Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

விகடன் விமர்சனக்குழு

கம்பேரிஸன் கோவாலு!

பிரீமியம் ஸ்டோரி

ரசியல்வாதிகளுக்குள் மட்டுமல்ல, நமக்குள்ளும்தான் ‘மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி’ என்ற அந்நியன் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகள் மாற்றிப் மாற்றிப் பேசுவது போலவே நாமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அது ஒன்றும் தெர்மாகோலை மிதக்க விடுவதுபோல அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. நீங்களே பாருங்க!

கம்பேரிஸன் கோவாலு!

காலை ஏழு மணி - கலா ரசிகர்:

எழுந்ததும் கண்ணில்படும் இரங்கல் செய்தி பார்த்து கண்கட்டும். உடனே சோஷியல் மீடியா பக்கம் போக கை பரபரக்கும். மறைந்தவர்களின் விக்கிப்பீடியா, இன்ஸ்டா பக்கங்களில் ஒரு ரவுண்டு வந்து, அவர்களின் கலைச்சேவையைப் பாராட்டி ஒரு பெரிய போஸ்ட் போடவேண்டும். முடிவில் #RIP அவசியம்.

காலை 10 மணி - மனிதநேயர்:

அடுத்த மூன்றே மணி நேரத்தில் போர் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகும். உடனே ‘கூத்தாடிக்கு இரங்கலா? இந்தக் குழந்தைகளைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா?’ என மீம்ஸ் போடவேண்டும். கடைசியாக ‘ஐ.நா-வுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்’ என்ற பன்ச் மிக முக்கியம். தற்செயலாகப் போர்நிறுத்தம் நடந்தால் ‘பாஸ், நீங்க சீப்பா போட்ட பிளானை நாங்க சீப்பை வெச்சே நடத்திட்டோம் பாத்தீங்களா?’ எனப் போரை நிறுத்தியதற்காகப் பெருமை மீம் போடவேண்டும்.

மதியம் 2 மணி - அரசியல் விமர்சகர்:

இதற்குள் போர் தொடர்பான கூகுள் பக்கங்களை ஒரு ரவுண்டு வந்து, ‘ஆசாத் அப்படித்தான், அமெரிக்கா இப்படித்தான்’ எனச் சுடச்சுட பதியவேண்டும். ‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஏ ரஷ்ய ராணுவமே’ போன்ற ஹை பி.பி எண்ட் பன்ச்கள் மிக அவசியம்.

மாலை 5 மணி - கலாசாரக் காவலர்:

இதற்குள் காலையில் நிகழ்ந்த இறப்பில் டி.வி மீடியாக்கள் புண்ணியத்தில் ஏதாவது சர்ச்சை மேட்டர் சிக்கியிருக்கும். உடனே காலையில் கொட்டிய அத்தனை பாசத்தையும் மறந்த இரங்கற்பாவை கண்டன அறிக்கையாக மாற்றவேண்டும். ‘இந்தியக் கலாசாரமென்பது யாதெனில்’ என வாட்ஸ் அப் புதையலில் தேடியெடுத்த மொக்கை மெசேஜை எல்லாருக்கும் அனுப்பிக் கலாசாரம் கெடாமல் கேட் போடவேண்டும்.

இரவு 8 மணி - துப்பறிவாளன்:

இரவு டின்னருக்குப் பின், ‘அதாவது இப்ப அந்தச் சம்பவம் எப்படி நடந்திருக்கும்னா...?’ எனத் திரைப்பட விமர்சனம்போல லாஜிக் மிஸ்டேக்குகளை நோட் செய்யவேண்டும். முடிந்தால் அதே பிராப்பர்டிகளைப் பயன்படுத்தி அப்படியே நடித்தும் காட்டலாம்.
 
இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும் தூங்கப்போனால்தான், நாளை காலை கிளம்பி வரப்போகும் புதுப் பஞ்சாயத்துகளுக்கு மதிப்பளிக்க வாய்ப்பு இருக்கும்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு