடவுவார்கள். தேவாமிர் தம்கூட அந்த ருசி கிடையாது!  

'இது சூனா மானா கோட்டை!'

ஊரின் முக்கியத் தொழில், விவசாயம் மற்றும் பஞ்சாலை. நான் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தான் இருந்தேன். காரணம், பஞ்சாலை முதலாளி களின் தொழிலாளர் விரோதப்போக்கு. 1948-ம் ஆண்டு எங்கள் ஊரில் நாவலர் நெடுஞ்செழிய னின் திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. நான் கம்யூனிஸ்ட் என்பதால், கூட்டத்துக்கு வர மறுத்தேன். ஆனால், என் நண்பர்கள் வற்புறுத்தி அழைத்துப்போனார்கள். சுமார் 3 மணி நேரம் 'கணீர் கணீர்’ என ஒலித்த நாவலரின் பேச்சில், மெய்ம்மறந்துபோனேன் நான். கம்யூனிஸத்தைத் துறந்தேன். அன்று முதல் கறுப்புச் சட்டைப் படை வீரன் நான். பள்ளிப் பருவத்தில் என் பேச்சையும் எழுத்தையும் பார்த்த என் தமிழ் ஆசிரியர் சிவசம்புதான் ராமசாமி ஆகிய என்னை 1950-ல் 'புலமைப்பித்தன்’ ஆக்கினார்.

'இது சூனா மானா கோட்டை!'

உபசரிப்பின் உச்சம் என் ஊர். முன் பின் தெரியாதவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால்கூட, அந்த வீட்டினர் 'வாங்க

உறவினரே’ என்று அழைத்து, நீர்மோர் கொடுப்பார்கள். அதை அவர்கள் அருந்திய பிறகுதான், 'அவர் யார்? ஏன் வந்துள்ளார்? ’என விசாரிப்பார்கள். இது மிகை அல்ல... சத்தியம்! எங்கள் ஊரின் குண்டம் மிதி காளியம்மன் கோயிலில், வருடம்தோறும் குண்டம் (தீ மிதி) திருவிழா நடக்கும். அப்போது ஊரின் மக்கள் கூட்டம் 10 மடங்கு அதிகரித்துவிடும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அந்த விழாவுக்காக ஊருக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடு தான் அதற்குக் காரணம்.

சூலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்பு, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பு.

நான் படித்த காலத்தையும் எங்கள் ஊரின் புளிய மரத்தில் தூளி கட்டி ஆடிய பொழுதுகளையும் இன்றும் நினைத்து ஏங்குகிறேன். பாலக்காட்டு கணவாய் வழி வரும் அந்தக் குளிர்க் காற்று, இன்றும் என் இதயத்தை வருடிக்கொண்டே இருக்கிறது!' 

  • சிறு வயதில் இருந்தே புலமைப்பித்தனுக்குத் தினசரி சாப்பாட்டில் கொஞ்சம் அசைவம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது!
  • இவருடைய 'பாவேந்தர் பிள்ளைத் தமிழ்’ நூல் ஆந்திரா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது!
     
  • விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னை வாசத்தின்போது, இவர் வீட்டில்தான் தங்கியிருந்தாராம்!
     
  • தற்போது 'யுத்தக் களத்தில் புத்தரும் காந்தியும்’ என்ற புத்தகத்தை எழுதிவருகிறார். இவர் எழுதிய 'பூலோகமே பலிபீடமாய்’ என்ற புத்தகம், மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது!

சந்திப்பு: ம.சபரி
படங்கள்: க.தனசேகரன்