Published:Updated:

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்
பிரீமியம் ஸ்டோரி
News
மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

``முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை தான் ட்ரெக்கிங் வருவாங்க. இப்போ, மூணு மாதங்களுக்கு ஒருமுறை வர்றாங்க. இப்போ சிக்கிய குழுவுல இருந்த சிலரை, இதுக்குமுன் நாங்க ட்ரெக்கிங் கூட்டிப்போயிருக்கோம். மூணு நாலு முறை எங்களுடன் வந்துட்டு, மலையைப் பற்றி முழுதும் தெரிஞ்சவங்கபோல, ஆன்லைனில் விளம்பரம் செஞ்சு பலரைக் கூட்டி வருவாங்க. இது ஒரு பிசினஸ் ஆகிவிட்டது. இவங்களாலதான் இவ்வளவு உயிர்கள் பறிபோயிருச்சு’’ என வேதனையுடன் சொல்கிறார்கள் குரங்கணியைச் சேர்ந்த மக்கள்.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்களில் பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த சம்பவம், தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ ஏற்பாடு செய்த பயணம் அது.   சென்னையிலிருந்து 27 பேர், ஈரோட்டிலிருந்து 12 பேர் என இரு குழுக்களையும் சேர்த்து, 39 பேர் சென்றுள்ளனர். மார்ச் 11-ம் தேதி காலையில் கொழுக்குமலையிலிருந்து குரங்கணிக்கு இறங்கி, ஒத்தைமரம் என்ற இடத்தில் மதியம் ஓய்வெடுத்தனர். கடந்த ஒரு வாரமாக, தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் காட்டுத் தீ எரிந்துவரும் சூழலில், இந்தக் குழுவினர் இருந்த இடத்தைத் திடீரெனக் காட்டுத் தீ சூழ்ந்தது. அதிர்ச்சியடைந்து, ஆளுக்கொரு திசையில் ஓடியுள்ளனர்.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

மீட்கப்பட்ட விஜயலெட்சுமி!

‘‘ரெண்டு மணி இருக்கும்... திடீரென எங்கள் பக்கம் காற்று பலமாக வீசியது. அந்தக் காற்று ரொம்ப அனலாக இருந்தது. மரம் உடையும் சத்தம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்குள் எங்களைச் சுற்றி இருந்த புற்களில் தீப்பற்றியது. அதைப் பார்த்ததும் திகைத்துப்போய் ஓட ஆரம்பித்தோம். என்னுடன் சேர்த்து எட்டுப் பேர்,  ஒரு பெரிய பாறைக்குள் ஒளிந்துகொண்டோம். மற்றவர்கள் மலைச்சரிவில் இறங்கினார்கள். அவர்களை நோக்கித் தீப்பரவியது. அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரிய வில்லை. பள்ளத்தில் இருப்பவர்களை எரித்து விட்டு, தீ கடந்து சென்றது. எல்லோரும் அலறினார்கள். எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. செல்போன் சிக்னலும் கிடைக்கவில்லை. உயரமான இடமாகப் பார்த்து ஏறினோம். எரிந்த பாறை என்பதால், சூடு தாங்க முடியவில்லை. எப்படியோ சிக்னல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, 108-க்கு போன் செய்து விவரத்தைச் சொன்னோம். பின்னர், வாட்ஸ் அப் மூலம் எங்களின் நிலையைப் பதிவுசெய்து நண்பர்களுக்கு அனுப்பினோம். சில மணி நேரத்துக்குப் பின், எங்களைத் தேடிச் சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்ததும்தான் எங்களுக்கு உயிர் வந்தது. நாங்கள் எட்டுப் பேர் மீட்கப்பட்டோம். மற்றவர்களின் அழுகையை மட்டும்தான் கேட்க முடிந்தது’’ என்று கண்ணீருடன் விவரித்தார் விஜயலெட்சுமி.

பன்னீர் நிகழ்ச்சி... அதிகாரிகள் அலட்சியம்!

காட்டுக்குள்ளிருந்து விஜயலெட்சுமி தகவல் தெரிவித்த நேரம், சுமார் மாலை 3 மணி. அந்தத் தகவல், உடனடியாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்.பி பாஸ்கரன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலைக் கீழ்மட்ட அதிகாரிகளுக்குக் கடத்திவிட்டு, கலெக்டரும் எஸ்.பி-யும் அமைதியாகிவிட்டனர். காரணம், பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தலைமையில் நடந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிகழ்ச்சிதான். ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வருவதாக இருந்ததால், அந்தப் பணியில் அதிகாரிகள் பிஸியாக இருந்தனர். மேலிடத்திலிருந்து தொடர்ச்சியாக அழுத்தம் வந்ததால் சுதாரித்துக்கொண்ட கலெக்டர், போடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு மாலை 4.15-க்கு வந்தார். பிறகு, எஸ்.பி பாஸ் கரனும் அங்கு வந்தார். அதற்குள், மலையில் சிக்கியிருந்த விஜயலெட்சுமி உள்ளிட்ட எட்டுப் பேரை மீட்பதற்கு, குரங்கணியிலிருந்து மக்கள் சிலர் சென்றுவிட்டனர். அதையறிந்த பிறகு, எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் போலீஸ் குழு ஒன்றும், வனக்குழு ஒன்றும் விரைந்தன.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

நல்ல நேரம் பார்த்த பன்னீர்!

காட்டுத்தீயில் பலர் கருகிக்கொண்டிருக்க, நல்ல நேரம் பார்த்து மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினார் பன்னீர்செல்வம். நேராக தன் மகன் நடத்திய நிகழ்ச்சிக்கு வந்தார். மற்ற அமைச்சர்களையும் அங்கு வரும்படி பன்னீர் கூறியிருக்கிறார். நிகழ்ச்சி முடிய இரவு 9.30 மணி ஆகிவிட்டது. அதன் பிறகே பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் போடி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். பிறகு குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு 11 மணிக்கு வந்தனர். ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் ஒருவர் மலையிலிருந்து தீக்காயங் களுடன் கீழே கொண்டுவரப்பட்டனர். அதிகாலை மூன்று மணியளவில், அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பினர். அதன் பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு வந்தார். ட்ரெக்கிங் சென்ற 39 பேரில் ஒன்பது பேர் அங்கேயே இறந்துவிட்டனர். பலர் 60 முதல் 90 சதவிகிதம் வரையிலான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தேனிக்கும், மதுரைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

பாறை இடுக்கில் குழந்தைகள்!

காட்டுத்தீயில் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், குரங்கணியிலிருந்து அந்த இடத்துக்கு முதலில் சென்றவர், ராணுவ வீரரான பாக்கியராஜ். அவரிடம் பேசினோம். ‘‘நான் டேராடூனில் ராணுவத்தில் பணியாற்றுகிறேன். விடுமுறையில் வந்துள்ளேன். மதியம் எங்கள் கிராமத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. என்ன விவரம் என்று விசாரித்தபோது, மலையில் காட்டுத்தீயில் பலர் மாட்டியிருப்பது தெரியவந்தது. மார்ச் 9-ம் தேதி பலர் ட்ரெக்கிங் சென்றனர் என்றும், அவர்களில் குழந்தைகளும் பெண்களும் அதிகமாக இருந்தனர் என்றும் ஊர்க்காரர்கள் தெரிவித்தனர். உடனே நண்பர்களுடன் அங்கு கிளம்பினேன். ஒத்தைமரம் என்ற இடத்தில்தான் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தை அடைந்த போது, எல்லாம் சாம்பலாக இருந்தது. நாங்கள் குரல் எழுப்பினோம். ஒரு பாறைக்குள்ளிருந்து குழந்தைகள் எட்டிப் பார்த்தனர். உடனே அவர்களை மீட்டோம். அவர்கள் மிகவும் பயந்துபோயிருந்தனர். அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தோம். மலைச்சரிவில் பலர் சிதறிக்கிடந்தனர். குரல் எழுப்ப முடியாத அளவுக்குத் தீயில் சிலர் கருகியிருந்தனர். ஆடைகள் தீயில் கருகி, உடலோடு ஒட்டியிருந்தன. அவர்களில் பலரும் பெண்களாக இருந்தனர். எங்களுடைய சட்டைகளையும், கைலிகளையும் அவிழ்த்து அந்தப் பெண்கள்மீது போர்த்தினோம். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. எட்டுப் பேருடன் கீழே இறங்கினோம். பின்னர்தான், ஆயுதப்படைப் பயிற்சிக் காவலர்கள் வந்தனர். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் வந்தது. இருட்டிவிட்டதால், ஹெலிகாப்டர் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. யார் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியாமல், தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தது மிகக் கொடுமையாக இருந்தது’’ என்றார்.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

மலைவாழ் மக்களின் மகத்தான பணி!

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து குரங்கணி எட்டுக் கிலோமீட்டர் தூரம். கரடுமுரடான மலைப்பாதை என்பதால், துணியால் டோலி கட்டி நான்கைந்து பேர் சுமந்து கொண்டுவர வேண்டிய சூழல். இரவு நேரம் என்பதால், இந்தப் பணி மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வோர் அடியையும் மெதுவாக வைக்க வேண்டிய நிலை. சற்று பிசகினாலும் எல்லோரது உயிருக்கும் ஆபத்தாகிவிடும். கும்மிருட்டில், மலைச் சரிவில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்கத் தாமதமானது. பெரும் சிரமத்துடன் 27 பேரை மலைக் கிராம மக்கள் உயிருடன் மீட்டனர். குரங்கணி, டாப் ஸ்டேஷன், முதுவாகுடி உள்ளிட்ட கிராம மக்கள்தான் இந்தப் பணியில் ஈடுபட்டனர். குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்த விஜயா என்பவர், தன் மகளின் புகைப்படத்தை எல்லோரிடமும் காட்டி, ‘`என் மகள் எப்போது வருவாள்?’’ என்று கேட்டுக்கொண்டே இருந்த காட்சி பலரையும் பதற வைத்தது. மீட்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவந்த போது, அங்கே காத்திருந்த உறவினர்கள் பதை பதைப்புடன் பார்த்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

வனத்துறையின் தவறு!

ட்ரெக்கிங் செல்வதற்கு ஒரு நபருக்கு 1,300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதில், 300 ரூபாய் வனத்துறைக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் காட்டுத்தீ அபாயம் உள்ளது என்று தெரிந்தும், ட்ரெக்கிங் செல்ல அவர்களை வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘வனத்துறையினர் பணம் வசூலிப்பதாகச் சொல்வது தவறு. நாங்கள் டாப் ஸ்டேஷன் செல்வதற்கான அனுமதியை மட்டுமே வழங்கினோம். ஒத்தை மரம் பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. அவர்களாக ஆர்வத்தில் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர்’’ என்றார்.

குரங்கணியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, “காட்டுத்தீயில் சிலர் சிக்கியிருக்கிறார்கள் என்று தகவல் வந்ததுமே, எந்த இடத்தில் அது நடந்திருக்கும் என்பதை எங்களால் கணிக்க முடிந்தது. உடனே அந்த இடத்துக்குச் சென்றோம். அந்த இடத்தில், பெரும்பாலும் புற்கள்தான் இருக்கும். தீப்பிடித்தால், பச்சைத் தழைகளை எடுத்து அடித்திருந்தால், ஓரளவுக்குத் தீ அணைந்திருக்கும். முறையான வழிகாட்டி இருந்திருந்தால், இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காது. மலையைப் பற்றியும், இந்தப் பகுதியைப் பற்றியும் அறிந்தவர்களின் துணை இல்லாமல் இவர்களைக் காட்டுக்குள் அனுமதித்ததுதான், இந்த சோகத்துக்கு மிக முக்கியக் காரணம்’’ என்றார்.

ட்ரெக்கிங் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்த இத்தனை பேர் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தீயைத் தடுக்க ஆள் இல்லை!

‘‘கு
ரங்கணிப் பகுதியில் ஒரு வாரமாகத் தீ எரிந்துகொண்டு இருந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு உரிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இருந்தார்களா? கீழே இருந்து தீயை அணைக்கப் போனார்களா? வாய்ப்பு குறைவுதான். ஏனென்றால் அரசிடம்தான் கோளாறு’’ என்கிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.

மலை... தீ... மரணம்! - குரங்கணி கொடூரம்

‘‘நம் நிலப்பகுதியில் 22% பகுதியாக உள்ள வனத்தைப் பாதுகாக்க, அரசின் சார்பில் சார்பில் மொத்தமே 5,500 பணியாளர்கள்தான் இருக்கின்றனர். அவற்றிலும் 40% இடங்கள் இப்போது காலியாகவே இருக்கின்றன. கஞ்சா வளர்ப்பு போன்ற சமூகவிரோதச் செயல்களைச் செய்பவர்கள் தீயிடுவார்கள். மலையில் நிலத்தை வைத்திருப்பவர்கள் கூடுதலான இடத்தை அபகரிக்க காட்டில் தீவைப்பார்கள். ட்ரெக்கிங் செல்பவர்கள் எங்கு போகிறோம், எத்தனை நாள் தங்குகிறோம் என்பதை முன்கூட்டியே வனத்துறை அலுவலரிடம் சொல்லி, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அல்லது வழிகாட்டிகளுடன் சென்றால் ஆபத்து ஏற்படாது. ட்ரெக்கிங் அமைப்பினர் பலரும் சூழல் சுற்றுலாவில் காசு பார்க்க மட்டும் நினைக்கிறார்கள்’’ என்கிறார் சதாசிவம் வருத்தத்துடன்.