Published:Updated:

என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?

என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?

மதுரை மடத்தின் புதிர்கள்

துரை என்றதும் ஆதீனத்தின் அலப்பறைகள்தான் நினைவுக்கு வரும். ‘தன்னை 293-வது ஆதீனமாக அறிவித்துக்கொள்ளக் கூடாது’ என்று நித்யானந்தாவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார். அதே நேரம், ‘‘இளைய ஆதீனத்தை நியமிக்க இப்போது அவசியமில்லை’’ என்று அவர் கூறியிருப்பது, பக்தர்களின் நிம்மதியைக் குலைத்திருக்கிறது. ‘இதற்குமுன் நியமிக்கப்பட்ட இளைய ஆதீனங்கள் எல்லோரும் எங்கே போனார்கள்’ என்ற கேள்வி இப்போது ஆன்மிகவாதிகளை ஆவேசப்படுத்தியிருக்கிறது.

ஆறு வருடங்களுக்கு முன் நித்யானந்தாவைச் சந்தித்து, ‘சிவபெருமான் கனவில் தோன்றி சொன்ன அடுத்த இளைய ஆதீனம் இவர்தான்’ என்று அறிவித்தார் மதுரை ஆதீனம். நித்யானந்தாவின் ஆசிரமத்தினரை மதுரை ஆதீன மடத்துக்குள் உலாவவும் அனுமதித்தார். அவர்களுக்கும், ஏற்கெனவே மடத்தில் இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பாரம்பர்யமான மடத்தை நாசம் செய்கிறார்கள் என்று இந்து அமைப்புகள், மதுரை ஆதீனத்துக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டன. அதன்பின்பு, ‘நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்கிறேன்’ என்று அறிவித்தார் அருணகிரிநாதர்.

என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?

அதற்கு முன்பு, தருமபுர ஆதீனத்திலிருந்து திருச்சிற்றம்பலம் என்பவரை அழைத்துவந்து இளைய தம்பிரானாக நியமித்தார். சில நாள்களில் மடத்திலிருந்து அவர் வெளியேறினார். 2016-ம் ஆண்டில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக நியமித்தார். அவருடைய சத்தத்தையும் காணோம். இந்தத் திடீர் நியமனங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில்தான், ‘நித்யானந்தா தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக அறிவித்துக் கொள்ளக் கூடாது. அவர் மதுரை ஆதீனத்தின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறார், பல குற்ற வழக்குகள் உள்ளவர் பாரம்பர்யமான ஆதீன மடத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார் மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன். அந்த வழக்கில்தான், நித்யானந்தாவுக்குத் தடைவிதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜெகதலபிரதாபனிடம் பேசினோம். ‘‘எல்லாத்துக்கும் காரணம் அருணகிரி நாதர்தான். அவர்தான் மடத்தின் புனிதத்தை, பாரம்பர்ய பெருமையைக் குலைக்கும் வகையில் நித்யானந்தாவைக் கொண்டு வந்தார். பிறகு பிரச்னை வந்ததும் அவரை நீக்கினார். ஆரம்பத்தில் இரண்டு பேர்மீதும் புகார்கள் கிளம்பியதும், இருவரையுமே வெளியேறச் சொன்னது அறநிலையத் துறை. சில வழக்குகளை மறைத்து, மடத்தில் தான் மட்டும் இருந்துகொள்ள அருணகிரிநாதர் உத்தரவு வாங்கினார். வெளியேறிய நித்யானந்தா, மடத்துக்குள் செல்ல தடை போடப்பட்டிருந்தது. அதை நீக்க வேண்டும் என்று நித்யானந்தா மீண்டும் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரை சிவில் கோர்ட்டில் நடந்துவரும் வழக்கு முடியும் வரை ஆதீன மடத்துக்குள்ளோ, தொடர்புடைய கோயில்களுக்குள்ளோ நித்யானந்தா நுழையத் தடை விதித்துள்ளது.

என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இளைய ஆதீனங்கள் என்னவாயினர் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர், எல்லோரையும் சந்தேகப்படுகிறார். இவர் செய்கிற முறைகேடுகள் அவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இளைய ஆதீனங்களை வெளியேற்றி விடுகிறார். திருநாவுக்கரசு இவருடைய டார்ச்சர் தாங்காமல் போய்விட்டார். விரைவில் இளைய ஆதீனத்தை நியமிப்பது பற்றி மற்ற மடங்களிலுள்ள ஆதீனங்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

‘அருணகிரிநாதரை மதுரை மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்’ என்று போராட்டம் நடத்திவரும் இந்து இளைஞர் சேனையின் மாநிலத்தலைவர் சோலைக்கண்ணன், ‘‘ஆதீனமாக இருப்பதற்கு அருணகிரிநாதருக்குத் தகுதி இல்லை. அவர் அரசியல்வாதியைப்போல் வாழ்ந்து வருகிறார். மரபை மீறி பெண்களை மடத்துக்குள் நிர்வாகம் செய்ய வைத்தவர். மடங்களைப் பொறுத்தவரையில், எடுத்தவுடன் அடுத்த ஆதீனத்தை அறிவிக்க மாட்டார்கள். ஆன்மிகப் பயிற்சி எடுத்தவர்களை முதலில் தேர்வு செய்து, மடத்தில் இளைய தம்பிரானாக மூவரை நியமிப்பார்கள். ஆதீனம் மறைவுக்குப்பின் அதில் ஒரு தம்பிரான் அடுத்த ஆதீனமாகப் பொறுப்பேற்பார். அப்படித்தான் இந்த அருணகிரி நாதரும் வந்தார். ஆனால், இவரோ நித்யானந்தாவை 293-வது ஆதீனமாகவே அறிவித்தார். முன்பு, ஒரு சிறுவனை ‘இளைய ஆதீனம்’ என்று அறிவித்தார். அப்புறம் அந்தப் பையன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. இவர் நியமித்த பல இளைய ஆதீனங்கள் என்னவாயினர் என்பது மர்மமாக உள்ளது. மடத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ மூலம் விசாரிக்க வேண்டும். மடத்தின் சொத்துகளில் முறைகேடு செய்துள்ளார். பலரிடம் கொடுத்து வைத்துள்ளார். அதையெல்லாம் மீட்க வேண்டும். மடத்துக்கு எவ்வளவு சொத்துகள், கட்டடங்கள் என்பது பற்றி அறநிலையத் துறை அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

என்ன ஆனார்கள் இளைய ஆதீனங்கள்?

இதுபற்றி மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் பதில் பெற மடத்துக்குச் சென்றோம். ‘‘சாமி பூஜையில் இருக்கிறார், விவரத்தைச் சொல்கிறேன்’’ என்று போன் நம்பரை வாங்கிச் சென்றார் உதவியாளர். அதற்குப்பின் எந்த அழைப்பும் இல்லை.

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்