Published:Updated:

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?
பிரீமியம் ஸ்டோரி
News
குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

ம்பவம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் கழித்துப் புகார் கொடுக்கப் போனால், போலீஸ் ஸ்டேஷனில் அடித்தே துரத்துவார்கள். ஆனால் புகார் கொடுக்கப் போனவர், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி பொன்மாணிக்கவேல். புகார், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது பற்றியது. அதனால், தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

தென்னிந்தியாவை ஆண்ட முதல் பேரரசன் ராஜராஜ சோழன், அவரின் பட்டத்து அரசி லோகமாதேவி ஆகியோரின் சிலைகள்தான் காணாமல் போனவை. ‘‘ராஜராஜனின் சிலை சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ளது. லோகமாதேவி சிலை 40 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இரண்டுமே தலா 74 செ.மீ உயரமுள்ள ஐம்பொன் சிலைகள். இந்தக் கோயிலில் இருந்த இவை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போயிருக்கின்றன’’ என்கிறார் பொன்மாணிக்கவேல். கடந்த வாரத்தில் பெரிய கோயிலில் உள்ள சிலைகளை ஆய்வுசெய்ய வந்த பொன்மாணிக்கவேல், இந்த சிலைகள் காணாமல் போயுள்ளன என முறைப்படி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

இந்த இரண்டு சிலைகளும் குஜராத் அருங்காட்சியகத்தில் அடைபட்டுக் கிடப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். ‘‘குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில், சாராபாய் ஃபவுண்டேஷன் நடத்திவரும் மியூஸியத்தில் இருக்கும் இரண்டு சிலைகள்தான் அவை’’ என்பது அவர்களின் வாதம். தஞ்சாவூர் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன், ‘‘ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் காணாமல் போனது தொடர்பாக, தஞ்சாவூர் பெரிய கோயிலின் பரம்பரை அறங்காவலரான மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் விசாரணை நடத்த வேண்டும். பல தலைமுறைகளாக அவர்கள் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் பெரிய கோயில் இருந்து வருகிறது. அவர்களுக்குத் தெரியாமல் எப்படி சிலை மாயமாகி இருக்கும்? அ.தி.மு.க., தி.மு.க பிரமுகர்களோடு இவர் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால், எந்த ஆட்சி நடைபெற்றாலும் இதுகுறித்த முறையான விசாரணை நடைபெறுவதே இல்லை. சிலைகள் மாயமானது குறித்து 2010-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். 2016-ம் ஆண்டு முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இப்போதுதான் போலீஸ் வழக்கே போட்டிருக்கிறது. முறையாக விசாரித்து, தமிழகத்தின் பெருமைகளான அந்த சிலைகளை இங்கு மீட்டுவர வேண்டும்’’ என்றார்.

இக்குற்றச்சாட்டு குறித்து பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் கேட்டோம். ‘‘யார் எந்தக் குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சொல்லட்டும். இதுகுறித்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சிலைகள் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது” என்றார்.

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

2010-ம் ஆண்டு ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க, தமிழக அரசின் சார்பில் ஒரு குழு குஜராத் சென்று வந்தது. அதில் இடம்பெற்ற அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினோம். ‘‘பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யுமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி என்னிடம் சொல்லியிருந்தார். சோழர்கள் ஆட்சிக்காலம் தொடர்பான அனைத்து பொக்கிஷங்களையும் காட்சிப்படுத்த விரும்பினோம். ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் தொடர்பான துல்லியமான தகவல்கள் பெரிய கோயில் கல்வெட்டில் உள்ளன. சிலைகளின் உயரம் எத்தனை முழம், எத்தனை விரல்கள் என்ற தகவல்களெல்லாம் உள்ளன.

இந்தச் சிலைகள் குஜராத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டதால், அவற்றை மீட்பதற்காகக் கருணாநிதி கொடுத்த கடிதத்துடன் ஒரு குழுவாக குஜராத் சென்று, அப்போதைய முதல்வர் மோடியைச் சந்தித்தோம். இக்குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு, தொல்லியல் ஆய்வாளர்கள் நாகசாமி, குடவாயில் பாலசுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். மோடியைச் சந்தித்தபோது, ‘கவுதம் சாராபாய் அருங்காட்சியகம், தனியாருக்குச் சொந்தமானது. அவர்களிடம் இருக்கும் சிலைகளைத் தரச்சொல்லி நாங்கள் உத்தரவு போட முடியாது. ஆனாலும், கேட்டுப் பார்க்கிறோம். நீங்களும் முயற்சி செய்யுங்கள்’ என்றார்.

அருங்காட்சியகத்துக்குச் சென்று அந்தச் சிலைகளைப் பார்த்தோம். அங்குள்ள நிர்வாகிகளிடம் பேசினோம். ‘பெரிய கோயிலில் காணாமல் போன ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்தான் இவை’ என எங்கள் குழுவில் வந்த தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது” என்றார் தங்கம் தென்னரசு.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நான் எதுவும் பேசக்கூடாது” என்றார்.

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

திருச்சியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர், தனது பெயரை வெளியிட விரும்பாமல் பேசினார். ‘‘குஜராத்தில் இருப்பது ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள்தான் என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இந்திய அளவில் புகழ்மிக்க தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்தச் சிலைகளைக் கடத்திச் சென்றதில் மிகப் பெரிய நெட்வொர்க் செயல்பட்டுள்ளது. இதில் பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு இருப்பதால் தொல்லியல் ஆய்வாளர்களும் உண்மையைச் சொல்ல அஞ்சுகிறார்கள். அவை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்தான் என முதன்முதலில் அறிவித்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவரே பிறகு பல்டி அடித்துவிட்டார்” என்றார்.

கும்பகோணத்தில் உள்ள ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், ‘‘குஜராத்தில் இருப்பது ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்தான் என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது கேலிக்கூத்தானது. தமிழ்நாடு தொல்பொருள் துறை, மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை, ஐ.நா. கல்வி கலாசார ஆய்வு நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இயங்கி வருகின்றன. இவர்களால் உறுதிப்படுத்த முடியாதா? தஞ்சையில் பல்வேறு இடங்களில் உள்ள ராஜராஜ சோழனின் உருவம் பொறித்த கருங்கல் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குஜராத்தில் இருப்பது ராஜராஜ சோழனின் சிலைதான் என்பதை மிக எளிதாக உறுதிப்படுத்த முடியும்’’ என்றார்.

குஜராத்தில் ராஜராஜ சோழன்! - மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

பொன்மாணிக்கவேலிடம் பேசினோம். ‘‘ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை நேரில் பார்த்தவர்கள், வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் தஞ்சாவூரில் இருக்கிறார்கள். அந்த சிலைகள் மீட்கப்பட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும் அவர்கள், கண்டிப்பாக இந்த வழக்கில் எங்களுக்கு ஒத்துழைப்பார்கள். வீல் சேரில் வைத்தாவது அவர்களை சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு அழைத்து வருவோம். குஜராத்தில் உள்ளவை, இந்த சிலைகள்தான் என்பதை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி தான் எழுதிய புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதுவே வலுவான ஆதாரம். சிலைகளை மீட்டு கண்டிப்பாக தஞ்சாவூர் கொண்டுவருவோம்’’ என்றார்.

ஆனால், குஜராத்தில் இருக்கும் சிலைகளை ஆய்வு செய்த வேறு சிலர், பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்பிட்ட உயரத்தில் அவை இல்லையென்பதால், சந்தேகம் கிளப்புகின்றனர். இந்தக் குழப்பங்களுக்கு விடைதேடி, ராஜராஜ சோழனை மீட்பாரா பொன்மாணிக்கவேல்?

- கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே.குணசீலன்