Published:Updated:

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

அமெரிக்கா போட்ட ஆர்டர்... கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பிரஷர்...

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

அமெரிக்கா போட்ட ஆர்டர்... கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பிரஷர்...

Published:Updated:
ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

‘மிக அதிக லாபம் வைத்து விற்கப்பட்ட மருந்துகளின் விலையை நாங்கள் குறைத்தோம். அதனால், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எங்கள்மீது கோபம். இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் ஸ்டென்ட் விலையையும் குறைத்தோம். அது, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை நியாயமான கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.’

இவை, பிரதமர் மோடி பெருமிதத்துடன் சொன்ன வார்த்தைகள். ஆனால், இந்த இரண்டு விஷயங்களையும் சாதனைகளாகச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு மோசமான முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. உண்மையில் இந்த இரண்டு முடிவுகளையும் சாத்தியமாக்கிய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவராக இருந்த பூபேந்திர சிங்கை அந்தப் பதவியிலிருந்து மத்திய அரசு தூக்கியடித்துள்ளனது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் திகிலூட்டிய பெயர், பூபேந்திர சிங். உத்தரப் பிரதேச கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், இந்தியாவின் ஒவ்வோர் இல்லத்திலும் கொண்டா டப்பட வேண்டிய நேர்மையானவர். பெயரோ, பெருமிதமோ வேண்டாம் என அமைதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவரை, அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவராக 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார் சிங். அதற்கு முந்தைய ஆண்டுதான் இதயநோய், சர்க்கரைநோய் உள்ளிட்ட நோய்களுக்கான 871 மருந்துகளை ‘அத்தியாவசிய மருந்துகள்’ என்ற பட்டியலில் கொண்டுவந்த இந்த ஆணையம், அவற்றுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்தது. இந்த விலைக்கட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருந்தவர், அப்போதைய தலைவர் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ். இந்த முடிவை எடுத்தச் சில வாரங்களில் அவர் மாற்றப்பட்டார். அந்தச் சூழலில்தான் பூபேந்திர சிங் பொறுப்பேற்றார்.

ஸ்ரீனிவாஸ் வழியிலேயே அதிரடியில் இறங்கினார் சிங். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மருந்துக் கருவிகளுக்கும் விலை நிர்ணயம் செய்ய முடியும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முதலில் கை வைத்தது ‘ஸ்டென்ட்’ விலையில். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சம் பேர் ஹார்ட் அட்டாக்கால் இறக்கிறார்கள். சுமார் மூன்று கோடிப் பேருக்கு இதயநோய் உள்ளது. இதய நோயாளிகளுக்கு உயிர்காக்கும் கருவியாக ஸ்டென்ட் உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆறு லட்சம் பேர் ஸ்டென்ட் பொருத்திக்கொள்கிறார்கள். ஸ்டென்ட் விலை தாறுமாறாக இருந்தது. இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என எல்லாமே, உற்பத்திச் செலவைவிட பல மடங்கு அதிக லாபம் வைத்து ஸ்டென்ட்டை விற்பனை செய்தன. அதன்பின் மருத்துவமனைகளும் அதன்மீது ஒரு லாபம் வைத்து நோயாளிகளுக்குப் பொருத்தின. அந்த நிலையில், ‘ஸ்டென்ட் விலையைக் குறைத்தால், ஏழைகள் உள்பட எல்லோருக்கும் இதயச் சிகிச்சை சாத்தியமாகும்’ என்பதைச் சிங் உணர்ந்தார். ஸ்டென்ட் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேசினார். அவர்களை வழிக்கு வரவைத்து விலையைக் குறைத்தார். சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்ற ஸ்டென்ட்,
ரூ.27,890 எனக் குறைந்தது. 75 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட ஸ்டென்ட் 7,660 ரூபாய்க்குக் கிடைத்தது.

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

2017 பிப்ரவரி 14-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவு, அமெரிக்கா வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தங்கள் லாபம் குறைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய நிறுவனங்கள், உற்பத்தியைக் குறைத்து, மார்க்கெட்டில் டிமாண்டை ஏற்படுத்தின. ‘தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தவறான முடிவால்தான் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது’ என்பது போன்ற சூழலை உருவாக்க முயன்றன. ஆனால், ‘யாராவது உற்பத்தியைக் குறைத்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் பூபேந்திர சிங். அமெரிக்க நிறுவனங்களோ, ‘இந்தியாவுக்கு ஸ்டென்ட் விநியோகம் செய்வதை நிறுத்தப் போகிறோம்’ என அறிவித்தன. ஆனால், ‘தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அனுமதி இல்லாமல் இப்படிச் செய்ய முடியாது’ என அதற்கும் தடைபோட்டார் சிங். இதைத் தொடர்ந்து மூட்டு அறுவைசிகிச்சை செய்து பொருத்தும் ‘Knee Implant’களுக்கும் விலைக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவற்றின் விலை 69 சதவிகிதம் குறைந்தது. 

இதனால் நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை கிடைத்தது. ஆனால், விளைவுகள் பயங்கரமானவை. 2017 ஜூன் மாதம் மோடி அமெரிக்கா போனபோது, அவரிடம் அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரிகள் இதுபற்றிக் கவலை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நவம்பரில் அமெரிக்க வர்த்தகத்துறைப் பிரதிநிதி ராபர்ட் லைதிஸெர் நம் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரவுக்கு கடுமையாக ஒரு கடிதம் எழுதினார். அதை ‘மிரட்டல் கடிதம்’ என்றுகூடச் சொல்லலாம். ‘இனிமேல் எந்த மருத்துவக் கருவிக்கும் நீங்கள் விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், நாங்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் எந்தக் கருவியையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய மாட்டோம். மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு அமெரிக்க முதலீடு வராது. மருத்துவச் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தையும் இந்தியா இழந்து விடும்’ என அந்தக் கடிதம் எச்சரித்தது.  

2017 பிப்ரவரி 14-ம் தேதி ஸ்டென்ட் விலைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இது ஒரு வருடத்துக்கானது. இந்தப் பிப்ரவரி மாதத்தில் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நேரத்தில்தான் பூபேந்திர சிங் மாற்றப்பட்டுள்ளார். இனி ஸ்டென்ட் விலை என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

விலைக்கட்டுப்பாட்டு விதிகளை மீறிய பல மருந்து நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் அபராதம் விதித்து வசூலித்த பூபேந்திர சிங், சமீபத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு எதிராகச் சாட்டை எடுத்திருந்தார். டெல்லியில் கடந்த ஆண்டு டெங்கு படுமோசமாகப் பரவிய போது, பல தனியார் மருத்துவமனைகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டன. நான்கு தனியார் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிச் சிகிச்சை பெற்ற நான்கு நோயாளிகளின் கட்டண விவரங்களை மருத்துவமனைகளிலிருந்து கேட்டுப் பெற்றது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம். அந்த விவரங்களுடன் ஆணையத்தின் அறிக்கை, பிப்ரவரி 20-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

ஏழைகளுக்கு உதவ நினைத்தால் இதுதான் கதி!

‘மருந்து நிறுவனங்களிடமிருந்து மிகக் குறைவான விலைக்கு மருந்துகளை வாங்கும் தனியார் மருத்துவமனைகள், அவற்றைப் பல மடங்கு லாபம் வைத்து நோயாளிகளுக்கு விற்கின்றன. சில மருந்துகளுக்கு 17 மடங்கு அதிக விலை வைக்கின்றன. எல்லா அவசியச் சிகிச்சைகளுக்குமான மருந்துகள், விலைக் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்துகள் பட்டியலில் உள்ளன. அவற்றை வாங்கினால் லாபம் அடைய முடியாது என, அந்த வரம்புக்குள் வராத மருந்துகளையே வாங்கி நோயாளிகளுக்குத் தருகின்றன.  உள்நோயாளியின் மருந்து செலவில், விலைக்கட்டுப்பாட்டில் வரும் மருந்துகள் வெறும் 4.10 சதவிகிதமே உள்ளன. கட்டுப்பாட்டில் வராத மருந்துகள் 25.67 சதவிகிதம் உள்ளன. இதன்மூலம் விலைக்கட்டுப்பாட்டு விதியையே மருத்துவ மனைகள் அர்த்தம் இழக்கச் செய்துள்ளன. நோயாளிகள் வெளியிலிருந்து குறைந்த விலையில் மருந்துகள் வாங்கிக்கொள்ளவும் இந்த மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை.

இங்கு, பரிசோதனைக் கட்டணங்களும் மிக அதிகம். மருத்துவக் கருவிகளுக்கும் நியாயமே இல்லாமல் அதிகக் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்தக் கட்டண மோசடியில் மருந்து நிறுவனங்களை விட மருத்துவமனைகளே நியாயமற்ற லாபத்தைச் சம்பாதிக்கின்றன. இப்படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை, நோயாளிகளுக்குத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றது அந்த அறிக்கை. இது வெளியான எட்டே நாள்களில் பூபேந்திர சிங் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுவிட்டார். ‘‘மருந்து நிறுவனங்களும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுமே இதன் பின்னணியில் உள்ளன. அவர்களின் லாபத்தை யார் தடுக்க நினைத்தாலும் இதுதான் கதி என மத்திய அரசு உணர்த்தியுள்ளது’’ என்று குற்றம் சாட்டுகிறார், அனைத்திந்திய டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்த மாலினி ஐசோலா. அரசு கனத்த மௌனத்தையே பதிலாகக் கொடுக்கிறது.

- தி.முருகன்