Published:Updated:

``சென்னைக்கு ஐ.எஸ்.எல் கப்... ஜெய்ப்பூருக்கு ப்ரோ கபடி கோப்பை...!’’ - `ஓனர்’ அபிஷேக் பச்சன்

``சென்னைக்கு ஐ.எஸ்.எல் கப்... ஜெய்ப்பூருக்கு ப்ரோ கபடி கோப்பை...!’’ - `ஓனர்’ அபிஷேக் பச்சன்
``சென்னைக்கு ஐ.எஸ்.எல் கப்... ஜெய்ப்பூருக்கு ப்ரோ கபடி கோப்பை...!’’ - `ஓனர்’ அபிஷேக் பச்சன்

"நாம் ஐரோப்பிய ரசிகர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. உண்மையில் நம் மக்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு 'இந்தியன் டச்' இருக்கும். நம் ஐ.எஸ்.எல் ரசிகர்களிடமும் அந்த இந்தியன் டச் அதிகமாக இருக்கிறது. இவர்கள் இந்திய கால்பந்து கலாசாரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்"

ப்ரோ கபடி, ஐ.எஸ்.எல் என இரண்டு ஏரியாவிலும் பிஸியாக இருக்கிறார் அபிஷேக் பச்சன். இரண்டு தொடர்களிலும் அவரது அணிகள் விளையாடுகின்றன. எப்போதும் தன் அணிகளின் ஆட்டங்களை மிஸ் செய்யக்கூடாது என்று நினைப்பவர், இந்த முறையும் இந்த ஸ்போர்ட்ஸ் சீசனுக்குத் தயாராகிவிட்டார். இந்த 3 மாதங்களில் 16 நகரங்களுக்கு இடையில் பறந்துகொண்டே இருக்கவேண்டும். இப்போதே தினம் ஒரு நகராக பறந்துகொண்டிருக்கிறார். இரண்டு நாள்கள் சென்னையில் மையமிட்டிருந்தவர், களைப்பைக் கொஞ்சமும் காட்டாமல் பேசுகிறார். ஒவ்வொரு வார்த்தையிலும், விளையாட்டின் மீதான காதல் பளிச்சென்று வெளிப்படுகிறது.

"சனிக்கிழமை கொல்கத்தாவில், ஞாயிறு பெங்களூரில், செவ்வாய் சென்னையில்...எப்படி முடிகிறது உங்களால்?"

"சொல்லப்போனால் வியாழக்கிழமை திரும்பவும் கொல்கத்தா சென்றுவிட்டு, சனிக்கிழமை மீண்டும் சென்னை வரவேண்டும். நான் என்ன செய்கிறேனோ, அதை நேசித்துச் செய்கிறேன். இது விளையாட்டின் மீதிருக்கும் காதல்தான். அதுதான் என்னை இப்படி உயிர்ப்போடு வைத்திருக்கிறது. நம் அணிக்காக நாம் அலைந்து திரிந்துதானே ஆகவேண்டும். இதில் சலிப்படைவதற்கெல்லாம் வாய்ப்பில்லை".

"விளையாட்டு மீது ஏன் இவ்வளவு ஆர்வம். இது எப்போது தொடங்கியது?"

"சிறு வயது முதலே எல்லா ஸ்போர்ட்ஸ் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளி நாள்களில் மைதானம்தான் எனக்கான இடம். விளையாடுவதும், அதைப் பார்ப்பதும்தான் எனக்கு அன்று மிகவும் பிடித்தவை. அப்போது நான் பேஸ்கட்பால் பிளேயர். அதுமட்டுமல்லாமல் கால்பந்து, கிரிக்கெட் என எல்லா விளையாட்டுகளையும் தீவிரமாக பின்தொடர்ந்தேன். போர்டிங் ஸ்கூலில் படித்ததால் இங்கிலீஷ் பிரீமியர் லீக் ரொம்ப ஃபேவரிட்".

"நீங்கள் செல்ஸீ ரசிகர். செல்ஸீயின் இந்த சீசன் தொடக்கம் சந்தோஷமா?"

"ரொம்பவே சந்தோஷம். மிகவும் பெர்ஃபெக்டான தொடக்கம். ஒரு குறையும் சொல்லிவிட முடியாது. இன்னும் சிறப்பாக ஆடக்கூடிய ஒரு ஸ்டிரைக்கர் மட்டும் இருந்தால், அணி இன்னும் சிறப்பாக ஆடும். முழுமையடையும். ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் ரசிகர்களின் இன்றைய அதே மனநிலையில்தான் நானும் இருக்கிறேன்".

"சென்னையில் ஒரு அணி, ஜெய்ப்பூரில் ஒரு அணி... எந்த ரசிகர்கள் உங்கள் ஃபேவரிட்?"

"என் இரண்டு அணிகளுமே என் ஃபேவரிட். அதேபோல் இரண்டு அணியின் ரசிகர்களுமே எனக்குப் பிடிக்கும். சென்னை ரசிகர்களுக்கும், ஜெய்ப்பூர் ரசிகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் வெற்றியைக் கொண்டாடுவதில், ஆதரிப்பதில்... அந்த முறைகளில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், அணியை நேசிப்பதில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. இரண்டு ரசிகர்களுமே அதில் டாப்!"

"சென்னையின் கால்பந்து ரசிகர்கள் எப்படி? இந்திய கால்பந்து கலாசாரம் ஐரோப்பாவைப் போல் மாறுகிறது என்று நினைக்கிறீர்களா?"

"சென்னையின் ரசிகர்கள் வேற லெவல். உள்ளூரில் நடக்கும் போட்டிகள் மட்டுமல்லாமல், பெங்களூரு, கொச்சி, கோவா என சென்னை ஆடும் 'அவே' ஆட்டங்களுக்கும் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள், அந்த ஆட்டங்களுக்காக திட்டம்போட்டு பயணிக்கின்றனர். மிகவும் பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், இது ஐரோப்பிய கலாசாரம்போல் மாறுகிறதா என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். நாம் ஐரோப்பிய ரசிகர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. உண்மையில் நம் மக்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு 'இந்தியன் டச்' இருக்கும். நம் ஐ.எஸ்.எல் ரசிகர்களிடமும் அந்த இந்தியன் டச் அதிகமாக இருக்கிறது. இவர்கள் இந்திய கால்பந்து கலாசாரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்".

"பிங்க் பேந்தர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது. இந்தியாவின் சக்சஸ்ஃபுல் கேப்டன் அனூப் அணியை வழிநடத்தவுள்ளாரே?"

"அனூப் அணியை வழிநடத்துவது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அவரது அனுபவம் எங்களை மீண்டும் சாம்பியனாக்கும் என்று நம்புகிறோம். 'ஆன் பேப்பர்' பிங்க் பேந்தர்ஸ் மிகவும் பலமான அணி. ஆனால், பேப்பரில் பலமாக இருப்பது எந்த வகையிலும் வெற்றியை உறுதி செய்யாது. அந்த நாளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். அப்படி ஒவ்வொரு நாளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்கள் அணியில் நிறைய இருக்கிறார்கள். நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிப்போம்".

"முந்தைய 4 சீசன்களில், இரண்டு முறை சென்னையின் எஃப்.சி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், அந்த சீசன்களில் சென்னைதான் சாம்பியன். இந்த முறையும் சென்னை தோற்றுள்ளது..."

(கேள்வியை முடிக்கும் முன்னரே)"நோ நோ நோ... Don't Jinx that... (சிரித்துக்கொண்டே டேபிளைத் தட்டுகிறார்). எதாவது சொல்லி வாயை வச்சிடாதீங்க. எனக்கு அந்த சென்ட்டிமென்ட்லலாம் நம்பிக்கை இல்ல (மீண்டும் சிரிப்பு தொடர்கிறது). என் வீரர்கள்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் தோல்விக்குப் பிறகு சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். இந்த முறையும் நல்ல கம்பேக் கொடுப்போம்".

"தனபால் கனேஷின் காயம் சென்னையின் அணிக்கு பெரிய இழப்பாக இருக்குமா?"

"நிச்சயமாக. இது மிகப்பெரிய இழப்பு. அணியின் மிகமுக்கிய வீரர் அவர். கடந்த சீசன் சென்னை சாம்பியன் ஆனதில் அவர் பங்கு அதிகம். அவர் விரைவில் குணமடைந்து அணிக்குத் திரும்பவேண்டும். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்".

"கடந்த சீசனின் கேப்டன் ஹென்ரிக் செரேனோவை ஒப்பந்தம் செய்யாதது ஏன்?"

"நாங்கள் அவரை ஒப்பந்தம் செய்யத்தான் நினைத்தோம். ஆனால், அவர் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. தன் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார். அந்த முடிவை கட்டாயம் மதிக்கவேண்டும். நாங்கள் அதைச் செய்தோம். அவ்வளவுதான். குடும்பத்துடனான அவரது நாள்கள் சிறப்பாக அமையட்டும். அவர் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவுதான். ஆனால், அவரது இடத்தை எலி சாபியா உள்ளிட்ட வீரர்கள் நிச்சயம் நிரப்புவார்கள்".

"இந்த ஆண்டு ப்ரோ கபடி, ஐ.எஸ்.எல் இரண்டு தொடர்களும் ஒரே சமயத்தில் நடக்கிறது. உங்கள் இரண்டு அணிகளுக்கும் சில போட்டிகள் ஒரே நாளில் நடைபெறுகிறது. இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?"

"ஹாட்ஸ்டார் (பலமாக சிரிக்கிறார்). வேறு வழியில்லை. எப்போதுமே இரண்டு அணிகளின் ஆட்டத்திலும் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால், இந்த முறை சூழ்நிலை இப்படி அமைந்துவிட்டது. சென்னையின் எஃப்.சி அணியின் 'ஹோம்' ஆட்டங்களை நிச்சயம் தவறவிடமாட்டேன். அணியின் 'டீம் ஷீட்' படிக்கும் அந்த கௌரவத்தைத் தவறவிடமாட்டேன் (புன்னைகைக்கிறார்). மற்ற நாள்களில் இரண்டு தொடர்களையும் பேலன்ஸ் செய்தாகவேண்டும்."

அடுத்த கட்டுரைக்கு