Published:Updated:

அவசரம்... அசால்ட்...டெக்னிக்கல் பாயின்ட்... தமிழ்த் தலைவாஸ் தோற்றது ஏன்?! #ProKabaddi

கபடியைப் பொறுத்தவரை உடல் வலிமை, மனவலிமையை விட சரியான திட்டமிடல் முக்கியம். பதட்டமில்லாமல் கேப்டனின் ஒரே ஐடியாலஜியில் ஆட வேண்டும். ஆனால், நேற்றோ ஜஸ்வீர் சிங், அமித் ஹூடா வீணாக அவுட் ஆகிக்கொண்டு இருந்தனர்.

அவசரம்... அசால்ட்...டெக்னிக்கல் பாயின்ட்... தமிழ்த் தலைவாஸ் தோற்றது ஏன்?! #ProKabaddi
அவசரம்... அசால்ட்...டெக்னிக்கல் பாயின்ட்... தமிழ்த் தலைவாஸ் தோற்றது ஏன்?! #ProKabaddi

ப்ரோ கபடி (#ProKabaddi) சீசனின் இரண்டாவது போட்டியில்  யூபி யோத்தா அணியிடம் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தமிழ்த் தலைவாஸ். நூலிழையில் வெற்றியைத் தவறவிடுவதும், முதல் பாதியிலும் திக் திக் என ஹார்ட் பீட்டை எகிற வைத்து, கடைசி நேரத்தில் சுதாரித்து, முடிவில் தோல்வியடைவதும் தமிழ்த் தலைவாஸ் அணியின் வாடிக்கையாகிவிட்டது. 

நேற்றைய போட்டியில் முதல் பாதியில் ரிஷான்க் தேவாடிகா படை மிரட்டியது. முதல் 10 நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தனர். தமிழ்த் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை டிபண்டர் அமித் ஹூடா அவசரகதியில் ரெய்டரைப் பிடிக்க முயன்று சொதப்பினார். மஞ்சித் சில்லர், அமித் ஹூடாவிடம் முந்தைய மேட்ச்சில் இருந்த `அண்டர்ஸ்டேண்டிங்’ நேற்றைய போட்டியில் சுத்தமாக  இல்லை. 

யூபி யோத்தா 12 புள்ளிகள் எடுக்கும் வரை, தமிழ்த் தலைவாஸ் புள்ளிக் கணக்கைத் தொடங்கவில்லை. யூபி யோத்தா அணியில் சரியான டிபண்டிங் அட்டாக் இருந்தது. கார்னர் நிதேஷ் குமார் கவர் பொசிசன் ஜீவா குமார் இருவரின் உடும்புப் பிடியில் அஜய் தாகூர் பாயின்ட் எடுக்க சிரமப்பட்டார். யூபி கேப்டன் ரீஷாங்க் மற்றும் பிரசாந்த் குமார் ராய் ரெய்டில் கலக்கினர். எதிராளி தொடும் முன்பே தானாகவே அவசரப்பட்டு அவுட் ஆகி வெளியேறுவதை தமிழ்த் தலைவாஸ் அணி திரும்பத் திரும்பச் செய்தது. கவர் பொசிசனில் ஆடும் தர்ஷன், அருண் இருவர் முட்டினோம்; மோதினோம் என டேக்கிலில் புள்ளிகளை விட, 4-18 எனத் தமிழ்த் தலைவாஸ் திணறியது.

இரண்டாவது பாதியில் மாற்று வீரர்களைக் களமிறக்கியது கொஞ்சம் கைகொடுத்தது. அதுவரை அஜய் தாகூர் மட்டுமே புள்ளிகளை எடுப்பார் என நினைத்தவர்களுக்கு, இளம் வீரர் அதுல் அட்டகாசப்படுத்தினார். ஒவ்வொரு ரெய்டிலும் போனஸ் புள்ளியுடன் இருவரை அவுட்டாக்க, பிரசாந்த் குமார் ராய், ரிஷாங் இருவரையும் டேக்கில் செய்ய, யூபி யோத்தா ஆல் அவுட் ஆனது. இதனால் 30-32 எனத் தமிழ்த் தலைவாஸ் அணி ரசிகர்களை சிம்டாங்காரன் ஆக்கியது.

இந்த நேரத்தில்தான் தமிழ்த் தலைவாஸ் மீண்டும் சொதப்பியது. கபடியைப் பொறுத்தவரை உடல் வலிமை, மனவலிமையை விட சரியான திட்டமிடல் முக்கியம். பதற்றமில்லாமல் கேப்டனின் ஒரே ஐடியாலஜியில் ஆட வேண்டும். ஆனால், நேற்றோ ஜஸ்வீர் சிங், அமித் ஹூடா வீணாக அவுட் ஆகிக்கொண்டிருந்தனர்.

ரெய்டர் ஆடும் போது கத்துவது, வெளியே இருந்து கோச்சிங் செய்வது என 3 டெக்னிக்கல் பாயின்ட்டைத் தேவையில்லாமல் இழந்தனர். கடைசி 4 நிமிடங்கள் இருக்கும்போது யுபி கேப்டன் குறிப்பிட்ட 30 நொடியைக் கடந்தும் ரெய்டு செய்வதை அம்பயர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். கடைசி 1 நிமிடத்தில் பல்க் லைனில் நின்றிருந்த பிரசாந்த் குமார் ராயைப் பிடிக்காமல் போனஸ் புள்ளி எடுக்கவிட்டது, கடைசி ரெய்டில் அஜய் தாகூர் போவதற்குள், ஜஸ்வீர் சிங் அவசரப்பட்டு ரெய்டு சென்று டபுள் என்ட்ரி ஆனது எனத் தமிழ்த் தலைவாஸ் வீரர்கள் கடைசி நேரத்தில் ஸ்மார்ட்டாகச் செயல்படத் தவறிவிட்டனர். இதனால், 32-37 எனத் தோல்வியடைந்தது.

முதல் பாதியில் சரியான கீ ரெய்டர் சுர்ஜீத் நர்வால் இல்லாமல் போனது, அட்டாக்கிங் டிபண்டிங்கில் அவசரகதியில் புள்ளிகளை இழந்தது எனத் திட்டமிடாமல் செயல்பட்டது தமிழ்த் தலைவாஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணங்கள். இன்று நடைபெறும் தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கார்னரில் சொதப்பும் அமித் ஹூடாவுக்கு பதிலாக அனுபவ வீரர் கோபுவை இறக்கி டிபண்டிங் யூனிட்டை வலுப்படுத்த வேண்டும்.

முன்னதாக 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் ஹரியானா ஸ்டீலர்ஸை வென்றது. உடும்புப் பிடி ஆங்கில் ஹோல்டர் டிபண்டர் சுரேந்தர் நாடா முந்தைய மேட்ச்சின் ஹீரோ கிரீஷ் எர்னாக் எனர்ஜியாக ஆடினர். ஹரியானா அணியில் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மோனு கோயத் ஆடவில்லை.

முதலில் ரெய்டுக்குச் சென்ற ஹரியானா வீரர் வசீர் சிங் பாயின்ட் எதுவும் எடுக்கவில்லை. ஹரியானா. வீரர் விகாஸ் கண்டோலா முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார். பின்னர் இரு அணிகளின் டிபண்டர்களும் ஈட்டிப் பிடியில் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். புனே அணியின் நிதின் தோமர் மட்டும் களத்தில் கில்லியாகச் சுழன்றடித்தார்.

டோ டச், ரன்னிங் ஹேன்ட் டச் என ரெய்டில் சூப்பர் 10-க்கு மேல் எடுத்தார். தோமருக்குப் பலமாக குருவும் தீபக் பலியானும் ரெய்டில் பாயின்ட் எடுத்தனர். முதல் பாதியில் 15-9 என புனேரி பால்டான் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் புனேரி பால்டான் வீரர்களின் ரெய்டில் ஹரியானா அணி மீண்டும் திணறியது. புனேரி அணியில் டிபண்டிங்கில் பாயின்ட் எடுத்த அளவுக்கு ரெய்டில் எடுக்க முடியவில்லை. மோனு கோயத் இல்லாதது, வஸிர் சிங், விகாஸ் கண்டோலா ஆட்டம் எடுபடாமல் போனது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் தோல்வியை நோக்கிச் சென்றது. இறுதியில் 34-22 புனேரி பால்டான் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது.