Published:Updated:

சேவை அல்ல... கடமை!

சேவை அல்ல... கடமை!

சேவை அல்ல... கடமை!

சேவை அல்ல... கடமை!

Published:Updated:

''நிலை இல்லாத வாழ்க்கை இது... இருக்கிற வரை அஞ்சாறு பேருக்கு ஆறுதலா இருந்துட்டுப் போவோமே!'' - இரண்டு வரிகளில் இனிய தத்துவம் பேசுகிறார் ஈரோட்டைச் சேர்ந்த அசோக்!

சேவை அல்ல... கடமை!
##~##

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது 'வி சுக்கிரா’ அறக்கட்டளை. திருநங்கைகள் மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் தாய்மடி. ''நாங்க செய்கிற வேலைகளைச் சேவைனு சொல்ல விரும்பலை. சமூகத்தில் தன் வேலையை மட்டும் பார்க்காம... முடிந்த வரை ஒவ்வொருவரும் தன் கடமையா நினைச்சு மத்தவங்களுக்கும் உதவணும். அப்படித்தான் இதையும் நினைக்கிறேன். உளவியல் ஆலோசனைக்கான படிப்பை முடித்த சமயம்தான் திருநங்கைகள், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள்னு இந்த உலகத்தில் புறக்கணிக்கப்படும் ஆத்மாக்களின் வேதனையை உணர்ந்துகொண்டேன். அவர்களுக்கு வெறுமனே மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுப்பது, உணவு வாங்கிக்கொடுப்பதுனு இல்லாம, தன்னம்பிக்கையைத் தூண்டி,  ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொடுத்து சொந்தக் கால்ல நிக்கவைக்க முடிவுபண்ணேன். 'மானும் நானும்’ சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ரவிச்சந்திரன் மாதிரியான நல்ல நண்பர்கள் உதவிக்கு வந்தாங்க.

சமூகத்தில் தொடர் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகி இருந்ததால், திருநங்கைகளும் எய்ட்ஸ் நோயாளிகளும் அவ்வளவு சுலபமா என்னை நம்பலை. கொஞ்சம் கொஞ்சமாப் பேசிப் புரிய வெச்சு, அவங்க நம்பிக்கையைப் பெற்றோம். எங்க அறக்கட்டளை மூலமா அரசாங்கத் திடம் போராடி, திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை கொடுக்கவெச்சோம். அதுல இலவச வீடு கட்டிக் கொடுக்கக் கோரி போராட்டம் தொடருது!

வருடம்தோறும் கூவாகம் விழாவுக்கு ஈரோட்டில் இருந்து போற திருநங்கைகளுக்காக, அரசுத் தரப்பில் இருந்து இலவசப் பேருந்துக்கு ஏற்பாடு பண்றோம். ஹெச்.ஐ.வி. குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில், திருநங்கைகளை நடிக்கவெச்சு அவங்களோட திறமையை வெளியே கொண்டுவர்றோம்.  இதுவரை சுமார் 250 திருநங்கைகளை ஒருங்கிணைச்சு இருக்கோம். இவங்களோட அந்தரங்கமான புனிதச் சடங்கு, 'பால்’ வைபவம். அந்தச் சடங்கு ஒரு திருநங் கைக்கு நடக்கும்போது, தனக்கு நெருக்கமான திருநங்கைகளை மட்டும்தான் அதில் கலந்துகொள்ள அனுமதிப்பாங்க. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அனுமதி கொடுத்தாங்க. இது எனக்கு அவங்க கொடுத்த மிகப் பெரிய கௌரவம்!

சேவை அல்ல... கடமை!

நன்றாகச் சமைக்கும் சில திருநங்கைகளுக்கு, திருமணங்களில் சமைப்பதற்கு ஆர்டர் எடுத்துக் கொடுத்தோம். சுமார் 20 திருநங்கைகளுக்கு, சுயதொழில் செய்ய ஆடு வாங்கிக்கொடுத்தோம். அதுல அவங்க தொழில் பிரமாதமாப் போய்க்கிட்டு இருக்கு. 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு நண்பர்களிடம் பேசி ஜெராக்ஸ் கடை, கம்ப்யூட்டர் சென்டர், எஸ்.டி.டி. பூத், ரிசப்ஷனிஸ்ட் மாதிரியான வேலைகளை வாங்கிக்கொடுத்து இருக்கோம். மன அழுத்தம், அவமானம் தாங்காம பலர் தற்கொலைக்கு முயற்சி செஞ்சு இருக்காங்க. கவுன்சிலிங் கொடுத்து அவங்களை நல்வழிப்படுத்தி இருக்கோம்.

எங்க அறக்கட்டளை சார்பாக 'கேர் சென்டர்’ நடத்துறோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிறையப் பேர், இங்கே தங்கி உடல் நலம் தேறி வர்றாங்க. இவங்களைச் சந்தோஷப் படுத்த ஆண்டு விழா, பொங்கல் விழானு கொண்டாடுறோம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிறைய செய்ய ஆசை. பார்க்கலாம்... நல்லவங்க துணையோடு முடிந்த வரை நல்லது செய்வோம்!'' என்று நிறைவான குரலில் முடிக்கிறார் அசோக்.  

சேவை அல்ல... கடமை!
  • ஈரோடு மற்றும் திருப்பூரில் கணிசமான ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் 'பாதுகாப்பான செக்ஸ்’ குறித்து கவுன்சிலிங் கொடுக்கிறார் அசோக்.
  •  
  • ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காவல் துறையினருக்கு ஹெச்.ஐ.வி. குறித்த விழிப்பு உணர்வு வகுப்புகளை எடுப்பதோடு, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 'தற்கொலை தடுப்பு கவுன்சிலிங்’ தருவதும் அசோக்கின் சேவைகளில் ஒன்று.

- எஸ்.ஷக்தி
படங்கள்: க.தனசேகரன்