Published:Updated:

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

Published:Updated:
##~##

'ஹலோ மைக் டெஸ்டிங்கை’த் தொடர்ந்து, கரகர பெண் குரலில் அழ ஆரம்பிக்கிறார் ஏகாதசி. வார்த்தையைத் தொடங்கும்போது ஓர் இழுவை... முடிக்கும்போது ஒரு நடுக்கம் என, ஓங்கி ஒலிக்கிறது ஒப்பாரி.  

'அய்யா... கருப்பு ரெயிலேறி காரைக்குடி போயிறங்கி
காரைக்குடி ஜோசியர்கிட்ட நீங்க பெத்த மக்க
கணக்கெடுத்துப் பார்க்கும்போது...
அய்யா காலக்கிரகம் என்றார் கைலாசம் கிட்ட என்றார்.
சிவப்பு ரெயிலேறி நீங்க பெத்த செல்ல மகன்
சிங்கப்பூர் போயிறங்கி சிங்கப்பூர் ஜோசியர்கிட்ட
சீட்டெடுத்துப் பார்க்கும்போது
செம்மக்கிரமம் என்றார் சிவலோகம் கிட்ட என்றார்'

நடு வீட்டில் கிடத்தப்பட்ட பெரியவரின் உடல், முகம் தெரியாத அளவுக்கு ரோஜா மாலைகளால் மூழ்கிக்கிடக்கிறது. 'பந்தக் கால் கேட்டதற்கு பவளத்தேர் கொடுத்த சாச்சாதிபதி, வில்லுக்கு வீமன், சொல்லுக்கு அர்ச்சுனன், வாழும்போது ஊர், உலகை சந்தோஷப்படுத்திய மகாராசன் - இப்ப சிவலோக பதி அடைந்திருக்கார். அப்பேர்ப்பட்ட தகப்பனைப் போற்றிப் பாதுகாத்த செல்லச் சீமான்கள், இன்று தன் தகப்பனாரை, ஆடல் பாடலோடு சந்தோஷமாக நல்லடக்கம் செய்வதற்காக நம்மை அழைச்சிருக்காங்க' என்று வசன நடையில் அழுது, இறந்தவரின் வாரிசுகளையும் நினைவுபடுத்துகிறார் லோக நாதன்.

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

சோகம் கவிந்த முகத்தோடு நிமிர்ந்து பார்த்த ஒருவர், உற்சாகமாகக் கேட்கிறார். 'யப்போய், நான் அவரோட மூத்த மகன். நான் எப்படி அழுவேன்னு பாடுப்பா' என்று சொல்ல,

'சாத்தும் திருநீறு
எங்கப்பா தலைகுளிக்கும் பன்னீரு...
தலைகுளிச்சி நீங்க வந்தா
யப்பா தங்க மணியடிக்கும்...
நீங்க தங்குமிடம் பூ மணக்கும்...
பூசும் திருநீறு பூசை செய்யும் பன்னீரு...
பூசை முடிச்சி நீங்க வந்தா
பொன்னு மணியடிக்கும்.
எங்கப்பா நீங்க போகும் இடம்
பூ பூக்கும்''

-என்று ஏகாதசி பாட, மற்றவர்கள் 'ஆமாய்யா... ஆமாய்யா...' என்று சேர்ந்து ஒப்பாரிவைக்கிறார்கள்.

பெண் பிள்ளைகள் ஏதும் சொல்லவில்லை என்றாலும் 'என்னப் பெத்த அய்யா...' என்று தொடங்கி மாரிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதபோது பெற்ற மகளாகவே மாறிவிட்டார் ஏகாதசி. நேரம் ஆக ஆக... கூட்டம் கூடுகிறது. தூரத்து ஊர்களில் இருந்தெல்லாம் சாதி சனம் வந்த பிறகு, பூப் பல்லக்கில் பிணத் தைத் தூக்குகிறார்கள். விடை கொடுக்கும் தருணம். பெண்டாட்டி பிள்ளைகள்கூட 'போயிட்டு வாப்பா’னு பிரியாவிடை சொல்லும் மனநிலையில் இருக்கும்போது, ஒப்பாரிக் குழுவினரோ அழுது துடிக்கிறார்கள்.

கேதம் கேட்க வந்தவர்களை எல்லாம் சமாதானப்படுத்துவதுபோல,

'வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ..'

என்று கறுப்பு ஸ்பீக்கர் பாடுகிறது. பாட்டு முடியும் வரை காத்திருந்து ஸ்பீக்கரை அவிழ்க்கிறார் ஒளி-ஒலி அமைப்பாளர். ஒப்பாரி நிகழ்ச்சியில் பெண்ணாக மாறியிருந்த ஏகாதசி, சிவா, லட்சுமணன், ஆண் வேடம் போட்டிருந்த லோகநாதன், முருகன், ராமன் என ஆறு பேரையும் அவர்களுடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மேலச்சாலூரில் சந்தித்தோம்.

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

'சின்ன வயசில் இருந்தே என் குரல், நடை, உடை, பாவனை, எண்ணம், செய்கை எல்லாமே பொம்பளப் புள்ளை மாதிரி இருந்துச்சு. அப்பன்- ஆத்தா கிடையாது. பொழப்புக்கு என்ன பண்றதுனு யோசிச்சு, வள்ளித் திருமணம், அரிச்சந்திரா நாடகங்ள்ல பொம்பள வேஷத்துல நடிக்க ஆரம் பிச்சேன். இப்போ யார் நாடகம் பார்க்கிறா? 35 வருஷமா இழவுக்கு மாரடிச்சுதான் பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன். முன் னாடி எல்லாம் ஒரு ஆள் செத்துட்டா, சொந்தக்காரங்களுக்குத் தாக்கல் சொல்றதுக் குன்னே ரெண்டு, மூணு ஆட்களை ஊர் ஊரா அனுப்பிவெப்பாங்க. அவங்கதான் எங்களைக் கூட்டிட்டுப் போவாங்க. இப்ப காலம் மாறிப் போச்சுல்ல. அதனால, எந்த ஊர் கேதத்துக்குப் போனாலும் இழவு வீட்டுக்கு வர்றவங்ககிட்டே விசிட்டிங் கார்டு கொடுக்கிறோம். யாராவது போன் போட்டா, உடனே காரையோ, வேனையோ வாடகைக்குப் பிடிச்சிட்டுப் போயிடுவோம். சிலசமயம் நாங்க போன பிறகு மேளக்காரர், மைக்செட்காரர் வராம உட்கார்ந்திருப்பாங்க. அதனால இப்போ அவங்களையும் நாங்களே கூட்டிக்கிட்டுப் போயிடுறோம்.

பேருதான் எழவு வீடு. அதுல அல்ப புத்திக்காரனுங்க வருவாங்க. எனக்குப் 18, 19 வயசு இருக்கும்போது, இழவு வீடுனு பாக்காம சில பேரு வம்பு பண்ணுவாங்க. நீர்மாலைக்குப் போகும்போது, ஆடுற மாதிரி அங்கங்கே உரசுவாங்க. அதனால பொம்பள வேஷம் போட்டா, எங்கேயும் தனியாப் போக மாட்டேன். இப்ப 49 வயசு ஆகுது. சனியனுங்க இப்போவாச்சும் சும்மா இருக்கானுங்களா... இன்னும் அந்த மாதிரி தொந்தரவு இருக்கத்தான் செய்யுது!''- விரக்தியாகப் பேசுகிறார் ஏகாதசி.

'பொதுவா, துக்க வீட்டுல கேதம் கேட்டோமா, கிளம்பிப் போனோமானு இருப்பாங்க. பாடை தூக்கும்போது 10 பேர்தான் இருப்பாங்க. இந்த மாதிரி நிகழ்ச்சி நடந்தாத்தான் கூட்டம் கலையாம இருக்கும். ஆட்கள் தினமும் செத்துட்டுதான் இருக்காங்க. ஆனா, எங்களுக்கு முன்ன மாதிரி நிகழ்ச்சி கிடைக்கிறது இல்லை. ஒப்பாரி கேசட் போட்டு ஒப்பேத்திக்கிறாங்க. நிகழ்ச்சி இல்லாத நேரத்துல கோயில் விழாக் களுக்குப் போயிடுவோம். அதுவும் இல்லாட்டி, இருக்கவே இருக்கு விவசாய வேலை' என்கிறார் சிவா. ஏகாதசிக்கு மட்டும் திருமணம் ஆக வில்லை. லோகநாதன், முருகன், சிவா ஆகியோர் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டார்கள். லோகநாதனுக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் ஐந்து துக்க வீடுகளில் ஒப்பாரி வைத்திருக்கிறார். 'வீட்டுல துக்கம் இருந்தாலும், மத்தவங்களைச் சிரிக்கவைக்கிற கோமாளிங்க மாதிரி, நாங்க எங்க சந்தோஷத்தை மறைச்சிக் கிட்டு மத்தவங்களுக்காக அழறோம் சார். இது ஒரு கலை. இதுதான் எங்களுக்குப் பிழைப்பு. வேற என்ன செய்றது?'- விரக்தியாகச் சிரிக்கிறார் லோகநாதன்.

சோகத்தைச் சொல்லி சொல்லியழும் கலைஞர்கள்!

'கிராமத்துல கல்யாண வீட்டுல சரக்கடிக்கிறாய்ங்களோ இல்லையோ, இழவு வீட்டுக்கு ஃபுல் மப்புலதாங்க வருவாய்ங்க. அவிய்ங்க போதைக்கு நாங்கதான் எப்பவும் ஊறுகா. அடிக்கிறது, புடிக்கிறதுனு குடிகாரனுங்க அட்டூழியம் பண்ணும்போது 'ஏண்டா இந்தப் பொழப்புக்கு வந்தோம்?’னு இருக்கும்' வேதனையான குரலில் முடிக்கிறார் முருகன்.

சிவாவுக்கும் லெட்சுமணனுக்கும் 23 வயது தான் ஆகிறது. இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ''சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் சார். அதுக்கு நாலு காசு சேக்கணும். அதனால ராத்திரி, பகல்னு பார்க்காம நிகழ்ச்சி யில மாரடிக்கிறோம்!'' என்கிறார்கள்.

'ஏகாதசி ஒரு திருநங்கை சார். ஆனா, தப்பான வழிக்குப் போகாம சொந்த ஊர்லயே பிழைப்பு நடத்துது. அது பிழைக்குறது மட்டும் இல்லாம, எங்க அஞ்சு பேரையும் வாழவைக் குது சார்!''- முருகன் சொல்ல, நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார் ஏகாதசி

- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து, ச.லெட்சுமிகாந்த்