Published:Updated:

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ட்டமும் நடையுமாக கடக்கும் கூட்டமான மனிதர்கள்... ஒட்டிக்கொண்டும் முட்டிக்கொண்டும் விரையும் வாகனங்கள்... இடைவிடாத ஹார்ன் இரைச்சல் என சென்னையின் அத்தனை பரபரப்புகளும் ஓய்ந்துவிட்ட நள்ளிரவு நேரத்தில், நகருக்குள் நுழைகின்றன அந்த வேன்கள். வடசென்னையின் எல்லை தொடங்கும் ராயபுரம் பாலத்துக்குக் கீழே அவை ஓரம்கட்டி நிறுத்தப்படுகின்றன. அந்த வேன்களில் சில முரட்டு மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. அங்கிருந்து அவர்கள் மூன்று டீம்களாகப் பிரிந்து, லோக்கல் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வெவ்வேறு திசைகளில் செல்கின்றனர்.

அப்படிப் போன டீம்களில் ஒன்று, ஒருவரைப் பிடித்துக்கொண்டு அந்த வேனுக்கு வருகிறது. பிடிபட்டவர், பின்னங்கைகள் கட்டப்பட்டு வேனுக்குள் தூக்கி வீசப்படுகிறார். அவர் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையை அழுத்தி, ‘‘யார் யார் இதுல கூட்டு... எங்கே அவங்க?’’ என விசாரிக்கின்றனர். மரண பயத்தில் ஒடுங்கிப் போய் இருக்கும் அந்த நபர் உளறும் தகவல்களை வைத்து, உடனடியாக வேறு சிலரையும் தூக்கிக்கொண்டு வருகின்றனர். அவர்களையும் பின்னங்கைகளைக் கட்டி, வேனுக்குள் தூக்கிப் போட்டு, தங்கள் கால்களுக்கு அடியில் மிதித்தபடி, ‘‘சத்தம் போட்டா தலை சிதறிடும்” என உறுமுகின்றனர்.

வேன் சீறிக்கொண்டு கிளம்புகிறது. சென்னை புறநகரில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு குடோன் வாசலில் போய் நிற்கிறது. மரண பயத்தோடு இழுத்து வரப்பட்ட நபர்களை அந்த இருட்டு குடோன் மேலும் அச்சத்தில் உறைய வைக்கிறது. உள்ளே அவர்கள் பார்க்கும் காட்சி, இன்னும் அதிக பீதியை ஏற்படுத்துகிறது. 

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

இருட்டு குடோனில் முரட்டுச் சித்ரவதை!

அங்கு சிலர் தலைகீழாகத் தொங்க விடப்பட்டுள்ளனர்; பட்டையான தோல் பெல்ட்டால் அடித்துத் தோல் உரிந்த காயங்களோடு முனகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். வேறு சிலர் கரன்ட் ஷாக் கொடுக்கப் பட்டு அடிவயிற்றிலிருந்து அலறுகிறார்கள். நகங்கள் பிடுங்கப்பட்டு ரத்தம் ஒழுகும் கை விரல்களோடு சிலர் அங்கே ஒடுங்கி உட்கார்ந்துள்ளனர். இழுத்து வரப்பட்டவர்களுக்கும் இப்படி ஏதோ ஒரு சித்ரவதை தரப்படுகிறது. இந்தக் கோர விசாரணையில் அவர்கள் உளறிக்கொட்டும் பெயர்கள், முகவரிகளை அந்த முரட்டு மனிதர்கள் குறித்துக்கொள்கின்றனர். அவர்களைத் தேடி மீண்டும் ஒரு டீம் கிளம்புகிறது.

இந்த வேட்டையை நடத்தும் முரட்டு மனிதர்கள், ஆந்திரா போலீஸார்; அவர்கள் வேட்டையாடும் மனிதர்கள்... நேரடியாகவோ, மறைமுகமாகவே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அல்லது உதவி செய்த தமிழர்கள். ஆந்திர போலீஸ் தமிழகத்தில் நடத்தும் வேட்டைக் காட்சிகள்தான் இவை!

இப்படிப் பிடித்து வரப்பட்டவர்களை ஏதாவது குடோன், லாட்ஜ் அல்லது பாழடைந்த கட்டடத்தில் வைத்து சில நாள்கள் சித்ரவதை செய்து, சில வாக்குமூலங்களையும் கையெழுத்துகளையும் வாங்குகிறது ஆந்திர போலீஸ். ஆந்திராவுக்குக் கூட்டிப் போய் கடப்பா, நெல்லூர், சித்தூர், திருப்பதி என எங்காவது ஒரு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துகின்றனர். ‘இவர்கள் காட்டில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்தனர்; பிடிக்கப் போனபோது, எங்களைத் தாக்கிக் கொலை செய்ய வந்தனர்’ என வழக்கு விவரம் கொடுக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் களையோ, அவர்களின் வழக்கறிஞர்களையோ ஏறிட்டுப் பார்க்காமலேயே, அவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார் மாஜிஸ்திரேட். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

இங்கே கைது... அங்கே வழக்கு!

சென்னை மண்ணடியில் வைத்து, இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி சையது இப்ராகிம், ரபேல் குழந்தைவேல், நாகூர் கனி, முகமது இக்பால் ஆகியோர் இப்படித்தான் கடத்தப்பட்டனர். உடனடியாக சையது இப்ராகிமின் மனைவி, வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குப்போய், ‘‘சிலர் வந்து என் கணவரையும், அவருடன் பேசிக்கொண்டிருந்த நண்பர்களையும் கடத்திச் சென்றுவிட்டனர்’’ எனப் புகார் அளிக்கிறார். ‘ஆந்திரா போலீஸின் வேலைதான் இது’ என்பது போலீஸுக்குத் தெரிகிறது. அதனால், அவர்களும் கொஞ்சம் சைலன்ட் ஆகின்றனர். அதையடுத்து, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் வழக்கறிஞர் புகழேந்தியைத் தொடர்புகொள்கின்றனர். இதையடுத்து, ஜனவரி 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆந்திரா அரசுக்கும், காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. அதையடுத்து ஆந்திராவின் செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் எஸ்.பி., ‘ஜனவரி 31-ம் தேதி இவர்கள் ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்தனர்.அதனால், அவர்களைக் கைது செய்து கடப்பா சிறையில் அடைத்தோம்’ எனப் பதில் மனுத் தாக்கல் செய்கிறார். நேரில் பார்த்த சாட்சியங்கள் இருந்தும், வழக்கு போட்ட பிறகும், அவர்களை ஆந்திராவில் கைது செய்ததாக ஆந்திர போலீஸ் சொல்கிறது.

இப்படிக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பிடிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் ஆந்திரா சிறைகளில் இருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து, அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தனி. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய போலீஸே, சட்டத்தை மீறி மாநிலம் விட்டு மாநிலம் வந்து, கடத்தல்காரர்களைப் போல ஆட்களைக் கடத்தி, அவர்களை 5 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை சட்டவிரோதக் காவலில் சித்ரவதை செய்து, ஆந்திரா சிறைகளை ஏன் நிரப்புகிறது? 

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புப் படை! 

2014-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர் ஆனார். தன்னைக் கொலை செய்ய நினைத்த செம்மரக் கடத்தல் கும்பலை வேரறுக்கத் தீர்மானித்தார். செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் படையை உருவாக்கினார். ‘‘செம்மரக் கடத்தல் நெட்வொர்க் ஆந்திராவைத் தாண்டி தமிழகத்திலும் நீள்கிறது. சென்னை துறைமுகத்தில் அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள், அவர்களின் கூட்டாளிகள் எனப் பலரோடு ஆந்திரக் கடத்தல்காரர்களுக்குத் தொடர்பு உள்ளது. சர்வதேசத் தொடர்புகளையும் உருவாக்கி வைத்துள்ளனர். இந்த நெட்வொர்க்கின் முதுகெலும்பை உடைக்க, மரம் வெட்ட வரும் தமிழகத் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களிடம் அச்சத்தை உருவாக்க வேண்டும். பிடிபட்டால், ஆந்திர சிறையிலேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்’’ என அந்தச் சிறப்புப்படை கேட்டது.

உடனடியாக, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்தப் படைக்கு, கடத்தல்காரர்களை இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றும் கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.தேவைப்பட்டால், சுட்டுக்கொல்லவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

ஒரே நபர்மீது 75 வழக்குகள்!

இதைத் தொடர்ந்து 2014 நவம்பர் முதல் போலீஸாரிடம் சிக்கிய பலரும் ஜாமீனில் வரமுடியாதபடி சிறைகளில் அடைக்கப்பட்டனர். உண்மையாகக் கடத்தியவர்களை மட்டுமின்றி, சம்பந்தமே இல்லாத பலரையும்கூடக் கைது செய்துள்ளார்கள். கடப்பா, ராஜமுந்திரி, சித்தூர், திருப்பதி, நெல்லூர் எனப் பல நகரங்களில் இருக்கும் சிறைகளும் தமிழர்களால் நிரம்பிவழிகின்றன. அந்த சிறைகளுக்குச் சென்றால், தமிழகத்திலிருந்து சிறைவாசிகளைப் பார்க்க அவர்களின் குடும்பத்தினர் கூட்டம் கூட்டமாக வரும் காட்சிகளைக் காண முடியும். 

இப்படிச் சிறைகளில் தவிப்பவர்களைச் சந்திக்க சமீபத்தில் ஆந்திர சிறைகளுக்குச் சென்று வந்த வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘ஆந்திர சிறப்புப் படை போலீஸ், தமிழகத்துக்குள் நுழைந்து ஆள் கடத்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்களோடு, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் கைது செய்கிறது. அப்படிக் கைது செய்யும்போது, அடிப்படையான விதிமுறைகளைக்கூடக் கடைப்பிடிப்பதில்லை. இங்கு பிடித்து ஆந்திராவுக்கு அழைத்துப்போய், செம்மரம் கடத்தியபோது ஆந்திராவில் பிடித்ததாக எஃப்.ஐ.ஆர் போடுகின்றனர். செம்மரக் கடத்தல் என்பது திருட்டு வழக்கில் வரும்.அதற்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடும். அதனால், ‘பிடிக்கப்போன போலீஸாரைக் கொல்ல முயற்சி செய்தனர்’ எனக் கொலை முயற்சி பிரிவையும் சேர்த்து, ஜாமீனில் வரமுடியாதபடி செய்துவிடுகின்றனர்.

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

நான் சிறையில் சந்தித்த ஒருவர்மீது 75 வழக்குகள் இருக்கின்றன. அவர் சிறையில் இருந்த காலத்திலேயே, அவர் வெளியில் மரம் வெட்டியதாக வழக்குப் போட்டுள்ளனர். மூன்றே ஆண்டுகளில் ஒருவர்மீது இத்தனை வழக்குகள் போட முடியுமா என அதிர்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட அவரால் வாழ்நாள் முழுக்க வெளியில் வரவே முடியாது. ஒரு கட்டத்தில் அவரின் மகன் நீதிமன்றத்துக்குச் சென்று தந்தையை மீட்டுத் தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தபோது, அந்த மகனையும் கடத்தல் வழக்கில் கைது செய்துவிட்டார்கள்.

ராஜ்மோகன் என ஒருவர். அவர்மீது 25 வழக்குகள் போட்டிருந்தார்கள். அத்தனை வழக்குகளிலும் ஜாமீன் வாங்கி அவர் வெளியே வரும் நேரத்தில், புதிதாக மூன்று வழக்குகளைப் போட்டு மீண்டும் சிறையில் அடைத்து விட்டார்கள்.’’

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

- ஜோ.ஸ்டாலின், ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஒரு நாள் கூலி 7,000 ரூபாய்!

செ
ம்மரம் வெட்டச் செல்லும் தமிழகக் கூலித் தொழிலாளிகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் தரப்பட்டது. போலீஸ் கெடுபிடியும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படும் ஆபத்தும் அதிகமானதால், இப்போது கூலியும் உயர்ந்துவிட்டது. ஒரு நாளைக்கு 7,000 ரூபாய் வரை தருகிறார்கள். அரிசி, பருப்பு எடுத்துக்கொண்டு போய், காட்டில் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டபடி 10 நாள்கள் மரம் வெட்டி, ஏஜென்ட்கள் குறிப்பிடும் இடத்துக்குக் கொண்டு போய் வைத்துவிட்டால் போதும். கையில் 70 ஆயிரம் ரூபாயோடு திரும்பலாம். இந்தக் கவர்ச்சிகரமான கூலிதான் அவர்களை எல்லா ஆபத்துகளையும் தாண்டி செம்மரக் காடுகளுக்கு இழுக்கிறது.

குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களின் மலைகளில் வசிக்கும் பழங்குடியினரே இப்படிக் கூலிகளாக அழைத்து வரப்படுகின்றனர். அதிலும் 90 சதவிகிதம் பேர், ஜவ்வாது மலை கிராமங்களிலிருந்தே போகிறார்கள். இவர்களைத் திரட்டி மொத்தமாக வாகனத்தில் ஏற்றிச் செல்லத் தனியாக ஏஜென்ட்கள் உண்டு. 50 பேர், 100 பேர் என மொத்தமாக ஆந்திராவில் காட்டுக்குள் ஏதாவது ஓர் இடத்துக்குக் கூட்டிப் போய், அங்கிருந்து தனித்தனியாகப் பிரித்து உள்ளே அனுப்பி வைக்கிறார்கள். செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் நடமாட்டத்தைக் கண்காணித்து, இவர்களுக்குப் பாதுகாப்பான வழியைச் சொல்வதற்கு போலீஸிலும் வனத்துறையிலும் ஆட்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு செம்மரக் கடத்தல் மாஃபியா, பணத்தால் எல்லோரையும் வளைத்திருக்கிறது.

மனநிலை பிறழ்ந்த கங்கி ரெட்டி!

ந்திராவின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, இதற்கு முன்பு முதல்வராக இருந்தபோது. 2003-ம் ஆண்டு அவர் திருப்பதிக்குக் காரில் வந்தபோது சாலையில் கண்ணிவெடி வைத்து அவரைக் கொல்ல முயற்சி நடந்தது. குண்டு துளைக்காத காரில் சென்றதால் அவர் உயிர் பிழைத்தார். அது நக்சலைட்டுகள் சதி என்று அப்போது சொல்லப்பட்டது. அதற்குச் சில மாதங்கள் கழித்து, நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று,  ராஜசேகர ரெட்டி முதல்வர் ஆனார். அடுத்த 10 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடுவால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. 2014-ம் ஆண்டில் மீண்டும் முதல்வரான சந்திரபாபு நாயுடு, ஓர் அதிர்ச்சி தரும் உண்மையைச் சொன்னார்.

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

‘‘செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான கங்கி ரெட்டியே என்னைக் கொல்ல சதி செய்தவர். அவருக்குப் பக்கபலமாக ராஜசேகர ரெட்டி இருந்தார். அதனால் சர்வதேச அளவில் கங்கி ரெட்டியால் செம்மரக் கடத்தலைச் செய்ய முடிந்தது’’ என்றார் சந்திரபாபு நாயுடு. ஆந்திர வனத்துறையினர், ஆந்திரா மற்றும் தமிழக போலீஸார், துறைமுக அதிகாரிகள், கஸ்டம்ஸ் அதிகாரிகள் எனப் பலரின் துணையுடன் கொடிகட்டிப் பறந்த கங்கி ரெட்டியின் செம்மரக் கடத்தல் சாம்ராஜ்ஜியம் சந்திரபாபு நாயுடுவால் வீழ்த்தப்பட்டது. 2015 பிப்ரவரியில் மொரீஷியஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட கங்கி ரெட்டி, அந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். இப்போது கடப்பா சிறையில் இருக்கும் கங்கி ரெட்டி, சிறைக்குள் கொடுக்கப்படும் டார்ச்சரால் மனநிலை பிறழ்ந்தவர் போலாகிவிட்டார்.

முதல் அதிர்ஷ்டசாலிகள்!

செ
ம்மரம் வெட்டச் சென்ற 84 தமிழர்கள், மார்ச் இரண்டாம் தேதி அதிகாலை திருப்பதி ஆஞ்சநேயபுரம் செக்போஸ்ட் அருகே பிடிபட்டனர். காட்டுக்குள் நுழைவதற்கு முன்பே பிடிபட்டார்கள் என்பதால், இவர்களிடம் மட்டும் ‘இனி இதுபோல வர மாட்டோம்’ என எழுதி வாங்கிக்கொண்டு போலீஸாரே ஜாமீனில் விடுவித்தனர். உண்மையில் இவர்கள்தான் இப்படி விடுவிக்கப்பட்ட முதல் அதிர்ஷ்டசாலிகள். நிறையப் பேருக்கு இந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. ஆந்திர போலீஸின் எல்லை மீறிய கொடூரம் 2015 ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலிருந்து செம்மரம் கடத்தச் சென்றவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட 20 பேர், காட்டுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் மரம் வெட்டியபோது பிடிபட்டதாகக் காட்ட, பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை அவர்கள் பக்கத்தில் ஆந்திர போலீஸ் போட்டு வைத்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்த நிலையில் 2018 பிப்ரவரி 19-ம் தேதி, செம்மரம் வெட்டச் சென்ற 5 தமிழர்கள் கடப்பாவில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் பிணமாகக் கிடந்தனர். இத்தனைக்கும் அந்த ஏரியில் இடுப்பளவுக்கு மட்டும்தான் தண்ணீர் இருந்தது.

செம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்

சிறையிலேயே மரணமடைந்த அப்பு!

செ
ம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீஸ் எவ்வளவு கடுமை காட்டுகிறது என்பதற்கு ரவுடி அப்புவின் மரணம் ஓர் உதாரணம். சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பு, அந்த வழக்கிலிருந்து எளிதாக விடுதலையாகிவிட்டார். ஆனால், செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீஸால் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து கடைசிவரை அவரால் வெளியில் வர முடியவில்லை. 31 வழக்குகள் அவர்மீது அடுத்தடுத்து போடப்பட்டன. ஒரு வழக்கில் ஜாமீன் வாங்கினால், இன்னொரு வழக்குப் பாயும். இப்படி வழக்குமேல் வழக்குப்போட்டு, சிறைக்குள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார் அப்பு. இதே டெக்னிக்கைத்தான் தமிழர்கள்மீதும் கடைப்பிடிக்கிறார்கள் ஆந்திர போலீஸார். செம்மரக் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டால், கொலைக் குற்றவாளிக்குக் கிடைக்கும் சலுகையில் துளிகூட அவருக்குக் கிடைக்காது.