சமூகம்
Published:Updated:

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

‘ஏழைகளின் பசி தீர்க்கும் மிகச் சிறந்த திட்டம்’ என்ற முழக்கத்துடன் சென்னை யில் அறிமுகம் செய்யப்பட்டது, அம்மா உணவகம். பெரும் வரவேற்பு கிடைத்ததால்,  தமிழகம் முழுக்க பல நகரங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. பல மாநிலங்கள் இதைப் பார்த்து வெவ்வேறு பெயர்களில் உணவகங்களை ஆரம்பித்தன. எகிப்திலிருந்து பொருளாதார நிபுணர்கள் வந்து பார்த்து வியந்தார்கள். அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், மேன்ஷனில் தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர் களும் அம்மா உணவகத்தைத் தேடி வந்தனர். தினமும் அலைந்து திரிந்து பணிபுரியும் மார்க்கெட் டிங் ஆட்களுக்கும் வயிற்றைக் கெடுக்காத மலிவு விலை உணவு கிடைத்தது. வெறும் 32 ரூபாய் இருந்தால், மூன்று வேளையும் தரமான உணவை இங்கே சாப்பிடலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. ஒவ்வொரு நாளும் நான்கு லட்சம் பேரின் பசியைத் தீர்த்தபடி பரபரப்பாகச் செயல்பட்டன இந்த உணவகங்கள்.

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

ஆனால், இப்போது?

ஆரம்பத்தில் மக்கள் கூட்டம் அலை மோதிய அம்மா உணவகங்களுக்கு இப்போது மவுசு குறைந்துவிட்டது. அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரமும் ருசியும் குறைந்து விட்டதாக வாடிக்கையாளர்கள் குமுறுகிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, ஒரு நாளில் 7,000 ரூபாய்க்கு விற்பனையான உணவகங்களில் இன்று 2,000 ரூபாய்க்கு விற்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.   

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

2013-ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ‘அம்மா உணவகம்’ சென்னையில் ஆரம்பிக்கப் பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, ஐந்து ரூபாய்க் குக் கலவை சாத வகைகள் என மலிவான விலை யில் தரமான உணவு கிடைத்தது. கூலித் தொழி லாளிகள் மட்டுமின்றி, வாங்கும் சக்தி படைத் தோரும் அம்மா உணவகத்தை மொய்க்கத் தொடங்கினர். ‘உணவகத்தின் செலவுகளை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய்த் துறையினரும், உணவகத்தின் தூய்மை மற்றும் உணவின் தரம் போன்றவற்றை சுகாதார ஆய்வாளர்களும் பார்த்துக் கொள்வார் கள்’ என்று சொல்லப்பட்டது. நிர்வாகக் குளறுபடியால், அம்மா உணவகங்கள் பெருகிய வேகத்திலேயே வீழ்ச்சியையும் சந்தித்தன.

அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி!

அம்மா உணவகத்தின் பல பிரச்னை களை, சி.ஏ.ஜி அறிக்கை முதன்முதலில் அம்பலப்படுத்தியது. 2014-15-ம் நிதியாண்டுக்கான சி.ஏ.ஜி ஆய்வறிக்கை, ‘அம்மா உணவகங்களால் தமிழக அரசுக்கு ஓராண்டில் ரூ. 63 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது. உணவகத் தேவைகளுக்காக நடைபெற்ற கொள்முதலில் நேர்மை இல்லை. அம்மா உணவகத்தில் சப்பாத்தி தயாரிக்க வாங்கப் பட்ட 15 மெஷின்கள் தரமற் றவை. அந்த வகையிலும் அரசுக்கு, ரூ.1 கோடியே 33 லட்சம் இழப்பு. அந்த மெஷின் களைப் பழுதுபார்க்க 22 லட்சம் ரூபாயை சென்னை மாநகராட்சி செலவழித் துள்ளது.சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் குழு இதையெல்லாம் கண்டுபிடித்து அறிவுறுத்திய பிறகும், தவறுகள் சரி செய்யப் படவில்லை. ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை இல்லை. கோதுமை மாவு வாங்கியதிலும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படவில்லை. வெளி மார்க் கெட்டிலிருந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதற்காக செலவிட்ட ரூ.2 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும் முறையான கணக்கு இல்லை. இப்படி 2014-15-ம் நிதியாண்டில், ரூ.5 கோடியே 69 லட்சம் செலவழித்ததற்கு முறையான கணக்கு இல்லை. அது, முறைகேடு செய்யப்பட்ட தொகையாகவே கணக்கில் கொள்ளப்படும்’ என்று குற்றம் சாட்டியது.

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

‘அம்மா உணவகத்துக்காக டி.யு.சி.எஸ் (திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம்) நிறுவனத்தின் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றை வாங்கிவிட்டு, அந்த நிறுவனத்துக்கு வைத்த கடன் தொகையும் ரூ.30 கோடியைத் தாண்டிவிட்டது’ என இன்னொரு பக்கம் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

சி.ஏ.ஜி அறிக்கை, ‘சப்பாத்தி சுட 15 மெஷின்கள் வாங்கப்பட்டதிலும் ஊழல்’ என்கிறது. விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, அம்மா உணவகம் குறித்த பல தகவல்களைப் பெற்றோம். சாமர்த்தியமாக பல விஷயங்களை மறைத்துவிட்டே நமக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பதில் தந்தனர். ‘எட்டு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் செயல்படுகின்றன’ என்று பதில் தந்தவர்கள், மற்ற மெஷின்கள் என்ன ஆகின என்பதைச் சொல்லவில்லை. ‘அந்த விவரங்களை மண்டல வாரியாகக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அதிகாரிகள் பதில் தந்தனர். அதற்கும் முயற்சி செய்தோம். ஆனால், அதுபற்றி விவரங்கள் யாரிடமும் இல்லை.

சுடுகாட்டிலும் உணவகம்

முன்னாள் சென்னை மேயரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன், ‘‘அம்மா உணவகம் இப்போது ‘சும்மா உணவகம்’ என்று மாறிவிட்டது.  உணவகங்களை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி வருவாய்த் துறையினரையும் சுகாதாரப் பணியாளர்களையும் இதில் ஈடுபடுத்தியுள்ளனர்.  வருவாய்த் துறையையும், தூய்மைப் பணியையும் யார் பார்ப்பார்கள் என்று கேட்டால், பதில் இல்லை.

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

வருவாய்த் துறையினர் ஒரு ஜீப்பில் ஏறி பெரம்பூர் உணவகம் போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே உணவு இல்லையென்றால், உடனே எந்த அம்மா உணவகத்தில் விற்பனை ஆகாமல் உணவு இருக்கிறது என்று விசாரித்து, ‘பெரம்பூருக்கு ஒரு டிரம் சாம்பார் சாதம் பார்சல்’ என்று வாங்கி அனுப்பிவைக்கிறார்கள். இதுதான் அவர்களின் வேலை. வருவாய், தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டதால், டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பெருகிவிட்டன. வரிவசூல் குறைந்துவிட்டது.  சைதாப்பேட்டையில், சுடுகாட்டின் ஒரு பகுதியில் அம்மா உணவகத்தை அமைத்துள்ளனர். அதே சைதாப்பேட்டையில், சென்னை மாநகராட்சி மின்சாரத் துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தை அம்மா உணவகமாக மாற்றிவிட்டனர். பல இடங்களிலும் இதே கதைதான்’’ என்றார்.

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

மா.சுப்பிரமணியம் குறிப்பிட்ட, சுடுகாடு பகுதி அம்மா உணவகத்தைப் போய்ப் பார்த்தோம். பாதி கதவு சாத்திய நிலையில் இருந்தது. ஜன்னல் வழியாக ஊழியர்களிடம் பேசினோம். ‘சரியா நாலு மணிக்கு வந்திடுங்க, டிபன் ரெடியாக இருக்கும்’ என்றனர். ‘அம்மா உணவகத்தில்தான் உணவுகள் சமைக்கப்படுகின்றன’ என்று ஆர்.டி.ஐ-யில் அளிக்கப்பட்ட பதிலில் கூறியிருந்தனர். இந்த உணவகத்திலிருந்து வெளிவந்த புகை அதை நிரூபித்தது. சுடுகாட்டிலிருந்தும் புகை வந்துகொண்டிருந்தது.

தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி - நகராட்சி அண்ணா பொதுப் பணியாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் பெரம்பை சண்முகத்திடம் பேசினோம். “சப்பாத்தி தயாரிக்கும் மெஷின்களின் தரம் படுமோசம். பல மெஷின்கள் பழுதாகிக் கிடக்கின்றன. அதைப் ‘பழுது பார்க்கிறோம்’ என்று தனியாக பில் போட்டு வசூலிக்க ஒரு குழு உள்ளது. ஆளுங்கட்சி ஆதரவுபெற்ற பணியாளர் களே அங்கு வேலை செய்வதால், உணவின் தரம் குறித்துப் பொது மக்கள் எந்தக் கேள்வியையும் கேட்க முடிவதில்லை. மாநகராட்சியின் குப்பை லாரிகளில்தான் காய்கறிகளை ஏற்றிவருகிறார்கள்’’ என்றார்.

RTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்!

‘‘அம்மா உணவகம், ஏழை மக்கள் பசியாற வேண்டும் என்ற சமூக லாபத்தையே நோக்கமாகக் கொண்டது. அதில், லாப நஷ்டம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், அதை மூடும் திட்டம் ஏதும் இல்லை’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தொடர்ந்து நடக்கட்டும். ஆனால், அங்கு தரமும் சுவையும் உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான், ‘எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கும் திட்டம்’ என்ற பெருமைக்கு அர்த்தம் இருக்கும்.

- ந.பா.சேதுராமன்

படங்கள்: வீ.ஸ்ரீனிவாசுலு, ப.சரவணகுமார்

செலவுக் கணக்கைத் தர முடியாது!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சில தகவல்களை, சென்னைப் பெருநகரப் பொது சுகாதாரத் துறையின் மண்டல அலுவலரிடம் கேட்டிருந்தோம். அவர் நமக்கு அளித்த பதில்கள் இதோ...

* அம்மா உணவகங்களுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து மானிய விலையில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

* அனைத்து அம்மா உணவகங்களுக்கும் உயர் அதிகாரி, அந்தந்த மண்டல நல அலுவலர். மண்டல அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்கள் உணவின் தரம் குறித்துப் பரிசோதிக்கிறார்கள்.

அனைத்து அம்மா உணவகங்களிலும் கருத்துப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சாப்பிட வருபவர்கள் அதில் ஏதும் புகார் சொல்லியிருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

அம்மா உணவகங்கள் அனைத்துக்கும் காய்கறிகளை ஒரே விலையில் (விலை வித்தியாசமின்றி) வழங்கும் நோக்கத்தில், அந்தந்த மண்டல சுகாதாரத் துறையின் மூலம் தேவைப் பட்டியல் பெறப்படுகிறது. பின்னர், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படுகிறது.

அம்மா உணவகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற தகவலையோ, செலவு, வருவாய் மற்றும் நஷ்டம் குறித்த தகவல்களையோ தர இயலாது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பதற்காக Dove machine, Ball cutter சப்பாத்தி இயந்திரங்கள் ஆகியவை மண்டலங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை மண்டலங்களில் கோரிப் பெற்றுக்கொள்ளலாம்.

‘‘ஊருக்கே உணவு... எங்களுக்குப் பட்டினி!’’

அம்மா உணவகங்களில் சமையல் உள்ளிட்ட எல்லா பணிகளையும் செய்வது, மகளிர் சுயஉதவிக் குழுவினர்தான். ஓர் உணவகத்தில் ஒரு ஷிஃப்ட்டுக்கு எட்டு பேர் என்ற கணக்கில் 16 பெண்கள் பணி புரிகிறார்கள். காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு ஷிஃப்ட்; மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை அடுத்த ஷிஃப்ட். ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம். மாதம் முழுக்க விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்தால் ரூ.9,000 கிடைக்கும். மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் பல முடிவுகளால் அதிகம் பாதிக்கப் படுவது இவர்கள்தான். சரியாக விற்பனை ஆகாத இடங்களில் பணியாளர்களைக் குறைப்பது, சிலரைத் தொலைதூரத்துக்கு மாற்றுவது, பொருள்கள் வாங்கித் தர நிதி இல்லை எனக் காரணம் காட்டி சில நாள்கள் உணவகத்தையே மூடிவிடுவது என எல்லா வற்றையும் சகித்துக்கொண்டு இவர்கள் பணிபுரிகிறார்கள்.

அம்மா உணவக ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சென்னையில் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனைப் பணிகளில் 4,435 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறோம். உணவுத் தயாரிப்புக்குப் போதுமான அளவு தயிர், காய்கறிகள், எண்ணெய் போன்ற பொருள்கள் வருவதில்லை. உணவு தயாரிப்புப் பணி நின்று போனால், எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால், பலவற்றை எங்களின் சொந்தப் பணத்தைப் போட்டு வாங்குகிறோம். சட்னி, சாம்பார் செய்ய சரியான காய்கறிகள் தருவதில்லை. சப்பாத்திக்கு வெங்காயத் தயிர்ப் பச்சடி வேணுமே? மாநகராட்சியில் தயிரைக் கொடுத்தே ஆறு மாதங்களாகின்றன. உணவகத்தைச் சுத்தம் செய்யும் துடைப்பம், ‘மாப்’ என மாநகராட்சி வாங்கிக் கொடுத்தே இரண்டாண்டுகள் ஆகின்றன. எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த துடைப்பங்களை வைத்துத்தான் உணவகத்தைச் சுத்தம் செய்கிறோம். பல நேரங்களில் காய்கறி லாரி களுக்கு ‘லோடு’ அடிக்க பணம் கொடுப்பதும் நாங்கள்தான். இந்த லட்சணத்தில் இரண்டு மாதங்களாக சம்பளமும் வரவில்லை. ஊருக்கே சோறு போட்டுவிட்டு நாங்கள் பட்டினியில் கிடப்பதை யாரிடம் சொல்லி அழுவது?’’ என்று கதறுகிறார்கள் ஊழியர்கள்.