Published:Updated:

டச் ஸ்க்ரீன், ரியர் ஏசி வென்ட்... ஹூண்டாயின் `நியூ பாய்' சான்ட்ரோ எப்படி இருக்கிறது?!

இதற்கு முன்பிருந்த சான்ட்ரோவுக்கும் இதற்கும் பெயர் மட்டுமே ஒன்று; மற்றபடி டிசைன், ப்ளாட்ஃபார்ம், கேபின் என கார் ஒட்டுமொத்தமாக மாற்றம் கண்டிருக்கிறது.

டச் ஸ்க்ரீன், ரியர் ஏசி வென்ட்... ஹூண்டாயின் `நியூ பாய்' சான்ட்ரோ எப்படி இருக்கிறது?!
டச் ஸ்க்ரீன், ரியர் ஏசி வென்ட்... ஹூண்டாயின் `நியூ பாய்' சான்ட்ரோ எப்படி இருக்கிறது?!

ற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ரிலீஸாகும் ஒவ்வொரு படத்துக்கும், டிரெய்லருக்கு முன்பாக டீசர் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது. அதே பாணியை ஹூண்டாய் நிறுவனமும் கையில் எடுத்திருக்கிறது. அதாவது, அக்டோபர் 23-ம் தேதி அறிமுகமாக இருக்கும் சான்ட்ரோ கார் குறித்த டெக்னிக்கல் விவரங்களை, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேகமாகக் காண்பித்தது ஹூண்டாய். அவை என்ன?

1) இதற்கு முன்பிருந்த சான்ட்ரோவுக்கும் இதற்கும் பெயர் மட்டுமே ஒன்று; மற்றபடி டிசைன், ப்ளாட்ஃபார்ம், கேபின் என கார் ஒட்டுமொத்தமாக மாற்றம் கண்டிருக்கிறது. சான்ட்ரோவின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்கெட்ச்சில் இருந்த சில டிசைன் அம்சங்கள், காரில் பிரதிபலிப்பதைப் பார்க்கமுடிகிறது. முன்பக்கக் கதவில் வில் போன்ற கோடு, ஸ்மார்ட்டான வீல் ஆர்ச், பின்பக்கக் கதவில் இருக்கும் சிறிய வளைவு, ஃபெண்டர் வரை நீளும் ஹெட்லைட்ஸ், முன்பக்க பம்பரை ஆக்ரமித்திருக்கும் Cascading க்ரோம் கிரில், கறுப்பு வேலைப்பாடுகளுடன் கூடிய பனி விளக்குகள் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.

2) 3,610மிமீ நீளம், 1,645மிமீ அகலம், 1,560மிமீ உயரம் ஆகிய அளவுகளைக் கொண்டிருக்கும் புதிய சான்ட்ரோவின் வீல்பேஸ் 2,400மிமீ. ஆக டால் பாய் தோற்றத்தில் இருந்தாலும், சிம்பிளான அதே சமயம் மாடர்ன்னான டிசைனில் சான்ட்ரோ ஈர்க்கிறது. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பின்பக்க நம்பர் ப்ளேட் பம்பரில் இருப்பது தெரிகிறது. மேலும் பெரிய விண்ட் ஷில்டில் Defogger உடனான வைப்பர் ஆகியவை இருப்பது பெரிய போனஸ். சிம்பிளான டெயில் லைட்ஸ் சிறிய சைஸில் இருப்பதால், பூட் ஸ்பேஸ் நன்றாக இருக்கும் என நம்பலாம். 

3) முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் சான்ட்ரோவின் கட்டுமானத்தில் 63% High Strength Steel பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிரைவருக்கான காற்றுப்பை, ABS, EBD ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளை, சான்ட்ரோ எளிதில் பாஸ் செய்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. தவிர, விலை அதிகமான கார்களில் இருக்கும் பல வசதிகள், சான்ட்ரோவில் இருப்பது ப்ளஸ்.

4) காரின் பின்பக்கத்தைப் போலவே, கேபின் படங்களையும் ஹூண்டாய் இதுவரை வெளியிடவில்லை. பீஜ்-ப்ளாக் டூயல் டோன் டேஷ்போர்டை, சென்டர் கன்சோலில் இருக்கும் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் அலங்கரிக்கிறது. அதன் இறுபுறமும் Vertical ஏசி வென்ட்கள் உள்ளதுடன், டேஷ்போர்டின் இருபக்கமும் வட்ட வடிவ ஏசி வென்ட்கள் இருக்கின்றன. டச் ஸ்க்ரீன் சிஸ்டத்துக்குக் கீழே, வழக்கமான ஏசி கன்ட்ரோல்கள் உள்ளன. கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் கிடையாது. ஆனால், டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே - மிரர் லிங்க் - Voice Recognition ஆகியவை உள்ளது வாவ் ரகம். அதேபோல புஷ் பட்டன் ஸ்டார்ட் இல்லாவிட்டாலும், ரியர் ஏசி வென்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சீட்களின் ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யமுடியாதது கொஞ்சம் மைனஸ். கியர் லீவர் போதுமான உயரத்தில் இருப்பது வசதி. அதன் பின்னே பவர் விண்டோ ஸ்விட்ச்கள் இருப்பது தெரிகிறது. 

5) முந்தைய சான்ட்ரோவில் இருந்த 1.1 லிட்டர், 4 சிலிண்டர், Epsilon/IRDe பெட்ரோல் இன்ஜின்தான் இங்கேயும் என்றாலும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அதில் செய்திருக்கிறது ஹூண்டாய். இது 69bhp@5,500rpm பவரையும், 9.9kgm@4,500rpm டார்க்கையும், 20.3கிமீ அராய் மைலேஜையும் வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருப்பதுடன், ஹூண்டாய் வரலாற்றில் முதன்முறையாக AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் சான்ட்ரோவில் வழங்கப்பட்டுள்ளது. செலெரியோவைப் போலவே சான்ட்ரோவிலும் CNG ஆப்ஷன் உண்டு; என்றாலும் டியாகோவைப் போல இதில் டீசல் ஆப்ஷன் கிடையாது.

6) முன்பக்கத்தில் MacPherson strut சஸ்பென்ஷன் - டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் Torsion Beam Axle - டிரம் பிரேக் செட்-அப் உள்ளது. Hankook நிறுவனத்தின் 165/70 R14 டயர்கள், புதிய சான்ட்ரோவில் இடம்பெற்றுள்ளன. வீல் கேப்ஸ் தான்; அலாய் வீல்கள் கிடையாது. அதேபோல, AMT மாடலின் விலை, மேனுவல் மாடல்களைவிட 30 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம். ஆனால் AMT மாடல், டாப் வேரியன்ட்டில் கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது. 

7) 3.7-5.4 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ்-ஷோரூம்) புதிய சான்ட்ரோவின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காரின் புக்கிங் அக்டோபர் 10, 2018 அன்று ஆரம்பமாகிறது. இதற்கு ஆன்லைனில் 11 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதுமானது; சான்ட்ரோ வெளிவந்த பிறகே, டீலர்களில் காரை புக் செய்ய முடியும். இதன் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் விரைவில்..!