தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

கறுப்பு வெள்ளை

கறுப்பு வெள்ளை
பிரீமியம் ஸ்டோரி
News
கறுப்பு வெள்ளை

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

து நடந்தது 1950 ஜனவரி 27 அன்று. மதியம் 2:45 மணி. நான்கு பேருக்குமே நல்ல பசி. `தாம்சன் ரெஸ்டாரன்ட்'டின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்துகொண்டு ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் அமைந்திருந்தது அந்தப் பாரம்பர்யமிக்க உணவகம்.  

கறுப்பு வெள்ளை

இருப்பதிலேயே மூத்தவர், வில்லியம் ஜெர்னாகின். ஐந்தடி உயரம். கிட்டத்தட்ட 90 வயது. ஒரு தேவாலயத்தில் நாற்பதாண்டு களாக ஆயராக இருந்துவருகிறார். ஒரு கேக் துண்டை எடுத்துக் கையில் ஏந்தியிருந்த தட்டில் போட்டுக்கொண்டு, அடுத்த மேஜையை நோக்கி நகர்ந்தார். அவருக்கு அடுத்து, ஜெனினா பிரவுன் என்னும் மெலிந்த பெண். இந்த இருவரையும் தொடர்ந்து தனது தட்டை கையில் எடுத்துக்கொண்டார், மேரி சர்ச் டெரில். அந்தக் குழுவின் நான்காவது நபர், டேவிட் ஸ்கல்.

ஸ்கல்லுக்குப் பக்கத்து இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்துகொண்டார் மேரி. கம்பீரமான உருவம். வளையாத முதுகு. தும்பைப்பூபோல வெளுத்த தலைமுடி. வயது 86.  அறுபது ஆண்டுகளாக வசித்துவருவதால், வாஷிங்டன் நகரின் ஒவ்வொரு மூலையும் அவருக்கு அத்துப்படி. புவியியல் மட்டுமல்ல; அதன் வரலாறும் தெரியும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் கலப்பினத்தவர்களும் பல தலைமுறைகளாக அமெரிக்காவின் வளர்ச்சிக்காக உயிரைக்கொடுத்து உழைத்துவந்தபோதும், அமெரிக்கா அவர்களை இடது கையால் கவனமாக ஒதுக்கி வைத்திருப்பதை அவர் அறிவார்.

மேரியின் அப்பா அம்மா இருவருமே கலப்பினத்தவர்கள்; அடிமைகளாக இருந்தவர்கள். பிறகு, அதே அமெரிக்காவில் முனைப்புடன் தொழில்புரிந்து பெரும் பணக்காரர்களாக உயர்ந்தவர்களும்கூட.

``மேரி, நாங்கள் அடிமைகளாக இருந் தவர்கள். உடல் உழைப்பே எங்கள் மூல தனம். நீ எங்களைப்போல உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. ஏழு தலைமுறைகளுக்கும் சேர்த்து நாங்கள் இருவரும் முதுகு வளைத்து விட்டோம். உன்னுடைய பலம் கல்வியாக இருக்க வேண்டும். பணம் ஈட்டுவதற்கும் சரும நிறத்துக்கும் தொடர்பில்லை என்பதை நாங்கள் மெய்ப்பித்துவிட்டோம். கற்பதற்கு நிறம் தடையல்ல என்பதை நீ மட்டுமே நிரூபிக்க முடியும்'' என மேரிக்கு அறிவுரை கூறினர் பெற்றோர்.

மேரிக்கு, இப்படிப்பட்ட உணர்வு பூர்வமான அறிவுரைகள் தேவைப்படவில்லை. நெருப்பைப்போல் பசியுடன் வாசித்த எல்லா வற்றையும் உள்ளிழுத்துக்கொண்டார் அவர். குறிப்பாக, இலக்கியத்தின் மீதான அவர் காதல், கடனே எனப் படித்துக்கொண்டிருந்த மற்ற மாணவர்களிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டியது. தயங்காமல், அஞ்சாமல் முன்னால் பாய்ந்துசென்றார் மேரி.
1884-ம் ஆண்டு மேரி ஒரு பட்டதாரியாக வெளியே வந்தபோது, அவருக்கு எதுவுமே வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கராக வரலாறு அவரைப் பதிவுசெய்து கொண்டது.

கறுப்பு வெள்ளைபள்ளிக்கூடத்தில் பணியாற்றினார். உயர் படிப்புக்கு ஐரோப்பா சென்றார். இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ராபர்ட் ஹெபெர்டன் டெரெல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பிறகு, வாஷிங்டனின் முனிசிபல் நீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேரியின் பெற்றோர் விருப்பப்பட்டது எல்லாமே நடந்துவிட்டன. வளமான எதிர்காலம். நல்ல வேலை, நிறைவான சம்பளம், சமூகத்தில் மதிப்புமிக்க ஓர் இடம், குதூகலமான குடும்பம், கொஞ்சி மகிழ குழந்தைகள். `வேறென்ன வேண்டும்? என் சருமத்தின் நிறத்துக்கும் நான் கொண்டிருக்கும் லட்சியங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உலகுக்கு நிரூபித்தாகிவிட்டது. இதைவிடவும் நிறைவான வாழ்க்கை கிடைத்துவிடுமா?'

அப்போதுதான் பிரெட்ரிக் டக்ளஸ், புக்கர் டி வாஷிங்டன் இருவரையும் சந்திக் கும் வாய்ப்பு மேரிக்குக் கிடைத்தது. புக்கர் டி வாஷிங்டனின் பெற்றோர் அடிமைகளாக இருந்தவர்கள். பிரெட்ரிக் டக்ளஸ், அடிமை
வாழ்விலிருந்து தப்பியோடி வந்தவர். இருவருமே அணையாத நெருப்புடன் உழைத்து வளர்ந்தவர்கள்; தனிப்பட்ட முறையில் செல்வாக்குமிக்க தலைவர்களாகத் திகழ்பவர்கள். `அவர்களுக்கு என்னைப் போலவே எதற்கும் குறைவில்லாத நிறைவான வாழ்க்கை. இருந்தும் அவர்கள் ஏன் போராட்டத்தைத் தங்கள் வாழ்நாள் பயணமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்?'

டக்ளஸுடன் உரையாடியபோது தெளிவு கிடைத்தது. ``மேரி, அமெரிக்கா என்பது ஒரு தேசம் அல்ல. அது வெள்ளை அமெரிக்காவாகவும் கறுப்பு அமெரிக்கா வாகவும் பிளவுண்டு கிடக்கிறது. அருகருகில் இருந்தாலும் இந்த இரு உலகங்களும் தனித்தனியே பிரிந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீ படித்ததைப் போன்ற ஒருசில பள்ளிகள் தவிர, பெரும்பாலான பள்ளிகளில் நம் குழந்தைகளுக்கு அனுமதி யில்லை. பணியிடங்களில் கறுப்பர்களுக்கு இடமில்லை. நீ என்னதான் படித்திருந்தாலும், எவ்வளவு சாதித்திருந்தாலும் உன்னை அவர்கள் உலகுக்கு வரவேற்க மாட்டார்கள். உன் திறமைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உன் நிறமே நீ. உன் நிறமே உன் குணம். உன் நிறமே உன் வரலாறு.
உன் நிறமே உன்னுடைய கடந்தகாலமாகவும் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது. அதன் அடிப்படையில் மட்டுமே நீ மதிப்பிடப்படு வாய். `நான் எவருக்கும் அடிமையில்லை' என நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால், நீ உன் கறுத்த உடலுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கிறாய். வெள்ளை அமெரிக்காவுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறாய். நீ என்பது நீ மட்டுமல்ல, உன் இனம். உன் மக்களை விடுவித்தால்தான் உனக்கு விடுதலை கிடைக் கும். உன் மக்களின் ஏழ்மை ஒழிந்தால்தான் உன் ஏழ்மை ஒழியும். உன் மக்கள் கல்வி கற்றால்தான் நீ கற்றவளாக மாறுவாய். உன் மக்கள் அங்கீகரிக்கப்பட்டால்தான் உனக்கு அங்கீகாரம் கிடைத்ததாகப் பொருள். எனவே, உன் மக்களுக்கான போராட்டமே உனது போராட்டமாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

எனில், தான் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கியாக வேண்டும் என்பதை உணர்ந்தார் மேரி சர்ச் டெரில். டக்ளஸ் குறிப்பிட்ட இன்னோர் அமெரிக்காவுக்கு, விரிவான பயணங்கள் மேற்கொண்டார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் நிஜம் என்பது புரிந்தது. டக்ளஸின் போராட்டங்களுடன் தன்னையும் அவர் இணைத்துக்கொண்டார். `கல்வியே விடுதலைக்கான சாவி. என்னை விடுவித்தது அதுதான் என்பதால், என் மக்களையும் அதுவே விடுவிக்கும்' என்று அவர் நம்பினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் கலப்பினத்தவர்களுக்கும் தொடக்கக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை அனைத்தும் கிடைப்பதை வலியுறுத்தும் அரசியல், சமூக இயக்க அமைப்புகளைத் தொடங்கினார். நிறம் மட்டுமல்ல, பாலினமும் மக்களைப் பிளவுபடுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்து, கறுப்பினப் பெண்களின் அரசியல், சமூக உரிமைகளை நிலைநாட்டும் அமைப்புகளையும் தொடங்கினார்.

கறுப்பு வெள்ளைகொலம்பியா மாநில அரசின் கல்வித் துறையிலிருந்து டெரிலுக்கு அழைப்பு வந்தது. `இந்தப் பணியைப் பெற்றிருக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் நீதான் மேரி' என்று உடன் இருந்தவர்கள் பாராட்டிய போது, அவர்களுடைய மகிழ்ச்சியை மேரியால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. பெர்லினில் சர்வதேசப் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டபோது, அதில் பங்கேற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணாகவும் மேரியே திகழ்ந்தார். இப்படித் தொடர்ந்து பல `முதல்'கள் மேரியைத் தேடிவந்தன. எனில், `இங்கெல்லாம் இதுவரை என் மக்கள் கால் பதிக்கவில்லை என்றுதானே பொருள்? என் போராட்டங்களை இங்கெல்லாம் நான் விரிவுபடுத்த வேண்டும் என்றல்லவா அர்த்தம்? என் பணிகள் வளர்ந்துகொண்டே போகின்றன என்றல்லவா இதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்? இதற்கெல்லாம் ஒரு வாழ்நாள் போதுமா?'

``என்ன மேரி, சாப்பிடும்போது என்ன யோசனை?'' என்று கேட்ட நண்பர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி ``ஒன்றுமில்லை'' என்றார் மேரி. டேவிட் ஸ்கல் சட்டென எழுந்து நின்றார். அந்த நால்வரில் அவர் மட்டுமே வெள்ளையர். தொலைவில் ஒரு வெயிட்டரும் மேனேஜரும் தங்களைச் சுட்டிக் காட்டியபடி ஏதோ பேசிக்கொண்டிருந்ததை அவர் கண்டார்.

மேனேஜர் நேராக நடந்துவந்து ஜெர்னா கினின் நடுங்கும் உடலிடம் உரையாடினார். ``மன்னிக்கவும், எங்கள் ஹோட்டலில் கறுப்பின மக்கள் உணவருந்த முடியாது. தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எனக்கு எந்தவித விரோதமும் கிடையாது. ஆனால், இது எங்கள் நிறுவனத்தின் கொள்கை. என்னால் எதுவும் செய்ய இயலாது. தயவுசெய்து நீங்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேறுங்கள்'' என்றார்.

நால்வரும் வெளியே வந்தனர். பசி, சோர்வு, கோபம். எல்லாவற்றுக்கும் மேலாக அவமானத்தையும் அவர்கள் சுமந்த படி நடந்தனர். ``கவலைப்படாதீர்கள் நண்பர்களே!'' என்றார் மேரி நடை போட்டபடி. அவர் நடையில் சிறு துள்ளல் தோன்றியிருந்தது. ``என் வேலை தொடங்கிவிட்டது. நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போங்கள். அமெரிக்காவில் வேறு எந்தெந்த உணவகங்களில் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நடைமுறை இருக்கிறது என்று ஆராய வேண்டும். அவர்கள் அனைவர் மீதும் வழக்கு போட வேண்டும். அவர்கள் அத்தனை பேரையும் மாற்ற வேண்டும். என் போராட்டத்துக்கு முடிவே இல்லை'' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென முன்நோக்கி நடக்க ஆரம்பித்தார் மேரி.