Published:Updated:

"எங்களை வாழவிடுங்கள்!"

"எங்களை வாழவிடுங்கள்!"

"எங்களை வாழவிடுங்கள்!"

"எங்களை வாழவிடுங்கள்!"

Published:Updated:

சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதல், மரங்கள் வெட்டப்படுதல், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துதல் போன்றவற்றை எதிர்த்தும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச் சொல்லும் விதமாகவும் பிரம்மாண்ட விழிப்பு உணர்வுப் பேரணியை நடத்தி உள்ளனர் பள்ளிச் சிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பெண்கள் ஊழியர் பயிற்சி நிலையமும், கே.என்.ஹெச். என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து 'தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் அமைப்பு’ சார்பில் நடைபெற்றது இந்தப் பேரணி. துரைச்சாமிபுரம், காடல்குடி, மிட்டா வடமலாபுரம், மல்லீசுவரபுரம், குமாரபுரம், ஜெகவீரபுரம், மாதவபுரம், பூதலாபுரம், கந்தசாமிபுரம் என, 25 கிராமங்களைச் சேர்ந்த 2,000 பள்ளி மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் மரங்களை நட்டு வளர்க்கவும் வலியுறுத்தி அமைந்தது இந்த விழிப்பு உணர்வு பேரணி.

"எங்களை வாழவிடுங்கள்!"
##~##

புதூர் சர்ச்சில் இருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகப் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது. நடைபெற்ற விழிப்பு உணர்வு பொதுக்கூட்டத்தில் சிறப்புரை, முன்னிலை மற்றும் தலைமை வகித்தவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களே. கூட்டத்தில் பேசிய தட்பவெப்ப கூட்டமைப்பின் தலைவி மாணவி சாந்தி, ''மக்களே... உங்களுடைய முன்னோர்கள் நீங்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல தகுதியான நிலத்தையும், சுற்றுச்சூழலையும் ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால், நீங்களோ மனித நலத்துக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் விதமாக, பிளாஸ்டிக் பொருள்களையும், பாலித்தீன் பைகளையும் பயன்படுத்தி இந்த நிலத்தை நச்சு நிலமாக மாற்றிவிட்டீர்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்துவிட்டீர்கள். எங்களையும் இனிவரும் எங்களின் தலைமுறைகளையும் வாழவிடுங்கள். இருக்கின்ற நிலத்தைப் பாழாக்கிவிடாதீர்கள். காடுகளை இனிமேலாவது விட்டுவையுங்கள். தட்பவெப்பநிலையைச் சரிப்படுத்துதல், ஆற்று வெள்ளத்தால் உண்டாகும் மண் அரிப்பைத் தடுத்தல், நிலத்தின் ஈரப்பதத்தைக் காத்தல் முதலியவற்றை காடுகளே மேற்கொள்கின்றன. காடுகளை காவு கொடுத்ததற்குப் பிராயச்சித்தமாக வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள். உங்கள் குழந்தைகள் நன்றாக வளர்வதற்கு உங்களால் இதைக்கூட செய்ய முடியாதா?'' என்று சாந்தி ஆக்ரோஷமாகக் கேட்க, மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தது மக்கள் கூட்டம்.

பேரணி தொடங்கியதும் மாணவர்கள் கைகளிலும், தலையிலும் மரக் கன்றுகளை வைத்தபடி நடனம் ஆடி, ''மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்'', ''வெட்டாதே வெட்டாதே மரங்களை வெட்டாதே'' என்று கோஷம் எழுப்பியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்பு உணர்வு பேரணியைப் பார்வையிட வந்த ஜெர்மனியைச் சேர்ந்த கேத்தரினா, ''பொதுவாக இந்த மாதிரி விழிப்பு உணர்வுப் பேரணியை தொண்டு நிறுவனங்கள்தான் நடத்துவார்கள். ஆனால், மண் வளம் காக்க வேண்டும் என்று மாணவர்களே முன்நின்று பேரணி நடத்துவதை இந்த ஊரில்தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். வெல்டன் பாய்ஸ்!''  என்றார்.

"எங்களை வாழவிடுங்கள்!"

''எனக்குத் தெரிந்தவரை மரக் கன்றுகளை பிளாஸ்டிக் பையில் போட்டுதான் கொடுப்பார்கள். ஆனால், இங்கே மரக் கன்றுகளை ஓலைப் பெட்டியில்வைத்து கொடுத்தார்கள். இதில்கூட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக்கூடாது என்பது நல்ல ஐடியா. 'ஓலைப் பெட்டியோடு மண்ணில் புதைத்தாலும் பின்னாளில் அது உரமாக மாறிவிடும்’ என்றார்கள். இதைப் பற்றி எங்கள் நாட்டில் நான் பேசப் போகிறேன்!'' விழிகள் விரியச் சொல்கிறார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹெச்சிபோனா. ''எனக்கும் ஒரு மரக் கன்று கொடுத்தார்கள் இந்த மாணவர்கள். இந்த வேப்பங்கன்று டென்மார்க்கில் தமிழ்நாட்டு வாசனையுடன் வளரும்!'' என்றார் மரியா.

''இது முழுக்க முழுக்கப் பள்ளி மாணவர் களால் நடத்தப்பட்ட தட்பவெப்ப நீதிக்கான குரல். செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மண் மாசுபாடு, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை, மண் அரிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பேரணியை நடத்தினார்கள் மாணவர்கள். விழாவில் ஒயிலாட்டம், கோலாட்டம், மான் கொம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த விழிப்பு உணர்வு எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் பரவ வேண்டும். மாணவர்களே... உங்களுடைய உலகத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்'' என்ற வேண்டுகோளோடு  முடித்தார் விழா ஒருங்கிணைப்பாளர் அந்தோணி.

  • தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள வக்கீல் சொர்ணலதா, தன்னிடம் வழக்குக்காக வரும் ஏழைகளுக்குக் கட்டணம் இன்றி வழக்கை முடித்துக் கொடுப்பதோடு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் கவுன்சிலராகவும் இருந்து பெண்களுக்கு கவுன்சிலிங் அளித்துவருகிறார்!

-இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்