Published:Updated:

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

Published:Updated:
ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

லக்கிய உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் கவிஞர் கலாப்ரியா என்ற சோமசுந்தரம் பசுமை நிறைந்த தன் சொந்த ஊர் இடைகால் பற்றி தன் இனிமையான நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!
##~##

''தென்காசிக்கும் கடையநல்லூருக்கும் இடையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்தான் இடைகால். சில இரட்டை நகரங்கள்போல, நயினாரகரமும் இடைகாலும் இரட்டைக் கிராமங்கள். கறுப்பாநதி ஆறும் அதன் மீது உறங்கும் பாலமும்தான் இந்த இரு கிராமங்களையும் பிரிக்கிறது. ஊருக்கு இடையே ஓடும் கால்வாய் ஒன்றுதான் ஊரின் பெயருக்குக் காரணம்.

ஊருக்கு நேர் மேற்கே இருக்கும் ஆரியங்காவுக் கணவாய் வழியே வரும் தென்மேற்குப் பருவக் காற்று சித்திரை 10-லேயே வீசத்தொடங்கி, கத்தரி வெயிலையே இல்லாமல்செய்துவிடும். இன்று வயலையும் பசுமையையும் அழித்து எழுந்து நின்றுகொண்டு இருக்கும் காற்றாலைகளைச் சுழலச் செய்வதும் அதுதான்.

இடைகாலின் சிறப்பு, அதன் பசுமைதான். ஊரின் பசுமையும் தூய்மையும்தான் தாமிரபரணியையும் என் பிரியத்துக்கு உரியவளையும் பிரிந்ததைச் சற்றே மறக்க வைத்தது. அனேகமாக எல்லோரும் விவசாயிகள் தான். எங்கள் வீட்டுக்கு எதிர்ப் பகுதிகளில் எல்லாம் சுமார் 100, 150 மாடுகள் கொட்டகைகளில் கட்டப்பட்டு இருக்கும். பால், தயிர், மோருக்குப் பஞ்சமே கிடையாது. வீட்டுக்கு அருகே இருந்த களத்தில் செக்கச்செவேலென்று மிளகாயோ, வெண்மையாய்க் கடல் நுரைபோல் பருத்தியோ காய்ந்துகொண்டு இருக்கும். பார்க்க ஆச்சர்யமும் மனத்துக்கு நிறைவாகவும் இருக்கும். என் இளம்பிராயத்தில் சினிமா பார்க்க தென்காசிதான் போக வேண்டும். பெரும்பாலும் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு, ராத்திரி 2 மணிக்குக் கிளம்பும் ஒரு பாசஞ்சர் ரயிலில் நயினாரகரம் ஸ்டேஷனில் இறங்கி, அங்கு இருந்து நடந்து வருவோம். அது அழகான ஸ்டேஷன். என்னைப் பார்க்க வருகிற இலக்கிய நண்பர்கள் பலரை அங்கே அழைத்துச் சென்று இருக்கிறேன்.

ராஜஸ்தான் சேவகர் தந்த திருநெல்வேலி அல்வா!

இடைகாலுக்குப் பக்கத்தில் உள்ள சொக்கம்பட்டி ஜமீனுக்கு வருகை தந்த ஒரு ராஜஸ்தான் சேவகர் செய்துகொடுத்த ஒரு வகை இனிப்புப் பண்டம்தான் இன்றைய 'திருநெல்வேலி அல்வா’. கடையநல்லூருக்கு அருகில் மங்களாபுரத்தில் ஆரம்பித்த 'ருக்சன்ஸ்’ டூரிங் டாக்கீஸுக்கு சைக்கிளில் போய்த் திரும்புவோம். 'ரதிநிர்வேதம்’, 'ஈட்டா’ மலையாளப் படங்கள் எல்லாம் அப்படிப் பார்த்ததுதான். அப்புறம் இடைகாலிலேயே டூரிங் டாக்கீஸ் வந்துவிட்டது. நண்பர்களுடன் இலத்தூர், ஆயக்குடி என டூரிங் டாக்கீஸுக்கும் கோயில்களுக்கும் போய் வருவோம்.  

இடைகால் என்றால் நினைவுக்கு வருகிற பெயர், ஏ.ஆர்.சுப்பையா முதலியார்தான். அவர் மூன்று முறைக்கு மேல் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அரசியல்வாதிகளில் ஒழுக்கத்துக்கும் நாணயத்  துக்கும் பெயர்போனவர் ஏ.ஆர்.எஸ். எனக்கு அதிகாரம் இருந்தால், நாணயத்தில் அவர் உருவத்தைப் பொறிப்பேன். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, இடைகால் மீனாட்சி சுந்தரம் மேல்நிலைப் பள்ளியைக் கொண்டுவந்தது அவருடைய சாதனை. அவரைப்போல நயினாரகரம் தியாகி கிருஷ்ணசாமி பாரதியும் அவருடைய மகன் லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ்ஸும் முக்கியமானவர்கள். தியாகி கிருஷ்ணசாமி பாரதி, இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவில் அம்பேத்கருடன் உறுப்பினராகப் பணியாற்றியவர். இடைகால் ஆற்றில் எப்போதும் குறைந்தது அரையடி நீராவது ஓடும். மெரினா பீச்போல அப்படி ஒரு மணல் விரிப்பு. அதில் அமர்ந்து பீர் முகம்மது, முத்தப்பா போன்ற தோழர்களுடன் இசை பற்றிப் பேசி, என் சங்கீத அறிவைச் சற்றே வளர்த்த வளர்பிறை நிலவு எல்லாம் எங்கே தேய்ந்தன என்று தெரியவில்லை. ஆற்றின் மணலைப்போல அதையும் யார் கொள்ளையடித்தாரோ? இங்குதான் என் குழந்தைகள் அனைவரும் பிறந்தனர். இங்கிருந்துதான் என்னுடைய 10-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களும், கட்டுரைத் தொகுப்புகளும் வெளி வந்து இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய 'எட்டயபுரம்’ குறுங்காவியத்தின் பின்புலமும் களனும் மாந்தர்களும் இடைகால் மனிதர்கள்தான். என் வாழ்வை முழுமையாக ஆக்ரமித்து இருக்கிறது இடைகால்!''

  • 1975-ல் இருந்து இன்றுவரை வெளிவந்து உள்ள எல்லா வாரப் பத்திரிகைகள், புத்தகங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்து உள்ளார் கலாப்ரியா.
     
  • 1987-ல் இருந்து 'குற்றாலம் பதிவுகள்’ கவிதைப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்துவருகிறார்.
     
  • 10 கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் என  இதுவரை 13 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இப்போது எழுதிக்கொண்டு இருக்கும் நாவலின் பெயர் 'வேனல்’!

- இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்