சமூகம்
Published:Updated:

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

ரு வாக்குமூலம், ஒரு கைது, நான்கு இன்வாய்ஸ்கள், 200 இ-மெயில் பரிவர்த்தனை கள்... கார்த்தி சிதம்பரத்தை வசமாகச் சிக்க வைத்தவை இவைதான். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சட்டை கசங்காமல் விடுதலை வாங்கிய கார்த்தி சிதம்பரத்தை, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு திஹாருக்கு அனுப்பி யுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த ‘செட்டிநாட்டு இளவரசர்’ கார்த்தி சிதம்பரத்தை, விமான நிலையத்துக்குள் வைத்தே சி.பி.ஐ வளைத்துப் பிடித்தது. 

ஆறு மாதங்களாக நடைபெறாத கைது இப்படி திடீரென நடக்கும் என்று ப.சிதம்பரம் எதிர்பார்க்க வில்லை. இந்தக் கைது குறித்த எந்தத் தகவலும் எட்டாததால், அவர் முதல் நாள் கிளம்பி லண்டன் சென்றுவிட்டார். அந்த அளவுக்கு இந்த ஆபரேஷனை படு சீக்ரெட்டாக சி.பி.ஐ வைத்திருந்தது. 2017 மே மாதம் கார்த்தி சிதம்பரம்மீது சி.பி.ஐ-யும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்ததிலிருந்து தொடர்ச்சி யாக சட்டப் போராட்டங்கள் நடத்தி,  இரண்டு அமைப்புகளையும் திணறடித்துக்கொண்டிருந்தார் அவர். அது மட்டுமல்ல... இரண்டு முறை நீதிமன்றங்களின் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார்.

இதற்கிடையே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பான சி.பி.ஐ-யின் ரகசிய அறிக்கை ஒன்று ப.சிதம்பரத்தின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டிய ரகசிய அறிக்கை இங்கு இருந்ததால், ஆடிப்போனது சி.பி.ஐ. உள்ளிருந்தே ரகசியங்கள் கசிவதை உணர்ந்த சி.பி.ஐ அதிகாரிகள், கைது நடவடிக்கையைப் படு சீக்ரெட்டாக வைத்திருந்தனர். விஷயம் தெரிந்தால் கார்த்தி லண்டனிலேயே தங்கி, முன்ஜாமீன் வாங்குவதற்கு முயற்சி எடுப்பார் என நினைத்தே இவ்வளவு ரகசியம்!

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

பீட்டர் முகர்ஜி, அவரின் மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோர் நடத்திவரும் மீடியா நிறுவனம் ஐ.என்.எக்ஸ். இந்த நிறுவனம், 2007 மார்ச் 15-ம் தேதி, ரூ.4.62 கோடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board-FIPB) அனுமதியை வாங்கியது. ஆனால், அது பெற்ற வெளிநாட்டு முதலீடு ரூ. 305 கோடி. ‘அனுமதிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகமாக இப்படி முதலீடு பெற்றது ஏன்?’ என விளக்கம் கேட்டு, 2008 மே மாதம் FIPB நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘முறைகேடாகப் பெற்ற வெளிநாட்டு முதலீட்டைச் சரிசெய்வதற்கான வழிகளை, அந்த நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் சொல்லிக் கொடுத்தார். அதற்காக பணம் வாங்கினார்’ என்பதுதான் சி.பி.ஐ போட்டிருக்கும் வழக்கு. ‘கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (ASCPL), அதற்காக 10 லட்ச ரூபாய் கட்டணம் பெற்றது’ என்பது சி.பி.ஐ சொல்லும் குற்றச்சாட்டு.

2017 மே மாதம் 15-ம் தேதி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அடுத்த நாளே கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியது. ஆனால், இதைத் தாண்டிய பணப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததை ஒரு வாக்குமூலம் உறுதி செய்தது.

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

சிக்க வைத்த வாக்குமூலம்!

கார்த்தியைக் கைதுசெய்வதைச் சுலபமாக்கியது, இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம். தன் மகளைக் கொலை செய்த வழக்கில் கைதாகி மும்பை சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக உண்மையைச் சொல்லத் தயாரானார். பிப்ரவரி 17-ம் தேதி அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய சி.பி.ஐ., நீதிபதியிடம் அவர் அளித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. கார்த்தியை மட்டுமல்ல, அவரின் அப்பா ப.சிதம்பரத்தையும் சிக்கவைக்கும் வாக்குமூலம் அது.

‘‘வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதுமே, நானும் என் கணவர் பீட்டர் முகர்ஜியும் டெல்லி சென்று, நார்த் பிளாக்கில் இருக்கும் நிதி அமைச்சர் அலுவலகத்தில் ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம். அவர், ‘கார்த்தி சிதம்பரத்திடம் பேசுங்கள். அவரின் நிறுவனங்களுக்கு உதவுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார்’ என்று சொன்னார். அதைத் தொடர்ந்து டெல்லி ஹயாத் ஹோட்டலில் கார்த்தி சிதம்பரத்தைச் சந்தித்தோம். அவர் சொன்னபடி, 10 லட்சம் டாலரை (சுமார் ஆறு கோடியே 50 லட்ச ரூபாய்) வெவ்வேறு கணக்குகளில் செலுத்தினோம். அதில் ஏழு லட்சம் டாலர் வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டது’’ என இந்திராணி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக பீட்டர் முகர்ஜி கையெழுத்திட்ட நான்கு இன்வாய்ஸ்களையும் சி.பி.ஐ கைப்பற்றியுள்ளது. கிரீஸ் நாட்டில் இருக்கும் Geben Trading Ltd, North Star Software Solutions, சிங்கப்பூரில் ASCPL வங்கிக்கணக்கு, UBS S.A நிதி நிறுவனக் கணக்கு என வெவ்வேறு நிறுவனங்களின் கணக்குகளில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்க ளாக இவை உள்ளன.

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

கைதான ஆடிட்டர்!

சரி, இவற்றை கார்த்தி சிதம்பரத்துடன் எப்படி தொடர்பு படுத்த முடியும்? சி.பி.ஐ குற்றம் சாட்டும் எந்த நிறுவனத்துடனும் தனக்குத் தொடர்பு இல்லை என மறுத்த கார்த்தி, விசாரணைக்கு ஆஜராவதைத் தடுக்க நீதிமன்றம் போனார். 2017 ஆகஸ்ட் மாதத்தில் நீதிபதிகள் ஜெ.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல்? அவர் தவறு செய்யவில்லையென்றால், விசாரணைக்கு ஆஜராக வேண்டியது தானே! இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் முழுமையாக விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு முழு சுதந்திரம் அளிக்கிறோம். தேவைப்பட்டால் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்யவும் சி.பி.ஐ-க்கு அனுமதி கொடுக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர். அதன்பிறகுதான், கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போதும் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை.

கார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி!

இதைத் தொடர்ந்து. அமலாக்கத் துறை களமிறங்கியது. கார்த்தி சிதம்பரத்தின் நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கரராமனுக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தைப் போலவே, இந்தக் கைதும் கார்த்தி வழக்கின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அவரின் கம்ப்யூட்டரிலிருந்து பல ஆவணங்களும் 200 இ-மெயில் பரிவர்த்தனைகளும் சிக்கின. ASCPL நிறுவனம் மற்றும் Chess Management Services Pvt. Ltd ஆகியவற்றுடன் கார்த்திக்கு இருக்கும் தொடர்புகளை அவை உறுதி செய்கின்றன. Chess Management நிறுவனத்தின் துணைத் தலைவரான சாய் சந்திரசேகர், வெளிநாட்டு முதலீட்டு அனுமதி தொடர்பாக எழுதிய கடிதங்களையும் சி.பி.ஐ கைப்பற்றியுள்ளது. ‘‘கார்த்திமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது இந்த ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’’ என்கிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள்.

அடுத்து வருகிறது அமலாக்கத் துறை!

சி.பி.ஐ கைது செய்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக அமலாக்கத் துறை வழக்கிலும் கார்த்தி முறைப்படி கைதாவார். 2017 மே 19-ம் தேதியே அமலாக்கத் துறையும் அவர்மீது வழக்கு போட்டிருந்தது. அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தவிர்த்தார். சம்மனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம் வரை போனார். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்தது. பிப்ரவரி 15 மற்றும் 18-ம் தேதிகளில் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மூன்று இடங்களில் ரெய்டு நடைபெற்றது. கார்த்தி முன்ஜாமீன் பெறுவதைத் தடுக்க கேவியட் மனுவையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. எனவே, சி.பி.ஐ விசாரணை முடிந்த பிறகு, அமலாக்கத் துறையும் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக்கூடும்.

இனி, கார்த்தி சிதம்பரத்தால் பல நாள்களுக்கு நிம்மதியாகத் தூங்க முடியாது.

- ஜோ.ஸ்டாலின், டெல்லி பாலா

‘‘அதே கேள்வியைக் கேட்கிறீர்களே?’’

பிப்ரவரி 28-ம் தேதி லண்டனிலிருந்து சென்னை வந்து கார்த்தி இறங்க, டெல்லியிலிருந்து இரவோடு இரவாக சென்னை வந்து விமான நிலையத்தில் காத்திருந்த சி.பி.ஐ குழு அவரைக் கைது செய்தது. அவரது உடைமைகளை உதவியாளர் மூலம் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, அவரை டெல்லிக்கு கொண்டுசெல்ல முடிவு செய்தனர். ஏற்கெனவே டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சம்மன் பெற்றிருந்ததால், அனைத்தும் பிரச்னையின்றி முடிந்தன. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கார்த்தியைக் கூட்டிச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், ‘பிசினஸ் கிளாஸ் சீட்டில்தான் பயணிப்பேன்’ என்று கார்த்தி அடம்பிடிக்க, பின்னர் 10.30 மணி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி கூட்டிச் சென்றனர்.

டெல்லி சி.ஜி.ஓ காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்துக்கு மூன்று மணிக்குக் கூட்டிவரப்பட்ட கார்த்தி, தனி அறையில் உட்கார வைக்கப்பட்டார். பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் கார்த்தியை ஆஜர்செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இரண்டு மணிக்கே நீதிமன்றம் வந்துவிட்டார். அவருடன் வழக்கறிஞர்கள் தயால் கிருஷ்ணன், அருண் நடராஜன் மற்றும் கார்த்தியின் உறவினர்கள் சிலரும் காத்திருந்தனர். ஆனால், கார்த்தி டெல்லிக்கே தாமதமாக வந்ததால், சி.பி.ஐ நீதிபதி புறப்பட்டுவிட்டார். பின்னர், பெருநகர நீதிபதி சுமித் ஆனந்த் அறைக்கு மாலை 4.45 மணிக்கு அழைத்து வரப்பட்டார். முக்கால்வாசி பத்திரிகையாளர்கள், கால்வாசி வழக்கறிஞர்கள் என்று நிற்க இடமில்லாமல் கூடியிருந்தனர். நிருபர்களைப் பார்த்து வழக்கமான சிரிப்புடன், ‘‘ஹாய்’’ என்று கார்த்தி கையசைத்தார். அபிஷேக் சிங்வி அப்போது கார்த்தியிடம் பேச முற்பட, சி.பி.ஐ அதிகாரிகள் தடுத்தனர். 5 மணிக்கு நீதிபதி வந்தவுடன், இரண்டு நிமிடங்கள் கார்த்தியுடன் பேச சிங்வி அனுமதி கேட்டார். அனுமதித்துவிட்டு நீதிபதி தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

நீதிமன்றத்தின் கடைசி இருக்கையில் இருவரும் அமர்ந்து பேசத்தொடங்கினர். அப்போது, கைது விவரங்களை சிங்வியிடம் கார்த்தி அமைதியாக விவரித்தார். டெல்லி வந்த பிறகு நேராக சி.பி.ஐ அலுவலகம் செல்லாமல் எங்கெங்கோ தன்னை காரில் வைத்து சுற்றியதாக சிரித்தபடியே சொன்னார். 10 நிமிடங்கள் கழித்து நீதிபதி வர, விசாரணை தொடங்கியது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, கார்த்தியின் அம்மா நளினி சிதம்பரம், வழக்கறிஞர் உடையைத் தவிர்த்து நீதிமன்ற அறைக்குள் சாதாரண உடையில் வந்தார். நின்றுகொண்டிருந்த கார்த்தியின் கைகளைப் பிடித்தபடி கண்கலங்கினார். கார்த்தி ரகசியமாக அம்மா காதில் ஏதோ சொன்னார். அதன்பின் இருவரும் வாதங்களை கவனிக்கத் தொடங்கினர்.

சி.பி.ஐ வழக்கறிஞர் வி.கே.ஷர்மா, ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான், விசாரணைக்கு கார்த்தி ஆஜரானார். வெளிநாடு செல்லுமுன் எங்கெல்லாம் செல்கிறார், யாரைச் சந்திக்கப் போகிறார் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியும் அதை அவர் பின்பற்றவில்லை. இவை குறித்தெல்லாம் விரிவாக விசாரிக்க வேண்டும். கார்த்தி, ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, 15 நாள்கள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்’’ என்று கேட்டார்.

அதைத் தொடர்ந்து, 20 நிமிடங்கள் நீதிமன்றத்தை ஒத்திவைத்த நீதிபதி, ஒரு மணி நேரம் கழித்து வந்தார். அதுவரை கார்த்தி தன் அம்மா நளினியுடனும் வழக்கறிஞர்களுடனும் நீதிமன்ற அறையிலேயே பேச வாய்ப்பு கிடைத்தது. பெருநகர நீதிமன்ற நீதிபதி, அதிகபட்சமாக ஒரு நாள்தான் காவல் வழங்க முடியும் என்பதால், வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிவரை சி.பி.ஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். கார்த்தியை நீதிமன்ற அறையிலிருந்து கொண்டு செல்வதற்கு முன்பாகவே உறவினர்கள், ஜூனியர் வழக்கறிஞர்களுடன் அறையிலிருந்து வெளியேறினார் நளினி சிதம்பரம். பின்னர், கார்த்தியை இ்னோவா காரில் ஏற்றினார்கள். அந்த கார் நளினியைக் கடந்து செல்ல, அவர் அவசரமாகக் கையசைத்து விடைகொடுத்தார்.பதிலுக்குக் கார்த்தியும் சைகையால் விடைபெற்றார்.

நீதிமன்ற அறிவுரைப்படி, மருத்துவப் பரிசோதனைக்கு சப்தர்ஜங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டார் கார்த்தி. ‘தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று கார்த்தி சொன்னபோதும், அவரை கார்டியாக் கேர் பிரிவில் இரவு முழுவதும் வைக்க அறிவுரை வழங்கியிருக்கிறார்கள் டாக்டர்கள். மறுநாள் காலை 7.57 மணிக்குதான் டிஸ்சார்ஜ் செய்தனர். அதன்பின் சி.பி.ஐ அலுவலகம் கொண்டுசெல்லப்பட்ட கார்த்தி, அங்கு காலை உணவு உட்கொண்டார். பிறகுதான் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவர்களிடம், ‘‘அமலாக்கத் துறை கேட்ட அதே கேள்விகளைத்தான் நீங்களும் கேட்கிறீர்கள்’’ என்று கார்த்தி அலுத்துக் கொண்டாராம்.