தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”

“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”

அவளும் நானும் நானும் அவளும்உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) கே.சந்துரு

அவளும் நானும்

``இ
ன்று நேற்றா... ஐம்பதாண்டு தொடர்பு. எனக்கு அவளைத் தெரியும். ஆனால், அவளுக்கு என்னைத் தெரியாது. நான் நேரில் பார்த்தால்கூட ஒரு புன்னகையுடன் சரி. அவள் என்னை மறந்துவிட்டாள்... எல்லோ ரையுமே மறந்துவிட்டாள். இதென்ன ஒருதலைக் காதலா? எதற்கு இந்தப் பீடிகை? 

“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”

நான் கல்லூரி வாழ்க் கையைத் தொடங்கிய முதலாண்டு. அந்த ஆண்டு முதலே அவளுடன் ஒரு நீண்ட அரசியல் பயணம் தொடங்கியது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள் என்று பல நிகழ்ச்சிகள்... துண்டுப்பிரசுரங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் என்று கூட்டு முயற்சிகள் தொடர்ந்தன.

அறுபதுகளில் ஒரு நாள். கடும் காய்ச்சல். தனியறையில் யார் துணையுமின்றி, கிடைத்த மாத்திரைகளை விழுங்கிவிட்டு, அரை மயக்கத்தில் நாள்கள் கடந்தன. நண்பர்களிடம் சொல்வதற்குக்கூட முடியவில்லை. மூன்றாம் நாள் மதியம் யாரோ கதவைத் தட்டுவது சன்னமாகக் கேட்டது. கஷ்டப்பட்டுக் கதவைத் திறந்துபார்த்தால், அவள் நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் ஒரு பொய்க்கோபம். `நாங்களெல்லாம் இல்லாமல் போய்விட்டோமா? இப்படி சொல்லாமல் இருக்கலாமா?’ என்று ஒரு செல்லக் கடிதல். காய்ச்சல் பறந்துபோனது. இரண்டு நாள்கள் தகவல் இல்லை என்றவுடன் பதைத்துக்கொண்டு வீடு தேடிவந்த அந்தப் பாசத்தை விவரிக்க இயலாது. அவர்கள் பலரிருக்கலாம். ஆனால், அவள் ஒருத்திதான்.

எழுபதுகளில் வழக்கறிஞராகப் பதிவு செய்த நாள். மற்ற மாணவர்களெல்லாம் பெற்றோர், உற்றோருடன் படைசூழ்ந்து நிகழ்வைக்காண கூடியிருந்த நேரம். நெஞ்சம் படபடக்கிறது. `நமக்கு யாருமே இல்லையா?’ என்கிற கேள்வி. எங்கிருந்தோ வந்தாள் அவள். ஒரு சீனத் தயாரிப்பு பேனாவைப் பரிசளித்தாள். அதன் பெயர் ஹீரோ. அத்துடன் ஒரு துண்டுச் சீட்டு. அதில் இரண்டு வரிகள் முத்து முத்தாகக் கையால் எழுதப்பட்டிருந்தன. `நான் உன்னை வக்கீலாகப் பார்க்க விரும்பவில்லை. மக்களுக்காக வாதாடும் ஒருவனாகப் பார்க்க விரும்புகிறேன்.’ எத்தனை பெரிய அறிவுரை. அந்த இரண்டு வரிகளை அட்சரப்பிசகில்லாமல் கடைசிவரை கடைப்பிடித்தேன்.

எண்பதுகளின் கடைசி. எங்களது ஒருமித்த அரசியல் பயணம் தடைப்பட்டது. மாற்றுக் கருத்தை முன்வைத்த எனக்குக் கட்சியிலிருந்து கல்தா. அவள் கட்சிப் பொறுப்பிலிருப்பினும் அதுபற்றி ஒருவித கருத்தும் தெரிவிக்காதது பெருத்த ஏமாற்றமே. `இருபதாண்டு கால நட்பு வெறும் கபட நாடகமா?’ என்கிற கேள்வியெழுந்தது. என் நெருங்கிய தோழி ஒருத்தி இதுபற்றிக் கூறியதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். மூன்று நாள்கள் வெளியூர் சென்ற அவள், அந்தத் தோழியுடன் தங்கியிருந்தாள். உணவு நேரம் தவிர மற்ற நேரங்களில் கதவைத் தாளிட்டு தனிமையில் அழுதாளாம். அதுதான் அவள். 

“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”

தொண்ணூறுகளில் அவளது மௌனத்துக்கான பிராயச்சித்தம் ஒன்றையும் செய்தாள். எனக்கு வாழ்க்கைத்துணை தேடி அலுத்துப்போன அவள், `இனி மேல்தான் ஒருத்தி உனக்காகப் பிறந்து வர வேண்டும்’ என்று சலித்துக்கொண்டாள். நானே ஒருநாள் என்னுடைய திருமண ஏற்பாட்டைச் சொன்னபோது மிகவும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த அவள் `நான் திருமணம் செய்துகொண்ட என் வீட்டு ஹாலில்தான் உன் திருமணமும் நடக்கும்’ என்று கூறியதுடன், அதற்கான எல்லா பங்கும் தனக்குண்டு என்று கூறினாள். எங்கள் மகள் பிறந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் மடியில் கிடத்தி, தன்னை அவளின் அத்தை என்று அவளுக்கு மொழிபுரியும் முன்னே உணர்த்தினாள். கட்சியில் இல்லை என்றாலும் தனது குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டவள் அவள்.

புதிய நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் எனது பணியில் ஒரு திருப்பம். முப்பதாண்டு கால வக்கீல் பணியிலிருந்து நீதிபதி பதவிக்கான உத்தரவு குடியரசுத் தலைவரால் அளிக்கப்பட்டிருந்தது. பழைய இயக்கத் தோழர்களெல்லாம் அதுபற்றி புலம்பல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரம் அது. `மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் அரசின் ஓர் அங்கமாகச் செயல்படப்போவது தேவைதானா?’ என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்தனர். உயர் நீதிமன்றத்தில் பதவியேற்பதற்கான நிகழ்வு. அந்த மண்டபத்தில் மேடையில் தலைமை நீதிபதியுடன் அமர்ந்திருந்த அந்த வேளையில் பார்வையாளர்கள் பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் ஓர் இன்ப அதிர்ச்சி. கூட்டத்தோடு கூட்டமாகத் தன் உடன்பிறவா சகோதரனின் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்து பெருமை சேர்த்தாள் அவள். கட்சியையும் குடும்பத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழம்பிக்கொள்ள அவள் தயாரில்லை.

இப்படி ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்த அவள், இன்றைக்கு நிரந்தர அதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நகமும் சதையுமாகப் பழகிய எவரையுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாத மறதி நோய் அவளைத் தாக்கியுள்ளது. அவள் அவளாகவும், நான் நானாகவும் இருந்துகொண்டிருக்கிறோம். ஐம்பதாண்டு கால நினைவுகளை அசைபோடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனது அவளைப் பற்றி அசைபோட வாய்ப்பளித்த இந்த அவளுக்கு நன்றி.’’

(சந்துருவின் அவள்: பெண் உரிமைச் செயல்பாட்டாளரான மைதிலி சிவராமன்)

நானும் அவளும்

``எங்கள் பயணம் தொடர்கிறது!’’

``அ
வள், ஆ.வி குடும்பத்தில் பிறந்த பெண். பெண்கள் இதழாக இருப்பினும் அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டு. நான் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒருநாள், பத்திரிகையாளர் வேல்ஸ் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார். `அவளுக்காக ஏதேனும் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். பெண்களுக்கானது என்று அறியப்பட்டிருந்த இதழில் நான் என்ன எழுத முடியுமென்று யோசித்துப் பார்த்தேன். `பெண்கள் தாக்கல் செய்து, நான் தீர்ப்பளித்த வழக்குகளைப் பற்றி எழுதலாமா?' என்று கேட்டதற்கு, வேல்ஸ் உடனே ஒப்புதல் அளித்தார்.   

“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்!”

ஏழு வருடங்கள் பதவியிலிருந்த காலத்தில் நடந்த வழக்குகள் ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்தேன். உடனடியாக நினைவுக்குவந்தவர்கள் அசின்பானு, உமா தேவி, பின்னையக்காள், கஸ்தூரி, மாலதி, துர்காமூர்த்தி, போத்துமல்லி, காளித்தாய், அமுதா, முகமத்பீவி, தமிழரசி... இப்படி அந்தப் பட்டியல் நீண்டது. முதல் கட்டுரையைக் கொடுத்துவிட்டு வேல்ஸிடம், `இந்தப் பெண் வழக்காடிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்தும் ஒரு பேட்டியைப் புகைப்படத்துடன் எடுத்துப் போடலாமே’ என்று சொன்னேன். உடனே ஒப்புக்கொண்ட அவர், அதை செயலிலும் காட்டினார். அப்படிப் பிறந்ததுதான் `சட்டத் தால் யுத்தம் செய்!’ என்ற தொடர்.

எளிமையான பெண்கள் சிக்கலான வழக்குகளைச் சவாலாக ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தின் கதவு களைத் தட்டியதும், அதை நீதிமன்றம் கையாண்ட விதமும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதன்முறையாக அவளில் வெளியானது. தமிழரசியும் கஸ்தூரியும் உயிருடன் இல்லை என்பது வருத்தப்பட வைத்தது. இருப்பினும், அவர்கள் சட்ட உலகில் விட்டுச் சென்ற தடங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்தும். பின்னர் விகடன் பிரசுரம் அதைப் புத்தகமாக வெளியிட்டது, இன்னும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். இப்படியாகத்தான் நானும் அவளும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.’’