Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

தமிழ்மகன்

Published:Updated:
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

காலையில் முதல் ஆளாக வந்திருந்தான் வினோத். ரம்யா முதல் ஆளாக வருகிறாள் என்பது தெரிந்துதான் அப்படி வந்தான். ‘‘ஹாய் வினோத்’’ என எந்த நிமிடமும் தன் எதிரேவந்து அவள் ஆச்சர்யப்படுவாள் எனக் காத்திருந்தான். யாரும் வருவதற்கு முன் அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் இருந்தன. அலுவலகம் மெள்ள மெள்ள ஆட்களால் வண்ணமயமானது. அலுவலகம் என்பது உடைகளால், உரையாடல்களால் உயிர் பெறுகிறது. காலையில் முதல் ஆளாக வந்தபோது இருந்த வெறுமை இப்போது மறைந்துவிட்டது. ரம்யாவைத் தவிர எல்லோருமே வந்துவிட்டது தெரிந்தது.

முத்துராஜா வரும்போதே அறிவித்தார். ‘‘ரம்யா லீவ் சொல்லியிருக்காப்பா... அர்ஜென்டா வேற வீடு பார்க்கிறாளாம்.’’ இதுவும் அவருடைய ஸ்டைலில் ஒன்று. விடுப்பு கேட்பவர்கள் நேரடியாக அவரிடம் கேட்க வேண்டும். அவர் இப்படிப் பொதுவில் சொல்லிவிடுவார்.

அவள் வரமாட்டாள் என்பது எதிர்பார்த்ததுதான். வினோத் மனதில் அவளுடைய கொலைகளுக்கான கேள்விகள் அப்படியே இருந்தன. ஏன் செய்தாள்? ஏன் அப்படி விநோதமாக நடந்துகொண்டாள்? கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களுக்கும் இவளுக்கும் என்ன விரோதம்? பழி வாங்குகிறாளா? பணம் வாங்குகிறாளா? சைக்கோவா?

பொன்னியின் செல்வனுக்காக இன்று செய்ய வேண்டிய வேலைகளை அவள் வரையறுத்து, எல்லோருக்கும் மெயில் போட்டிருந்தாள். பரந்தாமனுக்கு ரிக்கிங் கோ ஆர்டினேஷன் வேலை. சந்தேகம் கேட்டு வந்தான். வந்தியத் தேவன் குதிரையின் சில அசைவுகளில் பிசிறு இருந்தது. குதிரையின் முதுகில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுத்திக் காட்டினான். குளத்தில் கல் விழுந்ததுபோல குதிரையின் சிலிர்ப்பு இருந்தது. தவற்றைச் சுட்டிக்காட்டி, நெட்டில் தேடி எடுத்து, ஒரு குதிரைச் சிலிர்ப்பை விளக்கினான். பரந்தாமன் அவ்வளவு பர்ஃபெக்‌ஷன்காரன் இல்லை. ‘இப்படித்தான் இருக்கட்டுமே’ என அடம் பிடிப்பான். அவன் ரூட்டிலேயே போய்ச் சரிசெய்ய வேண்டும். ‘‘பிரமாதம்டா... கார்ட்டூனிக்கா இருக்குடா. பட், இந்த இடத்தில ஃபன்னா இருக்க வேணாம். இதை ஆழ்வார்க்கடியான் குதிரைக்குப் பயன்படுத்திக்கலாம்’’ எனச் சொல்ல வேண்டும்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

சிலர் சொன்னதைச் செய்துவிட்டுப் போகிற ரகம்; சிலர் கிரியேட்டிவாக ஏதாவது முயற்சி செய்வார்கள்; சிலர் முயற்சி செய்வதாக ஏமாற்றுவார்கள். வினோத், எல்லா டேபிள்களுக்கும் போய் ஒரு மென் மேய்ப்பன் வேலை செய்துவிட்டு வந்தான்.

அடுத்த இரண்டு நாள்கள் அலுவலகம் விடுமுறை. பெங்களூரு சென்று கூல்டூன்ஸ் ஆபீஸில் விசாரித்துவிட வேண்டும். தேவையில்லாமல் ரம்யா தொடர்புடைய சம்பவங்களில் தானும் சம்பந்தப்பட்டுவிட்டது திகிலாகப் பரவி அடங்கியது.

திடீரென்று அவனுக்கு ராமநாதன் நினைவு வந்தது. வினோத்துக்கு சென்னையில் வீடு பார்த்துக் கொடுத்தவன். அட்வகேட். வீடு வாடகை அக்ரிமென்ட், டாகுமென்ட் பேப்பர் என சைடு பிசினஸ்... சின்னச் சின்ன பெயில் மூவ்கள் என எளிய வக்கீல். எட்டக்கூடிய தூரத்தில் சந்தேக நிவர்த்தி செய்துகொள்ள உதவுவான்.

போன் போட்டு விஷயத்தைச் சொன்னான். ‘‘கொலை நடந்த ரெண்டு இடங்களிலும் சிக்கியிருக்கியேப்பா...’’ என்றான் ராமநாதன். ‘‘செக்‌ஷன் 438... முன்ஜாமீன் மூவ் பண்ணிடணும். இல்லாட்டி உள்ள தூக்கிப் போட்டுடுவாங்க.’’

‘‘நாளைக்குக் காலையில வந்துடுறேன்... நீ எல்லாத்தையும் ரெடி பண்ணி வை.’’

‘‘பொண்ணு இப்ப எங்க இருக்கு?’’

‘‘அதுதான் தெரியலை. இன்னைக்கு ஆபீஸ் வரலை. அது கொடுத்த அட்ரஸ்லயும் இல்ல. புது வீடு பார்க்கப் போறதா எம்.டி கிட்ட சொல்லியிருக்கு. அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சுக்க நாளைக்கு பெங்களூரு போறேன்.’’

‘‘ஆஹா...’’ என்றான் ரா.

‘‘எதுக்கு ஆஹா?’’

‘‘என்னோட கிளையன்ட் ஒருத்தர் பெங்களூர்ல வீடு விக்கறாரு. வாங்கிற பார்ட்டிய பார்த்து சில பல வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. என் கார் கொண்டு வர்றேன்... நீ பெட்ரோல் ஷேர் பண்றதா இருந்தா போதும். பஸ் சார்ஜ்தான் ஆகும்.’’

‘‘சரிதான். காலையில கோர்ட்ல முடிக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டுக் கிளம்பிப் போய்ட்டு வந்துடுவோம்.’’

காலையில் என்ன காரணத்தினாலோ, ‘‘முன்ஜாமீன் கேட்பது, நீயே உன்னைச் சிக்க வைப்பதற்குச் சமம். தேவைப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம். இப்ப வேணாம்’’ எனச் சொல்லிவிட்டான்.

2012 மாடல் ‘வேகன் ஆர்’ காரை செகண்ட் ஹாண்டில் வாங்கி, ஒரு மாதிரி துடைத்து வைத்திருந்தான். சராசரியாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று, ஆறு மணி நேரப் பயணத்தில் பெங்களூரை அடையும்போது இருட்டிவிட்டது. விற்க இருந்த வீடே முழு ஃபர்னிஷிங்கில் இருந்தது. இரண்டு பெட்ரூம் வீடு. வீட்டில் குடியிருந்து காலி செய்துவிட்டுப் போனவர்களின் வாசனை மிச்சம் இருந்தது. பழைய செருப்புகள், துடைப்பங்கள், உதவாத ஆடைகள், அட்டைப் பெட்டிகள் ஒரு மூலையில் கிடந்தன. ராமநாதன் யாருக்கோ போன் செய்து, காலையில் வந்து வீட்டைக் சுத்தம் செய்து, டிஸ்டெம்பர் அடிக்கச் சொன்னான். ஆளுக்கு இரண்டு பியர் சாப்பிட்டு உடம்பு சூட்டைத் தணித்துக்கொண்டதாக அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தபோது, கன்னட சேனலில் ஏதோ சாமியார் பற்றிய செய்தி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. ராமநாதன் முயன்று ஒரு தமிழ் சேனலை வரவழைத்தான். போன நூற்றாண்டு பாடல்களாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள். கண்கள் மலங்க, ‘என்னைத் தாலாட்ட வருவாளா?’ பாடலைக் கேட்டுக்கொண்டே வினோத் தூங்கிவிட்டான்.

எழுந்ததும் அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம். ‘இருவருமே அவரவர் வேலைகளை முடித்துக்கொண்டு மத்தியானம் அறைக்குத் திரும்பிவிட வேண்டும்.’

கூல்டூன்ஸ் நிறுவனம் ஆர்.டி நகரில் ஒரு பிரமாண்ட அப்பார்ட்மென்ட்டில் இருந்தது. கட்டடத்தின் ஒரு பிளாக் வணிக வளாகமாக இருந்தது. ஆபீஸ், நினைத்ததைவிட பிரமாண்டமாக இருந்தது. ஏன் இந்த வேலையைவிட்டுவிட்டு ரம்யா சென்னைக்கு வந்தாள் என்பது இப்போது முக்கியமான கேள்வியாக இல்லை. ‘ஏன் கொலை செய்கிறாள்’ என்பதை மட்டுமே நினைத்தான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

ரிசப்ஷனில் சிவப்பான பெண் ஒருத்தி, அவளைவிட சிவப்பான லிப்ஸ்டிக் போட்டு, பார்த்தவுடன் சிரித்து வரவேற்றாள். தான் சென்னையிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி, ‘‘ரம்யாவைப் பற்றிக் கொஞ்சம் தகவல் வேண்டும்’’ என வினோத் சொன்னபோது அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது. அவனைப் பார்த்துக்கொண்டே யாருக்கோ இன்டர்காமில் அழுத்தினாள். ‘‘உள்ள வாங்க... எம்.டி பேசணும்னு சொன்னார்’’ எனக் கையோடு அழைத்துச் சென்றாள்.
‘‘எம்.டி-லாம் வேணாம். நீங்க சொன்னாவே போதும்.’’

அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, எம்.டி அறைக் கதவைத் திறந்து உள்ளே அனுப்பிவிட்டுப் போனாள். முத்துராஜா வயதொத்த முதலாளிதான். எழுந்து கைகுலுக்கி, ‘‘ஐ ஆம் ராகுல்... நீங்க போலீஸா?’’ என்றார்.

ரம்யாவைக் கேட்டால் போலீஸை எதிர்பார்ப்பது ஏன்? ‘‘என்னுடன் வேலை பார்ப்பவர். இரண்டு நாள்களாக வேலைக்கு வரவில்லை. எங்களிடம் ரம்யா முன்பு வேலைபார்த்த அலுவலகம் தவிர வேறு தகவல்கள் இல்லை. அதனால் வந்தேன்’’ என்பதைச் சந்தேகப்படாத தொனியில் சொல்லி முடித்தான் வினோத்.

ராகுல் அமைதியாக இருந்தார். ‘‘உங்களுக்கு ரம்யாவை ரெண்டு நாளாத்தான் தெரியுமா?’’

‘‘ஆமா.’’

‘‘ஏதோ காரணத்துக்காக லீவ் போட்டிருக்கலாம்... அதுக்காக ஏன் இவ்ளோ தூரம் தேடி வந்தீங்க?’’

‘‘ஏதோ அசம்பாவிதமா நடந்திருக்கும்னுதான். போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது... அதான்! ஆனா, நான் வந்து ரம்யாவைக் கேட்டதும் நீங்க என்னை ‘போலீஸா’ன்னு கேட்டீங்களே, அது ஏன்?’’

‘‘காலையில ரம்யா பத்தி பேச்சு வந்தது... ‘அவனுக்கு நல்ல சாவே வராது... அவன் ஃப்ராடு’னு சொல்லுவா.’’

‘‘யாரை?’’

ராகுல், தானாகவே எதையாவது சொல்லி நீட்டிப்பதாக நினைத்திருக்கலாம். ‘‘நான் சொல்லப் போற இன்ஃபர்மேஷன் உங்களுக்கு எந்த அளவுக்கு யூஸ் ஆகும்னு தெரியலை. அவ சின்சியர் வொர்க்கர். எங்க கம்பெனியில அஞ்சு வருஷம் இருந்தா. அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் இந்த ஆபீஸ்ல. ஜெனிலியான்னு பேரு. அவ திடீர்னு இறந்து போயிட்டா... அதில இருந்து ரம்யா ஒரு மாதிரி டல் ஆகிட்டா. தன் ஃப்ரெண்டை யாரோ கொன்னுட்டாங்கன்னு புலம்பிக்கிட்டு இருந்தா. அவளுக்கே அது பிரச்னையா இருந்தது. சைக்கியாட்ரிஸ்டைப் பார்த்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா. ஏதாவது புது இடத்தில வேலைக்குப் போனா மனசுக்கு நல்லா இருக்கும்னு அவளாத்தான் சென்னைக்குப் போய்ட்டா.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5

‘‘இதில போலீஸ் வரலையே?’’

ராகுல் இன்னும் சில தகவல்களைச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது நெற்றிச் சுருக்கத்தில் தெரிந்தது. ‘‘ஜெனிலியாவுக்கு ஒரு லவ் ஃபெயிலியர். ரொம்ப விரக்தியாகிட்டா. இங்கதான் ஏதோ ஒரு மடத்துல சேர்ந்துட்டா. சந்நியாசி ஆகிட்டேன்னு சொன்னா. ஆபீஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாம் போய் பார்த்தோம். என்னமோ அடிக்ட் ஆனவ மாதிரி போதை கிறக்கத்துல இருந்தா. நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கலை. திடீர்னு ஒரு நாள் அவ இறந்துபோயிட்டதா சொன்னாங்க. அந்த சாமியார்தான் அவளைக் கொன்னுட்டதா ரம்யா நினைச்சா.’’

‘‘அப்படியா?’’

‘‘அந்த சோகத்திலதான் ரம்யா மெட்ராஸ் போயிட்டாள்னு சொன்னேன். அந்தச் சாமியாருக்குத்தான் நல்ல சாவே வராதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பா. இப்ப அந்தச் சாமியார் கொல்லப் பட்டிருக்கார்.’’

ராகுல், டேபிளில் தனக்கு முன் இருந்த லேப்டாப்பை வினோத் பக்கம் திருப்பினார். நேற்று இரவு கன்னட சேனலில் காட்டிய சாமியார். ‘‘இவரை நேற்றே டி.வி-யில் காட்டினார்களே?’’ என்றான் வினோத்.

‘‘ஆமாம். அவர்தான்... கொன்றது ஒரு லேடின்னு வேற சொல்றாங்க.’’

(தொடரும்...)