Published:Updated:

`எல்லாரும் சூனாபானா ஆயிட முடியுமாடா?!'- கூகுளின் எவர்க்ரீன் புயல் வடிவேலு #HBDVadivelu

மீம் கிரியேட்டர்களின் டிஜிட்டல் தெய்வம் என்பதால், எப்போதும் ஏதேனும் ஒரு டெம்ப்ளேட், கூகுளில் வடிவேலு பெயரால் தேடப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.

`எல்லாரும் சூனாபானா ஆயிட முடியுமாடா?!'- கூகுளின் எவர்க்ரீன் புயல் வடிவேலு #HBDVadivelu
`எல்லாரும் சூனாபானா ஆயிட முடியுமாடா?!'- கூகுளின் எவர்க்ரீன் புயல் வடிவேலு #HBDVadivelu

பொதுவாக ஒரு நடிகருக்கு ரசிகர்கள் அல்லது வெறியர்கள் இருப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில், இந்த நடிகருக்குக் காதலர்கள்தாம் அதிகம். ஆம்! `வடிவேலு ஃபார் லைஃப்' (வாழ்க்கை முழுவதற்குமானவர் வடிவேலு) என்பவர்கள், அவரைக் காதலிப்பவர்களாகத்தானே இருக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில், ஒருநாள் அல்லது இரண்டு நாள்தாம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால், `வடிவேலு ஃபார் லைஃப்' என்ற ஹேஷ்டேக்கிற்கு எண்டு கார்டே கிடையாது.

தினமும் காலை எழுந்தவுடன் அனைவரும் சோஷியல் மீடியாவுக்குள்தான் நுழைகிறோம். அதில் 3 ஸ்க்ரால்கள் செய்வதற்குள் வடிவேலுவின் தரிசனம் ஏதேனும் ஒரு மீம் வழியாகக் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். `மீம் கடவுள்', `ஃபாதர் ஆஃப் மீம்ஸ்', இவையெல்லாம் நெட்டிசன்கள் வடிவேலுவுக்கு அளித்த பட்டங்கள். வருடத்துக்கு 10 முதல் 15 படங்கள் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, கடந்த 7 வருடங்களில் நடித்தது வெறும் 7 படங்கள்தாம். ஆனால், இன்றும் சோஷியல் மீடியாவில் கொடிகட்டிப் பறக்கும் `முடிசூடா மன்னன்' வடிவேலு என்றால் எவரும் மறுப்புச் சொல்லமாட்டார்கள். அவரது வசனங்களை கேட்காமலோ, பேசாமலோ ஒருநாளை கடப்பதென்பது அரிது. வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களுக்கும் வடிவேலு பொருந்திப் போகிறார் என்பதால்தான் அவர் இளைஞர் மத்தியில் பெருமளவில் கொண்டாடப்படுகிறார். அந்த முடிசூடா மன்னனை, கடந்த 5 வருடத்தில் எந்தெந்த ஊர்களில் எவ்வாறெல்லாம் கூகுளில் தேடியுள்ளார்கள், என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்...

அதிகம் தேடிய ஊர்

``எந்த ஊரு?" ஒரு படத்தில், இப்படியாக வடிவேலுவை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்கு...

``காரைக்குடி பக்கத்துல கானாடுகாத்தான்..." என்பார். 

இதனால்தானோ என்னவோ, கடந்த 5 வருடங்களாக வடிவேலுவை கூகுளில் வளைத்து வளைத்து தேடியிருக்கிறார்கள் காரைக்குடி மக்கள். இரண்டாம் இடத்தில் கோயம்புத்தூரும், மூன்றாமிடத்தில் தஞ்சாவூரும் இடம்பெற்றிருக்கின்றன. 4-வது இடத்தை வைகைப் புயலின் சொந்த ஊரான மதுரை பிடித்துக்கொள்ள, ஐந்தாம் இடத்தை ஆக்கிரமித்துள்ளது திருச்சி. சென்னைக்கு இந்தப் பட்டியலில் 9-வது இடம்தான்.

அதிகம் தேடிய மாநிலம்

பரப்பளவில் சிறியது என்பதால் தமிழ்நாட்டை இரண்டாமிடத்துக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது யூனியன் பிரதேசமான புதுச்சேரி. மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை இடம்பெற்றுள்ளன. வெளிமாநிலங்களைத் தாண்டி, தமிழ்ப் பேசும் வெளிநாடான இலங்கை, தமிழர்கள் அதிகம் வாழும் கத்தார், சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் இவரை பற்றித் அதிகம் தேடியுள்ளனர்.

என்ன தேடுகிறார்கள்?

`மீம் கடவுள்' என்ற பட்டத்தை வடிவேலுக்குக் கொடுத்த நெட்டிசன்கள் என்ன தேடியிருப்பார்கள்? ஆம், மீம்ஸைச் சுற்றித்தான் அவர்களின் தேடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. `வடிவேலு மீம்', `வடிவேலு டெம்ப்ளேட்', `வடிவேலு காமெடி மீம்ஸ்' போன்றவற்றைத்தான் அதிகம் தேடியிருக்கிறார்கள். அதுபோக 2015-ம் ஆண்டு அவர் கதாநாயகனாக நடித்த `எலி' படத்தையும் அதிகம் தேடியிருக்கிறார்கள். கூகுளில் அதிகம் தேடப்பட்ட கமெடி காட்சியாக இருப்பது `வடிவேலு குருநாதா காமெடி' என்பதுதான். `ஆஹான்' என்று அவர் பேசிய ஒரு வார்த்தையையும் தேடித்தள்ளியுள்ளனர் கூகுள் வாசிகள். மீம் கிரியேட்டர்களின் டிஜிட்டல் தெய்வம் என்பதால், எப்போதும் ஏதேனும் ஒரு டெம்ப்ளேட், கூகுளில் வடிவேலு பெயரால் தேடப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

அதிகம் தேடிய கதாபாத்திரங்கள்

ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ரசிகர்கள் மனதில் நிற்பதென்பது, அந்த நடிகரின் நடிப்புக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கிஃப்ட். அதுபோன்ற கிஃப்ட்டுகளை அதிகம் சம்பாதித்தவர் வடிவேலுவாக மட்டும்தான் இருக்க முடியும். `மொக்கச்சாமி', `நாய் சேகர்', `கைப்புள்ள', `சூனா பானா', `டெலக்ஸ் பாண்டியன்',`வீரபாகு', `கபாலி கான்', `படித்துறை பாண்டி', `வக்கீல் வெடிமுத்து', `சூப்பர் சுருளி', `வண்டு முருகன்', `தீப்பொறி திருமுகம்', `அலர்ட் ஆறுமுகம்', `ஸ்நேக் பாபு', `செட்டப் செல்லப்பா', `பிச்சுமணி', `என்கவுன்ட்டர் ஏகாம்பரம்', `நேசமணி', `புலிகேசி'... என லிஸ்ட் பெருசாயிட்டே போகுது. இதில் மக்கள் அடிக்கடி மீம்களுக்குத் தேடிய டெம்ப்ளேட்டுகளாக இருப்பது, தலைநகரம் - நாய் சேகர், வின்னர் - கைப்புள்ள, கண்ணாத்தாள் - சூனா பானா ஆகிய கதாபாத்திரங்கள்தாம்.

சோஷியல் மீடியா

அவர் முதல் படம் நடித்தபோது தமிழகத்தில் தனியார் சேனல்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை, தற்போது அவர் நடிப்பது குறைந்துவிட்டது. ஆனால், நகைச்சுவை சேனல்கள் முழுவதும் வடிவேலுதான் நிரம்பியிருக்கிறார். டிவி சேனல்கள் தாண்டி பொழுதுபோக்குகளின் அடுத்த கட்டமாக இருக்கும் சோஷியல் மீடியா தளங்களிலும் அவரே அதிகம் வலம் வருகிறார். சோஷியல் மீடியா என்றாலே ஒரு தரப்பினர் ஒருவரை ஆதரிக்க, மற்றொரு தரப்பினர் அவரை எதிர்த்து இன்னொருவரை ஆதரிப்பர். ஆனால், அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே கலைஞன் வடிவேலு மட்டுமே. `டப்ஸ் மேஷ்' என்ற ஆப் வெளியானபோது வடிவேலுவின் வசனங்களே அதிகம் டப் செய்யப்பட்டன. கமென்ட் செய்வதற்கு வடிவேலுவின் ரியாக்‌ஷன்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஃபேஸ்புக்கில் இருக்கும் ட்ரால் பேஜ்களின் பெயர்கள், பெரும்பாலும் இவரது வசனங்களாகவே இருக்கின்றன. ட்விட்டர், ஃபேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்டா தாண்டி நேற்று வந்த டிக் டொக் ஆப் வரை வடிவேலுவின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இனி வரவிருக்கும் ஆப்களிலும் வடிவேலு நிறைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 1947-ல் பெற்ற சுதந்திரத்திலிருந்து கடந்த வாரம் வெளியான `96' படம் வரை வடிவேலு வெர்ஷனாக வெளியானவை ஏராளம். இவ்வளவு ஏன், இரு தினங்களுக்கு முன் வெளியான `சூப்பர் டிலக்ஸ்' படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களுக்கு இணையான வடிவேலுவின் கதாபாத்திரங்களைக் கொண்டு `வடிவேலு வெர்ஷன் சூப்பர் டிலக்ஸ் போஸ்டரை' அந்தப் படக்குழுவே வெளியிட்டது.

`எல்லாரும் சூனா பானா ஆயிடமுடியுமா டா' என்று வடிவேலு சொல்லும் வசனம், அவருக்குத்தான் மிகச் சரியாகப் பொருந்தும். சோஷியல் மீடியாக்களை கலக்குவது போல, திரும்பத் திரையிலும் கலக்க வாங்க குருநாதா..!

பிறந்தநாள் வாழ்த்துகள் வடிவேலு!