சமூகம்
Published:Updated:

பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?

பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?

பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?

றட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கு வதற்கான காலக்கெடு மார்ச் மாதத்துடன் முடிய இருக்கும் நிலையில், பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டுத்தொகை வழங்காததால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

வறட்சியாலும் வெள்ளத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுக்கவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வந்தது. இதில், விவசாயிகளுக்கான பிரீமியத்தில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 30 சதவிகிதமும் செலுத்துகிறது. விவசாயிகள் 10 சதவிகித பிரீமியம் செலுத்தினால் போதும். பாதிப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். 2016-17-ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இப்படிப் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டன. அதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தலா 10 மாவட்டங்களுக்கு காப்பீட்டுத் தொகை சேவையைச் செய்துவருகிறது. மாநிலமே பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சூழலில், தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகித விவசாயிகளுக்கு,கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் (திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி) இருக்கும் 2,28,618 விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை தர வேண்டும். இதுபோல, பிற மாவட்ட விவசாயிகளுக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும், இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகமும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அந்தத் தொகை மொத்தம் ரூ. 340 கோடி என விவசாயிகள் சொல் கிறார்கள். இந்த நிறுவனங்களுடனான விவசாயக் காப்பீட்டுச் சேவை ஒப்பந்தம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் வழங்கப்படவில்லையென்றால், காப்பீட்டுத் தொகை தங்களுக்குக் கிடைக்காது என்று விவசாயிகள் அச்சத்துடன் கூறுகிறார்கள்.

பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு நிறுவனம் முன்பாகக் கடலூர் மாவட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த காவிரி டெல்டா பாசன விவசாய சங்கக் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ‘‘பிரீமியத்தை நாங்கள் முறையாகக் கட்டியுள்ளோம். ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை தர வேண்டும். இதற்காக, கடலூருக்கும் சென்னைக்கும் பல முறை அலைந்துவிட்டோம். எல்லா ஆவணங்களையும் ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்து அனுப்பியிருக்கிறோம். ஆனால், ‘டாக்குமென்ட் சரியில்லை’ என்று சொல்லியே எங்களை இழுத்தடிக்கிறார்கள். பல ஆயிரம் விவசாயிகள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் மட்டுமே 31,215 பேர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்தியுள்ளனர். இதேபோல துவரை, உளுந்து எனப் பயிரிட்டவர்கள் பல நூறு பேர். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழகம் முழுக்க உள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு மட்டுமே இதுவரை இழப்பீடு கிடைத்துள்ளது. தமிழகம் முழுக்கப் போராடுகிறோம். ஆனால், தமிழக அரசு அந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் தரவே இல்லை. இதனால், அரசாங்கத்தின்மீதே சந்தேகம் வருகிறது’’ என்றார்.

ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு நிறுவனத்தின் முன்பாக விவசாயிகளுடன் சேர்ந்து போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ‘‘விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படாதது குறித்த பிரச்னையை, காவிரி நதிநீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுப்பினேன். உடனடியாக இப்பிரச்னையைத் தீர்ப்பதாக அரசுத் தரப்பில் சொன்னார்கள். ஆனால், இப்போதுவரை அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை’’ என்றார்.

பயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்?

இதுகுறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘விவசாயிகளுக்கான பணத்தைக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில், மூன்று இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களும் தர வேண்டிய இழப்பீடுத் தொகையான ரூ. 3,040 கோடியில் ரூபாய் ரூ. 2,700 கோடியை விவசாயிகளுக்குக் கொடுத்துவிட்டன. மற்றவர்களுக்கும் பணம் போய்ச் சேரும். பயிர்க் காப்பீட்டு ஒப்பந்தம் முடிவதற்குள் இதைச் செய்துவிடுவோம்’’ என்றார்.

மும்பையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பர்டு நிறுவனத் தலைமையக உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘நாங்கள் ரூ. 526 கோடியை விவசாயிகளுக்கு வழங்கி விட்டோம். மீதம் ரூ. 37 கோடி மட்டுமே தரவேண்டியுள்ளது. அந்த விவசாயிகளின் சரியான ஆவணங்கள் எங்களுக்கு வந்துசேரவில்லை. அவை எங்களுக்குக் கிடைத்தவுடன் பணத்தை வழங்கிவிடுவோம்” என்றார்.

மார்ச் 31 வெகுதொலைவில் இல்லை அதிகாரிகளே!

- ஜெ.அன்பரசன்  படங்கள்: பா.காளிமுத்து