தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

கண்ணே கலைமானே!ஆர்.வைதேகி - படம் உதவி : ஞானம்

`‘ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக எல்லோரும் அழுகிறார்கள்... புலம்புகிறார்கள். எனக்கென்னவோ, அவர் எங்கிருந்து வந்தாரோ, அங்கேயே திரும்பிச் சென்றுவிட்டதாகத்தான் தோன்றுகிறது. அவர் இந்த லோகத்தில் இருந்திருக்க வேண்டியவரே இல்லை...’’ - தன் பால்ய காலத் தோழி ஸ்ரீதேவியின் இறப்பு பற்றி இப்படித்தான் சொல்கிறார் வீணை காயத்ரி.  

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

ரசிகர் உலகமே சோகத்தில் ஆழ்ந்திருக்க, காயத்ரியின் நினைவுகள் எப்போதும்போலவே ஸ்ரீதேவியைச் சுற்றி சந்தோஷமாக உலவிக்கொண்டிருக்கின் றன. இனி காயத்ரியே நினைவுகூர்கிறார்...

‘`ஸ்ரீதேவி என்னைவிட நான்கு வயது இளையவர். வாண்டுமாமா பத்திரிகைக்காக பேபி காயத்ரி - பேபி ஸ்ரீதேவி சந்திப்பு  என எங்கள் இருவரையும் சந்தித்துப் பேச வைத்தார்கள். எங்கள் வீட்டில்தான் போட்டோ ஷூட் நடந்தது. அந்த முதல் சந்திப்பில் நாங்கள் பேசிக்கொண்ட அத்தனை விஷயங்களும் இன்றும் எனக்கு மறக்கவில்லை. நான் வரைந்த படங்களை அவரிடம் காட்டினேன். அவர் நடித்துக்கொண்டிருந்த படங்கள் பற்றி என்னிடம் பேசினார். ஊஞ்சலில் உட்கார்ந்து விளையாடினோம். பேட்டி, போட்டோ ஷூட்டெல்லாம் முடிந்ததும் நாங்கள் தனியே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஸ்ரீதேவி என்னிடம், ‘நீங்க வயசுக்கு வந்துட்டீங்களா?’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘அப்படின்னா என்ன?’ எனக் கேட்டார். அந்தக் குழந்தைத்தனத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது. அப்படியோர் அப்பாவிப்பெண் அவர்.

முதல் சந்திப்பிலேயே ‘நடிப்புல பெரிய ஸ்டாராயிடணும். அதுதான் என் லட்சியம்’ என்று சொன்னார். அதைச் சாதித்தும் காட்டினார்.  

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

போன் கிடையாது என்பதால் எங்களால் அடிக்கடி பேசிக்கொள்ள முடியவில்லை.  நான் அப்போது சினிமா ரெக்கார்டிங்குகளுக்கு வாசித்துக்கொண்டிருந்தேன். ஜி.கே. வெங்கடேஷ் ரெக்கார்டிங்... அதே ஸ்டுடியோவில் ஸ்ரீதேவிக்கு ஷூட்டிங். அங்கே மறுபடி சந்தித்துப் பேசினோம்.

ஒருமுறை சாந்தி தியேட்டரில் ‘கபி கபி’ இந்திப் படம் பார்க்கப் போயிருந்தேன்.  இன்டர்வெல்லில் லைட் வெளிச்சத்தின்போதுதான் எனக்கு முந்தைய வரிசையில் ஸ்ரீதேவி, அவரின் அம்மா, தங்கையுடன்  உட்கார்ந்திருந்ததைக் கவனித்தேன். ஹீரோயினாக அவர் நடித்த ‘மூன்று முடிச்சு’ ரிலீஸான நேரம் அது. மெள்ள பிரபலமாகத் தொடங்கியிருந்தார். குழந்தையாகப் பார்த்த ஸ்ரீதேவிக்கும் அப்போது நான் பார்த்த ஸ்ரீதேவிக்கும் அத்தனை வித்தியாசங்கள்... தேவதை போல பேரழகியாக மாறியிருந்தார். தோற்றத்தில்தான் மாறியிருந்தாரே தவிர, பேச்சிலும் பழகும் விதத்திலும் அப்படியே இருந்தார். அதன் பிறகு நான் கச்சேரிகளிலும் ஸ்ரீதேவி படங்களிலும் பிஸியாகிவிட்டோம்.

பல வருடங்கள் கழித்து ஒருமுறை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்தேன். கூப்பிடும் தூரத்தில் இல்லை என்பதால் தொலைவில் இருந்தே அவரை ரசித்தேன். 100 சதவிகிதம் பாலிவுட் ஸ்டாராகவே மாறியிருந்தவர், இன்னும் அழகாகியிருந்தார்.   

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

நான் தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான போது, அந்தப் பல்கலைக் கழகத்தில் சினிமாத் துறையும் சேர்க்கப்பட்டிருந்தது. விழாக்களுக்குப் பெரிய திரைப் பிரபலங்களை அழைத்திருக் கிறேன். ஸ்ரீதேவியை ஒருமுறை அங்கே வரவழைக்க வேண்டும் என்றொரு பெருங்கனவு இருந்தது. ஆனால், அது கனவாகவே கலைந்துவிட்டது. ஒருவேளை நான் அந்தப் பதவியில் நீடித்திருந்து, ஸ்ரீதேவியும் உயிருடன் இருந்திருந்து, என் கனவு நனவாகி, பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் அவர் எப்படிப் பேசியிருப்பார் என்கிற வரை ஊகிக்க முடியும். நிச்சயம் அவரிடம் கர்வம் இருந்திருக்காது. அதே எளிமையுடன் இருந்திருப்பார்.

ஸ்ரீதேவியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கொன்று தோன்றும். ‘காரணஜென்மா’ என்பார்கள். `ஒரு காரணத்துக்காக ஒரு பிறவி'  என அர்த்தம்.  நடிப்பதற்கென்றே பிறவி எடுத்தவர் ஸ்ரீதேவி. கந்தர்வலோகம் என்றொன்று உண்டு. அந்த உலகின் கந்தர்வ ஸ்த்ரீ அவர். ஆங்கிலத்தில் ‘செலஸ்டியல் பீயிங்’ என்று சொல்வார்கள். அவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர். தேவ மனிதர்கள். ஸ்ரீதேவி அப்படியோர் உலகத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றும். வெறும் நடிகையாக மட்டுமே அவரை நான் இப்படி நினைக்கவில்லை. அதைத் தாண்டிய ஏதோ ஒரு தெய்விக சக்தி அவரிடம் உண்டு. அதற்கான நிரூபணம்தான் அவரது இறுதிச் சடங்கில் கூடிய மக்கள் கூட்டம்.  

எந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி

அவரின் இறப்புக்குக் காரணமாகக் கிளப்பிவிடப் படுகிற செய்திகள் வேதனை யளிக்கின்றன. ஒருவர் பிரபலமாக மாறும்போது அவருக்கே தெரியாத விஷயங்களை யார் யாரோ கிளப்பிவிடுவார்கள். எனக்கே அப்படிப்பட்ட அனுபவம் உண்டு என்றால், செலுலாய்டு உலகின் ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி  எத்தனை சர்ச்சைகளைச் சந்தித்திருப்பார்?

இன்று அவரது இறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படுகிற விஷயங்களைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அதில் எனக்கு எந்தவித கருத்தும் இல்லை. ஸ்ரீதேவியின் மீதான என் அபிமானத்தை இதுபோல எத்தனை செய்திகள் வந்தாலும் மாற்ற முடியாது. அது அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட அன்பு. ஸ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. அவருடன் தொடர்பில் இல்லாத காலத்தில் தூர இருந்து எப்படி ரசித்துக்கொண்டிருந்தேனோ, அந்த ரசனை என்றும் மாறாது.’’